வலிமை மிக்க உணர்ச்சிகள்

பொங்கி வழிந்தோடும்

ஓட்டத்துக்குப் பெயர் கவிதை

என்ற வேர்ட்ஸ் வொர்த்தின் வரிகளுக்கு ஏற்பவே, வளமான வங்கிப் பணியில் இருந்து கொண்டே தனது வலிமையான மொழியின் வளத்தை ‘நினைவுகளின் சாயங்கள்” என்ற தனது கவிதைத் தொகுப்பின் வழியாக உயிர் பெறச் செய்திருக்கிறார் கவிஞர் மலர் மகள். இயற்கையாகவே, இவரது உதிரத்தில் தந்தையின் தமிழ் மரபுக் கூறுகளை பதியனிட்டு வளர்ந்தாலும், இலங்கை வானொலியில் திரை இசை கேட்டு கவிதை எழுதப் பழகிய இவர் மாலைமுரசு வழியாக தன் கவிதை உயிர் பெற்றதையும், பின் கடிதங்கள் வழியாக தன் பயணத்தைத் தொடங்கி வங்கிக் கூட்டங்கள், மகளிர்; மன்றங்கள், அதன் பின் கவிப்பட்டறை என நீண்டு வளர்ந்த இவரது கவிப்பயணத்தின் இடையில் இவரது கவிதையொன்று கணையாழி இதழில் பிரசுரிக்கப்பட்டது. அன்றிலிருந்து இவரின் கவிதா விலாசம் மேலும் மெருகேற இலக்கிய உலகில் இவரின் அடையாளம்  தெரிந்தது. கணையாழியில் ஆண்டாள் விருது பெற்ற இவரின் ‘உருள் பெருங் கவிதை” வழியாக தொலைத்த தன் அடையாளத்தை மீட்டெடுத்திருக்கிறார்.

பொதுவாக, பெண் எழுத்துலகில் பெண்ணியவாதிகளாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் குட்டிரேவதி, மாலதிமைத்ரி, லீனாமணிமேகலை, சுகிர்தாராணி, உமாமகேஸ்வரி… என நீளும் ஒரு வரிசையிலிருந்து விலகி தனக்கான மொழியை தனது வாழ்வியல் துயரங்களிலிருந்தே இயங்கு திறன் கொண்ட சொற்களால் தனக்கான கவிதை வெளிகளில் சிறகு விரித்து பயணிக்கும் பெண் ஆளுமையாக உயரம் கொள்கிறார்.

அருகருகே இருந்தும் மனிதர்களின் இருப்பை அடையாளமில்லாமல் செய்திருக்கும் இன்றைய அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருநகரங்களில் பெருகியுள்ளன. சிறு புன்னகையைக்கூட கதவிடுக்குகளின் வழியாக கசிய விடாத மனங்கள் கதவுகளுக்கு பின்னால் பூட்டைவிட இறுகித் தொங்குகின்றன. ‘வாழ்தலின் கனம்” என்ற தலைப்பிட்ட இந்த கவிதையில் தனது இந்த வலியை பதிவு செய்திருக்கும் கவிஞரின் திறந்த மனம் பாராட்டுதற்குரியது.

இன்றைய வாழ்வில் திருமணம் என்ற நிகழ்வினூடாக ஆடம்பரங்களை அணி வகுத்து, தனது மதிப்பைக் கூட்டி சமூகத்தின் முன் போலிமைகளாக வலம் வரும் நிஜங்களை மொழிச் செழுமையுடன் அழகூட்டிய வரிகளால் அசர வைக்கும் திறமையுடன் கவிதையை படைத்துச் செல்கிறார்.

                                ‘இடும்பை கூர் வயிற்றுக்கு ஏலாது

பரிமாறப்படுகிறது இலை முழுவதும்

தனிச் செருக்காய்ப் பண்பாடு

சீதனங்களின் அணிவரிசை

நினைவூட்டுகிறது

பாரி வம்சத்தை”

தொன்மையான தமிழ்க் கவிதையொன்றின் வரியை இன்றைய வாழ்வின் எதார்த்தத்தோடு இணைத்திருப்பது இவரது திறமைக்குச் சான்று. சீதனங்களின் அணிவரிசையை பாரி வம்சத்தோடு ஒப்பிடுவது நகை முரண். கவிஞர் தான் சொல்ல வந்த செய்தியை கலை நுணுக்கமாக உணர்த்தும் போது, தனது அபாரமான மொழித் திறனையும் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

பொதுவாக கவிஞர்களுக்கு மொழிதான் அவர்களது சுயம். கவிஞர்களின் ஆளுமையும் அழகும் அவரவர் சுயங்களில் இருந்தே பெறப்படுகிறது. மலர் மகளின் கவிதைகளில் அவரது ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தக்கூடிய சுயமான மொழியுடனும், அழகுடனும் கவிதை வெளியெங்கும் பயணிக்கிறார். ‘கண்ணீர்க்குருதி”, ‘கந்தகப் புன்னகை”, ‘கசப்புச் சுவை”, ‘மனதின் கொதி சுவை’ போன்ற கவிதைகள் இவ்வகையான வெளியில் மொழியின் ஒரே லயத்தோடு ஒன்றாகப் பயணிக்கின்றன.

ஒரு கவிதைக்குள் உள்ளுக்குள் அடைகாத்த வெம்மையை இன்னொரு கவிதையில் கந்தகப் புன்னகையாய் வெடித்துச் சிதற வைக்கிறார். புறக்கணிப்பின் கசப்புச் சுவை தாளாமல் தொடங்கிய கவிதை, அடுத்த கவிதையில் மனதின் கொதி சுவையாகி ஆற்றாமை கொள்கிறது. அதிகார வர்க்கத்தின் முன் அனுபவிக்கும் ரணங்களோடு பயணிக்கக் கற்ற இவரது மனதின் கொதி சுவை ஆலகால வீரியத்துடன் இறங்கும் நாளை எதிர்பார்க்கும் ஒரு கவிஞரின் உள்ளார்ந்த வேதனை உணர்வுகளை வெளிப்படுத்தும் போது கூடவே நம்முள்ளும் ஒரு அதிர்வை எழுப்புகிறது அத்தகைய உணர்வுகள்.

பொதுவாக, கவிமனம் என்பதும், அவர்களது எழுத்துக்கான அடிப்படைக் கூறு என்பதும், அவர்களது வாழ்வியலின் அடிப்படையான நிலம், மொழி சார்ந்த வடிவங்களையும் மேலும் அவர்களுக்கான வாழ்வியல் பண்புகளோடு இணைந்து பொருள் சார்ந்த உள்ளடக்கங்களுடனும் உத்திகளுடனும் வெளிப்படுவது இயல்பு.

கவிஞர் மலர்மகளின் கவிதைகளில் அவரது வாழ்வியல் பண்புகள் சார்ந்த மொழிநடையே, சமூகம் சார்ந்த விழுமியங்களை கேள்விக்குள்ளாக்கியும், விடை காண இயலாத மனதின் வெக்கையை மொழியின் அறிதிறனோடு வாசகர் முன் இறக்கி வைப்பதும் இவருக்கு எளிதாகிறது.

‘மறுபதியன்” என்ற கவிதையில் இவர் மனிதத்தின் மாண்புகளையும், துளிர்க்கும் மனித நேயங்களையும் சுயநலக் கோடாரியால் வீழ்த்திவிட்டு நழுவிக் கொள்ளும் மனிதர்களை, வன்முறைகளை… ஊழலின் புழுக்கங்களை, அதிகார அக்கிரமங்களை எளிதாகச் செரித்துக் கொள்ளும் நயத்தக்க நாகரிகங்களை பகடி செய்கிறார்.

                                ‘உயிர் சுமக்கும் நாள்வரை தொலைக்கப்பட்ட

பெருங் கருணையின் நியாயப் பார்வை

மண்ணுக்குள் வெந்து தணியாமல்

மகிமைப் படுத்துவோம்

உயிர்ப் பொறையில்

மறு பதியனிட்டு”.

‘உயிர்ப்பொறை” என்ற சொல்லாடல் இவரின் மொழிச் செழுமையை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் கவிதைக்கான பாடுபொருளை மொழியின் அடர்த்தியைக் கொண்டு வாசகனுக்குள் உணர்வைப் பதியனிடும் தொழில் நுட்பத்தை மிகவும் நேர்த்தியாக கவிதையில் பதிவு செய்கிறார்.

‘முரண்திணை” என்ற கவிதை திணை குறித்த ஐயப்பாட்டை அழகாக வெளிப்படுத்துகிறது.

                                ‘கண்ணுக்குக் குளிர்ச்சியும்

வயிற்றுக்கு உணவும்

மண்ணுக்கு உரமும்

மழைக்குச் சூழலும்

இளைப்பாற நிழலும்

பூமிக்கு புது ஆக்சிஜனும்

வரமாய்த் தந்தாலும்

‘அஃறிணை” என்றென்னை

இலக்கணப் படுத்தி

வெட்டிச் சாய்ப்பவனை

‘உயர்திணை” என உரைக்கும்

உயர் தமிழே,

மரத்துப் போனதோ

உன் மனது?”

திணை இலக்கணம் வகுத்தவன் இந்தக் கேள்விக்கான பதிலை தமிழ் கூறும் நல்லுலகில் எங்குமே தேடியடைய முடியாது என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு புடவைகள் மீதுதான் எத்தனை மோகம்? ஆடி வந்து விட்டால் அதிரடியாய் தள்ளுபடி செய்யும் ஜவுளிக்கடை விளம்பரங்களால் பெண்களின் கை சேமிப்பு காற்றாய் பறந்து ஜவுளிக்கடையை எப்போதும் பொக்கிஷப் பொலிவோடு வைத்திருக்கும். பெண்களின் கனவுகளையும் நினைவுகளையும் எப்போதும் தீராப் பசியோடு வைத்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தின் தந்திரமிக்க வியாபாரத்தின் ஒரு பகுதிதான் இது.

கவிஞரோ, தனது பீரோவில் நிறைந்திருக்கும் புடவை அடுக்குகளின் நினைவுகளிலிருந்து பிரிந்தோடும் தனித்த நினைவொன்றை கவிதை வாயிலாக நினைவுபடுத்துகிறார்.

நினைவுகளின் சாயங்கள்

                                ………………………………..

………………………………..

அந்துருண்டைகள் சுவாசம் மீறி

சந்தர்ப்பங்களால் நிரம்பி

உடுத்திக் கிழித்த

ஏராளங்களுக்கிடையே

பருவம் மறைத்த

அம்மாவின்

கிழிந்த புடவையின்

தாவணி நினைவுகள் மட்டும்

சாயம் போகாமல்

கண்ணீரை உடுத்தியபடி

எத்தனை பெண்களுக்கு இந்த நினைவு வரும்?

பொதுவாகவே, கவிதை மனம் வாய்த்தவர்களுக்கு தனது பொற்கால நினைவுகளின் சேமிப்பிலிருந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு கருத்தையோ அல்லது நிகழ்வையோ,  நிகழ்காலத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பொன்றுடன் பொருத்திப் பார்த்து, நிறைவு காண முடியாத இன்றைய வாழ்க்கையின் வசீகரத்தை மனதளவில் ஏற்க முடியாமல் போகும் நிகழ்வொன்றை தனது ‘வெள்ளையின் நிறம்” என்ற கவிதையில் ‘வெளுத்து கிடக்கிறது நகரத்து வாழ்க்கை” என்று வெளுத்து வாங்குகிறார்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் வற்றாத ஜீவ நதிகளாய் கரை புரண்டோடிய நதிகள் எல்லாம் இன்று நீரின்றி நிலம் பெயர்ந்து வறண்டுவிட்ட காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வாக்கை இன்று நாம் மறந்து விட்டோமோ என்று நினைக்கும் படியான அநீதிகள் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பன்னாட்டுக் குளிர்பானக் கம்பெனிகள் நமது மண்ணின் நீரையெல்லாம் உறிஞ்சி கொளுத்த லாபம் பெறுகின்றனர். ஆற்று மணலைத் திருடி கொள்ளை கொள்ளையாய் லாபம் சம்பாதிக்கும் முதலாளிகள் பெருத்துக் கிடக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏரிகளும், குளங்களும் காணாமல் போய் விட்டன. சாயக் கழிவுகளை சங்கடமில்லாமல் ஆற்று நீரில் கலந்து விடுகின்றனர். எல்லா அநீதிகளையும் கண்டும் காணாமல் போகும் ஆளும் அதிகார வர்க்கங்களின் கையில் நமது வாழ்வின் ஆதாரங்கள் அனைத்தும் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. ஒரு கேவலோடு மிஞ்சிவிட்ட நதியின் ஈரத்தை தனது கவிதையில் காயங்களின் கேவல்களோடும் ஈரமான மௌனங்களோடும் ‘நதியின் கேவல்” என்ற கவிதையில் பதிவு செய்கிறார்.

வாழ்வின் அவலங்களை தனது யதார்த்த மொழியில் மடைதிறந்த வெள்ளமென படைக்கும் அவரது கவிமனம் சில நேரங்களில் வாழ்வின் புதிர்களுக்குள் சென்று புதைந்து கொள்ளும் தருணங்களும் உண்டு. அதற்கான கவிதைகளும் இத்தொகுப்பில் காணக் கிடைக்கின்றன.

மானுடவிடியல் நோக்கிய அவரது பயணத்தில் இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு (க)விதையும் ஒரு விருட்சமாகி வளர்கிறது. வாழ்வின் மீறல்களுக்கும் பிறழ்வுகளுக்கும் ஒரு மானுட நியாயம் கற்பிக்கும் மனங்களை எள்ளல் தன்மையுடனும், வசீகர மொழியின் வாள் கொண்டும் சுழற்றியடிக்கும் இவரது கவி ஆளுமைக்கு ஏற்றவாறே மொழியும் இவருடன் களமிறங்கி போரிடுகிறது. போரில் நாமும் இணைந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை வாசிக்கும் அனைவர் உள்ளங்களிலும்  ஏற்படுத்திவிடுகிறார்.

கவிஞர் மலர்மகள் தனது வங்கிப் பணியினூடே தனது கவிதைக்கான கருக்களை வாழ்வின் அனுபவங்களுக்குள் நுழைந்து தான் கண்ட பண்பாட்டு விழுமியங்களை இதயத் தராசுக்குள் எடை போட்டு, புதியதொரு சொற்பரிமாணத்தை உருவாக்கி, தனது ஒப்பனையில்லாத வரிகளால் கவிதை நெய்து தனது பணி நிறைவுக் காலத்தில் நிறமிழக்காத ‘நினைவுகளின் சாயங்கள்” மூலமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல்லதொரு கவிதைத் தொகுப்பை தந்திருக்கிறார்.

பெண் எழுத்து என்பதை ‘பெண்ணியம்” என்ற வகைமைக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. பெண் எழுத்தின் பல்வேறு பரிமாணங்களை அடையாளம் காட்டக்கூடிய தொகுப்புகள் இன்று வந்த வண்ணம் உள்ளன. கவிஞர் மலர் மகளின் இத்தொகுப்பு கவிதையின் மொழியிலும், உள்ளடக்கத்திலும், உத்தியிலும் வாசிப்பவர்களின் உள்ளத்தில் கவிதையின் வேறொரு பரிமாணத்தை அடையாளம் காட்டுவதை சுட்டிக்காட்டுகிறேன்.

கவிஞர் ஸ்ரீரசாவின் அழகிய அட்டைப்பட ஓவியத்துடன் காலம் வெளியீடாக வந்திருக்கும் இந்த கவிதைத் தொகுப்பினை வாசகர்கள் வாங்கி பயனடைய வேண்டுகிறேன்.

–  கவிஞர் மஞ்சுளா

நூல் தகவல்:
நூல் : நினைவுகளின் சாயங்கள்
பிரிவு : கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் மலர்மகள்
வெளியீடு: காலம் வெளியீடு
வெளியான ஆண்டு : ஜூன் 2018
பக்கங்கள் 96
விலை : ₹ 100
தொடர்புக்கு 94430 78339

 

நூலாசிரியர் குறித்து:

மலர்மகள்

படிப்பு: M. Com. B. Ed CAIIB. கோயமுத்தூரை பிறப்பிடமாக கொண்ட மலர்மகள் கனரா வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். திருமணத்திருக்குப் பின் மதுரையில் வசித்து வருகிறார். இவரது தந்தை தமிழ் ஆசிரியர் என்பதால் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ்ப்பற்று அதிகம் என தெரிவிக்கும் இவர் . “செய்வன திருந்தச் செய்....தந்தையின் வேத வாக்கு. எனவே எதிலும் செய் நேர்த்தி விரும்பும் மனம்.” என்கிறார்

கவிதையின் பால் பள்ளி படிக்கும் காலத்திலேயே நாட்டம். மாலை முரசு போன்ற நாளிதழ்களில் பிரசுரம் ஆனது. மரபுக் கவிதை சீர் தளையுடன் எழுதிய போதிலும், திருமணதிற்குப் பின் குடும்பம் குழந்தைகள் வங்கிப் பணி என உழன்றதால் மிகப்பெரிய இடைவெளி. வங்கித் தோழர் கிளை மாற்ற நிகழ்வில் மீண்டும் துவக்கம். இரண்டாவது இன்னிங்ஸ். 2002 முதல் தொடர்ந்து வங்கி கூட்டங்கள் மாநாடுகள் மதுரை இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு என இயங்குதல் தொடர......,தின மணியில் கட்டுரைகள்..... கணையாழி, செம்மலர், தாமரை, புதிய காற்று,புதிய பார்வை, இனிய நந்த வனம், புதுகை தென்றல், மனித நேயம், கவிதை உறவு, வார மலர், குங்குமம் , பாக்யா, வளரி, கவி ஓவியா, மகளிர் சிந்தனை,என சிற்றிதழ் களிலும் வங்கி இதழிலும் கவிதைகள், கட்டுரைகள் வெளியாகின. மதுரை கவி அரங்கங்களில் பங்கேற்பு, நிகழ்ச்சித் தொகுப்பு. மதுரை தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் பொறுப்பில் இருந்தும் செயல்பாடுகளில் பங்களிப்பு என தீவிர இலக்கியச் செயல்பாட்டில் இருந்து உள்ளார்.

 

கணையாழியில் 2014 ஆண்டாள் விருது..... கவிஞர் கலாப்ரியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைக்கு கிடைத்தது. முத்தமிழ் அறக்கட்டளை, உலக தமிழ் எழுத்தாளர் சங்கம், வளரி, மனித நேயம், நெல்லை பாலு அறக்கட்டளை விருது கவிதை உறவு. மாமதுரைப் பேரவை விருது என பல விருதுகள் பெற்றுள்ளார்.

நினைவுகளின் சாயங்கள் கவிதைத் தொகுப்பு பணி நிறைவு நேரத்தில் வெளியீடு செய்தவர். தொடர்ந்து எழுத வேண்டும் ஆவல் இருப்பினும் சூழல்கள் பொறுப்புகள் சிந்தனையை சிறை வைத்தாலும் மீறி அவ்வப்போது முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இலக்கியம் சாந்து தொடர்ந்து இயங்குவதாகவும் தெரிவிக்கிறார்.

One thought on “மலர்மகளின் ‘நினைவுகளின் சாயங்கள்’ – விமர்சனம்

  • மலர்மகளின் ‘நினைவுகளின் சாயங்கள்’ – விமர்சனம்
    நூல் : நினைவுகளின் சாயங்கள்
    பிரிவு : கவிதைத் தொகுப்பு
    ஆசிரியர் மலர்மகள்
    வெளியீடு: காலம் வெளியீடு
    வெளியான ஆண்டு : ஜூன் 2018
    பக்கங்கள் 96
    விலை : ₹ 100
    தொடர்புக்கு 94430 78339
    அருமையான புத்தக மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மஞ்சுளா கோபி

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *