னித சமுதாயத்தில் ஆண் பெண் சமத்துவமற்ற இன்றைய சூழலில் ‘ரோசலிண்ட் மைல்ஸ்’ எழுதி தமிழில் வி. ராதாகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கின்ற’ பெண் என்ன செய்தாள்? ‘ என்ற இந்த நூல் வாசிப்பில் முக்கியத்துவம் உடைய நூலாகும்.

 மனித சமுதாய வரலாற்றில் பெண்களின் இடம் என்ன? அதற்கான மதிப்பு என்ன? என்ற கேள்விகளை உள்ளடக்கியது இந்த நூல். பெண்களின் இருப்பு குறித்தும், அவளின் வேலைகள் குறித்தும், மனித சமுதாயத்தில் அவளின் பங்களிப்புகள் குறித்தும் வரலாற்றில் பதிவு செய்யப்படாத பக்கங்கள் அதிகம்.

           மானிடர்களின் காலம் தொடங்கியது முதல், உலகின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வகையான சமுதாயத்திலும், எல்லா இடங்களிலும் எப்போதும் பெண்கள் இடைவிடாது தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளனர். அந்தப் பணிகளின் முக்கியத்துவம் என்பது வரலாற்றின் பக்கங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அல்லது அந்தப் பக்கங்களே இல்லை என்று எண்ணும் அளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ‘இருட்டடிப்பு ‘என்பதுதான் இங்கு மிகப் பொருத்தமான வார்த்தையாக இருக்கும்.

 அந்தப் பக்கங்களை பட்டியலிடுவது என்றால் முடிவடையாத வரலாறாக, அது எழுதப் பட்டுக்கொண்டேயிருக்கும்.

“மெய்யான சிறப்பு நிரம்பிய வரலாற்றில் நான் அக்கறை கொள்ள முடியாது….ஒவ்வொரு பக்கத்திலும் போப்பாண்டவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான சச்சரவுகள், போர்கள், அல்லது கொள்ளை நோய்கள். எல்லா ஆண்களும் மிகவும் பயனற்றவர்கள். இவற்றில் பெண்கள் யாருமில்லை. “

என்று ‘நார்தேஞ்சர் அப்பே ‘என்ற நூலில் ஜேன் ஆஸ்டென் குறிப்பிடுவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உலகின் புகழ் பெற்ற சரித்திர ஏடுகளில் பதியப்படாமல் போன ஆயிரம் ஆயிரமாண்டு கால பக்கங்களில் காலம் காலமாக பெண்கள் குழந்தைகளை பராமரிப்பதும், நோயுற்றவர்களை பராமரிப்பதும், வயல்களில் உழவு வேலை செய்தும், துணிகளை வெளுப்பதும், ரொட்டி சுடுவதும், வீடுகளை சுத்தம் செய்து பராமரிப்பதும், மரணப் படுக்கையில் இருந்தவர்கள் அருகில் இருந்து கண்ணீர் வடிப்பதும், செத்தவர்களை புதைப்பதும் என மனித சமுதாயத்தில் பெண்களின் உழைப்பும், பங்கும் ஏராளமாய் உள்ளன. ஆனால் இந்த உழைப்புக்கு ஏற்ற மரியாதையை அவள் பெற முடியாது செய்து விட்டனர்.

  ஒரு பெண் சமையல் செய்வதும், குடும்பத்தை, குழந்தைகளை பராமரிப்பதும், முதியோர்களை கவனிப்பதும் இங்கு சாதாரண செயல். அதற்கான முக்கியத்துவத்தை பெண்கள் கோர வில்லை. அது, நாம் காற்றை சுவாசிப்பது போல் இயற்கையாகவே நடந்தேறி விடும் என்பதை இந் நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

       “ஆதிகாலப் பெண்களின் பிரசவ வேதனை வலிந்து பெறுவதாக, தொடர்ச்சியானதாக, பல்வகைப் பட்டதாக, கடினமானதாக இருந்தது. பிரசவத்தின் பண்டைய கால முறைகளை பட்டியலிடுவது எனில், ஆண்கள் ஒரு காரியம் செய்யும் இடத்தில் பெண்கள் ஐந்து காரியங்களைச் செய்ததை காண முடியும் “

மேற்குறிப்பிட்ட விஷயமானது மனித இன வரலாற்றாய்வாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்த செய்தியாம்.

  சூரியன் மறையத் தொடங்கும் போது, ஆணின் வேலை முடிகிறது. ஆயினும், பெண்ணின் பணி என்றுமே முடிவடைவதில்லை. உழைப்பின் இறுதியில் அடைய வேண்டிய உண்மையான ஓய்வின் பலனை அவள் என்றுமே அடைந்ததில்லை. இன்றும் கூட, அலுவலகத்தில் வேலை முடிந்து வரும் ஒரு பெண்ணுக்கு வீட்டிலும் தன் பணியை தொடர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஆணுக்கு இப்படிப்பட்ட நிர்ப்பந்தங்கள் இல்லை. ஓய்வு என்பது ஆணிற்கு ஒரு தனிச் சிறப்புரிமையாகி விடுவதை பார்க்கிறோம். பெண்களுக்கு அப்படிப்பட்ட சிறப்புரிமை, சலுகைகள் இதில் ஏதாவது உண்டா? எனில் விடை இல்லை.

 மனித வரலாற்றின் பக்கங்களில் பெண்ணின் பங்கு குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தாலும் எல்லா இடங்களிலும், வரலாற்று ஆவணங்களில் ஏராளமான உழைக்கும் பெண்கள் பற்றிய தகவல்கள் காணப்படுவதை இந் நூலில் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

   சான்றாக, பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஆலிஸ் செஸ்டர் என்ற பெண், பிளான்டெர்ஸ் மற்றும் ஸ்பெயினில் கம்பளி, ஒயின், இரும்பு, எண்ணெய் முதலிய வர்த்தகங்களைச் செய்து வந்தவர் என்பதும், கடவுளைத் தவிர வேறு யாருக்கும் கீழ்ப் படியாதவர் என்பதுவும் குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

  அதே போல், பெண்கள் தங்கள் தொழில் சம்பந்தமாக வெளி உலகில் பிரவேசிக்கும் போது, அதிலுள்ள அபாயத்தின் கூறையும் ஆவணங்கள் பதிவு செய்திருக்கின்றன. சான்றாக, ஸ்ருஷ்பெரியைச் சேர்ந்த ஆன்னெஸ் டி ஹஜிபோன் என்ற பெண் மதுபானம் தயாரிக்கும் போது ஒரு தொட்டி சாராயத்தை, சூடான கூழ் நிறைந்த ஒரு பெரிய அண்டாவில் ஊற்றும் போது, கால் வழுக்கி, அதில் விழுந்ததையும், உடலில்

வெம்புண்கள் ஏற்பட்டு அவள் பின் மரணமடைந்ததையும் குறிப்பிடுகிறது  1296 நவம்பரில் பதிவு செய்யப்பட்ட பிண ஆய்வாளர் பதிவு ஆவணமொன்று.

1220-ல் உலகின் முன்னணி மருத்துவப் பள்ளிகளில் ஒன்றாக இருந்த பாரிஸ் பல்கலைக் கழகம் பெண்களை அனுமதிப்பதை தடை செய்யும் நோக்கில் விதிகளை அமலாக்கி, தமது பல்கலைக் கழகத்தில் ஆண்களைத் தவிர வேறு யாரும் மருத்துவராக தொழில் நடத்தக் கூடாதென்று தடை விதித்தது. இதற்கு காரணம், ஏராளமான பெண்கள் மருத்துவர்களாக தொழில் புரிந்து கொண்டிருந்ததாலும், பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாலும் அது ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாகி, அதற்கு தீர்வு காண்பதற்கு ஒரு சட்டம் தேவைப்பட்டது என்பதையும் எடுத்துக்காட்டுவதாக ஆசிரியர் கூறிச் செல்கிறார். எவ்வளவு தடைகள் இருந்த போதிலும், பெண்கள் மனஉறுதியுடன் மருத்துவத்துறையை ஆண்களின் ஏகபோக உரிமையாக்கிக் கொள்ள இடம் தரவில்லை என்பதையும் பெண்கள் தங்களது இயற்கையான ஆற்றலையும், அறிவையும் பயனுள்ள பணியில் ஈடுபடுத்துவதை எதுவும் நடைமுறையில் தடுக்க முடியவில்லை என்பதையும் உறுதிப் படுத்துகிறது.

பெண்ணின் அறிவுத் தேடலை நிறுத்திய போதும், பெண் எப்போதும் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் தங்கள் உழைப்பையும், அறிவையும் பல்வேறு துறைகளில் செலுத்தியே வந்துள்ளனர். பெண், மனித இனத்தின் உற்பத்திக்கு ஏற்கனவே இயற்கையின் சமத்துவமற்ற தன் பங்கை செலுத்தி வந்தாலும், அவர்கள் வயல்களிலும், ஆலைகளிலும் கூட வேலை செய்ய வேண்டியிருந்தது.

  “பெண் என்ன செய்தாள்?” என்ற இந்த நூலின் வழியாக  ஆண் பெண் சமத்துவமற்ற மனித சமுதாயத்தில், பெண்ணின் வியக்கத்தக்க உழைப்பும், அறிவும், ஆற்றலும் மனித சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பும் ஆணின் வெற்றி பெற்ற வரலாறுகளின் முன் தூசி போல் துடைக்கப் பட்டு கிடந்ததையும் அதே போல் துணிவு பெற்ற பெண்கள் தங்கள் அறிவுக்கும் உழைப்புக்கும் நிகரான ஊதியம் பெறுவதில் வெற்றியடைந்தவராக திகழ்ந்தனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். இன்றும் ஆண்களால் செய்ய இயலாத அரும்பணிகள் யாவும் பெண்களின்  உலகில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் உறுதிப்படுத்துகிறது.


       மஞ்சுளா 

நூல் தகவல்:
நூல்: பெண் என்ன செய்தாள்?
பிரிவு : கட்டுரைகள்
ஆசிரியர்: ரோஸலிண்ட் மைல்ஸ்
தமிழில் : வி. ராதாகிருஷ்ணன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியான ஆண்டு முதல் பதிப்பு : ஜனவரி 2013
பக்கங்கள் : 48
விலை : ₹ 25

One thought on “பெண் என்ன செய்தாள்? – விமர்சனம்

  • நல்லதோர் விமர்சனம்..!!
    தெளிவான பார்வை…ஆய்வார்ந்த கருத்துக்கள்..புத்தகத்தை வாங்கத் தூண்டும் வலிமை வார்த்தைகள்..சிறப்பு சகோதரி!!
    இனிய பாராட்டுக்கள்!💐💐

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *