ஆசிரியர் குறிப்பு:

புதுக்கோட்டையில் பிறந்து பெங்களூரில் வசிப்பவர். புத்தகம் வருமுன்பே தன் கவிதைகளால் பரவலான கவனத்தைப் பெற்றவர். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு.


தமிழில் பக்தியும் காதலும் அன்னத்தால் கூடப்பிரிக்கமுடியாத பாலும்நீரும். நாவுக்கரசரின் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள், பெரியாழ்வாரின் மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய், ஆண்டாளின் கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டவன்மார்பில் எறிந்தென் அழலை தீர்வேனே என்ற அதிரடிக்காதல் என்று பக்தியுடன் அன்பு, நேசம், காதலும் சேர்ந்தே இலக்கியமாகியிருக்கின்றன. ரத்னாவின் கவிதைகளில் அதே பாணி தொடர்வதாக நினைத்ததுண்டு. அதை உறுதி செய்கிறது இந்தத் தொகுப்பு.

 

” யுகங்களின் மாறுதல்களை

நிச்சலனமாகக்

கடந்து மேலேகும் உன்னிடத்தில்

நொடிவிதைத்துப் பலன்

எதிர்பார்க்கின்ற

பேதையெனவே எப்போதும் ஆகிறேன்”

 

ஊரிலேன் காணியில்லை என்ற அதே melancholic குரல் கேட்கின்றதா?

காற்றின் மொழி கவிதையை, காதலின் மொழி, திருமண வாழ்க்கை, உறவு,நட்பு, Extra marital affair என்று எதுவெதற்கோ பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். சில கவிதைகள், கவியின் பார்வையை எளிதாகக் கடந்து பல்பரிமாணம் கொள்கின்றன.

 

” காற்றோடு பயணிக்கையில்

கவனம் தேவை.

அதன் வேகத்திற்கும்

விளையாட்டிற்கும்

ஈடுகொடுக்கும்

மனோபாவமும்

சிதறாத முனைப்புடன்

சுழன்று திரும்பவும்

சுழல வைக்கவும்

வெடிகுண்டு பெயர்க்கவும்

வெக்கை தணிக்கவும்

வெறுமே கடக்கவும்

கற்றிட வேண்டும்

முக்கியமாய்

அது விடுத்துச் செல்கையில்

புன்னகையோடு

விடைகொடுக்கவும் தான்”

 

வாழ்க்கை தான் எல்லோரையும் ஜெயிக்கிறது. நாம் ஜெயிப்பதாய் நினைக்கும் கணங்கள் பாவனைகள். காலில் பலத்த அடிபட்டால் நல்லவேளை கால் போகவில்லை என்று ஆறுதல் கொள்கையில் வாழ்க்கை நமட்டுச்சிரிப்பு சிரிக்காதென்றா நினைக்கிறீர்கள்?

 

“பிரயத்தனத்தின் அயர்வில்

தேய்ந்து அழிந்து

திரும்ப வளர்ந்து தேய்வதை

விதிக்கப்பட்டதென

குறைவற்றதென

ஒப்பும் நாழிகையில்

கண்களுக்குப் புலப்படுகிறது

உதிர்ந்து கிடப்பவற்றை

இணைக்கும் கண்ணிகள்”

 

சிலர் நம் அன்புக்குத் தகுதியில்லாதவர், நாம் ஏமாளி என்று நினைக்கிறார்கள், விட்டு விடுதலையாக வேண்டும் என்று அறிவு எத்தனை சொன்னாலும் மனம் பாசம்படர்ந்த உணர்வுகளில் வழுக்கியே தீரும்.

“எள்ளிறைத்து முற்றும் களைந்து

முழுதாய் தொலைத்திடும் முனைப்பில்

முக்குளித்துக் கரையேறுகையில்

தூரப்பார்வையை அசைத்து

ஊன்றவும் பிடிக்கவும்

பற்றுக்கொள்ளவும் செய்கிறது

பாசம் படர்ந்த

இந்தப் படித்துறை”

 

தொடுஉணர்வுகள் அறியும் வலியை காற்று அறிவதில்லை. காதலின் மாளிகை கட்டியதும், சிதிலமானதும், மறுநிர்மாணமும் கண்களில் படுவதில்லை.

 

” இல்லாத கயிற்றின்

இறுக்கமான முடிச்சில்

எண்ணற்ற சிக்கல்கள்…..

காற்றின் பார்வையோ

கண்டு கொள்வதில்லை

கைகளின் துழாவலில்

புலப்படும் ஊவாமுள் தைத்த

சிறுதடத்தை’

 

அறிவும் மனமும் சதா சண்டையிடும் காட்சிகளின் அழகியல் வெளிப்பாடுகள் ரத்னா வெங்கட்டின் கவிதைகள். நோக்கம் இது தான் என்று அறிவுக்குத் தெரிகையில் அறிவின் கை ஓங்கியிருந்தால் சட்டென்று விலகிவிடும். மனத்தின் கை ஓங்கி இருந்தால் அது அறிவு எப்போதும் பொய் சொல்லும் என்று அமைதி கொள்ளும். இங்கே அது மேலே பின் இது மேலே என்று சீசா ஆடுகின்றன.

மெல்லியதாய் ஒரு ஏக்கமும் இனம்புரியா சோகமும் அநேகமாக எல்லாக் கவிதைகளிலும் ஊடாடி இருக்கின்றன. தனிமையை விட்டு நான் வரக்கூடும் அப்போது நீ இருப்பாயா மாட்டாயா என்பதை இப்போது சொல்ல வேண்டாம், எப்படியும் போகப் போகிறாய் என்கின்ற தொனிகளில் கவிதைகள் நிறைய. குழந்தையாய் கதைகேட்க உட்கார்ந்தாலும் முன்னனுபவங்கள் முன்னால் உட்கார்ந்து குழந்தையின் பார்வையை மறைத்துக் கொள்கின்றன.

தீராப் பேரன்பைப் பேசும் வேளையிலும் தீர்வு உன் கையில் என்ற கொக்கி விழுகிறது.  i am always connected to You

Nothing of me and everything of You என்ற Infini prayerன் அதே உணர்வு முதல் கவிதையில் மட்டுமே. அதே உணர்வில் காதலில் முழுசரணாகதியாக எங்காவது கவிதைகள் கிடைக்கிறதா என்று தேடியும் கிடைக்கவில்லை. மீராவிடமிருந்து கண்ணனை வெளியே எடுக்க முடியாது. கண்களைத்திறந்து கொண்டு காதலில் விழவும் முடியாது. கவிதைகள் அகஉணர்வுகளின் அலைமோதல்கள் என்பது உண்மையானால் கவிஞரிடம் அவரறியாது நாம் நெருங்கிப் போகிறோம். ஏக்கம்,தேடலைச் சொல்லும் கவிதைகள். முதல் தொகுப்பு என்பதற்காக எந்த சலுகையையும் எதிர்பாராது கும்பலில் நிற்கத்தயாராகும் கவிதைகள். அவரே ஓரிடத்தில் ஆண்டவரிடம் சொல்கிறார்.  ” ஏந்தும் என் கரங்களில் தயவுசெய்து மன்னிப்பை இடாதிரும்!”

  • சரவணன் மாணிக்கவாசகம்

நூல் தகவல்:

நூல் : காலாதீதத்தின் சுழல்

பிரிவு:  கவிதைத் தொகுப்பு

ஆசிரியர் : ரத்னா வெங்கட்

வெளியீடு :  படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2020

விலை: ₹ 100