O. Henry இன் கதைகள் முடிவில் ஸ்தம்பிக்க வைக்கின்றன. திரில்லர் நாவல்கள் ஒருவிதமாய் Classics மற்றொரு விதமாய் ஸ்தம்பிக்க வைக்கின்றன. அருவிகளின் சிறுநகரில் சாளரக்காட்சிகளை கடக்கும் கவிதை கடைசியில் ஸ்தம்பிக்க வைக்கிறது.
” அருவிகளின் சிறுநகரில்பொது விடுமுறைபொது விடுதலைஎல்லோரும் அழகாகிறார்கள்எல்லோரும்அண்ணாந்து பார்க்கிறார்கள்எல்லோரும் உச்சி குளிர்கிறார்கள்மனநலக் காப்பகத்திலிருந்துஒரு சிறியகூட்டமும்மனநோய் தேசத்திலிருந்துஒரு பெரிய கூட்டமும்பேரருவியை நெருங்குகின்றன”
மனநிலை தான் எல்லாவற்றிற்கும். கவலையில் நாம் இருக்கையில் காணும் எல்லோரும் சிரிப்பது போல் தோன்றும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிப்படுகின்றன என்ற தீராநம்பிக்கையில் ஆயுளைக் கழிப்போமாக!
” தொலைவில் ஒலிக்கும்அதிகாலை நாதஸ்வரமேளம்திடீரென ஒரு புளிப்புக்காற்றைக்கொண்டு வருகிறதுஎவ்வளவு காலப்புளிப்பு”
சின்னச்சின்ன விசயங்கள் தான் வாழ்வை சுவாரசியமாகவும், அழகுள்ளதாகவும் ஆக்குகின்றன. பெரிய விசயங்கள் பேரலை, காலை இழுக்கையில் உயிர்பயம் தவிர வேறொன்றும் இல்லாது செய்வதுபோல் செய்து விடுகின்றன. கடித்த எறும்பைக் கசக்காது ஊதி விரட்டுகையில் நீங்கள் தேவன்.
” ஓடை மணலில்தோண்டிய குழியில்கொஞ்சம் நீர்பரப்பிஅதில் பிடித்த மீன்களைநீந்த விட்டிருக்கிறோம்அந்தச்சிறு பள்ளத்தில்சிறுபொழுதேனும் நீந்தக்கிடைத்தசிறிய புன்னகைஎங்களுக்கும் கிடைக்கும் தானே?”
பசித்தவன் பார்க்கும் பழங்கணக்கிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது போலிருக்கிறது. பாரிமகளிர் கூட அன்றிருந்த எதுவும் இன்றில்லை என்று தானே புலம்பினர்.
” இரவின் பிசுக்கள் போக்கிஅதிகாலைகளில் மஞ்சள் உரசிக்குளித்துகூந்தலை முடிச்சிட்டதெல்லாம்பழங்கதைபின்புறத்தை ஆரத்தழுவி பின்கழுத்தின்பிடரிமுடிகளின்வாசனை நுகரும் பூனைத் தருணங்கள்வருவதே இல்லைஒவ்வொரு வாசனையும்காற்றின் காலத்தில்எங்கோ எப்போதோதொலைந்து போனதுபோகட்டும்.இப்போது ஜன்னலருகில்மைனாக்களின் கெச்சாளம்”.
இவரது முந்தைய தொகுப்புகள் போலவே அங்கங்கே சில கவிதைகளில் வெம்பூரைத் தூக்கிச்சுமக்கிறார். மூதூரின் அளிச்சேற்றில் மீன்கள் மிதக்கின்றன. சாணம் மெழுகிய சின்னத்திண்ணையில் தாத்தா மாடுகளோடு தூங்குகிறார். வேப்ப மரத்தின் பின்னால் ஒளிந்த சிறுபெண் இத்தனை காலத்திற்குப்பிறகு திடிரென எட்டிப்பார்க்கிறாள். அதிகாலை இருள் பிரியுமுன் கிராமத்துத் தேவதைகள் நடமாடும் சுள்ளாக்கரை. உள்ளங்கையில் பருப்புக்கடைந்து, குழம்புவைத்து விரல்நுனிகளில் கூட்டுப்பொறியல் செய்து பரிமாறிய நினைவுகள் இன்னும் கரைந்து போகவில்லை.
காமம் பல கவிதைகளில் சவ்வூடு பரவல் நடத்தியிருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் எடுத்ததை விட எப்போதும் மீதியாய் நிறைய இருக்கும், கண்முன் சர்ப்பமாய் நெளியும் காமம். உயிர்சுவையை அறியத்துடிக்கும் துடிப்பு. எண்பத்து ஏழில் இவரது முதல் தொகுப்பு.
இது ஏழாவது எனும் போது சராசரியாக ஐந்து வருடங்களுக்கு ஒரு தொகுப்பு என்பது குறைவாக எழுதுவதே. தமிழ் சங்கப்பாடல்களையும், ஆங்கிலத்தின் இன்றைய கவிதைகளையும் ஆழமாகப் படித்துப்பின் கவிதை எழுதுபவர்களுக்கு மொழியின் பலமும், வீச்சும் தானாக அமைந்து விடுகின்றன. அப்படி எழுதும் வெகுசிலரில் இவரும் ஒருவர்.
நூல் : சமகாலம் என்னும் நஞ்சு
பிரிவு : கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: சமயவேல்
பதிப்பகம் : தமிழ்வெளி
விலை : ரூ 100
வெளியான ஆண்டு : 2021
தொடர்புக்கு : 90940 05600
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர்