இன்னபிறநூல் அலமாரி

நெடுவழி நினைவுகள் – வாசிப்பனுபவம்


டந்த வருட லாக்டவுன் காலங்கள்…  அப்போதுதான் பணி ஓய்வு வேறு பெற்றிருந்தேன்.. வாசிப்பு தொடர அருமையான நேரம் வாய்த்திருந்தது. அப்போது அறிமுகமானவர்தான் பேரா.கி.பார்த்திபராஜா. அவர் நடத்திய பத்து நாட்கள் பத்து புத்தகங்கள் தொடர் பேருரைகளை கேட்க வாய்ப்பு அமைந்தது. நிகழ்ச்சிக்குப் பின்னர் கேள்விகள் கேட்டதும், அதற்காகவே குறிப்பெடுத்துக் கொண்டு பேச்சைக் கேட்டதும் இனிமையான அனுபவம். பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்வு.

“வணக்கம். நான் உங்கள் பார்த்திபராஜா பேசுகிறேன்” என்ற கணீர் குரலுக்குச் சொந்தக்காரர். அவருடைய நாடக வளம் குரலிலேயே தெரியும். இந்த நூல் “நெடுவழி நினைவுகள்” அவரின் நீண்ட நெடும் பயணத்தில், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள், சந்தித்த ஆளுமைகள், அவரின் தமிழார்வம் சார்ந்த நிகழ்ச்சிகள், அவர் போட்ட இலக்கியச் சண்டைகள், சண்டைகள் காரணமாகக் கிடைத்த நட்பு வட்டங்கள், அவருடைய ஆசான்கள் பற்றியெல்லாம் பேசுகிறது. மொத்தமாக 28 கட்டுரைகள் உள்ளன. பெரும்பான்மையான கட்டுரைகள் முடிக்கும் போது ஒரு திருப்தியையும், சில துளி கண்ணீரையும் கொண்டு வருகின்றன.

தன்னுடைய முதல் புத்தக வெளியீட்டிற்கு வந்து, கடைசி பெஞ்சில் அமர்ந்து, தன் மீது உள்ள அன்பால் தனக்கு பரிசும் அளித்துச் சென்ற “திருவல்லிக்கேணியின் பழைய புத்தகக் கடைக்காரன் புராணம்” அவனுடனான புத்தகப் பேரங்களையும், இறுதியில் ஒருநாள் அவர் காணாமல் போனதையும் பேசுகிறது. நெகிழ வைக்கும் கட்டுரை.

“நோயில் இருத்தல்” என்ற புத்தக விமர்சனத்தை பற்றி பேச இருந்ததையும், அதைப் படிக்க ஆரம்பித்ததில் இருந்து நோய்மையில் படுத்ததும், அந்த புத்தகம் இரவல் தந்த பிறகுதான் நோய் தீர்ந்தது என்பதையும் நகைச்சுவையாக எடுத்துரைக்கிறார்.

மறைந்த பத்திரிக்கையாளர் A.N.சிவராமன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதையும், அப்போதுதான் அவரை முதன் முதலில் பார்க்க நேர்ந்ததையும், அப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தனக்கு ஏற்பட்ட மரியாதையையும், “இறந்த பிறகு சிவராமனைச் சந்தித்தேன்” கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

புத்தகம் முழுவதுமே தன் சீனியர்களுக்கும், முதன்மையான கலைஞர்களுக்குமான அவருடைய மரியாதை வெளிப்படுகிறது. இன்னொரு கட்டுரையில் நாடக ஆசான் சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறைக்குச் சென்றதையும், இரவு 10 மணி ஆகி விட்டதால், காவலாளி உள்ளே விடமாட்டேன் என்று சொல்லியதையும், தான் அவருடைய பேரன் என்று சொல்லி உள்ளே சென்றதையும், எரிந்து கொண்டிருக்கும் பிணங்களைத் தாண்டிச் சென்றதையும் ஒரு திரில்லர் போல சொல்லிச் செல்கிறார். ஆனாலும் இதில் அவர் சுவாமிகளின் மேல் வைத்துள்ள மதிப்புதான் மேலோங்கித் தெரிகிறது.

ஒரு நூலை எழுதியவர் தன் பேராசிரியராக வந்ததையும், அவரை யார் என்றே தெரியாமல் அந்த நூலைப் பற்றி “அந்தப் பெண் கிறுக்கி வைத்திருக்கிறாள்” என்று கூறியதையும்,அதைக்  கேட்ட பேரா. அபி தன் மீது கோபப்படாமல், தனக்கு வழிகாட்டி ஆனதையும் படிக்கும் போது, எப்படிப்பட்ட நவரத்தினங்கள் இவருக்குக் கிடைத்திருக்கிறார்கள் என்ற பொறாமையே ஏற்படுகிறது.

சி. சு. செல்லப்பாவுடன் ஏற்பட்ட சண்டை, டெல்லி பயணங்கள், பாரதி வாழ்ந்த இடங்களைச் தேடித் தேடி பார்த்த அனுபவங்கள், உண்டியல் வசூல் என்று பேருந்து நிலையத்தில் ஈடுபட்ட அனுபவங்கள், அதன் மூலம் சந்தித்த மனிதர்கள், தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் அறிஞர்களுடன் நடந்த உரையாடல்கள் என்று பல விஷயங்களைப் பேசுகிறது இதில் உள்ள கட்டுரைகள்.

திரைக்கலைஞர் ரேவதி இவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய கதை அவரைப் போலவே அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

இவர் இதில் கா. சிவத்தம்பியைப் பற்றி எழுதிய “நின் பொன்னடிகள் தாங்கி உயர்ந்தேன்” கட்டுரை ஒரு மணிமகுடம்.

ஒரு முறையாவது இந்த மனிதரைச் சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறார் பார்த்திபராஜா. பேரிடர் காலம் முடியட்டும்.

தமிழ் ஆர்வலர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நூல்.

கோவை பிரசன்னா.

 

நூல் தகவல்:

நூல் : நெடுவழி நினைவுகள்

பிரிவு :  கட்டுரைத் தொகுப்பு

ஆசிரியர்: கி.பார்த்திபராஜா

வெளியீடு : பரிதி பதிப்பகம்

வெளியான ஆண்டு :  –

பக்கங்கள் :  320

விலை :  ₹ 360

நூல் வாங்க :  marinabooks.com

 

 

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *