மிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு சங்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை உறுதுணையாக இருந்து வருபவை பாடல்களும் கவிதைகளும்.  ஆண் கவிஞர்களுக்கு நிகராக, பெண் கவிஞர்களும் அன்றைய காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்திருக்கிறார்கள்.

இணையமும், அலைபேசியும் பெருகிப் போய்விட்ட இன்றைய காலகட்டத்திலும் “கவிதைகள்” தனக்கென ரசிகர்களை கட்டமைத்துக் கொண்டு, ரசிக்க வைத்து தன் இலக்கியப் பணியை தொடர்ந்து வருகிறது‌.

முகநூலில் தொடர்ந்து கவிதைகளைப்பதிந்து வரும் சென்னையைச் சேர்ந்த கவிஞர் சுபிதாவின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு ” தேம்பூங்கட்டி”

எந்த கவிதைத் தொகுப்புக்கும் முதல் அடையாளமாக, துருப்புச் சீட்டாக இருப்பது தலைப்பு தான்.

“தன்னை நோக்கி வாசகனை ஈர்க்கும் முதல் வாசம் தலைப்பூ”

” தேம்பூங்கட்டி”என்ற இந்தத் தலைப்பை படித்த மறுகணம் , இனம் புரியாத ஒரு பெருமகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது, ஒருமுறை சத்தமாய் உச்சரித்துப் பார்த்தால், கற்கண்டின் சுவை நாவில் ருசிக்கிறது.

“தேம்பூங்கட்டி” என்பதின் பொருள் இனிய அழகிய கரும்புக்கட்டி என்பதாகும்.

“தேம்பூங்கட்டி” என்ற தலைப்பை வாசித்தவுடன் எனக்கொரு குறுந்தொகைப்பாடல் நினைவுக்கு வருகிறது.

“வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
‘தேம் பூங் கட்டி’ என்றனிர்; இனியே”

காதல் தளராத நிலையில் தலைவி, விளையாட்டாக வாயில் இட்ட வேப்பங்காயும்
தலைவனுக்கு வெல்லக்கட்டியாக இனித்தது என்று பொருள் தரும் இந்தப்பாடல் தலைவனுக்கும் தலைவிக்குமான காதலின் நெருக்கத்தையும், ப்ரியத்தையும் உயர்த்திக் காட்டுகிறது.

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் கரும்புக்கட்டிபோல் இனிக்கும் என்பதைச் சொல்லும் விதத்தில் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டதா??

அல்லது

தலைவனுக்கும் தலைவிக்குமான காதல், ஊடல், கூடல், பிரிவு, ஏக்கம், அதீதம், வருத்தம் என அனைத்து உணர்வுகளின் சங்கமத்தை கவிதை வரிகளுக்குள் குழைத்துத்தருவதால் சூட்டப்பட்டதா??

அல்லது

தலைவனுடனான காதலைப்பல பரிணாமங்களில் சொல்வதால், அவனுடைய செல்லப் பெயரையே தலைப்பாக வைத்தால் என்ன என்ற யோசனையின் விளைவாக வைக்கப்பட்டதா??

எந்தக்காரணமாக இருந்தாலும், தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளையும், அதன் கருக்களையும் கரும்பின் கணுக்களைப்போல ஒரே நேர்க்கோட்டில் இணைத்திருக்கிறது “தேம்பூங்கட்டி”

இனி கவிதைக் காட்டிற்குள் பயணப்படுவோம். தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும் நீண்ட கவிதைகளாகவே இருக்கின்றன. நீளமாக இருந்தாலும் வாசிக்கத் தொடங்கியவுடன் சடுதியில் முடிந்து விட்டு, இன்னும் இன்னும் தொடராதா என ஏங்க வைக்கின்றன.  ஓரிரு வரிகளைக் கடந்த பின்பு கவிதைகளே, பலவித உணர்வுக் குவியல்களுக்குள்  நம்மை இழுத்துச் சென்று விடுகின்றன.

திரைப்படக் காட்சிகளைப் போல இந்த நிகழ்வு இப்படி நடந்திருக்கக் கூடாதா?? ஏன் இவர்கள் இவ்வளவு நேரம் பேசாமல் இருக்கிறார்கள்?? காதல் என்றால் இதுதானா?? என்று நம்மையறியாமலேயே முணுமுணுக்க வைத்திருப்பதே இந்தத் தொகுப்பின் முதல் வெற்றி.

“போ!!
ஒரு அன்பினை
உதறித் தள்ள
ஒரு நொடி போதலாம்
பெறுவதற்கு
ஆயுள் தவமல்லவா
இருக்க வேண்டும்….”

“என்ன பதில் சொல்லப் போகிறது?” என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம் பிடித்திருக்கும் இந்த வரிகள், மொத்த வாழ்க்கையின் அர்த்தத்தை போகிறபோக்கில் சட்டென்று சொல்லிவிடுகிறது. அன்பினைப் பெறுவதற்கு ஆயுள் கால தவம் தேவைப்படுகிறது, உதறித்தள்ள ஒரு நொடி போதும் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் போதும், மொத்த உலகமும் பேரன்பால் நிறைந்திருக்கும்.

அகநானூற்றுப் பாடல்களை நினைவு படுத்தும் வகையில் தலைவன் இல்லாத நிலையில் தலைவி தன்னைச் சுற்றியுள்ள பொருட்களில் எல்லாம் அவனை மட்டுமே தேடுவாள் என்பதைக் கீழ்வரும் கவிதை கவித்துவத்தின் உச்சத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதோ அந்தக் கவிதையின் சில வரிகள்.

“உன்
காமத்தையெல்லாம் காய்ச்சி
கூந்தல் தைலம் 
தயாரித்து விட்டேன்!

தினமும் அதுவும்
உறவாடிக் கொண்டிருக்கிறது
உன்னைப் போலவே….

உன் ஓரப்பார்வைகளை
ஒரு பெட்டிக்குள் போட்டு 
பத்திரமாய் 
பூட்டியாகிவிட்டது!

உன் மேல் கோபம் வந்தால்
அதைத் திறந்து பார்ப்பது தான்
முதல் வேலை….”

என தொடரும் இந்தக் கவிதையின் கடைசி வரிகள்தான் இதயத்தை ஆத்மார்த்தமாக வருடுகின்றன.

” இனிமேல் நீ
ஐ லவ் யூ சொன்னால் என்ன??
சொல்லாவிட்டால் என்ன??”

“வெட்கத்தின் வண்ணம்” எனத்  தலைப்பிட்ட கவிதையில் தலைவன் மீது கொண்ட அதீத உணர்வுகள், சண்டையாக எப்படி மாறுகிறது?? என்பது மிகக் கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. அத்தனை வரிகளிலும் எதார்த்தம் எட்டிப்பார்ப்பது தான் ஆச்சரியமளிக்கிறது. நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கடக்காமல், அதை எழுத்தாக்கும் திறமை பெற்ற நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள். இதோ அந்த வரிகள்

” யெளவனத்தின்
  பித்தேறிய பிரேமையில்
  ஓரக்கண்ணால் 
  ஒருத்தியை 
  பார்த்தாயென 
  ஒரு வாரம் பேசாமல் 
  உடைய விட்டிருக்கிறேன் 
  உன்னை…. “
எனத் தொடங்கும் இந்த வரிகள், அதீதத்தை வெளிப்படுத்தி, ஊடலாக மாறி, இறுதி வரிகளில் வெட்கத்திற்கு வண்ணம் தேடுவதாக முடித்திருக்கிறார் கவிஞர்.

பிள்ளைகளின் விடுமுறைக்காக தாய் வீடு செல்லும் தலைவியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் “வேறென்ன நான் செய்ய” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை, தாய் வீடு செல்லும் ஒட்டுமொத்த தலைவிகளின் வாக்குமூலமாக அமைந்திருக்கிறது. எதார்த்தத்தில் அத்தனை எளிதாக ஒத்துக்கொள்ளாத பல ரகசியங்கள், கவிஞர் வாயிலாக வெளிப்பட்டு இருப்பதை அனைத்து  இல்லறத் தலைவர்களும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அந்தக் கவிதையின் சில வரிகளை இங்கு மேற்கோள் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

“வசந்தங்களில் வாழ்ந்து 
பழகியவள்
என வாழ்த்துச் சொல்லி வழியனுப்புகிறாய்
உனக்குப்புரிய வாய்ப்பில்லை
நான் இப்போதெல்லாம் 
அன்பின் வறுமையில் 
வாழப்பழகி விட்டேன் என்று…

எனக்கு சோறூட்டுவதை 
நிறுத்திவிட்டு
நம் குழந்தைகளுக்கு 
சோறூட்ட ஆரம்பித்து 
விடுகிறார் என் அப்பா

என் குழந்தையின் கைகளில் மருதாணி
இட்ட மீதத்தில் மட்டுமே
எனக்கும் கொஞ்சம் இடுகிறாள்
அம்மா

ஆம். எனக்கு அன்பு செய்ய
அவர்களுக்கு நேரமே இருப்பதில்லை

ஆட்சி அதிகாரம் அனைத்தும்
பறிக்கப்பட்ட ஒரு கையறு நிலை கொண்ட
அரசியல்வாதி போல் நிற்கிறேன்”

நேசம் என்பதெல்லாம் என்ன?? என ஆயிரமாயிரம் நூற்றாண்டுகளாக விடை தெரியாத இந்த கேள்விக்கான பதில்களை பலாப்பழ சுளைகளாய் எடுத்து வைக்கிறது ஒரு கவிதை. நேசம் என்பது

” உயிரைக் குடைய வேண்டும்…
  மத்தாய்க் கடைய வேண்டும்….
  நம்மை மட்டும் நிறுத்தி விட்டு
  உலகம் ஓட வேண்டும்
 கால்கள் பின்னி நடக்கவியலாது
 நான் தவிக்க வேண்டும்”

நேசத்தின் ஆத்திச்சூடியாக நினைவில் நிறுத்த வேண்டிய கவிதை இது.

தொடர்ந்து நேசம்,காதல், காமம், ஊடல் என காதலின் அனைத்து உணர்வுகளையும் படம்பிடித்து மிக அற்புதமாய் எழுதப்பட்டிருக்கிறது அனைத்துக் கவிதைகளும். இந்த தொகுப்பில் என் மனதை மிகவும் கவர்ந்த கவிதை ” ஊடலின் பொழுதுகள்”. இந்தக் கவிதையை ஒரு முறை வாசித்தேன், பின்பு மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன். அத்தனை உணர்வுகளும் என் வாழ்வியலோடும் ஒத்துப் போனது. அதிலும் சில வரிகள் சபாஷ் எனச் சொல்ல வைத்தது.

“கற்பனைகளில்
 எனக்குத் தகுந்தாற்போல
 உன்னை மாற்றிக் கொள்கிறேன்!
 நிஜங்களில்
 உனக்குத் தகுந்தாற்போல்
 என்னை மாற்றிக் கொள்கிறேன்….

 நீ நீயாகவும்
 நான் நானாகவும்
 இருக்க முடியாத
 தருணங்கள் அவை….

நீ என்னிடம் தோற்பதும்
நான் உன்னிடம் தோற்பதும்
இங்கு எழுதப்படாத விதி….

சுடு சொல்லை 
ஒருபோதும் 
வீசி விடாதே 
சுடு சோற்றைக்கூட 
நெஞ்சுக்குழிக்கு 
சுடும் என்று 
ஆறப்போட்டு உண்பவள் நான்”

எனத்தொடரும் இந்தக் கவிதையின் அனைத்து வரிகளிலும் கஸலின் சாயல் ஒளிந்திருக்கிறது. கொஞ்சம் முயற்சி செய்தால் கஸல் கவிஞராக ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கலாம்.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டு செல்லும் பொழுது, கவிதைகளை வாசிக்கிறோம் என்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, வேறு ஒருவரின் டைரியை கவிதைகளாக வாசிக்கிறோம் என்ற உணர்வு மேலோங்குகிறது. அத்தனை தத்ரூபமாக எதார்த்தத்தையும் கவித்துவத்தையும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன ஒவ்வொரு கவிதைகளும்.

இருசக்கர வாகனத்தில் கவிஞர் செல்லும்போது, நம்மையும் அழைத்துச் சென்று மலை முகடுகளை சுற்றிக் காண்பிக்கிறார். ஊடல் காரணமாக கவிதைகள் மௌனமாக இருக்கையில், நாமும் மௌனமான சோகத்தில் உறைந்து போய் இருக்கிறோம். பேசி வைத்த சொற்கள் பின் தொடர்ந்து வருகையில் அவரோடு சேர்ந்து நாமும் பதட்டமடைகிறோம். காகிதக்கப்பல் மூழ்கிப் போன போது நாமும் அவருடன் சேர்ந்து உச்சு கொட்டுகிறோம். அதிகாலை எழுந்தவுடன் கவிஞர் முணுமுணுத்த பாடலை அவருடன் சேர்ந்து நாமும் முணுமுணுக்கிறோம். “முத்தம் ஊடலை உடைக்கும் வஜ்ராயுதம், கூடலை எழுப்பும் ஞாயிறு” என்று கவிஞர் எழுதுவதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்புகிறோம். ஒரே வரியில் சொல்வதென்றால், கவிஞரோடு சேர்ந்து காதல் சொட்டச் சொட்ட அவரோடு பயணிக்கிறோம்.

இப்படியாக வாசிக்கும் வாசகர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை ரசிக்க வைத்து, லயிக்க வைத்து மெய்மறக்கச் செய்த “தேம்பூங்கட்டிக்கும்”,
“கவிஞர் சுபிக்கும்”மனம் நிறைந்த வாழ்த்துக்களும் வரவேற்புகளும்..!

தொடர்ந்து இதுபோல பல நூல்கள் படைத்து உச்சம் தொட எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!

வாழ்க தமிழ்…!
வாழ்க பெரியார்…!!


 

– பிரபுசங்கர்.க
கிருஷ்ணகிரி

நூல் தகவல்:

நூல் : தேம்பூங்கட்டி

ஆசிரியர் : சுபி

வெளியீடு : ஜெயா பதிப்பகம்

ஆண்டு : 2022

பக்கங்கள் :  118

விலை : ₹120

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *