(“சிறுவாணி சிறுகதைகள்-2020″ தொகுப்பை முன்வைத்து)

“நூலினைப் பகுத்துணர்” என தன்னிலை  பிரகடனப்படுத்தும் பணியில் தனது ஐந்தாம் ஆண்டின் பயணத் துவக்கத்தை இந்த சிறுகதைத்தொகுப்பின் மூலம் முன்னெடுக்கிறது சிறுவாணி வாசகர் மையம்.  இந்த ஏப்ரலின் வெளியீடாக சிறுவாணி வாசகர் மையம் – ரா கி ரங்கராஜன் நினைவு சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு . முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற பன்னிரண்டு சிறுகதைகள் என 15  சிறுகதைகள் அழகான அச்சுக்கோப்பில் எழுத்தாளர்களின் படைப்புலகு குறித்ததான சிறு சிறு அறிமுகக் குறிப்புகளுடன்.

கதைக் களம், மொழியினை பயன்படுத்துகிற லாகிரி, மொழி ஆளுமையின் லாவகம், விவரணைகளை விரிக்கிற நேர்த்தி, பூச்சுக்களற்ற கதைமாந்தர்கள், வட்டார வழக்கின் இயல்பான பிரயோகங்கள், ஆங்காங்கே மின்னல் சொடுக்குகளாய் பளீரிடுகிற கதையோட்டத்தின் இயல்புக்குள்ளான படைப்பாளியின் பார்வைத்தெறிப்புகள் எல்லாமுமாய் சேர்ந்து கலந்து, படிக்க விழைகிற வாசகனுக்குள் ஒரு கலைடாஸ்கோப் ரசவாதத்தை விளைவிக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு.

வானவில்லின் நிறப்பிரிகையைப்போல ஒவ்வொரு கதையும் தனித்தனி வர்ணம்.  கருப்பொருள் ஒத்திசைவு எந்த கதைகளுள்ளும் பிரதிபலிக்கவே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  அதுவே தொகுப்பின் ஆகப்பெரிய பலம்.

சிறுகதைகளின் வடிவம் எண்ணங்களை குறுக்குவதிலும் வார்த்தைகளை சுருக்குவதிலும் இல்லை. அது நிகழ்ந்துவிட நேரிடுகையில் படைப்பாளி தன் எழுத்தின் சுடர்களை மங்கிவிடச் செய்துவிடும் ஆபத்து இருக்கிறது. மாறாக, களத்தையும், கதையாட்டத்தின்  சூட்சுமத்தையும் கொஞ்சமும் விடாமல் பூப்பூவாய் அலைந்து திரிந்து துளித்துளியாய் சேகரித்து கிளைத்த தேனடையை பிழிகையில் ருசித்துளிகளாய் வாசகனுள் வழிகிற  தேனருவியின் ருசியானுபவத்தை ஒத்தது. இந்த புத்தகம் ஒரு தேனடைபோலத்தான்.

தவிப்பூ, வெயில் அணிந்தவன், பெருந் தீ,பாதுகா, அம்மாவின் கட்டில்,தீர்ப்புகள்,பெண்ணானவள், வெள்ளரி ஓடை, கர்ணமந்திரம், மெல்போமின் & டயோனிசஸ், கோட்டம், எங்கே என் நிம்மதி?, கடைசிப்பிண்டம், பஜகோவிந்தம், ஸ்தம்பனம்  என கதைத்தலைப்புகளிலும் தனித்துவம் மிளிர்கிறது .

கதைகளின் குறிப்புகளை, கதைப்போக்கை குறிப்பிடுவது அந்தந்த எழுத்தாளனின் பிரம்ம ரகசியத்தை பொதுவெளியில் வெளியிடுவது போல. ஒரு நல்ல விமர்சனப்பார்வை கதைகளின் உள்ளீடுகளை, மையச்சரடுகளை முதன்மைப்படுத்தி அந்த புத்தகம் படிக்காமல் விமர்சனத்தைப் படிக்க நேரிடுகிற வாசகனை புத்தகத்தை தேடிப் போய் நூலை பகுத்துணர வைக்கவேண்டும். அதுவே சரியான விமர்சன நியாயமும்கூட.  வாசகன், படைப்பாளி நடுவே ஒரு விமர்சகன் வாசிப்பனுப பாலத்தைக் கடக்க உதவும் கைகாட்டி மரம் மட்டுமே. மற்றவை யாவையும் வாசக படைப்பாளி உலகுள் நிகழ்கிற ரசனைப் பரிவர்த்தனை நிகழ்வுகள்.

ஒரு நல்ல கதை முதல் வரியிலிருந்தே வாசகனை உள்ளீர்க்க துவங்கிவிடுகிறது என்பார்கள். பதினைந்து கதைகளுமே அந்த அளவீட்டை தொடுகின்றன.

தவிப்பூ (மகேஷ்குமார் செல்வராஜ்) –பெண்மையின் விடலைத்தனத்தையும் தாய்மையின் ஓய்விலாத குடும்பப் பங்களிப்பின் உழைப்பினையும் கூழ் ஊற்றும் விழாவின் முனைப்பையும் ஒரு சேர எடுத்துச் செல்கிறது.  வார்த்தைக்கு வார்த்தை பரிமாறிக்கொள்ள வேண்டியிராத அன்பை, பாசத்தை உள்ளீடாக ததும்பும் கூழ் பானையைப் போல நிறையவே நிரப்பி வைத்திருக்கிறது: எல்லோர்க்குமான விநியோகித்திற்காகவும்:  அன்பும் ஒரு பிரசாதம்தானே.!

வெயிலை அணிந்தவன் (இராம.பாலஜோதி)— மாறுபட்ட கோணத்தில் மழையை பார்க்கிற பார்வையில் நகர்கிற கதை.சொக்கவைக்கிற எழுதுவிதம். ஒரு சிறுகதைக்குள் பல வாழ்நிலைகளை சிமிழியிலடைத்து தருகிற செப்பிடு வித்தை. எல்லாமும் இருக்கிறது மழையும் வெயிலும் மனமும் சமயங்களில் அதன் உள்ளீட்டு வலிமையும் சேர்த்து.

பெருந் தீ (மணிமாலா மதியழகன்) –கிராமிய வாழ்க்கையை, அதன் அச்சு அசல் மனிதர்களை, மண்மணம் கமழக் கமழ விவரித்துச்செல்கிறது . மனித குணத்தைப் பற்றி குறிப்பிடுகையில் ‘லா ச ரா’ அவர்கள் “அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி” என்பார் . இக்கதையில் தவிப்பு, இயலாமை, வெறுப்பு, வம்பு, நற்குணம், துர்க்குணம் என எல்லா உணர்வு நிலைகளும் சாதுர்யமாக கையாளப்படுகிறது. அது படைப்பாளியின் வனைவுதான்.

பாதுகா (மீரா.செல்வக்குமார்)— நிகழ்கால  கஷ்ட நஷ்டங்களை,  அலைக்கழிப்புகளை  வாழ்வின் நிச்சயமற்ற போக்கினை புரிந்துகொள்ள முடியாத அவஸ்தையை குறியீட்டுக் கதையாக்கி விவரிக்கிறது. எதிர்கால பாதுகாப்பிற்கு செருப்பாக தேய்ந்து உருக்குலையும் மானிட யத்தனங்கள் தீர்வைத்தொட்டுவிட முனைவது எழுத்தின் கூர்மையை காட்டுகிறது.

அம்மாவின் கட்டில் (நந்து சுந்து) — எளிமையான நடை. சிறு சிறு உரையாடல்களில் கதையின் சூழல் பட்டென மனதில் அறைகிறது.  கதைப்போக்கு கீழ் நடுத்தரவர்க்க தின ஜீவன போராட்டத்தை குறிப்பிட்டாலும் கதைமாந்தர்களுக்குள்ளான அன்பையும் கம்பீரத்தையும் ஏன் கௌரவத்தையும் விட்டுவிடாத நேர்த்தியில் பின்னப்பட்டிருப்பது தேர்ந்த எழுத்தின் அடையாளம்.  முடிவுப் பகுதி கதைப்போக்கிற்கான நீரோட்ட வெளிப்பாடு .

தீர்ப்புகள் (வெ.சுரேஷ்) — உறவுச்சிக்கல்களை, உரிமை நிலைநாட்டல்களை வாழ்வின் அவஸ்தைகளை முன்னிறுத்தி பயணிக்கிறது.  தேடல் எல்லோர்க்கும் உள்ளதுதான்.  ஆனால் தீர்ப்புகளில் இருக்கிறது தராசுத்தட்டின் சாய்தலும் மேலெழுச்சியும் . கதையில் காத்திரமாக உலா வருகிற அம்மா எடுக்கிற முடிவுத்தீர்மானத்தில் நிறையவே தெளிவு பிறக்கிறது- தீர்ப்புகளின் உக்கிரம் தாண்டி.

பெண்ணானவள் (தமிழ்ச்செல்வி) – அயல்தேச வாழ்க்கை முறை கதைக்களன். நேரிடையாக கதைக்குள் சென்றுவிடுகிற உத்தி. உளவியலை அலசிச்செல்லும் விவாதநிலை படிமங்கள்.  கட்டுக்கோப்பான எழுத்து நடை.  பெண்மையின் சாதனை முயல்வுகளை உரத்து ஒலிக்காத ஆனால் பலமாய் நிறுவுகிற தன்மை.

தந்தை மகள் நேசநிலை சிறப்பாக வெளிப்படுகிறது.

வெள்ளரி ஓடை (துரை.அறிவழகன்) –– தொகுப்பின் தனி அடையாளச் சிறுகதைகளில் முக்கியமானது. காட்சிப்படுத்துதல் இக்கதையில் பலமாக காணக் கிடைக்கிறது. வறண்ட பூமியின் ஆதார வளங்கள் வறுமையும் விளிம்புநிலை வாழ்வும்தானே! பனைமரமும் அதையும் விழுங்க நினைக்கும் செங்கல் சூளையும் ஆண்டான் அடிமை என உலவும் மனித வாழ்வின் குறியீடு. வாழ்ந்துகெட்ட அவலம் பஞ்சம் பிழைக்க நகர்வதில் முடிகிறது. “இருவருக்கும் பின்னால் வெள்ளரி ஓடை நிழலாக மறைந்துகொண்டிருந்தது” வலிமிகுந்த வேதனையை வரிகளில் கடத்துகிறது. வறண்ட வாழ்க்கையை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிற கதைப்போக்கில் குளிர்ச்சியை தருகிற “வெள்ளரி”யும் “ஓடை”யும் சற்றே வெளிக்காட்டுவது நகைமுரண்.

கர்ணமந்திரம் (எஸ்.ஸ்ரீதுரை) — உளச் சிக்கலை, ஆணாதிக்கத்தை, சந்தேகச் சங்கிலிகளில் பிணைத்து உலவ விடுகிறது.  பெண்மனம் படும்பாடு கதையில் தீவிரமாக விரவி நிற்கிறது . போராட்டங்களின் ரணங்கள் ஆழமானவை. அதன் முடிவுநிலை முன்னெடுப்பில் வெளிப்படுவது விடுதலையா, தண்டனையா என்கிற புள்ளியில் வாசகனை நிறுத்துகிறது கதை.

மெல்போமின் & டயோனிசஸ் (விஜயராவணன்)  இருநிலை படிம குறியீட்டுக்கதை.  சிறுகதைக்குள் விரிபடுகிற கனவுலகின் சிறகடிப்பும், இருவித உருவக கதைப்போக்கும் தொகுப்பின் முக்கிய கதைகளில் இதனை நிற்கவைக்கிறது.  மாட்சியும் வீழ்ச்சியும் காதலும் புறக்கணிப்பும் வெற்றியும் தோல்வியும் ரயில் பயண ஜன்னலோர காட்சிகளாக நகர்த்திச்செல்கிறது.  தொய்வின்றி பின்னலுறுகிற packed story  எனலாம்.

கோட்டம் (ஆர்.கே.அருள்செல்வன்) –மேலோட்டமாக சைக்கிளை சுழன்று சுற்றி உலவுகிற கதைபோல் தோன்றினாலும் அதன் ஆழமான நீரோட்டம் வாழ்வின் கற்றல் பெற்றல் வாழ்பவனுங்களை உள்ளடக்கியது.  வாசிக்கும்போது நேர்கிற மனநிறைவே கதையின் வெற்றிச்சூத்திரம்.

எங்கே என் நிம்மதி (பூபதி பெரியசாமி) –அனைத்துமே முடங்கிவிடுகிற ஊரடங்கு காலத்தில்  கதைநாயகி ஜானகியின் நிம்மதி உலகம் எங்கே மையம்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அங்கே கொண்டுசேர்க்கிற அனுசரணைக் கணவன்.  அன்புச் சரடுகளில் கோர்க்கப்பட்ட கதை.

கடைசிப் பிண்டம் (பாமதி நாராயணன்) — உறவுகளின் இருப்பையும் மேன்மையும் நினைவலைகளில் உருவேற்றம் செய்து அவ்வுறவுகளின் கடைத்தேற்றுதலை கடைசிக்கடமையாக நிறைவேற்றும் நீத்தார்கடன் தீர்க்கும் கதை.  சோமுத்தாத்தாவின் பாத்திரப்படைப்பு  கதையில் முக்கிய இடம் வகிக்கிறது.

பஜகோவிந்தம் (ஜெ.பாஸ்கரன்) — சிறுகதையின் இலக்கணத்தை முழுமையாக உள்வாங்கி வெளிப்படுத்தப்பட்ட படைப்பு. சபலம், சலனம்,ஒரு சம்பவம் ,குறைவான கதாபாத்திரங்கள் என பல காரணிகள் கதைக்கு வலு சேர்க்கிறது. மனைவி மீனாட்சி சூழலை சாதுர்யமாக கையாண்ட விதம் கதையின் சைலண்ட் ஹைலைட்.

ஸ்தம்பனம் (சத்யா GP)– பள்ளிக்கால வாழ்க்கையை மறுபடி வாழமுடியாதுதான். ஒரு நாவலுக்கான கதையை சிறுகதைக்குள் கொண்டுவருவது அசாத்தியமான விஷயம்.  ஒரு  மீள்தேடல் முயற்சியில் அதை ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கதாசிரியர்.

மொத்தமாக தொகுப்பை படிக்கையில் ஒரு முழுமையான பயண அனுபவத்தைத் தருகிறது.

 

நூல் தகவல்:

நூல் : சிறுவாணி சிறுகதைகள்-2020

(சிறுவாணி வாசகர் மையம் - ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி- 2020இல் பரிசுப் பெற்ற கதைகள்)

பிரிவு:  சிறுகதை தொகுப்பு

வெளியீடு : சிறுவாணி வாசகர் மையம் | பவித்ரா பதிப்பகம்,

வெளியான ஆண்டு:   2020

விலை: ₹ 200

தொடர்புக்கு: ஜி ஆர் பிரகாஷ்

அலைபேசி :  9940985920 /8778924880.

  

ஆர்.கே.இராமநாதன் (காலவன்) கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய எழுத்துப் பயணத்தில் பயணிப்பவர். கவிதை, கட்டுரை, விமர்சனங்கள் என பன்முகத் தளங்களில் இயங்கி வருபவர். நாடகத்துறையில் எழுத்து, நடிப்பு, இயக்கம் எனும் செயல்பாட்டுடன் நாடகப் பயிலரங்கு பட்டறையும் இயக்கி வருகிறார். ஊடகப் பிரபலங்களுடன் நடித்த அனுபவமும், தொலைக்காட்சி தொடர்களின் இயக்க அனுபவமும் கொண்டவர். சிறுபத்திரிக்கை செயபாடு கொண்ட இவரின் “தென்றல் புழங்கிடும் தெரு” எனும் கவிதைத் தொகுப்பு சமீபத்தில் “குவிகம்” பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

 

One thought on “தேனருவியின் ருசியனுபவம்

  • சிறப்பான, செறிவும், அடர்த்தியுமான பார்வை.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *