‘பேனா முனையின் உரசல்’, ‘புலன் விழிப்பு’ என்ற கவிதை தொகுப்புகளின் வழியாகவும், ‘தீராச் சொற்கள் ‘என்ற சிறுகதை தொகுப்பு வழியாகவும் பத்தாண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் திருச்சியை சேர்ந்த

பா. சேதுமாதவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது பத்தாவது புத்தகமான ‘சிறகிருந்த காலம் ‘ என்ற கட்டுரை தொகுதிகளின் வழியே மீண்டும் அவரது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு வாய்ப்பை அவரே எனக்கு வழங்கியிருக்கிறார்.

தற்போது உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி கிளையின் தலைவராக அவர் இருப்பதையும், ‘அகப் பார்வை ‘என்ற குறும் படத்தை இயக்கியிருப்பதையும் அறிய முடிகிறது.

‘சிறகிருந்த காலம் ‘ என்று பா. சேதுமாதவன் அவர்கள் இந்த புத்தகத்திற்கு தலைப்பிட்டிருப்பது கொரானா காலத்தில் மனிதர்கள் வீட்டிற்குள் சிறைப்பட்டிருந்த காலத்தில், இவரும் அந்த தனிமை காலத்தில் தனிமையை உணராமல் இருப்பதற்காக தன் மனச்சிறகை விரித்து இவர் எழுதிய அறுபது கட்டுரைகளின் தொகுப்பு இது எனப் புரிந்து கொள்வதற்குத் தான்.

       ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாழ்க்கை குறித்தும், ரசனைகள் குறித்தும், தான் பார்த்து வியந்த மனிதர்கள் குறித்தும், தனது கலை இலக்கிய அனுபவங்களின் மீதான தீராத காதல் குறித்தும்  எழுதித் தீராத நினைவின் பக்கங்கள் ஏராளமாக மனிதர்களின் அக ஆழங்களுக்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

     ஒரு தனி மனிதனின் வாழ்வியல் என்பது சமூகத்தோடு அவன் கொள்ளும் உறவை மையப்படுத்திய செயலாகத்தான் இருக்க முடியும். பல இலக்கிய ஆளுமைகள் தங்களது வாழ்வியல் அனுபவங்களை கட்டுரையாகத் தொகுத்து வெளியிடும்போது, அடுத்த தலைமுறை அந்த அனுபவங்களின் வழியே முந்தைய வாழ்வியலின் சமூகவியலாக அதை அறிந்து கொள்ள முடியும்.

       அந்த அடிப்படையில் இவரது கட்டுரைகளை வாசிக்க முயல்கையில், இவரது சக்கர வியூகம் என்ற முதல் கட்டுரை இவரின் பிள்ளைப் பிராயத்தில் இவர் சைக்கிள் பழகக் கற்றுக்கொண்ட அனுபவத்தை விவரிக்கிறது. தொழில் நுட்பம் என்ற சுனாமி வந்து அம்மிக்கல், ஆட்டுக்கல், மாட்டுவண்டி, ஜட்கா வண்டி இவைகளையெல்லாம் சுருட்டிக்கொண்டு போனதையும், இதில் சைக்கிள் மட்டுமே இன்று வரை தப்பிப் பிழைத்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.. இன்று புதிய வாகனங்களின் பெருக்கத்தில் இன்று சைக்கிள் மதிப்பிழந்து போனாலும், அதன் பயன்பாடு மாறியிருப்பதையும், புறக்கணிக்கப் பட்ட  முதியவரைப் போல ஒரு மூலையில் கிடப்பதையும் இவர் தன் ஆதங்கமாக கட்டுரையில் வெளிப்படுத்தும் விதம் சைக்கிள் பிரியர்களின் பழைய நினைவுகளை கிளறி விடுவதாக இருக்கிறது.

    பெயரில் என்ன இருக்கிறது?  என்று தொடங்கும் ஒரு கட்டுரையில் ஜுலியஸ் சீசரின் படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியில், சின்னா என்ற கவிஞன், மக்களால், கிளர்ச்சியாளன் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு கொல்லப்படுகிறான். சின்னா என்ற ஒரு பெயரே கொல்வதற்கு காரணமாகி விடுவதையும், மக்களின் கூட்டு உளவியலும் ஜுலியஸ் சீசரின் நாடகம் வழியாக அறிய முடிகிறது. அதே போல் பெயரை வைத்தே ஊரை கண்டுபிடிக்கும் வழக்கம் இருப்பதை இன்றும் காண முடிகிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தன் பிள்ளைகளுக்கு ‘கும்பிடறேன் சாமி’, ‘வணங்கறேன் சாமி ‘ என்று வைப்பதன் மூலம் அந்த தந்தை இன ஒடுக்கு முறைக்கு எதிராகத் தொடுத்த மௌன யுத்தத்தை, அவரின் மதி நுட்பத்தை அறியத் தருகிறார்.

 ஒரு மலையேற்றத்தின் போது சேலம் மாநகரை ஒரு பறவைக்கோணத்தில் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறார். வெள்ளை நிற மேக்னாசைட் தாதுப் பாறைகளைக் கொண்ட பெரிய நிலப் பரப்பையும், கண்ணாடித் தொழிற்சாலைகளையும் கண்டு களித்த பரவசம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இதே அனுபவம் எனக்கும் சமீபத்தில் வாய்த்தது. மதுரை ஒத்தக்கடை அருகில் நரசிங்கம்பட்டி உள்ளது.  அங்குள்ள நரசிம்மரை தரிசிப்பதற்கு மதுரையை சேர்ந்த மக்கள் கூடுவர். பெரும்பாலான மக்கள் கோயிலில் சாமி தரிசனம் மட்டும் செய்து விட்டு சென்றுவிடுவார்கள். ஒரு சில இளைஞர்களும், மலையேற ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே கோயிலுக்குப் போகும் பாதையில் உள்ள யானை மலையை தேர்ந்தெடுப்பார்கள். யானை மலை மீது ஏறி உச்சிக்கு சென்று விட்டால் மதுரையின் சுற்றுப்புற பகுதிகளை பருந்துப் பார்வையில் ஒரு சுற்று பார்த்து விடலாம். பா. சேதுமாதவன் கூறுவது போல் முதுமை தரும் மனச்சோர்வை போக்க மலையேறுதலும், புதுமையான விஷயங்களை கற்றுக்கொள்வதிலும், புதிய இடங்களுக்கு பயணம் செய்வதும் நம்மை எப்போதும் உற்சாகம் கொள்ள வைக்கும்.

  திருச்சியில் 1986-இல் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இவர் வேலை பார்க்கும் போது, அங்குள்ள அலுவலக கேன்டீனில் சாப்பாட்டின் விலை ரூபாய் 1.50/-தானாம். இந்த தகவல் எல்லாம் நமக்கு இப்போது ஆச்சரியமளிக்கிறது.

 நாம் அறியாத ஒரு நபர், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் வேறு ஒரு மாநிலதிலிருந்து இங்கு வந்து தன்னந் தனியாக வியாபாரம் செய்த ஒரு முஸ்லீம் பாயின் தோற்றத்தையும், அவரிடமிருந்து பகிர்ந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திலிருந்து அவரிடம் பெறப்பட்ட பல் துறை செய்திகளையும் ஒரு இரண்டு பக்க கட்டுரையில் ஒரு தனி மனிதரின் வரலாறைச் சொல்வது போல் சொல்கிறார். அந்தப் ‘பெட்டிக் கடை கர்ம யோகி ‘யை நாமும் நமது மனக் கண்களால் உற்றுப் பார்க்கிறோம். நம்மூரிலும் இப்படி எத்தனை பேரோ !

பா. சேதுமாதவன் தனது கட்டுரைகளுக்கு தலைப்பை தேர்ந்தெடுப்பது ஒரு வாசகனின் மனநிலையை வாசிப்பை நோக்கி திருப்பி விடுவதற்கான புதிய உத்தியாக தெரிகிறது.

சக்கர வியூகம், பொய் வளர்ப்பருவம், முதிராத் திருட்டு, உடைக் கலன், மூன்றாம் கால், உள்ளுறைக் கடவுள், இருளரங்கில் ஒரு அருங்கலை, பந்தயப்புரவிகள், பெட்டிக்கடை கர்ம யோகி, சைவக் கொக்கு என்று ஒரு சிறுகதைக்கான தலைப்புகள் இவரிடம் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன. எனினும் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதை போல் நம் மனக் காட்சியில் விரிகிறது.

‘சைவக் கொக்கு’ என்ற தலைப்பை பார்த்தவுடன் எனது கண்கள் அதன் மீதான விசாரணையை மேற்கொண்டு விட்டது. ஒரு திறமையான அதிகாரியின் அணுகு முறையால், யாருக்கும்  அடங்காத ஒரு ஊழியர் மீதான நடவடிக்கைக்கு தகுந்த காலம் வருகிறது. மத்திய அரசு ஊழியர் என்ற நிலையில் அவர் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறும் போது, அது வரை அச்சம் தரும் அரிமாவாக இருந்த அந்த ஊழியர் ஒரு திறமையான அதிகாரியின் முன் வாயடைத்துப் போகிறார். அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் பணியின் மீது தான் தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் இதன் விரிவான பக்கங்களை நாம் அரசு அலுவலகங்களில் நேரிடையாக பார்க்கலாம். ஊழியர்களின் அலட்சியங்களால் கிடப்பிலேயே கிடக்கும் அல்லது கவனிப்பாரற்றுக் கிடக்கும் கோப்புகள் எத்தனையோ !

அதிகாரிகளின் நடவடிக்கைக்கு முன்பு தன்னை மறைத்துக் கொள்ளும் அந்த சுபாவத்தின் பெயர்தான் சைவக் கொக்கு போலும்…. !

 தனது வாழ்க்கை பயணத்தில் தனது ரசனைகுரிய கடந்த கால அனுபவங்களையும், இடங்களையும் மனிதர்களையும், தனது பணிக்கால அனுபவங்களையும், நினைவுகளையும் எப்போதும் இவருக்குள் நிழலாடிக் கொண்டிருக்கும் நிகழ்வுத் துணுக்குகள் வழியாக இவரின் மனக் குகையிலிருந்து வெளிவந்து சிறகிருந்த காலம் என்ற தலைப்பில் நூலாக வடித்து தந்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு நூல் அளவில் விரியக்கூடிய சாத்தியமிருப்பினும், சுருங்கச் சொல்லி வாசக மனங்களை விரிய வைத்திருக்கும் இவரது கட்டுரைகள் நூலைத் தாண்டி நம் மனதிலும் சிறகடித்து பறக்கின்றன.


மஞ்சுளா 

நூல் தகவல்:
நூல்: சிறகிருந்த காலம்
பிரிவு : கட்டுரைகள்
ஆசிரியர்: பா.சேதுமாதவன்
வெளியீடு: உலா பதிப்பகம்
பதிப்பு ஆண்டு: டிசம்பர் 2020
பக்கங்கள் :  172
விலை : ₹ 120
தொடர்புக்கு: உலா பதிப்பகம்;

132, வங்கி ஊழியர் குடியிருப்பு

திருவானைக்காவல்

திருச்சிராப்பள்ளி – 620 005

ஆசிரியர் தொடர்பு எண்:  94438 15933