நூல் விமர்சனம்புனைவு

நானும் என் பூனைக்குட்டிகளும் – விமர்சனம்


னக்கு பத்து வயதிருக்கும். அப்பா ஒரு மலைப்பகுதியில் தேயிலை தோட்ட அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள தனி கோர்ட்ரஸ் தான் வீடு. நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை. எனக்கு புத்தகம் தான் கதி. இல்லையென்றால் காட்டுக்குள் சுற்றி திரிவேன்.அதுவும் இல்லையென்றால் எங்கள் வீட்டில் வளர்த்த நாய்களும் பூனைகளும்தான் துணை. உணவளிப்பது ,வெளியில் அழைத்து செல்வது, அவற்றை சீண்டி விளையாடுவதுதான் என் பொழுதுபோக்கு. கிட்டத்தட்ட எங்கள் வீட்டில் நான்கு நாய்களும் எட்டு பத்து பூனைகளும் இருந்தன. நாளடைவில் நாய்க்குட்டிகளை தாரைவார்த்துவிட பூனைகளே வீட்டை நிறைத்தது. அதிலும் முழு அடர் கருப்புடன் ஒரு பெண் பூனை இருந்தது. அதற்கு நான் ரோஸி என்று பெயர் வைத்திருந்தாலும் கருவாச்சி என்றே வீட்டில் அனைவரும் அழைக்க அதுவே வழக்கமாகி விட்டது.

கருவாச்சி அன்பானவள். ஆனால் கொஞ்சம் திருடுவாள். அதற்காக பலமுறை என் தந்தையிடம் அடிவாங்கி இருக்கிறாள். ஆனால் அவளாக எங்களை விட்டு என்றுமே சென்றதில்லை. மலையை விட்டு சமவெளியில் குடியேறியப்போது அவளையும் உடன் அழைத்து சென்றோம். சில நாட்களில் முதுமையில் இறந்துபோனாள். அந்த வயதில் அது என்னை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் எங்கே பூனைகளைக் கண்டாலும் அவள் நினைவு வராமல் இருப்பதில்லை.

தரணி ராஜேந்திரன் அவர்களின் ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’ நாவல் அவர் மூலமாகவே கையில் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.  இரண்டரை மணி நேரப் பேருந்து பயணத்திற்காக நூலைக் கையிலெடுத்து சென்றிருந்தேன்.  இடைவிடாமல், சலிக்காமல் இந்நாவலை முழுவதுமாக படித்து முடித்தது எனக்கே ஆச்சரியம்தான் . நாவலின் தொடக்கத்தில் கருவாச்சி போன்ற ஒரு பூனை பேச ஆரம்பித்து. ஆங்காங்கே ஆசிரியர் கதைமாந்தர்கள் மற்றும் பூனைக்குட்டிகளும் மாறி மாறி கதை சொல்லுகிறார்கள்.

ஒரு சில இடங்களில் பார்த்ததுண்டு. இரு சக்கர வாகனத்திலோ அல்லது மாருதி போன்ற வாகனங்களிலோ  பெரிய பெரிய பாத்திரங்களில் உணவைக் கொண்டு வந்து சாலைகளிலும் தெருக்களிலும் அலையும் ஆதரவற்ற நாய்களை அழைத்து சில ‘மனிதர்கள்’ உணவிட்டுச் செல்வார்கள். அந்த நபர் வந்ததும் அவரை பத்து இருபது நாய்கள் சுற்றி வளைத்து வாலாட்டிக் குலைக்கும். அதுபோன்ற மனிதர்களைப் பார்க்கும் போது உண்மையில் பூரிப்பாகவே இருக்கும். இவர்களுக்கு எத்தனை பெரிய மனது.அவர்களால் மனிதர்களையும் தாண்டி சிந்திக்க முடிகிறது.

அதுப்போன்றவர்களில் ஒருவன் தான் பாலா. அவன் கொள்கைக்கு கிலோ கணக்கில் வடித்து தருபவள்தான் அவன் அம்மா. பொந்தில் வளரும் பூனைக்குட்டிகளை தூக்கி வந்து வீட்டிற்குள் வைத்து தினமும் மீன் அதுவும் அவற்றிற்கு பிடித்தமான மீனாக தருவதில் தொடங்கி இறுதியில் ஊர் முழுக்க உள்ள எல்லா நாய் பூனைகளுக்கும் உணவு உறைவிடம் மற்றும் மருத்துவம் இதுபோக குடும்ப கட்டுப்பாடு செய்து ஆதரவளிக்கும் அளவிற்கு செல்கிறது இந்த நூல் பயணம்.

வீட்டிற்குள் நாய் பூனைகள் வருவதில் ஈடுபாடு இல்லாமல் திட்டிக்கொண்டே இருக்கும் அப்பாவைத் தாண்டி வாயில்லா உயிர்களிடமும் தாய்மையை காட்டும் தன் தாயின் துணையுடன் பாலா நாய்களையும் பூனைகளையும் அன்பாக பராமரிப்பது அருமை. எதைசெய்தாலும் குற்றம் கண்டுப்பிடிக்கும் அக்கம்பக்கத்தினர் அனைவரிடமும் சண்டையிட்டும் பகைத்துக்கொண்டும் கூட தங்கள் செயல்களை யாருக்காகவும் மாற்றி கொள்ளாமல் தொடர்ந்து நாய் பூனைகளுக்காக ஆதரவு தருவதைப் படிப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது.

ராணி என்ற குட்டியீன்ற பெண் நாய் தெருவில் நடமாடும் மனிதர்களுக்கு ஊறு விளைவிப்பதாக கூறி அந்த ஜீவனை அவர்கள் படுத்தும்பாடு நிச்சயம் கோவம் வரும். பாலா அதை காக்க அறும்பாடு படுவான். குடியரசு தினத்திற்கு கொடியேற்ற தெருநாய்களை பிடித்து சில நாட்கள் வைத்திருந்து அனுப்புவதெல்லாம் புதுமையான விஷயங்களாக இருந்தது.

பெண்பால் உயிர்களையும் ஆண்பால் குறியீட்டால் அவன் இவன் என்று எழுதியிருக்கிறேன் என்று தன் உரையில் முன்னரே அறிவித்து இருந்தாலும் அது படிக்கும்போது சற்று நெருடலாக தோன்றியது. இருந்தும் அது கதையில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை  இந்நூலை படிக்கும் போது புனைவாகவோ கதையாகவோ உணர தோன்றவில்லை. பாலாவை நம் பக்கத்து வீட்டுக்காரனாகவும் சிலநேரங்களில் அவன் எண்ணங்களும் மனமும் நம்மை போன்றே சிந்திப்பதாகவும் தோன்றும். இறுதியில் நானும் என் பூனைக்குட்டிகளும் வாசிக்கும் வாசகனுக்கு கோபம், அனுதாபம், அன்பு, ஜீவகாருண்யம் உட்பட அனைத்து உணர்வுகளையும் தூண்டி விட இந்நூலும் அதன் ஆசிரியராலும் இயலும் என்பது சர்வ நிச்சயம்.


நூலாசிரியர் குறித்து

2012-ல் பொறியியல் பட்டம் பெற்ற தரணி ராசேந்திரன் திரைத் துறையில் ஆர்வம் கொண்டு அதில் பயணிக்கத் தொடங்கினார். தன்னாட்சி முயற்சியாக ஞானச்செருக்கு என்ற முதல் முழு நீளப்படத்தை உருவாக்கினார். 2019 தொடங்கி நாற்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக ஞானச்செருக்கு அங்கீகரிக்கப்பட்டது. ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’ இவரின் முதல் புதினம். சிங்கப்பூர் இலக்கிய வட்டத்தில் சிறந்த நாவலாகத் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

நூல் தகவல்:

நூல் :    நானும் என் பூனைக்குட்டிகளும்

ஆசிரியர் : தரணி ராசேந்திரன்

வகை :   நாவல்

வெளியீடு :  எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing

வெளியான ஆண்டு :   ஜூன் 2021

விலை : ₹  150

Buy on Amazon : 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *