Exclusiveகவிதைகள்நூல் அலமாரிபுனைவு

பிருந்தா சாரதியின் “ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்” – ஓர் அறிமுகம்


விதைகள் எப்போதுமே ஈர்ப்பு மிக்கவை. சொல்ல வேண்டியவற்றைச் சுருங்கவும், எளிதாகச் சொல்லவும், அது சேர வேண்டியவர்கள் இடத்தில் எளிதாகச் சென்றடையவும் கவிதைகள் வெகுவாக உதவும் பாடல்களும் ஒரு வகையான கவிதைகளே. கவிதைகளும் ஒரு வகையான பாடல்களே.

கவிதையில் சிறந்து விளங்குகின்ற ஒரு படைப்பாளியாக பிருந்தா சாரதி நன்கு அறியப்படுவதை நாம் அறிவோம்.  “ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்” அவரது கவிதைத் தொகுப்பு.

நினைவில் மறையாத எழுத்தாளர்கள் எம். வி .வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, தேனுகா ஆகியோருக்கு சமர்ப்பணம் என்று துவங்குகிறது இந்த புத்தகம். ட்ரஸ்கி மருதுவின் ஓவியங்களுக்கு நன்றி சொல்லி நம்மைப் பக்கங்களைப் புரட்ட வைக்கின்றார் பிருந்தா சாரதி.

இருண்மை, நோய்மை அவதானிப்பு என்று வார்த்தைகளால் நிறைந்த கவிதைகளின் தொடர் வாசகர் ஒருவரிடம் இருந்து வரக்கூடிய கவிதைத் தொகுப்பு போன்றதே இது என்று பதிப்பாசிரியர் வேடியப்பன் அவர்கள் பதிப்புரை தந்திருக்கின்றார்.

தம்மைப் பேட்டி கண்ட பிருந்தா சாரதியை முன்பே தெரிந்திருந்தாலும் இவர் தான் பிருந்தா சாரதி என்பதைப் பின்னரே அறிந்து கொண்டேன் என்று சொல்லி, ”தெளிந்த மொழி, குளிர்ந்த சொற்கள், செறிந்த சிந்தனை, வாசகனைக் குழப்பாத துல்லியம் எல்லாம் கூடி பிருந்தாச்சாரதி கவிதைகளை நேசிக்க வைக்கின்றன. யார் இந்த பிருந்தா சாரதி என யோசிக்க வைக்கின்றன.” என்று வைரமுத்து வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்கள்.

“பதிவு செய் எல்லாவற்றையும்… கனவை, கனவின் கதகதப்பை நிஜத்தை, நிஜத்தின் அருவருப்பை” என்று வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார் இயக்குநரும் நடிகருமான நாசர்.

இயக்குநரும் நண்பருமான லிங்குசாமியின் “லிங்கூ” வெளிவந்ததை ஒட்டி தாமும் எழுத ஆரம்பித்து பின்பு முகநூலில் தொடர்ந்து எழுதி வந்த கவிதைகளுடைய தொகுப்பே இந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் என்று தன்னுரை தந்து இருக்கின்றார் பிருந்தா சாரதி.

மொத்தம் 73 தலைப்புகள் கொண்ட கவிதைத் தொகுப்பு இது. அதிகபட்சம் 2 அல்லது மூன்று பக்கங்களுக்குள் கவிதைகள் நிறைவடைந்து விடுகின்றன. நம்மையும், நம் மனத்தையும் நிறைத்து விடுகின்றன.

மின்சார கொசு மட்டை

“அது கொசுக்களை மட்டும் அழிக்கவில்லை
அநியாயங்களைக்
கண்டும் காணாமல் இருக்கிறேன் என்ற
அ குற்ற உணர்ச்சியும்
அழிக்கிறது ஒருவகையில்.
அதைவிட முக்கியமானது
கொலை கூட செய்துவிட்டு மனிதன் எப்படி
உறுத்தல் எதுவும் இன்றி
வாழ முடியும் என்கிற
என் சரித்திர சந்தேகத்தைத்
தீர்த்து வைக்கிறது”

என்று நிறைவு செய்திருப்பார். கொசு விரட்டி ஒரு பக்கம் கொசுக்களை விரட்டிக் கொண்டிருக்கவோ அல்லது மரணிக்கச் செய்திருக்கவோ இருக்கின்ற சூழலில் கொசு மட்டையை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டிருக்கின்ற நபர்களின் எண்ணப் போக்கு இவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைத்து அமைத்திருப்பதில் சமூக அக்கறையை வெளிப்படுகிறது.

இதிகாசங்களைப் புராணங்களைப் படித்து இருப்பவர் இவர் என்பது நமக்கு சில கவிதைகளின் வாயிலாக உணர இயலுகிறது அபயம் தலபுராணம் விதி போன்றவை

அபயம்

“வான் திறந்து வந்த
ஆகாய கங்கையை
ஜடாமுடியில் வாங்கிய
சிவனாக முடியாமல்
பெரும் ஏக்கத்தில்
அலைக்கழிக்கிறது
இந்த பகிரதனின் தவம்”

தலபுராணம்

“உயிரைக் கொடுத்தாவது
உன் பிரார்த்தனையை நிறைவேற்றுவேன்
நந்தி காதில் சொல்லும் ரகசியத்தை
என் காதில் சொல்.”

விதி

“இலைகளை உதிர்த்து
அந்தரத்தில் பாய்ந்து
அம்பு மண்ணில் வீழ்கிறது
தவளை ஒன்றைக் கொன்று”

வேடனின் அம்பு சீறிப் புறப்பட்டது போன்ற ஒரு துவக்கத்தில் அமைகின்ற இந்த கவிதை இதிகாச சம்பவத்தை நினைவு கூறுவதாக இருக்கிறது.

விதைகள் போற்றி.

“வானத்தின் உயரத்தையும்
பூமியின் ஆழத்தையும்
அளவெடுக்க
நம்பிக்கையுடன் புறப்படுகிறது
மண்ணில் முளை விடும் பிரபஞ்சத்தின்
இன்னொரு விதை”
.
.
முட்டி திறக்கும்
சின்னஞ்சிறு ஒரு விதை
தனக்கான மேகத்தை
தானே சூல் கொண்டு”

விதைகள் போற்றி எனும் தலைப்பில் அமைந்த இக்கவிதை தன்னம்பிக்கையைத் துளிர்விடச் செய்யும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கடவுளைச் சந்திக்கச் சென்றிருந்தபோது

“வரிசையில் நிற்கச் சொல்லி
அதிகாரம் செய்து கொண்டிருந்தவர்
கடவுளை விடவும்
அதிகாரம் படைத்தவராயிருந்தார்
கடவுளுக்குப் பணிவதை விடவும்
அதிக பணிவை
அவரிடம் காட்டிக் கொண்டிருந்தோம்
.
.
கடவுளைக் காண வந்ததைக்
கண்காட்சி காண வந்தது போல
ஆக்கிக் கொண்டிருந்தோம்
டீ,பிஸ்கட் வரவழைத்து.
.
.
கூட்டத்தில் சிறுவன் ஒருவன் கேட்டான்
நாளை என்றால்
நம்முடைய நாளையா
கடவுளின் நாளையா என்று.

இன்று நாம் கோவிலுக்குச் செல்லும் போது அங்கு நிலவுகின்ற சூழலை கண்முன்னே காட்சிப்படுத்தி இருக்கின்றார். இறைவனைக் காண வசூல் செய்து கொண்டு, கூட்டத்தில் சாரை சாரையாக நின்று கொண்டு இடை இடையே வருகின்ற தின்பண்டங்களைக் கொறித்துக்கொண்டு நகருகின்ற நாம் இறைவனைக் காணத்தான் சென்றிருக்கிறோமா? என்று ஐயப்பாடு நம்முள் விழுவதை மறுக்க இயலாது என்பதனைச் சுட்டி, இத்தகைய சூழலுக்கு என்று விடிவு காலம் பிறக்கும் என்று நிறைவு வரிகளில் நம்முடைய நாளையா கடவுளின் நாளையா என்று வினவிச் சிந்திக்கத் தூண்டி இருக்கின்றார்.

தண்ணீர் நாட்கள்

” கடல் வேடிக்கை பார்த்தது
இன்னொரு கடல் நகர்ந்து வருவதை”

“எங்கும் நீர்
குடிப்பதற்குத் தான் இல்லை தவிக்கிறது ஊர்”

“வானம் பார்த்தோம்
மழை வருமா?
உணவுப் பொட்டலம் வருமா?”

சென்னையில் மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த சூழலை, அங்கு மக்கள் பட்ட அவலத்தை ஹைக்கூக்களாகக் கவிதையில் வடித்திருக்கின்றார். எல்லாம் முடித்த பின்பும் மீண்டும் அங்கே இடம் விற்பனைக்கு என்ற பதாகை இருக்குமே என்று வேதனையிலும் ஆழ்த்துகிறார்.

தலைப்பில் கவிதைகள் பயணித்துக் கொண்டிருக்கையில் இடையிடையே சிற்சில குறுங்கவிதைகளால் நம்மை வருடுகிறார்.

“அற்புதங்கள் நிகழ்வது கணங்களில்
காத்திருக்க வேண்டும்
யுகங்களில்”

“அக்கரையில் நீ
இக்கரையில் நான்
இடையில் கொந்தளிக்கிறது கடல்”

“முத்தாகும்
மழைத்துளியை விடவும்
மதிப்பு மிக்கது
தாகம் தீர்க்கும் மழைத்துளி”

ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடம்

விடுமுறை விடப்பட்ட பள்ளிக்கூடத்தில் நாம் காணக்கிடைக்காத நிகழ்வுகளை கவிதைப்படுத்தி இருக்கின்றார். உண்மையில் அந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கவிதைகளால் கண்ணுற இயலும். நாமும் அந்த விடுமுறைக் கால வகுப்பறையைத் தரிசிக்கவும் இயலும்.

“எங்கிருந்தோ வந்த
ஒரு வண்ணத்துப்பூச்சி
எதையோ தேடுவது போல்
ஒவ்வொரு வகுப்பாய் சுற்றிப் பார்க்கிறது”

இது ஒன்றே போதும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்கிறது என்பதனை நம் மனத்துக்குள் இருத்திக் கொள்ள. இது ஆனந்த விகடனில் வெளிவந்த கவிதை என்பது கூடுதல் சிறப்பு. இதனை ஆனந்த விகடனுக்கு அனுப்பச் சொல்லித் தூண்டியவர் இயக்குநர் லிங்குசாமி.

“எனக்குத் தெரிந்த பிருந்தா” என இயக்குநர் லிங்குசாமி தங்களிருவரின் நட்பை, இவருடைய திறமையை வியந்து ஆச்சரியமற்று நின்றதை வாழ்த்துரையாக நிறைவுப் பகுதியில் தந்து நம் நெஞ்சமெல்லாம் நிறைத்து வைக்கிறார்.

அதேபோன்று “எளிமை போர்த்திய கவித்துவம்” என்று ரவி சுப்பிரமணியம் அவர்கள் நம்மை பிருந்தா சாரதியோடு இணக்கம் கொள்ள தூண்டுகையிடுகின்றார்.

மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளான கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தேனுகா போன்றோருடைய அன்பினில் கட்டுண்டதை இவரது படைப்பின் செழுமைகள் நமக்கு நன்கு உணர்த்துகின்றன. உண்மையில் இவர்களோடு பயணித்திருப்பதில், அவர்களின் அன்பைப் பெற்றிருப்பதில் பிருந்தா சாரதி மிகக் கொடுத்து வைத்தவர். அந்த பிருந்தா சாரதியைப் படிக்கும் நாமும் கொடுத்து வைத்தவர்களே.


நூல் பின்னட்டையில்

“பிருந்தாசாரதியின் இந்த ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்’ தொகுப்பின் கவிதைகள் அனைத்தும் பூடகமின்றித் தெளிந்த மொழியில் பேசுகின்றன. தெளிந்த மொழி: குளிர்ந்த சொற்கள்; செறிந்த சிந்தனை, வாசகனைக் குழப்பாத துல்லியம் எல்லாம் கூடி பிருந்தாசாரதி கவிதைகளை நேசிக்க வைக்கின்றன. யார் இந்த பிருந்தா சாரதி? யோசிக்கவைக்கின்றன.”

‘கவிப்பேரரசு’ வைரமுத்து

“மின்சாரக் கொசுமட்டை’ ‘வானவில் விற்பவன்” “ஈருயிர் கொண்டவன்’ “நகரச்சாவு , “கடவுளை சந்திக்கச் சென்றிருந்தபோது, “ரோஜா முள்” என இந்த கவிதைத் தொகுதியில் நிறைய சப்ஜெக்ட்களைத் தொட்டிருக்கிறார். இப்படி எனக்குத் தெரிந்து சமீபத்தில் ஒரே தொகுதியில் பல்வேறு தலைப்புகளை, களங்களைத் தொட்டு வெளிவந்தது இந்த தொகுப்பாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.”

இயக்குநர் என்.லிங்குசாமி

நூல் தகவல்:

நூல் : ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்

வகை :    கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : பிருந்தா சாரதி

வெளியீடு :  டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு :    2016

பக்கங்கள் :  200

விலை : ₹  180

Buy on Amazon

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *