விறுவிறு விரைவு மின்தொடர்!
முகநூலில் நான் கணக்குத் தொடங்கிய பிறகு, எனக்கு ஆச்சரியமூட்டிய விஷயம், இங்குள்ள பிரபலமில்லாத சிலரது எழுத்துத்திறன். சொல்ல வந்த கருத்தைச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்வார்கள். ஆர்வம் காரணமாக எழுத வந்தவர்கள். அவர்களில் என் மனம் கவர்ந்த ஒருவர் தான் நண்பர் அசோக்ராஜ். இவர் இயற்பெயர் சிவக்குமார். சமீபத்தில் மறைந்த தன் தந்தையின் மேலுள்ள பேரன்பால் அவர் பெயரையே தனக்குச் சூடிக்கொண்டவர்.
முகநூலில் இவரது பல பதிவுகள் ஒரு சிறுகதையின் சாயலில் அமைந்திருக்கும். அப்படி ஒரு பதிவை நான் ‘புதிய தலைமுறை கல்வி’யில் பிரசுரித்தபோது தான் நெருக்கமானோம்.. இவரது பெரும்பலம் மொழிநடை. சொல்ல வந்ததைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் வித்தையில் தேர்ந்தவர். உரையாடல்கள் உயிரோட்டத்துடன் ஈர்க்கும். முகநூலில் இவர் பதிந்த ‘ஜாடை நாடகம்’ என்றொரு சொற்கோவை, மனதை ஈர்க்கும் சரளமான உரையாடல். விறுவிறுப்பாகச் செல்கிறது. படித்து முடித்த பிறகு, அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று யோசித்தால் ஒன்றுமே இல்லை. ஆனால், ஒன்றுமில்லாத விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுத வேண்டுமென்றால் அதற்கு அபாரமான எழுத்தாற்றல் வேண்டும். அது அசோக்ராஜ்க்கு எளிதில் கைவந்திருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளாக இவர் எழுதிய 12 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சராசரியாக ஆண்டுக்கு ஒரு சிறுகதை என்ற அளவில் வடிகட்டப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள். இந்தத் தேர்ந்தெடுப்பு சுண்ட காய்ச்சப்பட்ட திரட்டுப்பால் போல சுவையூட்டுகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை. வகைக்கு ஒன்றாக இருப்பது படிப்பவர்களுக்குப் புத்துணர்வளிக்கிறது.
சபலம், அவமானம், தொழில்துரோகம், பழிவாங்கல், முதுமையின் இயலாமை, மதக்கட்டுப்பாடு, பொய்க்குற்றச்சாட்டு என்று பல்வேறு மைய இழைகளை எடுத்துக்கொண்டு பின்னி எடுத்திருக்கிறார் கதாசிரியர்.
வீட்டுத் தரகர் என்றாலே கமிஷன் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். கமிஷனுக்காக நிலத்தின் விலையை அதிகமாக்கி விடுகிறார்கள் என்றெல்லாம் அவர்களைப் பற்றிய பொது மதிப்பீடுகள் உண்டு. “கடவுளின் டிசைன்” சிறுகதையில் இடம் பெறும் வீட்டுத் தரகர் சுப்பு, தனசாமி ஆகிய இருவரும் நம் அனுதாபத்தைத் தேடிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தொழிலிலும் நுணுக்கங்கள் உண்டு. துரோகங்கள் உண்டு. அந்தத் துரோகம் இவர்களைப் பாதிக்கும்போது மனம் கனக்கிறது.
“வயசு” கதையில் முதுமையின் இயலாமை மனதை அறுக்கிறது. தன் பேத்தி தவறு செய்யும்போது, அதே வீட்டில் இருக்கும் அவரது மனம் எவ்வளவு கூசி இருக்கும். தடுக்க இயலாத முதுமையில் எவ்வளவு வலித்திருக்கும். அவர் நிலையிலிருந்து அந்தத் தருணத்தின் வலியை உள்வாங்கும்போது, நமக்குள் சோகப் பெருமூச்சு வெடித்தெழுகிறது.
வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கதை தொப்பை. ஒரு கசாப்புக்கடைக்காரனை காதல் கசாப்பு பண்ணுவது ரசனையுடன் எழுதப்பட்டுள்ளது.
நான்கு அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள ஏன் என்னை வென்றாய்? கதை ஒரு காதல் சாரல். குருவுக்கு தன்னை விட வயது அதிகமுள்ள வசந்தி மேல் ஏற்படும் காதலுக்கு உளவியல் ரீதியான காரணங்கள் உண்டு. முதலில் குருவை மறுக்கும் வசந்தியின் மனதில் ஏற்படும் காதல் ரசவாத மாற்றங்கள் படிப்படியாக அழகாக எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதையின் கருவும் களமும் வெவ்வேறாக இருந்தாலும் கதைகளில் சில பொதுத்தன்மைகளைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு கதையுமே தொய்வில்லாமல் சரளமாகச் செல்லும் விரைவு மின்தொடர் வண்டிபோல் எந்த குலுங்கலும் இல்லாமல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒரு கதையை ஆரம்பித்துவிட்டால் அதை முடிக்கும் வரை நிறுத்த முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம்.
அடுத்து நகைச்சுவை. கதைகளெங்கும் ஆக்சிஜன் கொடுத்து கதைகளுக்கு சுவா(ரஸ்ய)சம் கூட்டுகிறது. அவை வெடித்துச் சிரிக்க வைக்கும் ரகமல்ல. மாறாகப் புன்னகைக்க வைப்பவை.
இவற்றிலுள்ள கதைகள் சில இயல்புக்கு மாறாய் நம்ப முடியாததாய் இருக்கலாம். ஆனால், கதை என்பது நம்பும் தன்மையுடன் இருக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. “கதைக்குக் காலுண்டா? கையுண்டா?” என்ற பழமொழியே உண்டு. எனவே சில கதைகளை லாஜிக் மூளையின் ஸ்விட்சை ஆஃப் செய்துவிட்டுப் படித்தால் கதைகளை முழுமையாக ரசிக்க முடியும்.
இவரது சில கதைகள் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து எழுதலாம். பிரசுரமாவதற்கான அனைத்துத் தகுதிகளும் இவரது கதைகளுக்கு உண்டு என்பதை நான் பரிந்துரைக்கிறேன்.
நடுவில் இவர் சினிமாவில் உதவி இயக்குனர் வாய்ப்புக்காக முயன்றிருப்பதாக அறிகிறேன். பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டுத் திரும்பியிருக்கிறார். ஒருவேளை இவர் தொடர்ந்து முயன்றிருந்தால், கோடம்பாக்கத்தின் கதவுகள் நிச்சயம் திறந்திருக்கும். காரணம், கதைச்சூழலை இவர் விவரிக்கும் விதமும் கதாப்பாத்திரங்களின் உரையாடலும் நம் திரைப்படங்களுக்குப் பொருத்தமானவை. வெல்லும் வல்லமை கொண்டவை.
“கல்கி, தேவன், சாண்டில்யன், சுஜாதா, பிரபஞ்சன், பாலகுமாரன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா செளந்திரராஜன், சுபா, தேவிபாலா, ராஜேந்திர குமார் என்று நிறைய பேரின் எழுத்துகளைப் படித்திருந்தாலும் தான் அதிகம் படித்தது சுஜாதாதான்” என்கிறார் அசோக்ராஜ்.
உண்மைதான். இந்தக் கதைகளைப் படித்தால் சுஜாதா வாத்தியார் இவரை எந்த அளவுக்கு ஆளுமை செய்திருக்கிறார் என்பது உங்களுக்கே புரியும்.
வாழ்த்துகளுடன்,
பெ. கருணாகரன்
(எழுத்தாளர், பத்திரிக்கையாளர்)
நூல்: | நிகழ்தகவு |
பிரிவு : | சிறுகதைகள் |
ஆசிரியர்: | அசோக்ராஜ் |
வெளியீடு: | கோதை பதிப்பகம் |
வெளியான ஆண்டு | 2020 |
பக்கங்கள் : | 144 |
விலை : | ₹ 140 |
நூலாசிரியர் குறித்து:
அசோக்ராஜ்
இயற்பெயர் சிவக்குமார். சென்னையில் பங்கு வர்த்தகம் சார்ந்த நிறுவனமொன்றில் நிதி ஆலோசகராக பணிபுரிகிறார். கல்லூரிக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், குறுங்கதைகள் எழுதி வருகிறார்.
இவரது படைப்புகள், வார இதழ்கள், இணைய இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. நிகழ்தகவு இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. 2021ல் 'மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்' என்ற குறுங்கதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.
கிண்டில் வெர்சனில் 'பதுமை' என்ற நாவல் 2020ல் வெளியாகியிருக்கிறது.