இது ஒரு சிறுகதைத் தொகுப்பா, கட்டுரைத் தொகுப்பா, ஒரு பக்க கதை தொகுப்பா என்பதனை நம் எண்ணத்திற்கே விட்டு விடுகின்றார் ஆசிரியர். சிறுகதை என்றால் சிறுகதைக்கான அத்தனை இலக்கணமும் இதில் இருக்கிறது. ஒரு பக்க கதை என்றாலும்., அதற்குரிய பரிமாணங்கள் இதில் இருக்கிறது. ஆக, இதனை ஒரு பக்க சிறுகதை என்று நாம் கொள்வோம்.
எப்படி தஞ்சாவூர் வெயிலைத் திருநெல்வேலி சுவரில் விழவைக்கிறார். ‘சொன்ன சொல் கேட்கிற வெயில்’ என்று ஒரு கவிதை எழுதலாம் நான் என்று மேற்கோளிட்டு, அழியாத புள்ளிக்கோலங்கள் இவை என்று வண்ணதாசன் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்.
சமூகத்தில் புலப்படும் புறங்கூற்றுகளைக் கண்ணுற்று அதை தன் அகத்தில் அடைகாத்து, உயிர்ப்பான படைப்பாகத் திண்ணை இருந்த வீட்டைக் கட்டி எழுப்பியிருக்கின்றார் இயக்குநர் தஞ்சை சசிகுமார் என்று கவி.பாஸ்கர் வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்.
தான் எதுவும் செய்யவில்லை, தான் எதுவும் எழுதவில்லை, எல்லாம் இந்த காவிரி தான் எனக்குக் கொடுத்தது என்று தன்னடக்கத்தோடு தன்னுரை தந்த சசிக்குமாரோடு நாம் பயணம் செய்யத் துவக்குவோம்
மொத்தம் 23 சிறுகதைகள். கூடுதலாக மூன்று கவிதைகள் இவையே இந்த தொகுப்பின் உள்ளடக்கம்.
தாம் வாழ்ந்த வாழ்வினை, தாம் பழகிய நண்பர்களை, தாம் கண்ட காட்சிகளை, தம்மோடு பயணித்த உறவுகளைக் குறுங்கதைகளாக்கி நமக்குத் தந்திருக்கின்றார்.
ஒவ்வொரு கதையும் தொடங்கி அடுத்த பக்கத்திற்குள் சட்டென்று முடிந்து விடுகிறது. அட!என்ன அதற்குள் கதை முடிந்து விட்டதா என்று ஆச்சரியத்தைத் தருகிறது. கதை முடிவில் அவர் வைத்திருக்கும் அந்த ஒரு பத்தி அல்லது ஒரு வரி நம்மை நெகிழச் செய்து விடுகிறது. சற்று நேரம் அந்தக் கதையிலிருந்து மீளாமல் மீண்டும் அந்த வரியினை அல்லது அந்த பத்தியினை வாசித்து சிறிது கண்கலங்கிய பின்பே அடுத்த குறுங்கதைக்கு நம்மால் செல்ல இயலுகிறது.
‘நெல் பயிர்களில் பால் பிடிக்கும் புரட்டாசி மாத துவக்கம்’ என்று மாதத்தில் பயிரின் வளர்ச்சியை கண்ணுற்ற இவர் ஆற்றங்கரையில் மஞ்ச கலர் கனகாம்பரம் செடி பூத்திருந்த காலத்தையும் நமக்கு கண்முன்னே காட்சிப்படுத்துகின்றார்.
‘சித்திரமாடம்’ என்றொரு கதை. விளம்பரப் பலகைகள் அழகான ஓவியங்களைத் தாங்கிய இந்த காலம் அது. திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு ஓவியங்கள் மூலம் கட் அவுட் வைத்த காலங்களும் அப்போதே. அப்படி ஒரு ஓவியம் வரையக்கூடிய ஒருவரின் வாழ்வினை எதார்த்தமாகப் பதிவு செய்து எப்போதாவது ஒரு நல்ல ஓவியத்தைப் பார்த்தால் அவர் ஞாபகம் வரும் என்ற வரிகளால் நம் மனதைக் கனக்கச் செய்து விடுகின்றார்.
சுப்ணி அண்ணன் எனும் கதாபாத்திரம் மூலம் மாடுகளை நேசிக்கின்ற ஒரு ஆத்மாவை நமக்கு அறிமுகம் செய்கின்றார். மாட்டினுடைய அங்க அவயங்களைக் கொண்டு மாடு எப்படிப்பட்டது, எத்தனை லிட்டர் பால் கறக்கும் என்று கண்ணளவில் சொல்லக்கூடிய நபர் சுப்ணி. காலம் மாற்றம் அவரை எவ்வாறு அழைத்துச் செல்கிறது, அவர் மீண்டிட என்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை இந்த கதை பேசுகிறது.
‘நிலத்தின் சாமி’ என்றொரு கதை. அந்த ஊரில் வாழுகின்ற கண்ணுசாமி தாத்தாவை கண்முன்னே காட்டுகிறது. இந்த கண்ணுசாமி தாத்தா எனக்கு கீ.ரா-வை நினைவுபடுத்துகிறார். வயற்காட்டில் மேய்ந்த ஆட்டுப்புழுக்கையினை சுவைத்துப் பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதனை ஒரு கதையில் கீரா சொல்வார்கள். அதே போன்று இவர் மண்ணை அள்ளி வாயில் போட்டு சிறிது நேரம் மென்று துப்பி விட்டு அந்த மண்ணின் பண்பினை சொல்வதாக அறிமுகம் செய்கின்றார். இப்படிப்பட்ட மனிதர்களை இப்பொழுது காண்பது அரிது. அவர் மூலம் நாம் இந்த மண்ணை தொலைத்த கதையினை நமக்குள் கடத்துகிறார்.
‘பெரியசாமி அண்ணன்’ என்றொரு கதை. கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதனை இந்த கதை நமக்குச் சொல்கிறது. ஒரு சாதாரண ஆள் சூழ்நிலை காரணமாகச் சாராயம் காய்ச்ச,விற்க, பின்பு அடியாளாகி கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்று மீண்டு வந்த பின்பு தன்னுடைய இயல்பு வாழ்க்கையினை வாழ முற்படும் பொழுது அவருக்குள் ஏற்பட்ட அந்த பயத்தினை இந்த கதை பேசுகிறது. வீட்டில் காத்திருக்கும் மங்களமும் இரு மகள்களும் யார் என்பதனை கதாசிரியர் சொல்லும் பொழுது அந்த பெரியசாமி அண்ணன் நம் மனதில் பெரிய சாமியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார்.
போஸ்டர் ஒட்டும் ‘போஸ்டர் காடி’யினுடைய குணாதிசயத்தைத் தெள்ளத் தெளிவாக நிறைவு வரிகளில் நமக்குக் கொண்டு சேர்க்கின்றார். கரோனா காலத்தில் அவருக்கு அந்தத் தொழில் செய்ய இயலாத போதும் கூட, கொண்டு போய் கொடுக்கின்ற உதவியினை ஏற்க மறுத்த அவர், அதனை அருகில் இருக்கும் அனாதை இல்லத்தில் கொடுக்கச் சொல்வதில் அந்த மனிதனுடைய ஈர மனது நமது கண்களில் ஈரத்தினை வரவழைத்து விடுகிறது.
‘மரங்களின் பெரும் காதலன்’ எனும் கதையில் இன்றைக்குத் தஞ்சையில் இரண்டே இரண்டு புன்னை மர்ங்கள்தான் உள்ளது. ஒன்று புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில், இரண்டாவது சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தில். எத்தனை வலி மிகுந்த வரிகள்.
‘முருகேசகாந்தும் பிரேமலதாவும்’ இன்னொரு சிறுகதை சினிமா பைத்தியத்தை நையாண்டியோடு சொல்லி ஒரு வலியினையும் நம்முள் கடத்தி விடுகின்றார்.
‘வைரத்தார் வீடு’ என்றொரு கதை. பிறந்த மண்ணுக்குப் போக மாட்டேன் என்றவரையும், பிறந்த மண்ணில் உயிர் போக வேண்டும் என்று வந்தவரையும் பேசுகிறது.
கூட இருக்கின்ற நண்பர்களுக்கு, அவர்களது காதலுக்கு உதவுவது, அதன் மூலம் பெற்ற அனுபவங்கள், நாம் அப்பொழுது பரிமாறிக் கொண்ட வாழ்த்து அட்டைகள் இப்படிப் பேசும் கதைகள் மூலம் 90களில் இருந்த தஞ்சாவூரினை நமக்கு கண்முன்னே காட்டி, இன்றைய வாழ்வுகளோடு ஒப்பீடு செய்து எதை இழந்தோம் நாம் என்று நமக்கு உணர்த்துகின்றார்.
“அம்மாச்சி
அப்பாயி
இப்போது எங்க அப்பா என்றவர்களிடம்
அவர்கள் திண்ணை
இருந்த வீட்டில்
இருந்தார்கள்!!”
என்று கவிதை வரிகளில் நிறைவு செய்திருப்பது இன்று திண்ணையைத் தொலைத்த நம்மை அந்தத் திண்ணையைத் தேடச் செய்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அய்யனாரின் பசி எவ்வாறு தெரிகிறது என்பதையும், காலத்தின் ஆசான் யார் என்பதையும் இரு வேறு கவிதைகளில் இவர் நிறைவு செய்து இருக்கின்றார்.
நம் வாழ்வியலோடு இருந்த திண்ணை தற்போது காம்பவுண்ட் சுவருக்குள் சுருங்கிக் காணாமலே போய்விட்டது. அந்தத் திண்ணை பாதசாரிகள் வந்தமர்ந்து ஓய்வெடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டது. நம் வீட்டிலிருந்த பெரியவர்கள் அவர்களுக்குத் தாகத்திற்குத் தண்ணீர் வழங்கியும், ஏன் சிலவேளை உணவு வழங்கியும் அவர்களை இளைப்பாறிச் செல்ல அந்தத் திண்ணையினை உபயோகப்படுத்திக் கொள்ள உரிமையுடன் சொன்ன காலம் அது. தற்போது அத்தகைய மனிதர்களைக் காணவில்லை. ஏனெனில் திண்ணை இப்போது இல்லை.
தஞ்சை மண் மணக்க மணக்க அந்த மொழியில் இந்த கதைகளை எழுதியிருப்பது சிறப்பு
தஞ்சை மண்ணின் திண்ணைகளுக்கு காதுகள் உண்டு! ஆம், எங்கள் கிராமத்து திண்ணைகளில் உட்கார்ந்து கதைத்தக் கதைகள் ஏராளம்..! ஏராளம்..! செம்மண்ணால் திண்ணைகள் எழுப்பி, அதன்மேல மாட்டுச்சாணம் மொழுகி, அந்தக் குளிர் மையின் உறக்கம் இனி எப்போதும் கிட்டாது! அந்தத் 'திண்ணையில் மொழுகிய, மாட்டுச்சாணத்தின் வாசம் மடிந்து போனதற்காகத்தான் அண்ணன் சசிக்குமார் இந்நூலில் மண்டியிட்டு கண்ணீர் விட்டிருக்கிறார்! எங்கள் கிராமத்து மனிதர்கள் உரைத்த ஆயிரமாயிரம் கதைகளைக் கேட்ட திண்ணைகள் இப்போது இடிந்து விழுந்து இறந்துவிட்டன. அதில் ஒரு திண்ணை உசுருக்கு ஊசலாடிய போது சசிகுமாரிடம் உரைத்த கதைகள்தாம் இந்நூலில் இடம் பிடித்திருக்கின்றன. அதை படம்பிடித்து நம் மனக் கண்ணிற்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் சசிக்குமார்! வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பு அடித்து லட்சுமி சீவலை வாய்க்கிணற்றில் போட்டு இளஞ்சிவப்பு உமிழ்நீர் ஊற்றெடுக்க, உடனே மைதீன் புகையிலையை இடப்பக்கக் கடவாயில் அடைத்து, குதப்பலோடு குலவும் மொழியின் சுவைதான் அண்ணன் சசிகுமாரின் எழுத்து ! - கவிஞர் கவிபாஸ்கர்
பாடலாசிரியர்.
நூல் : திண்ணை இருந்த வீடு - தஞ்சாவூர்க் கதைகள் வகை : சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் : சசி எம்.குமார் வெளியீடு : சந்தியா பதிப்பகம் வெளியான ஆண்டு : 2022 பக்கங்கள் : 134 விலை : ₹ 110