திகம் அறியப்படாத அதிகம் அறிந்து கொள்ள வேண்டிய கவிஞராக மதுரையை வசிப்பிடமாக கொண்ட ந. ஜெயபாஸ்கரன் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுதி ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் ‘ என்ற கவிதை தொகுதி என் வாசிப்பில்..!

வான்கோவின் மஞ்சள் அல்லாத வேறு ஒரு மஞ்சள் ஆதியிலிருந்து அவரை துரத்தி வந்திருப்பதை அவரே விரும்பியும் ஆசீர்வதித்தும் எழுதியும் வந்திருக்கிறார்.

“ஆலவாய் நரிகள் தின்ற

அரேபியக் குதிரைகளின்

எலும்புகளாய் எதிரே கிடக்கும் மதுரை தெருக்கள் “

இவரின் கவிதை வரிக்குள் வந்து தன் கபாலம் திறந்து காட்டுகின்றன மதுரைத்  தெருக்கள் .

நழுவி விழுகிற நவீனச் சொற்கள் கடையின் கல்தளக் கயிற்று விரிப்பில் உருள்கின்றன சிறு தானிய மணிகளாய்… பொறுக்கத்தான் குனிய முடிய வில்லை அவனால்….

“ஆலவாயின் பேராசை நாக்குகள்
துயர மஞ்சள் கதிர்கள் முத்தமிட்ட
எண் பெருங் குன்றங்களின்
எச்சத்தின் கீழ்
ருசித்துக் கொண்டிருக்கின்றன
மனித எலும்புகளை “

காலத்தின் வழியே பின்னோக்கியும் முன்னோக்கியும் ஒப்பிட்டும் மதுரை பற்றிய தனது துயர நிலைப் பாட்டில்  கவிதையின் வழியே ஒரு கலையை நிகழ்த்துகிறார்.

“காரைக்கால்
வீதியில் உருண்ட
மாங்கனி மஞ்சள்
ஆலங்காட்டு விழுதுகளில்
தொங்குகிறது “

மதுரையின் வெயில் பொழுதுகள் யாவும் மஞ்சளாய் கனிந்து இவரின்  கவிதைப் பொழுதுகளாய் தொகுப்பு முழுவதும் நிரம்பி வழிகின்றன.

“முலையிலாள் காமமாய்
கலங்கி வருகிறது
வையை

கணக்கற்ற கதவுகளை உடைத்த
காமக் கோடாரியை
ஓடு காலில் புதைத்து விட்டு

இருட்டறை பிணம் தழுவலில்
இடையறாமல்
கூடல் மாநகர மக்கள் “

கவிதையின் இடுக்கில் புதைந்து வெளிவரும் புராதன மதுரையை சமகால நோக்கில் அதன் வடிவகன்ற பாதையில் நுணுகி சென்று பார்க்கும் திறம் அவரின் தனி வழியாய் அறியப்படுகிறது.

தொன்மம், புராணம், மொழியின் மீது கட்டமைக்கும் அவரது ஆறாவது விரல் மதுரையின் தெருவெங்கும்  அலைந்து தன் தூரிகையை மஞ்சள் உலோகமாய் தீட்டியபடி புராதன  நகரத்தின் தொன்மையுடன் மொழியின் வீரியமும் கலந்து கொடுத்திருக்கும் இந்த தொகுப்பு ஒரே மூச்சில் படித்து விடக் கூடியதா என்ன?
காலச் சுவடு வெளியீட்டில் வெளிவந்திருக்கும் இந்த தொகுதியின் வழியே ஆலவாய் நகரின் புதிய உலகை, புதிய காட்சிகளைக் காண தனது மொழியின்  செவ்வியல் தன்மை விலகாமல் அழைத்துச் செல்லும் போது

மஞ்சளித்து வரும்

கடைவீதி வெளியில்

பறந்து மறையும் வெயில்

வெண்கலக் கலன்களை

முத்தமிடும் மாலை வெயில்

என மஞ்சள் உலோகத்தின் சிறு  துகள்கள் வழியே வாசிப்பின் ஒரு கணத்தில் பெரு வெடிப்புக்களை விட்டுச் செல்கிறது.


கவிஞர் மஞ்சுளா

 

நூல் தகவல்:
நூல்: பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் 
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: ந. ஜயபாஸ்கரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2018
பக்கங்கள் : 72
விலை : ₹ 100
அமெசானில் வாங்க

நூல் அணிந்துரையில்

ந. ஜயபாஸ்கரன் கவிதைகளை வாசிக்கும்போது ஒரு மனக் காட்சி புலப்படும். பெரும்பான்மையான கவிஞர்கள் ஊர்வலம் போகிறார்கள். அவர்கள் அணியாகச் சென்றாலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் அவர்களுடையதான தனிப் பாதைகள் நீள்கின்றன. அந்த ஊர்வலத்துக்கு இணையாக அதை விட்டு விலகி ஒற்றை மனிதனின் நடையும் தொடர்கிறது. இரண்டும் கவிதையின் பெரும் மாளிகைக்குள் சென்றுதான் முடிகிறது. அந்தத் தனி நடையாளராக ஜயபாஸ்கரனைப் பார்ப்பது பொருத்தமற்றது அல்ல என்பதை இந்தத் தொகுப்பு உறுதிப்படுத்துகிறது.

– எழுத்தாளர் சுகுமாரன்

 

நூலாசிரியர் குறித்து:

ந. ஜயபாஸ்கரன் (பி. 1947)

மதுரையில் பிறந்தவர். தியாகராசர் கல்லூரியில் முதுகலை தமிழும் அறிஞர் எஸ்.ஆர்.கே.யிடம் முதுநிலை ஆங்கிலமும் பயின்றுள்ளார். பேராசிரியர் சி.ஆர். அனந்தராமனிடம் சமஸ்கிருதம் சொல்லிக் கொண்டுள்ளார்.

‘அர்த்த நாரி’ (1987), ‘அவன்’ (1989), ‘அவள்’ (1999), ‘சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்’ (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.

மதுரை வெண்கலக்கடைத் தெருவில் தன் தந்தை நிறுவிய பாத்திரக் கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மனைவி, இரு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

1 thought on “வான்கோவின் மஞ்சள் அல்லாத வேறு ஒரு மஞ்சள்

  1. வான்கோவின் மஞ்சள் அல்லாத வேறு ஒரு மஞ்சள் -கவிஞர் திரு ந. ஜயபாஸ்கரன் அவர்களை மதுரை கூழாங்கற்கள் நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். நூல்: பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்
    பிரிவு : கவிதைகள்
    ஆசிரியர்: ந. ஜயபாஸ்கரன்
    வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
    வெளியான ஆண்டு முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2018
    பக்கங்கள் : 72
    விலை : ₹ 100 – அருமையான புத்தக மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் மஞ்சுளா கோபி

Comments are closed.