கடந்த 6.3.2021 அன்று சென்னையில் கலை இலக்கிய விமர்சகர் திரு இந்திரன் மற்றும் கவிஞர் ஆரூர் தமிழ் நாடன் முன்னிலையில் அறிமுகவிழாவில் வெளியான கவிஞர் மதுசூதனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘ பொய்மசியின் மிச்சம்’

நூலுக்கு கவிஞர் ஜி. சிவக்குமார் எழுதிய அணிந்துரை:


காதுகளசைத்து துதிக்கை உயர்த்துமொரு கல் யானை

கவிதைகளின் உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்.

அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச் செல்லட்டும்.

உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளை
தொடர்ந்து கொண்டே இரு.

அதன் அருகாமையை நழுவ விடாதே
ஒருபோதும்

- ஜலாலுத்தீன் ரூமி

சக மனிதனுடன் ஒற்றை வார்த்தையைக் கூட பேச முடியாத/கேட்க முடியாத, பணத்தை துரத்துகிற/பணம் துரத்துகிற வாழ்வில்,கவிதைக்கான இடம் எங்கே இருக்கிறது? கவிதைக்கான இடம் இருக்கிறதா? என்ற கேள்வி சமீபமாக நம் முன்னே எழுகிறது.

மெல்லிய கைகளால்/ கால்களால் மலரினினைப் பற்றி வளைத்து உறைந்து/ மெல்லசைந்து தேனைப் பருகுகிற வண்ணத்துப்பூச்சியை நின்று கவனித்து ரசிக்கும் ஒற்றை மனிதன் இருக்கும் வரை கவிதைக்கான இடம் யாராலும் அழிக்க முடியாதபடி நம் வாழ்வில் இருந்து கொண்டேதான் இருக்கும்

வசன கவிதைகளைப் போன்ற தோற்ற மயக்கத்தைத் தருகிற கவிஞர். மதுசூதனின் கவிதைகள்.
ஒருபுள்ளியில் ஆழமான அனுபவங்களை, பரவசங்களைத் தருகிற கவிதைகளாக மாறி விடுகின்ற மாயத்தை நிகழ்த்துகின்றன. வாழ்வில்,நெருக்கமான தோழி,காதலியாகும் அற்புதமான தருணமது.

மத பேதங்களற்று எல்லா தெய்வங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட அவரது வீதியை, காடல்ல, காடென்னும் சொல்லே புதிதாக இருக்கும் தலைமுறையை.,மகனுக்கோ மகளுக்கோ தன் அடையாளத்தை ஏதோ ஒரு கட்டத்தில் முற்றிலும் இழந்தவர்களாகவே இருக்கிற அப்பாக்களை,இரண்டு கைகளுக்கும் இடைப்பட்ட தூரத்தில் ஓடுகிற அவருக்கான நதியை, நண்பனொருவனின் அகாலமரணம். போன்று வறண்ட நதியை, ஆக்டோபஸின் பசியோடிருக்கிற மின்மயானத்தை,யானை வேட்டையை ஒத்ததாயிருந்த தட்டான் பிடித்த பால்யத்தின் சிறு கணத்தை, ஒற்றைக்கை பிச்சைக்காரனின் ஒற்றைக் கையிலிருந்த சூட்டுத் தழும்பை,ஒன்றும் நிறைவேறாத ஆட்டத்தில் உருள்கிற கடவுள் உருட்டிய பகடையை, எவரும் கவனிக்காத, ரயில் போன பின் படரும் ப்ளாட்ஃபார வெறுமையை, அப்பா இல்லாத அம்மாவை அற்புதமான நேர்த்தியுடன் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கவிதையாக்கியிருக்கிறார்.

அந்த மரத்தடியில் கல்யாண்ஜியும் நானும்

ஆளுக்கொரு சிறகெடுத்தோம்

அவர் அதை கவிதைக்கு எடுத்துக்கொண்டார்

நான் காது குடைய….அவரவர் பார்வைக்கும் தேவைக்கும்

சிறகுகள் உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன.

இந்தக் கவிதையைப் படிக்கும் போது எனக்கு கல்யாண்ஜியின் இந்தக் கவிதை நினைவில் மின்னியது.

சீலைக்காரி அம்மனின்

காலகாலக் களிம்பு ஏறிய 

வெண்கல மணி விளிம்பில்

அசையாது அமர்ந்திருந்தது தட்டான்

யாருமற்ற வெளியெங்கும்

அதிர்ந்து கொண்டிருந்தது

அரசிலைகளின் ஆதிக் குலவை.

காதுயர்த்தித் திரும்பிப் பார்த்துவிட்டு

தன் வழி நடக்கிறது

 ஒரு காமதேனு.

அரசமர இலைகள் சரசசரக்கும் அம்மன் கோவிலருகில் ஒரு பசு காதுயர்த்திப் பார்த்து விட்டுப் போகிறது என்று நாம் சொல்லும் ஒரு காட்சியை எப்படிச் சொல்கிறார் பாருங்கள்.

அவரவர்க்குத் தேவையானதை அவரவர் நினைத்துக் கொள்கிறோம் என்று ஒரு கவிதையில் எழுதிய கல்யாண்ஜி,இந்தக் கவிதையைப் படித்தால்,நல்லா சொல்லியிருக்கீங்க.நல்லாயிருங்க மதுசூதனன் என்றுதானே சொல்லியிருப்பார்.

மாரியம்மன் கோவிலும் மாதா கோவிலும்

மசூதியும் என் நீண்ட தெருவுக்குள்…..

ஜோசப்பின் கிறிஸ்துமஸ் கேக்கும்

பாய் வீட்டு பிரியாணியும்

என் வீட்டு மா விளக்கு மாவும்

பரிமாறிக் கொள்ளப்படும்

சமத்துவ வீதியில்

நேற்றைக்கு அடிபட்ட கந்தசாமிக்கு

ஆன்டனியின் ரத்தம்.

அகமதுவின் ஆபரேஷன் சிலவுக்கு

என் சாமி உண்டியல் உடைக்கப்பட்டது.

மரியாவின் பிரசவத்தை நூர்ஜஹான் பாட்டிதான் பார்த்தாள்.

கன்னியம்மா பூப்படைந்த சடங்கில்

மாமா வகையில் மொய்யெழுதினார் எட்வர்டு.

மோனிஷாவின் திருமண நிகழ்ச்சியில்

மகாதேவனின் இன்னிசைக் கச்சேரி.

எங்கள் வீதி எல்லா தெய்வங்களாலும்

ஆசீர்வதிக்கப்பட்டது!

நம் பால்யத்தில் எந்த மேத பேதமுமின்றி நாம் வாழ்ந்த அழகான நாட்களையும் பிரதிபலித்து, எல்லா மதங்களுக்கும் ஆதாரமான அன்பைத் தொலைத்து விட்டு உலராத குருதியுடன் வெறி கொண்டு அலையும் இன்றைய அவலத்தையும் காட்டுகிற கண்ணாடியல்லவா இந்தக் கவிதை.

பிடித்த பாடகரின் ஒராயிரம் பாடல்களில் ஒரு பாடலை மட்டும் சொல்லச் சொல்வது போல இந்தத் தொகுப்பில் ஒரேயொரு கவிதையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் நான் இந்தக் கவிதையை எடுத்துக் கொள்வேன்.

பசிய வனத்தின் நினைவில்லை

பசி கிளறும் மூங்கிலில்லை

சுனை தேடல் எப்போதுமில்லை

காமுறத் தேவையில்லை

வடவையொன்றிடம் வசப்பட்டு நிற்பதுமில்லை.

அங்குசக் குத்தலில்லை

பாகனின் சப்தமில்லை

ரணமாக்கும் நிகளமில்லை

கவளச் சோறில்லை, காய்ந்த வயிறுமில்லை

காசுக்கு ஏந்தலில்லை

குளப் படியில்

கருவறைக்குவெளியே,

கோவில் மடத்தில்

இப்படி எங்கேனும் ஓரிடத்தில்

யாரோ ஒரு சிறுமியின் வருடலுக்குக்

காத்திருக்கும் கல்யானைகளுக்கு.

தேக்கடி, பரம்பிக்குள வனப் பகுதிகளில், கோயில் வாசல்களில், திருவிழாக்களில், மாப்பிள்ளை அழைப்புகளில், மிருகக் காட்சி சாலையில் உலவிய யானைகளையெல்லாம் பதிவு செய்த நான், கோயிலுக்குள்ளிருக்கும் கல் யானையை எப்படி கவிதைப்படுத்தாமல் விட்டேன் என்பது ஆச்சர்யத்தையும், உங்கள் மேல் லேசான பொறாமையையும் உண்டு பண்ணுகிறது மதுசூதன்.

என் உரையில் பிரவகித்துப் பாய்கிற கவிதைகளில் ஒரு கையள்ளி பருகத் தந்திருக்கிறேன். கவிதைகளில் மதுசூதன் அடையப் போகும் சிகரங்ளுக்கான பயணத்தில் சிறப்பான முதல் அடியாக இந்த முதல் தொகுப்பு அமைந்திருக்கிறது.  வாழ்த்துகள் !


நூல் தகவல்:
நூல் : பொய்மசியின் மிச்சம்

ஆசிரியர்: மதுசூதன்

வெளியீடு: படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2020 (முதற்பதிப்பு)

விலை: ₹ 100

நூல் வாங்க தொடர்புக்கு:
அலைபேசி எண்: 91 97908 21981

 

2 thoughts on “பொய்மசியின் மிச்சம்

  • கவிஞர் மதுசூதனின் கவிதைகள் எப்போதுமே மிகச் சரியான வார்த்தைக் கோர்ப்பில் தொடுக்கப் பட்டு வாசிப்பவனுக்கு பல தரப் பட்ட எண்ண ஓட்டங்களை ஞாபக மின்னல்களைக் கொடுப்பவை..
    சாதாரணமாக நாம் கடந்து போகின்ற நிகழ்வுகள் பற்றிய மதுவின் பார்வையும் அதை வார்த்தைகளால் பிரதி பலிக்கும் வித்தையும் பல சமயங்களில் ‘ஹா’ வெனெ நம்மை மலைக்கச் செய்பவை.
    அணிந்துரை வழங்கிய கவிஞர் சிவக்குமார் கையள்ளிப் பருகத் தந்த ஒற்றைக் கவிதை தரும் பிரமிப்பே இன்னும் தீரவில்லை.புத்த்கம்முழுவதும் எத்த்னை ஆச்சரியங்களைத் தரப் போகிறதோ..

    Reply
  • மகிழ்வும் நன்றியும் திரு. சொக்கலிங்கம்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *