மிக எளிதாக எழுதக்கூடியதைக் கவிதை என்று சொல்லலாமா? நிச்சயமாக இல்லை. சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாகவும் புனைவு வழியாகவும் சொல்லும் முறை உண்டு. கவிதை அதற்கான ஒரு செயலியாகும். காண்பவற்றை மனதில் நிறுத்தி , தகுந்த சொற்களை இட்டு அதனைக் கவிதையாக்குவது என்பது அத்தனை எளிதல்ல. வார்த்தைகளும், அந்த உயிர்ப்பும் கவிதையை உச்சத்திற்குக் கொண்டு செல்லவும் என்பது திண்ணம்.

அடிப்படையில் ஒன்றாகி இருந்தாலும், மெய்யியல், வாழ்வியல், இருத்தலியல் என கவிதையியல் மூன்றாகிச் சங்கமித்திருக்கிறது என்று மதிப்புரை தந்திருக்கின்றார் ஜின்னா அஸ்மி.

ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட அணிந்துரை சிறப்பு. பக்தி இலக்கியத்திற்கும், நவீன கவிதைக்குமான நீள் கால இடைவெளியை விட்டு நிரப்ப, தன்னாலான வரிகளை எப்படி இவரால் எழுத முடிந்தது என்பது போன்ற பல வியப்புகளை தன் முதல் தொகுப்பில் எப்படி சாத்தியமாக்கினார் ரத்னா என்று தன்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை என ரவிசுப்பிரமணியம் அணிந்துரை தந்திருக்கின்றார்.

கடந்ததும், காண்பதும், நினைத்ததும் நிகழ்ந்ததுமாக உயிரில் தரித்து உருக்கொண்டு முட்டி மோதி வெளிப்போந்த, இந்த கவிதைகளுக்கென்று வகுக்கப்பட்ட மொழியப்பட்ட இலக்கணம் ஏதுமறியாத உணர்வுகளின் வெளிப்பாடு இந்த தொகுப்பு தன்னுடைய தந்திருக்கின்றார் ரத்னா வெங்கட்.

மொத்தம் 75 கவிதைகள். ஐந்தாறு தவிர்த்து மற்றைய கவிதைகள் அனைத்துமே தலைப்புடன் இருக்கின்றன. தலைப்புகள் வசீகரிக்கிறது.

  • என் இறையே

“எனது பயணம் நிறைவுற்றதென நினைக்கும் நேரங்களில்
திறக்கும்
புதிய பாதைகளுக்கு
உனது முகம்.”

இறைநிலையை உணர்த்துகின்ற வரிகளாக எனக்குத் தோன்றுகிறது. தலைப்பிற்குப் பொருந்தக் கூடிய வரிகள்.

  • தேர்வு

“இன்பமும் துன்பமும்
சரியான விகிதத்தில்
ஒன்றின் படியில்
மற்றொன்றைத் தேட வைக்கும் முயற்சியின் தூண்டுதலில் என..”

என்ற இடைப்பட்ட வரிகள் கவிதையின் சாராம்சத்தைத் தந்து போகிற போக்கில் சொல்ல முடியாத பதில் ஒன்றை இறைத்துச் செல்லும் குழந்தையைப் போல என்று நம்மை கரம் பிடித்துக் கூட்டிச் செல்கிறார்.

  • கொடையின் எல்லை

“இருப்பதைக் கொடுத்திடும் ஆவலில்
நிறுத்திட அறியாத துடிப்பில் மொத்தமாய் வீழ்ந்த பின்னும் பிசுபிசுப்பான தூறல் வழி
துளித்துளியாய்த் தன்னிரக்கம் வடித்து
ஓய்ந்து நின்ற பிறகு புரிந்து கொண்டது
தருவதின் இன்பத்தைப் பெறுவதின் மகிழ்வை நிறைக்கிறதென்று!”

இதிகாசங்களில் மேல் பற்று கொண்டு அதனை உள்வாங்கிப் படித்திருக்கக் கூடும். இந்த கவிதை வாசிக்கும் பொழுது அதனை நாம் உணர இயலுகிறது. கொடை வள்ளல் கர்ணனின் பாதிப்பு இந்த கவிதையை அவர்களுக்கு எழுதத் தூண்டி இருக்கலாம். தருவதின் இன்பத்தினை அப்போதே நாம் உணர முடியும் என்று நிறைவு செய்து இருக்கின்ற வரிகள் சிறப்பு.

  • கவிதையும் பின்னே வாழ்வும்

“கைவிரல் நுனியைத் தூரிகையாக்கி
வெறும் கனவைப்
பெருங்காதலில் குழைத்து வண்ணங்களின் ஊற்றில் ஊசலாட்டத்தை
அதன் பரிமாணங்களுடன் கச்சிதமாய் வரைகிறது
கடிவாளமற்ற மனம்.”

காதல் இல்லையேல் சாதல் என்பது பாரதியாரின் வரி. கவிதையோடு வாழ்கின்ற வாழ்வினை அழகாகப் படம் பிடிக்கின்றன வரிகள். அதற்கேற்றவாறு உபயோகப்படுத்தி இருக்கின்ற வார்த்தைகள் தூரிகையாய் நம் மனதில் ஓவியங்களை வரைந்து விடுகின்றன.

  • படித்துறை

“எள்ளிறைத்து
முற்றும் களைந்து
முழிதாய்த் தொலைந்திடும் முனைப்பில் முக்குளித்துக்
கரையேறுகையில்
தூரப் பார்வையை
அசைத்து
ஊன்றவும், பிடிக்கவும்
பற்றுக் கொள்ளவும் வைக்கிறது பாசம் படர்ந்த
இந்த படித்துறை”

உயிர் நீத்த மூத்தோருக்குக் குறிப்பிட்ட தினங்களில் எள்ளிறைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். அந்த எள் அவர்களுடைய பசியை போக்குவதாக ஐதீகம். ஏதோ ஒரு சம்பிரதாயம் என்று இதனைச் செய்தால் அதில் அர்த்தம் இல்லை. பித்ருக்களுக்கு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு கடமை என்று வேதம் சொல்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும், அவர்களை நினைத்து எள்ளிறைத்து விட்டு, குளித்து நாம் மேலேறி வரும் போது பற்றாய் நம்மைப் பிடித்துக் கொள்கிறது அவர்களது நினைவுகள் என்பது உண்மை. வலி மிகுந்த உணர்வுகளை வலி மிகாமல் உணர்வுகளாக நமக்குக் கடத்தி விடுகிறது இந்த கவிதை.

  • கண்ணீர்

“இன்று பொங்கும்
பரிசுத்தமான
இன்ப விழிநீரை
வந்து ஏந்தி கொள் கையிரண்டில் ஒத்தியெடு உன் இதழொன்றால் ஏனெனில்
நாளைக்கான என் உணர்வுகளை எவ்வாறு இருக்குமென்று
யாரறியக் கூடும்?”

அவனுக்காக வடிக்கின்ற கண்ணீர் உப்பு கரிப்பது இல்லையாம். மாறாக இனிப்பு சுவையினை உடையதாக இருக்கிறதாம். இன்றைய உணர்வின் பிரதிபலிப்பு அது. தயவு செய்து வந்து இதழால் அதனை ஒத்தி எடு என்று காதலில் உருக வைக்கிறார்.

  • அதுவரையில்…?

“நீ எப்படிப் பார்க்கிறாயோ
அதுவாக நான் இருக்கிறேன்
என் பலமும் பலவீனமும்
அதில் சிக்கியிருப்பது
உன்பாடில்லையெனினும்.”
என்ற வரிகள் அவர் ஈர்ப்பு கொண்டு வாசித்திருக்கும்
பகவத்கீதையின் வரிகளாக இங்கே பரிணமளிக்கின்றன.”

  • முடிவுற்றதும் முடிவற்றதும்

“தொடக்கத்தின் காற்புள்ளியும்

அந்திமத்தின் முற்றுப்புள்ளியும்

ஒரு வரியில் அடங்குவதா என்ன?

இடைப் புகும் வெற்றிடம்

ஒற்றைச் சொல்லில்

உடைந்திடாதா என்ன?”

என்ற வரிகள் கவித்துவம் மிக்கதோடு, இலக்கணத்தையும் உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது. முடிவுற்றதும் முடிவற்றதும் என்ற தலைப்பிற்குப் பொருத்தமான வரிகள் இவை.

  • திடமற்ற தீர்மானங்கள்

“தளும்புவதைச்
சிதறாத கவனத்துடன் உள்ளங்கையில்
எத்தனை நேரம்தான்
ஏந்திக்கொண்டிருப்பது?
உற்று நோக்குகையில்
உருமாறும் பிம்பங்கள் வழி எத்தனை காலம்தான்
உணர்வது
மாறாத என்னையும்
மாறிக்கொண்டேயிருக்கும் இரவையும் பகலையும்?”

மாறிக்கொண்டேதான் இருக்கின்றன இரவும் பகலும். ஆனால், தான் மாறவில்லை உள்ளங்கையில் வைத்துச் செல்லும் எதனையும் கவனமுடன் கொண்டு செல்லவில்லை எனில் தளும்பிச் சிந்தத்தான் செய்யும். ஆக, மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகில் நினைவால் நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்கிறார் இந்த கவிதையில்.

  • வாழ்வியல்

“மாற்று வழியைத்
தேர்வு செய்வதும்
பிறிதொரு வாய்ப்பினை ஏற்பதற்குமான
சுதந்திரமளிக்கும் வாழ்வையும் உடைக்க உடைக்க
எதிர்த்தெறிந்து மீளும் ஆன்மாவையும்
நேசிக்க கற்றுக் கொண்டேன்.”

உண்மையில் மிகச் சிறந்த உளவியலைப் பகிர்ந்த கவிதை வரிகள் இவை. வாழ்வியல் எனும் தலைப்பு வெகு பொருத்தம். வாழ்தல் என்பது தடைகளைத் தாண்டி வாழ்வதே. மாற்று வழியைச் சுவீகரித்துக் கொண்டு அந்த வாய்ப்பினை படித்தரமாக்கி அதில் வெற்றி கொள்வதே வாழ்வியலின் வெற்றியாகும்.

அறிவைப் பருவத்தில் ரத்னா வெங்கட் எழுத வந்திருந்தாலும் அவர் வெகுகால மனசுக்குள் எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார் என்பதற்கான சாட்சி இந்த தொகுப்பு என்று அணிந்துறை தந்து இருக்கின்ற ரவி சுப்பிரமணியினுடைய வார்த்தைகளை மெய்ப்பிக்கின்றன இந்த கவிதைத் தொகுப்பு

வாசித்து முடித்த பின்பு, காதலும் நம்முள் பிரவேசிக்கிறது. இதிகாசங்களினுடைய பரிமாணங்கள் நம்மில் புகுந்து கொள்கிறது. பெண்ணிய வரிகள் மிளிர்கிறது. எவ்வாறு வாழ வேண்டும்? என்ற வாழ்வியல் நமக்குத் தெரிய வருகிறது.


நூல் தகவல்:

நூல் : காலாதீதத்தின் சுழல்

வகை :    கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : ரத்னா வெங்கட்

வெளியீடு :  படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :  முதற்பதிப்பு 2020

பக்கங்கள் :  112

விலை : ₹  100

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *