பிரதி நாவல் அடிப்படையில் இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்றில் கதை நாயகனான நிரஞ்சனுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை தனது நினைவில் உள்ள விஷயங்களில் அடிப்படையானவற்றைத் தவிர அனைத்தையும் மறந்துவிடும் அபூர்வ சக்தி / குறைபாடு. அவன் தாயார் உதவியுடன் அதனை எதிர்கொண்டு சமாளித்து வாழ்வதுடன், தனது லட்சியமான சிறுவயதில் பெரிய நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வரத்துடிக்கும் உத்வேகம் அவனைத் தொடர்ந்து இயக்குகிறது.

இன்னொரு பக்கம் தனது தந்தை பயிற்றுவித்த விஷயங்களின்படி நிலத்தின் மீது தீராக் காதலுடன் வாழும் மற்றொரு நாயகன் முகிலன். நிலம் தொடர்பான விவகாரம் ஒன்றில் அண்டை நிலத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் அவனது தந்தை மரணிக்கிறார். அதையடுத்து அங்கே சில மர்மமான காரியங்கள் நடக்கத் தொடங்க, அதையறியும் முயற்சியில் முகிலன் தீவிரமாக, பிரச்சினைகள் அவனை சூழத் தொடங்குகின்றன.

ஒருகட்டத்தில் இவர்கள் இருவரும் ஒருவர்தான் எனும்படியாக interconnected ஆகி இருப்பது நாவலில் வெளிப்படும் தருணம் உங்களை நிமிர்ந்து உட்கார வைக்கும். அடுத்து ஒருவரின் வாழ்வு நிகழ்வுகளை மற்றொருவர் தீர்மானிக்க இயலும் என்பது மாதிரியான தளத்தில் கதை நகரும்போது மேலும் ஒன்றி விடுவோம். இறுதியில் முதலில் குறிப்பிட்ட 40  நாட்களுக்கு ஒருமுறை தனது நினைவில் உள்ள விஷயங்களில் அடிப்படையானவற்றைத் தவிர அனைத்தையும் மறந்துவிடும் நிரஞ்சனின் இயல்பு எதிர்பாராத தருணத்தில் வெளியாகும் போது கதை முடிவுக்கு வருகிறது. எப்படி என வாசித்துப் பாருங்கள்!

கதை குறித்து சொல்லும்போது இப்படி ஏதோ அறிவியல் புதினம் போல உங்களுக்குத் தெரிந்தாலும், கதை முழுக்கவே ஒரு மண் மணக்கும் பிரதி! சுருக்கமாக நிலத்தின் குரலை நம்முன் வைக்கும் படைப்பு என்றும் சொல்லலாம். சமீப காலங்களில் நிலம் மற்றும் அதன் உரிமைகள் சார்ந்து தமிழகத்தில் நாம் கண்டுள்ள போராட்டங்களும், அதே போல பல சூழல்களில் இத்தகைய போராட்டங்களில் உயிரிழந்தவர்களும் நம் கண் முன் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக முதல் அத்தியாயத்தில் முகிலனின் போராட்ட தருணங்கள் விவரிக்கப்படும் போது ஸ்டெர்லைட், கதிராமங்கலம், மெரினா என தமிழகத்தில் நாம் கண்ட எத்தனையோ களங்கள் மனதினுள் மின்னி மறைந்தன. மிக குறைந்த அளவிலான துணைப் பாத்திரங்கள் என்றாலும் எழில், யாழினி என இருவரும் இந்த நாவலில் தனித்துப் பயணிக்கிறார்கள்.

மிகச்சுருக்கமாகச் சொல்வதென்றால் நிலம் மற்றும் வளம் சார்ந்த ஒரு சமகாலப் பிரச்சினையை முன்வத்து, நிலத்தின் குரலை நமக்கு கேட்கச் செய்வதற்காக நேர்மையாக ஒரு முயற்சியினை ஜெயன் மைக்கேல் இந்த நாவலில் செய்துள்ளார் என்பது உறுதி. உளவியல் கலந்த புனைவுமுறையும் வித்யாசமான ஒன்று. ஆனால் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளது. முதலாவதாக கதை நடைபெறும் இடம்/சூழல்/ காலம் சார்ந்து நமக்கு ஒரு பிடிப்பு ஏற்படும் வகையில் எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லாத வகையில் ஒரு அத்துவான வெளியில் கதை நிகழ்கிறது.

அத்துடன் நாவல் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ள பழைய பாணி உரைநடைத் தமிழ். குறைந்தபட்சம் நிரஞ்சன் இடம்பெறும் பகுதிக்காவது பேச்சுத் தமிழ் கொடுத்திருந்தால், நாவல் முழுவதுமே ஒரு அந்நியத்தன்மை நிலவுவதைத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதேபோல் முகிலன் போராட்டம் சார்ந்த இறுதிப்பகுதிகள் விரைவாக முடிவுறுவதில் தோன்றும் ஒரு நாடகீயத் தன்மை ஆகியவற்றையும் சொல்லலாம்.

இறுதியாக காலவெளியின் லாஜிக்படி மேலும் கதை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் நாவல் முடிகிறது. பார்க்கலாம்!  ஆசிரியர் ஜெயன் மைக்கேல் ‘மூப்பன்’ எனும் தனது முதல் நாவலுக்காக 2019-ஆம் ஆண்டு வாசகசாலையின் ‘சிறந்த அறிமுக எழுத்தாளர்’ விருது பெற்றவர். அவரது இரண்டாவது நாவலான எர்தா இன்னும் வாசிக்கவில்லை. இது மூன்றாவது படைப்பு. புத்தக கண்காட்சி சமயத்தில் வாசிக்குமாறு கையளித்திருந்தார். தற்போதுதான் வாசித்து, எழுத தருணம் வாய்த்துள்ளது. எழுத்துப் பயணம் மேலும் சிறப்பாகத் தொடர்வதற்கு நல்வாழ்த்துகள் !


கார்த்திகேயன் வெங்கட்ராமன்
          (வாசகசாலை)

நூலாசிரியர் குறித்து:

ஜெயன் மைக்கேல்   கன்னியாகுமரியை சேர்ந்தவர். மின்னியலில் பொறியியல் பட்டம் பெற்று எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் பணிபுரிகிறார். மூப்பர், கடைசி இருக்கைகள், எர்தா போன்ற புதினங்கள் முன்பு எழுதியவைகளில் குறிப்பிடத்தக்கவை. அவரை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் [email protected]


நூல் தகவல்:
நூல் :  பிரதி
பிரிவு : நாவல்
ஆசிரியர் ஜெயன் மைக்கேல்
வெளியீடு: மழலி வெளியீடு
வெளியான ஆண்டு :  பிப்ரவரி 2021  (முதல் பதிப்பு)
பக்கங்கள் 218
விலை :  ₹ 220
விற்பனை உரிமை :  பாதரசம் – 72992 39786