ஒரு பயிற்றுநராக விவசாயத்தைப் பற்றிப் பேசும்போது என் தரப்பிற்கு வலு சேர்க்கவே இப்புத்தகத்தைப் படிக்கவேண்டுமென்று ஆரம்பித்தேன். 240 பக்கங்கள் தான் என்றாலும் நான் வசித்துமுடிக்க ஏறக்குறைய ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டேன். பசுமைப் புரட்சியின் விரும்பத்தகாத விளைவுகளைப் படித்தே ஆகவேண்டும் என்ற முனைப்போடு படித்தேன். திரு.ஜெயமோகன் அவர்களின் முன்னுரையோடு விரிகிறது கதை. முன்னுரை மட்டுமே 15 பக்க கதை என்றுதான் சொல்லவேண்டும் .

சங்கீதா ஸ்ரீராம் 17 பகுதிகளில் பசுமைப் புரட்சியின் கதையை விவரிக்கிறார். இந்திய வேளாண் மரபு எப்படி இருந்தது அது எப்படி படிப்படியாகத் தேய்ந்து போனது , அதற்கான அரசியல், சமூக, பொருளாதார காரணங்களைத் தகுந்த தரவுகளோடு முன்வைக்கிறார்.

அவர் எழுதியிருப்பதில் எது ஒன்றையும் தவிர்க்க முடியாத அளவுக்கு பத்திக்குப் பத்தி, பக்கத்திற்குப் பக்கம் அத்தனையும் முக்கிய செய்திகளாகவே இருக்கின்றன. விவசாயமும், விவசாயிகளின் சமூக வாழ்வும் எவ்வாறு தூண்டப்பட்டன / அலைக்கழிக்கப்பட் டன என்பதையும் மிக அழகாக விவரித்திருக்கிறார்.

இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் பெருமைகளைப் பற்றிப் பேசும்போது, மண்ணை பற்றி, இயற்கை பற்றி, சுழற்சி பயிர் முறை பற்றி, பயிர் வகைகள் குறித்த அறிவு பற்றியும் விவரங்களுடனேயே ஆரம்பிக்கிறார். மேலும் நீர் வளம், ஏரிகள், கிணற்றுப்பாசனம் ஆகியவை குறித்தும் விளக்குகிறார்.

இவ்வாறெல்லாம் இருந்த விவசாயம் ஆங்கிலேயர் வரவிற்குப் பிறகு வரிவசூல் என்ற பெயரிலும் , அறிவியல் வளர்ச்சி என்ற பெயரிலும் எவ்வாறெல்லாம் சின்னாபின்னம் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது. எப்படி கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளை அடிமைப்படுத்தி, கூலிகளாக்கி , புலம்பெயர்ந்தவர்களாக்கி அவர்களை ஏதுமற்றவர்களாக்கி இருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. இதனைப் படிக்கும் போது தான் வரலாறு எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது.

விவசாய படிப்புகள் அனைத்தும் பூச்சி மருந்துகள் விற்பனைக்கான சூழ்ச்சியே என்று தகுந்த ஆதாரங்களோடு விவரிக்கிறார். உலகப் போர் சூழலில் வெடிமருந்து தயாரித்த நிறுவனங்கள் அனைத்தும் உர தொழிற்சாலையாக மாற்றப்பட்டது எனவும் அமெரிக்க நாட்டின் அளவுக்கதிக விளைச்சலைப் பிற நாடுகளின் தலையில் கட்ட போலியாகப் பஞ்சங்கள் உருவாக்கப்பட்டன என்பதையும் வெகு நேர்த்தியாகத் தகுந்த தரவுகளோடு எடுத்துக் காட்டி இருக்கிறார் .

நீர் மேலாண்மைக்காக அணைகள் கட்டியதெல்லாம் மிகப்பெரிய துரோகம் என்பதைத் தெளிவுபட எடுத்துரைக்கிறார். அணைகளால் பலலட்சம் ஏக்கர்கள் எப்படி பயனற்று போனது என்று ஆதங்கத்தோடு விவரிக்கிறார்.

பணப்பயிர்கள் ஆதிக்கம் / புகுத்துதல் , தேயிலைத் தோட்டங்கள் , தனியார் மயமாக்கல் , தாராளமயமாக்கல், அறிவியல் புரட்சி என்று சகலத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்.

சுதந்திர இந்தியாவின் வேளாண்மை குறித்த அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் தெளிவாக விவரிக்கிறார். மேலும் உதவி என்ற பெயரில் உலக நாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்ற போர்ட் பவுண்டேஷன், ராக் பெல்லர் பவுண்டேஷன் போன்றவற்றின் தகிடு தத்தங்களையும், சுதந்திர இந்தியாவிலும் அந்நிய கைக்கூலிகளாகச் செயல் பட்டவர்களைப் பற்றியும் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்.

குறிப்பாக இந்தியப் பாரம்பரிய விதைகளை அழித்தொழித்து மலட்டு விதைகளைத் திணிப்பது, விதைகளுக்கு அவர்களிடம் கையேந்த வைப்பது ஆகியவையே பசுமைப் புரட்சியின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏறக்குறைய 200000 நெல் வகைகள் இருந்தது குறிப்பிடதக்கது. விளைச்சலையும், வருமானத்தையும் காரணம் காட்டி விற்கப்பட்ட விதைகளும், உரங்களும் மண்ணை மலடாக்கியது பலருக்கும் தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே.

இதில் இன்னொரு முக்கிய விஷயமாக அவர் குறிப்பிடுவது பயிரையும் மண்ணையும் ஒரே தொகுப்பாகப் பார்க்காமல், விவசாயத்தைக் கூறு போட்டு மண்ணிற்குத் தனியாகவும், தாவரங்களுக்குத் தனியாகவும், அதன் சத்துக்களுக்குத் தனியாகவும் …உருவாக்கி நமது பாரம்பரிய விவசாயத்தின் தன்மையையே மழுங்கடித்து விவசாயிகளை நடு ரோட்டில் நிற்க வைத்துள்ளது.

இதையெல்லாம் தாண்டி சில நல்லவர்கள்/ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயத்தின் பெருமை உணர்ந்து தங்கள் நாட்டில் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர். இதற்கும் பல சான்றுகளை வழங்கி உள்ளார் . சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் நாம் மறந்த சாணம், ஆலங்குச்சிகள், வேப்பங்குச்சிகள் இணையத்தில் விற்பனை பொருளாக வலம் வருவதே இதற்கு நல்ல சான்று.

விவசாயிகளுக்காகவோ, விவசாயத்திற்காகவோ நாம் படியிறங்கவில்லை என்றாலும் மூன்று வேலையும் தவறாது உண்ண விழைகிறோம் என்பதற்காகவாவது இக்கதையை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
பல வெளிநாட்டு விஞ்ஞானிகளே இந்தியப் பாரம்பரிய விவசாயத்தைப் புகழ்ந்து எழுதியுள்ளது பற்றி நிறையச் சான்றுகள் கொடுத்துள்ளார்.

நாம் உழைத்து வீணாக்காமல் உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் விவசாயிகளின் நலனை நினைத்தும் சமூக அக்கறையோடு செயல்படுவோம்.


நூல் தகவல்:

நூல் :  பசுமைப் புரட்சியின் கதை

வகை :  கட்டுரை

ஆசிரியர் : சங்கீதா ஸ்ரீராம்

வெளியீடு :  காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு: 2012

பக்கங்கள் : 256

விலை:  ₹  275

Available on Amazon

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *