மண்ணில் மறைந்திருக்கும் பொன்னைப்போல், சூட்சுமமான, கவிஞரின் உணர்வுகளுக்கேட்ப, கையாளும் உள்ளடக்கத்திற்கு ஏற்ப கவிதைகள் உருப்பெறுகின்றன என்று நினைக்கிறேன்.

வாசகனுக்கு விழிகளோடு, மன கண்களும் தேவைப்படுகிறது, கவிதையின் உட்பொருளை அறிந்து கொள்வதற்கு. அத்தகைய ஆழ்ந்த பார்வை தேவைப்படும் ஒரு கவிதை தொகுப்புதான் கவிஞர் ஸ்டாலின் சரவணன் எழுதிய “ரொட்டிகளை விளைவிப்பவன்”

இத் தொகுப்பினை மூன்று பகுதிகளாகப் பிரித்து பார்க்கலாம்.
முதல் பகுதி அரசியல் பேசுகிறது.
இரண்டாம் பகுதி வாழ்வியல் பற்றி பேசுகிறது.
மூன்றாவது பகுதி காதல், காமம், பற்றி பேசுகிறது.

பத்தி கவிதைகள், சிறு குறிப்பு வரைதல் என பல புதிய பரிணாமத்தை நோக்கிப் பயணிப்பதையும் தொகுப்பில் பார்க்க முடிகிறது.

எடுத்த மூன்று கரு பொருட்களிலும் அதன் ஆழத்தை தொட்டுப் பார்ப்பதும் , அழுத்தமான, ஆழமான உணர்வுகளும் அடர்த்தியான மொழிப் பிரயோகத்தைப் பார்க்க முடிகிறது.

பல கவிதைகள் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவேண்டிய தேவை இருப்பது, எழுத்தின், வெற்றியா தோல்வியா என்பது மறுபரிசீலனைக்கு உட்பட்டது.

ஆட்சியையும், அதிகாரத்தையும் தட்டிக்கேட்க, இலக்கியம் மாபெரும் அம்பு என்பதை பார் போற்றும் தலைவர்களைப் போல் இவரும் அறிந்திருக்கிறார் என்பது சிறப்பு.

நில அரசியல், உணவு அரசியல், முதலாளித்துவம், அதிகாரம், ஏழ்மை, துரோகம், குற்றவுணர்ச்சி, என பல்வேறு காரணங்களால் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவனின் கதறல், அலறலாக ஒலிக்கிறது ரொட்டிகளை விளைவிப்பவன்.

“குருதி வழியும் சக்கரப் பற்கள்”கவிதையிலிருந்து சில வரிகள்

‘நிலத்திலிருந்து வெளியேறு’ அதன் கால்களை கட்டிக் கெஞ்சினான்.
அதுவோ தன் சக்கரப்பற்கள் தெரிய சிரித்தது.
எண்ணெய்த் தீருகையில் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டது.
விரல்களைக் கத்தரிப்பதெலலாம் அதன் பொழுதுபோக்குகளில் ஒன்று.
அகோரப் பசியெனில்
உடலையே கூழாக்கித் தின்று தீர்க்க அஞ்சாது.

என்கிறார் கவிஞர்.

//அமைதிதான் அதிகாரம் விரும்பிக் கேட்கும் இசை….//

//ஞாயிறு தோறும் வீட்டின் அருகில் மீசை உயர்த்தி காத்திருக்கும்
சாம்பல்நிற பூனையை ஏமாற்றாத வாழ்வையே கேட்கிறேன்//

//கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் இல்லையேல் உடையுங்கள்//

என பல மனோநிலையில் இருந்து அரசை எதிர்த்து அல்லது கெஞ்சி நிற்கும் வரிகள் நூலின் பெருமை.

ரண்டாவது பகுதி வாழ்வியலைப் பேசும் கவிதைகள். அரசியலும் காமமும் காதலும் புரிந்த அளவிற்கு எனக்கு இந்த வாழ்வியல் கவிதைகள் ஏனோ புரியவில்லை. உலகப் போர்களை விட, குடும்ப கலவரங்கள் தீர்க்கமுடியாத சூட்சுமம் நிறைந்தது என்பதால் போலும்.

துரோகத்தால் உழன்று அரற்றிக் கொண்டிருந்த இதயத்தை,
காலால் வாங்கி பந்தாடத் தொடங்குகிறது வாழ்க்கை.
மேலும் கீழும் இடவலமாக பறக்கிறது இதயம்.
என் வாழ்வே! மேலும் பந்தாடு.

என்கிறார்

தொகுப்புக்கு மேலும், மெருகூட்டுவது கவிதைகளுக்கான தலைப்புகள்.

“வாழ்க்கையின் நீளம் அகலம் அறிய முற்படுதல்.”

“செம்மரி களுக்கென்று ஒரு பாடல்”

“மிச்ச சொச்ச வாழ்வின் சாம்பல்”

இப்படி தலைப்புகளே ஒவ்வொரு கவிதைகளாக பார்க்க முடிகிறது.

டைசி பகுதியில் காதலும் காமமும்….

ஏதோ ஒரு தருணத்தில் பிரியமானவர்களிடம் வார்த்தைகளை வழங்கிவிட்டு காலத்துக்கும் அடிமையாக இருப்பவர்கள் அனுதாப உரியவர்கள் என்று தொடங்குகிறார்.

அருவருப்புகளை கடந்து, நேசிக்கும் காதலையும், ஈக்கள் மொய்க்கும் ஞாபகத்தை யும், காயத்தில் நிமிண்டி ரத்தத்தை சீழைத் நின்று கொழுக்கும் புழு நீ…. புலமை நிறைந்த சொற்கள், முழுமையான உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய வரிகள்.

வியர்வை கசகசக்கும் நள்ளிரவில்
ஈந்தப்படும் முலைகள் கரிக்கத்தான் செய்யும்.
அதனாலென்ன உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

சிறு குறிப்பு வரைதலில் என்னைக் கவர்ந்த வரிகள்.

புதிய தமிழ்ச் சொற்களை ஆங்காங்கே பார்க்க முடிந்தது. இவரது இரண்டாவது தொகுப்பான ’ஆரஞ்சு மணக்கும் பசி’ என்ற நூலில் ஆங்கிலக் கலப்பு அதற்கு குறையாக தெரிந்தது. அதற்கு முற்றிலும் மாறாக இந்த தொகுப்பில் புழக்கத்தில் இல்லாத தமிழ் சொற்கள் நிரம்பி வழிகின்றது. மொழி மேலும் செம்மைப்படட்டும். மிகப்பெரிய உழைப்பை இத்தொகுப்பில் பார்க்க முடிகிறது.

கவிஞரின் உழைப்பிற்கு தகுந்தவாறு ஒவ்வொரு கவிதைகளும் தனித் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. மிக நேர்த்தியான அடர்த்தியான செம்மைப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பாக அமைந்திருக்கிறது.

நூலாசிரியரின் அரசியல் பார்வை, அதன் பின்னிருக்கும் வலி , காலத்தை உணர்த்தும் கண்ணாடியாகவும் ஒரு ஆவணமாகவும் பயன்படுத்தக்கூடியது.


அர்ஷா மனோகரன்

 

நூல் தகவல்:
நூல்: ரொட்டிகளை விளைவிப்பவன்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: ஸ்டாலின் சரவணன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு  2019
விலை: ₹ 80
 பக்கங்கள்
தொடர்புக்கு : உயிர்மை பதிப்பகம்,
தேனாம்பேட்டை, சென்னை 18
தொடர்புக்கு: 9003218208

 

Stain Saravanan’s Photo Courtesy : Bala Murali