விதைக்கும் கவிஞனுக்கும் இடையில் உள்ள உறவு ஒரு பயணத்தின் தன்மைகளை மேற்கொள்கிறது. புதிய பாதைகள், புதிய ஊர்கள், புதிய நிலக் காட்சிகள், புதிய தட்பவெட்ப நிலைகள் அவன் அகத்தில் விரிகின்றன. அவன் மாறுகிறான்.கவிதை அவனை மாற்றுகிறது.

கவிஞர்.ஆனந்த், கவிதை என்னும் வாள்வீச்சு.

கவிதை வாசிப்பு என்பது இளைப்பாறுதல். சில நேரங்களில் குளிர்காற்று. சோர்வுக்கு மருந்து. தோழமை உரையாடல். தனது வெவ்வேறான அனுபவங்களை கவிஞர் கவிதையாக்குவது போலவே, வாசகரும் தன் கவிதை வாசிப்பில் மாறுபட்ட வாசிப்பு அனுபவங்களைப் பெறுகிறார். பெருந்தொற்றுக் காலம் அன்றாடத்தை கலைத்துப் போட்டது. மனித வாழ்வின் பெறுமதி குறித்தும், நிலையின்மை குறித்தும் பல உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்ட பொழுது, கவிதை வாசிப்பு மட்டுமே வழித்துணையாக அமைந்தது. என் சமீபத்திய வாசிப்பு கவிஞர் சாம்ராஜ் எழுதிய “என்று தானே சொன்னார்கள்”. இணையத்தில் அவரது சில உரைகள் மற்றும் பேட்டியை கவனித்த பின்னர் தான் இத்தொகுப்பை வாசித்தேன். 2012 ஆம் ஆண்டு வெளியான தொகுப்பு . நான் மின்னூலாக வாசித்தேன்.

உருண்டு வருகிறது பெரும்பாறை என்ற முன்னுரையில் வாழ்வின் நிதர்சன கணங்களை விவரிக்கும் சாம்ராஜ், அன்றாடங்கள் அழுத்தும் வேளையில் எழுத்தின் பிடிமானத்தாலேயே மீண்டெழுவதாகக் கூறுகிறார். முன்னுரையின் தொடர்ச்சியாகவே “ஒரு கால்பந்தின் முழுமை” கவிதை,

சந்திரசேகரநாயர் மைதானத்தில்
குப்பையில் கிடக்கிறது
புறக்கணிக்கப்பட்ட கால்பந்து
அதன் மீது
கெட்டுப்போன உணவின் வாசம்
நாய்களின் பற்குறிகளுமுண்டு
வெயில்
அதன் நிறத்தை உண்டிருந்தது
கைவிடப்பட்ட ஷூக்களோடு
காமமுண்டு.

வேறெவரின் கவனத்துக்கும் போக வாய்ப்பே இல்லாத பயனிழந்த கால்பந்தினை கவிதையாக்குகிறார். மைதானத்தில் இருந்து பாபநாசம் கடற்கரை, வற்கலா – கயத்தாறு- கன்னியாகுமரி-தாமஸ்தெரு, கோட்டயம்-தல்லாகுளம்-வைகைநதி –அனந்தசயனபுரி என சாம்ராஜின் பயணங்கள் மீன்பிடி வலையை விரித்து வீசியது போல் தெக்கத்தி நிலப்பரப்பின் மேல் முழுமையாகக் கவிகிறது. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் சிறுசிறு அசைவுகளை முழுகவனத்துடன் உள்வாங்கிய பால்யம் அவருக்கு வாய்த்திருக்கிறது. எண்12 லஜபதிராய் சாலையில் வசிக்கும் பெண்ணின் முகத்தில் இருக்கும் வடு அவரை மட்டுமல்ல வாசகரையும் தொந்தரவு செய்கிறது. அன்புலட்சுமியின் மரணத்திற்கு கண்ணீர் சிந்த வைக்கிறது. சிறு சிறு வட்ட நீர்க்குட்டைகளுடன் வருடமெல்லாம் மணல்மேவியிருக்கும் வைகையின் ரகசியங்கள் கிசுகிசுக்கப்படுகிறது. செவ்வாக்கியம் அத்தையின் வாழ்வும், வடக்குத்தெருவை 43 வயதில் பார்த்த அக்காவும் வாசித்து முடித்த பின்னரும் மனதை விட்டு மறையாது.

எல்லோரும் காணும் காட்சி தான். அவரவர் வாழ்வனுபவத்தில், ஆழ்ந்து உள்வாங்கும் பாங்கில் மொழியென்னும் தூரிகை கொண்டு கவிதையாகிறது. சாம்ராஜின் கவிதைகள் எந்த வித பிரத்யேக தயாரிப்புமின்றி, சுதந்திர வெளிப்பாடுகளாக நம் முன் விரிந்திருக்கிறது. தோழர் தயாளனின் வீடு கூர்மையான சித்திரம். “மேற்கின் காகிதச்சுருளும், கிழக்கின் கூழாங்கற்களும்” எடுத்துச் சொல்லும் செய்தி எளிதில் புறக்கணிக்க முடியாதது.

இரண்டாம் முறை
திரும்பி வருவதேயில்லை ஆண்பூனைகள்

என்பதை தெளிவாக உணர்ந்திருந்தால் எத்தனை கண்ணீர்க்கதைகள் நடைபெறாமல் போயிருந்திருக்கும். ஆலயமணியின் ரீங்காரமென இவ்வரிகள் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு கவிதைத்தொகுதி எழுதப்பட்டு ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்து வாசித்தாலும், அதன் வெம்மையை மனம் உணர்கிறது. நல்ல கவிதையின் துடிப்பு காலத்தால் மறைவதில்லை. குறைவதில்லை.

மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்.சாம்ராஜ்.


ரஞ்சனி பாசு

நூல் தகவல்:
நூல்:  என்றுதானே சொன்னார்கள்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: சாம்ராஜ்
வெளியீடு:  சந்தியா பதிப்பகம்
வெளியான ஆண்டு 2013
பக்கங்கள் :
விலை : ₹ 50
Kindle Edition