Exclusiveகவிதைகள்நூல் அலமாரி

‘கழுமரம்’ கவிதைத் தொகுப்பு- எழுத்தாளர் கோணங்கி எழுதிய அணிந்துரை


பொய்யாக்கொடி வையை
முதுநீர்ச் சமணர்கள்

/ அகழ்தரை ஈமத்தாழிக்குள்
பதுங்கி வாழ்கிறது இருட்டு நெல் /
பொய்யாக்கொடி வையை நீரோட்டத்தின் மேல் சிச்சிறு குறுங்கதைகளாய் நிழற்றி வரும் கழுமரம் கவிதைகள் இவை. விதைநெல்லின் கருவிலேயே நின்றுவிட்ட கதைகளாக உள்ளன மிகப் பல கவிதைகளும்.

/ கழுமரத்தினுள் பாயும் ரத்த ஓட்டத்தின் நுரைச் சத்தம் துல்லியமாகக் கேட்டவுடன் / எண்ணாயிரம் சமணர் எதிர்நின்று கழுவேறிய கூட்டம் கூட்டமான நிழல்கள் உரையாடி மறைகின்றன. மதிரை அந்திக் கூனன் அகல் விளக்கில் மூச்சு விடும் சுடர்கள், சூலக்கழுவேற்றப்பட்ட சமணர்களாய் இருக்க வேண்டும். துயரக்காற்றை இருட்டித் திரியும் கருப்புச்சமணர்களாய் ஆலவாய்க்குகைக்குள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஈரேழு சமணமலைகள் தோற்றமாகின்றன. கழுமரம் கவிதைகளுக்கு அப்பால் ஊகவெளியில் தூண்டல் அடைகிறோம்.

/ கழுத்தோலில் வரிக்கோடுகள் கிழிக்கிறேன் / கற்கொம்பு கிடாவை முட்ட விட்டு / கழுச்சதையை ரத்தங்கட்ட விடுகிறேன் / வெள்ளரியின் கட்டானி விதைகளைப் / பற்களாக ஏவிவிட்டுக் / கழுமுகத்தைப் பார்த்துக் / கேவலமாகச் சிரிக்க வைக்கிறேன்/ வெண்குருதி ஓடும் எருக்கஞ்செடியை / அடியோடு அகழ்வது மாதிரி / உதிரமரத்தைப் பிடுங்கித் / தூர் மேலேயும்  கழுவூசி கீழுமாக / மாற்றி ஊன்றுகிறேன் / (கழுவுக்கு ஏங்குதல்)

உயிர்க்கழுவேற்றுகை

பீலிவெந்துயர் பிண்டியும் தண்டும் பாவும் குடையும் வெந்து மண்பூசிய சமண ஆலவாய்ப்பட்டினத்தில் கழுவேற்றினர். பொறியிலிச் சமணர் அத்தனை பேரும் ஆவிவெந்து யந்திரம் வெந்து மந்திரம் வெந்து கைப்பீலி வெந்தது. நெஞ்சில் பீதி கொண்ட வாது கொண்டு பொருள் அசோகு வெந்தது. திக்குகளில் மண்டிய தீ அருகு நின்ற சமணர் மேலும் பட்டது.

வேதப் பகைவர் தம் உடம்பு வீங்கத் தூங்கும் வெங்கழுவில் ஏற்றினான் கூனன். கேதப்பட்டது
ஆலவாய்ப்பட்டினம், கல் மதில்களில் தெறித்த சமணரத்தம் தெருவெல்லாம் ஓடிய கோபத்தில் யானைமலை, நாகமலை, நீலமலை, செப்புமலை, வெள்ளி மலை, அசங்குன்றம், பரங்குன்றம், பேராந்தைக் கல் கொதித்தது. மண்ணான உடம்பும் குருதியும் மண்ணக் கழுவில் பதித்தான் தேரைவேதியன். யானைமலை, நாகமலை இருகற்பாழியில் அமணர் மந்திரவாத வலி காட்டின மலைகள். ஆலவாய்ப்பட்டினத்தை ஒரு மலையானை அழிக்க வருமுன் மகாநாகமாய் அந்த யானையை விழுங்கவும் காட்டிய உயிர் பொருத்தி நடத்திவர பின் ஏழுகடலுக்கு மாறாக ஆலவாய்ப்பட்டினத்தில் ஏழுகடலெனக் காட்டின இந்திரசாலமுண்டு. உறையூரில் கல் வருஷமும் மண் வருஷமும் பெய்வித்தார் சமணர்.

விஷச்சுரம் பற்றிய கூனன் மீது அமணர் யந்திரங்களை வரைந்து குளிகை செய்து காட்டிப் பின்னே அதிலும் மிகக் கடுகி விரைந்து தங்களுடைய மகாமந்திரங்களைச் சொன்னார். வெதுப்பு மிகுந்து திக்குத்தோறும் புறப்பட்ட பேரழல் மண்டிற்று. கூனனுக்கு மெய்விதிர்த்து வெம்மை காந்தும் வெந்தழல் கணமென மெய்யெலாம் கவர்ந்து மாளிகை நின்றார் மேல் புலர்த்துத் தீந்து போகும்படி எழுந்தது எனப் புராணம் புரட்டியது கொலை பாதகத்தை. வாது செய்வாரணம் என்பது ஊராயிற்று.

தளம்பு நெஞ்சுடைய எண்ணாயிரஞ்சமணர் உளம்பரிவொடு கழுக்கண் யோசனை அகலமேற வளம்பட வாது செய்த வாரணம் என திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் கூறியது. திருக்கழுமலமென்னும் ஊர் பிழைக்க மேல்வரப்படும் கலியுகத்தில் அவனால் வெல்லப்பட்ட கதைகளிலுள்ள கதை. இதுதான் சமண சமயத்தார் பலரும் கழுவை மேல் கொண்டேறின கதை.

‘வைதீக வாழ்க்கை பெறுவது’ வேதநெறி தழைத்தோங்க… அழுத… கிணத்துத்தேரை பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதீகமும் தழைத்தோங்க’ எனப் புராணம், அமணர் தாமே கழுவேறினரென்று ஏழாம் தாழிசையாலும் வங்கொலை மறைக்கப்பட்டது.

எறும்புத் திண்ணி மந்திரித்தலைவன் தச்சர்களைக் கூட்டி வயிரங்கொண்ட நீண்ட ஆலமரங்களிலே சூல வடிவாகக் கழுக்கட்டைகள் செய்து தனித்தனி ஊன்றி அந்த எண்ணாயிரம் பேருக்கும் வரிசையாக எண்ணாயிரம் கழுமரங்களைக் கொண்டுவந்து கூனன் முன்னே பரப்ப அப்போது தெளிவில்லாத சமணர்களைப் பார்த்து வைதீக வேதியன் கட்டளையிடச் சமணர்கள் நெருப்பு போலக் கொதித்து எதிர்சால் உழுது விதைத்தனர் நிகண்டுகளை. பனைஓலைத் தெருக்களைச் சுற்றிவந்தார் ஏடுகள் முளைத்து ஓலை கிழிய ‘மூவிலை வேல் வடிவாய் நின்ற கழுமுனையிலிடுவோம்’ என்றார் தேரை வயினிய ஞானர். அதுவே வழக்கென்று சொல்ல அதைக் கேட்ட சமணரும் தெருவில் அகப்பட்டார். எதிர்நின்ற சமணரைக் கழுவேற்றினார் வைதீகர்கள் ஏடுபுரட்டி.

/ கழுமரத்தின் கழுத்தில் கொச்சக்கயிறால் உருவாஞ்சுருக்கிட்டு முளைப்பாரித் தளிரில் பிடியைக் கட்டுகிறேன். /

அங்கே பத்து முலை நாயின் தோற்றம் அரூபத்தில் உள்ள ஒரு கவிதையும் முத்துராசா குமாரிடம் உண்டு. கண் திறவாத நாய்க்குட்டிகளின் பால் பாதையில் பொய்யாக்கொடி வையை முதுநீர்ச் சமணர்கள் நடந்து போகிறார்கள். இக்கவிதைகள் விடும் விடைபெற்றுச் செல்லும் வானவில் ஆரங்களை வாசக வேடர்கள் அடைந்துவிடக்கூடும்.


நூல் தகவல்:

நூல் :   கழுமரம்

ஆசிரியர் : முத்துராசா குமார்

வகை :   கவிதைகள்

வெளியீடு :   சால்ட் – தன்னறம்

வெளியான ஆண்டு :   டிசம்பர் – 2022

பக்கங்கள் : 80

விலை : ₹  150

நூலினைப் பெற :   +91 93 63 00 74 57

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *