இந்த நூல் 2018ஆம் ஆண்டு படைப்பு இலக்கிய விருது பெற்ற சிறப்புக்குரியது. இந்நூலின் ஆசிரியர் கவிஜி 4000க்கும் மேல் கவிதைகள், 200 சிறுகதைகள், நூற்றுக்கு மேற்பட்ட ஒரு பக்க கதைகள், 400க்கும் மேற்பட்ட கட்டுரைகள், இரண்டு நாவல், 250 குறுங்கதைகள் என்ற நீண்ட எழுத்து வரலாற்றைக் கொண்டவர். மேலும் 12 குறும்படங்களும் இயக்கி நடித்துள்ளார்.
சில விருது பெற்ற நூல்கள் படிக்கும் போது நம்மை ஈர்க்காமல் கூட இருந்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த நூலைப் படித்ததும் பரிசுக்குரிய நூல்தான் என்று மனது ஆணித்தரமாகச் சொன்னது.
அப்படி இந்த நூலில் என்ன இருக்கு? முதலில் இந்த நூலின் கதைக்கருவை சொல்றேன். முன்பின் அறிமுகமில்லாத, மூன்று வெவ்வேறு வாழ்வியல் சூழ்நிலைகளில் வாழக்கூடிய மூன்று நபர்களைக் கதையின் ஆரம்பத்திலேயே இணைக்க வைத்து, ஆனால் எந்தவித சம்பந்தமும் இல்லாதவர்களாக ஒன்றாய் பயணிக்க வைத்து, கடைசியில் அந்த மூவருக்கும் உள்ள இணைப்பின் முடிச்சை மெல்ல மெல்ல அவிழ்ப்பதுதான் கதை. ஒரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டும் டிரைவர் மயில்சாமி, சிறுவயதில் சாவின் விளிம்புவரை சென்று பிழைத்ததால் பெற்றோரால் கன்னியாஸ்திரீயாக மாற்றப்பட்ட அமலி, எதிர்பாராத ஒரு சூழலில் திருநங்கையாக மாற்றப்பட்ட நிரஞ்சன் என்கின்ற நிரஞ்சனா என்ற இந்த மூவரைப் பற்றிய கதைதான்.
வாழ்வில் துவண்ட ஒரு தருணத்தில் மயில்சாமி ஞானம் தேடி புத்தரையும், பறத்தல் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்ட பறவையாய் வாழ வழிதேடி அமலியும், தன்னை திருநங்கையாக மாற்றிய சதியைத் தேடி நிரஞ்சனாவும் பயணிக்கிறார்கள். அனைவரும் தேடியதைக் கண்டறிந்தார்களா? என்பதைப் பல திருப்பங்களுடன் சொல்லி இருப்பார் ஆசிரியர்.
இந்தக் கதையின் மிகச் சிறப்பான அம்சமே கதையின் ஓட்டத்தை எங்கும் நம்மால் யூகிக்க முடியாததுதான். எதிர்பாராத திருப்பங்கள் நம்மைச் சுவாரசியமாய் கதைக்குள் மூழ்கடித்து விடுகிறது.
இது வெறும் சுவாரசியமான கதை என்பதையும் தாண்டி, தன்னுடைய கதாபாத்திரங்களின் உரையாடல்களின் மூலம் சமுதாயப் பிரச்சனைகளை ஆழமாக முன்வைக்கிறார். மேலும் புத்தனைத் தேடிப் பயணிக்க வைக்கும் மயில்சாமி வாயிலாக ஆங்காங்கே நமக்கு ஞானமும் பெற வைக்கிறார்.
இந்த நூலைப் படிக்கும்போது ஒவ்வொரு நிகழ்வும் காட்சியாய் நம்முள் விரியும் அந்த அளவு ஒரு எழுத்து நடை. குறும்பட இயக்குனர் என்பதால் காட்சிகள் நம் கண் முன்னே விரியும்.
இந்த நூலின் அட்டைப் படமே வெகுவாக ஈர்த்து வாசிக்க வைத்தது என்றே சொல்வேன். பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற தலைப்பை வண்ணங்கள் மாற்றித் தந்திருப்பது ஒரு குதூகலமான குழந்தையின் மனநிலையைத் தந்தது.
கதையோ, கவிதையோ, கட்டுரையோ சமூகத்தின் பிரச்சனைகளைச் சாடும் போதுதான் பேனாவுக்கும் உயிர் பிறக்கும்.
“குடிச்சவன் வண்டி ஓட்டுனா புடிக்கிற போலீஸ் .. பாக்கெட்ல கைய ஓட்டுனா விட்டுறாங்க .. குடிச்சிட்டு வண்டி ஓட்டுபவன் லைசென்ஸ் ஆயுசுக்கும் கேன்சல் பண்ணினா…. எவனாவது குடிச்சிட்டு வண்டி ஓட்டுவானா? ”
” ஓடியோடி கும்பிடுற…ஒஞ் சாமிக என்னத்த பண்ணிட்டு இருக்குது ? ”
” பண்டமாற்று முறையைச் சுலபமாக்கப் படைக்கப்பட்ட பணம் வாழ்வின் பிரதான அங்கமாய் மாறியது எப்போது? ” இப்படியான தார்மீக கேள்விகளால் மயிலு மனதில் உயர்ந்து கொண்டே செல்கிறான். பிணி, மூப்பு, மரணம் அது தந்த புத்தனின் ஞானம் போல , நெருங்கிய மரணம் தந்த ஞானம் புத்தனை தேடி பயணிக்க வைத்த மயில்சாமி நமக்குள்ளும் பல தேடல்களை நிச்சயம் தருவான்.
பார்க்கும் பெண்களை எல்லாம் பெண்டாள துடிக்கும் ஒருவனுக்கு, தொடர்ச்சியாக அவன் காணும் பெண்ணின் நிர்வாணம் பெண்ணாசை துறக்க வைத்து ஞானம் தந்தது என்று ஒரு கதை படித்திருக்கிறேன். அதுபோல தன்னை பண்டமாய் ருசிக்கத் துரத்தி வரும் இருவரை, கன்னியாஸ்திரீ அமலி சாதுரியமாகக் கையாண்ட விதம் படிக்கும்போது வியப்பின் உச்சிக்கே போனேன். ‘ஒரு ரொட்டித் துண்டு ஒரு தற்கொலையைத் தடுத்து நிறுத்துமாயின், தன்னுடல் மனதில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் சாவை நிறுத்தியிருக்கிறது ‘ இன்று அலட்டிக்கொள்ளாமல் சொல்லி விட்டுப்போகும் அமலி கொஞ்சம் வித்தியாசமான பெண்ணாகத்தான் தெரிவாள்.
இப்படி கதைக்குள் வரும் ஒவ்வொருவரும் நம்மை ஏதாவது ஒரு விதத்தில் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்.
” இலையாய் உதிர்ந்தது காலம்
காலத்தை உதிர்த்தது இலை
இலையற்ற மரமாய் காலம்
காலம் தாண்டிய இலையில் மரம்
புத்தர்கள் வருவார்கள்
இளைப்பாறிப் போவார்கள்
போதனை தந்தபடியே இருக்கிறது
இலையும் மரமும் காலமும் ….”
– பூங்கொடி
நூல் : பச்சை மஞ்சள் சிவப்பு
பிரிவு : நாவல்
ஆசிரியர்: கவிஜி
வெளியீடு : சப்னா புக் ஹவுஸ்
வெளியான ஆண்டு : 2018
பக்கங்கள் : 181
விலை : ₹ 150
பூங்கொடி பாலமுருகன் முன்னாள் கல்லூரி விரிவுரையாளரான பூங்கொடி, தற்போது தேர்ந்த கதைசொல்லியாகவும், வாசிப்பாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் வலம் வருகிறார். அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்த கதை சொல்லல், நூல்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார். மேடை அமைப்பின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருது, கலை இலக்கிய பெருமன்றத்தின் கதைசொல்லி விருது, தமிழால் இணைவோம் – உலகத் தமிழ் பேரியக்கம் குழுவின் தங்க மங்கை விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.