கவிதைகள்நூல் அலமாரி

இருட்டை விரட்டிய அரளியின் மதியம்


விதை என்பது யாதெனில் என்ற கேள்விக்கு.., பிரமிள் அது ஒரு தியானம் என்றார். இன்குலாப்.., அதுவொரு போர் கருவி என்றார். ரமேஷ் பிரேம் அது புனைவுகளின் அரசியல் என்றார். பழமலய் அது ஒரு வாழ்வியல் ஆவணம் என்றார். தேவதச்சனோ அதுவொரு மாற்று மொழிகணிதம் என்றார். பிரம்மராஜனோ கவிதை படிமங்களின் வெளிப்பாடு என்றார்.

இவ்வவளவு தீர்க்கமாய் எனக்கு சொல்ல தெரியாது. எனது உடல் இலக்கியமென்றால் கவிதை நாளமில்லா சுரப்பி.. இலங்கை வழக்கில் அகம் சுரப்பி..! ஆம். வளர்சிதை மாற்றத்தையும் அதுதான் முறைப்படுத்தும், இதயத்தை இயங்க தூண்டுவதும் அதுதான், இனப்பெருக்கத்தை சரி செய்வது அது தான். ஒரு பால் இனத்தை முழுமையாக்குவது அது தான். அது எந்த நாளத்திலிருந்தும் சுரப்பது இல்லை. சுரக்கும்.. ஆனால், மூலம் தெரியாது. கவிதையும் அப்படி தான் என்னை முழுமையாக்குகிறது என்னை நானாக உணர வைக்கிறது.. கவிதை எனக்கு அகம் சுரப்பி.. என்னை போல ஒருவன் கவிதையின் மூலம் முழுமையான மனிதாக என் முன் நிற்கும்போது, அவனை, அந்த கவிஞனைக் கொண்டாடுகிறேன். பிறருக்கு அறிமுகப்படுத்துகிறேன், .ஆவணப்படுத்துகிறேன்.

இந்த முறை என் அகம் சுரப்பி அறிமுகப்படுத்துவது ப.காளிமுத்து..!

என் அன்பு நண்பன் கவிஞர் அம்சப்ரியாவின் அறிமுகம். ஆக சிறந்த கவிஞன் என் நண்பன்! அவர் அறிமுகம் சோடை போகுமா என்ன? தனித்திருக்கும் அரளிகளின் மதியம் நூலை இரவில் வாசிக்க தொடங்கியதும் எனது இரவு புலர தொடங்கியது. இந்த அரளி, விஷம் இல்லை வாழ்வின் உன்னதத்தை காட்டும் அற்புதம்..!

அதில் சில உங்கள் பார்வைக்கு..

சிறுநிலம்/கொஞ்சம்தீனி/பரிவுநிழல்/ பசி தீர்க்க அவகாசம்…. என்று எழுதிவிட்டு அடுத்த வரியில் பேரும் அதிர்ச்சியோடு ஒரு வேடனும் என்று காளிமுத்துவால் பக்கம்97ல் எழுத முடிகிறது. நான்கு அம்சங்களை அளித்து விட்டு பிறகு ஏன் கூடவே வேடனையும் இயற்கை தீர்மானிக்கிறது. அல்லது மனிதன் தீர்மானிக்கிறான் அல்லது பறவையின் புத்தியில் வேடனும் இருக்கிறான் அல்லது
வேடனே இந்த நான்கையும் வேட்டையின் பொருட்டு அமைத்து தருகிறான் என்றெல்லாம் தோன்றியது.

வனத்தில் ஊறும் நாகத்தின் வாழ்க்கை சவாலும் ஆயுசும் வானத்தில் பறக்கும் கருடனால் தீர்மானிக்கப் படிகிறது என்ற சிந்தனையை தான் இந்த கவிதை வரி. வேறொரு வகையில் சொல்கிறது எனலாம். அந்த நாலு வரி நம்மை நாலாபுறமும் சிந்திக்க வைக்கிறது.

பக்கம் 94ல், காதலி ஒரு இலையில் தமது பெயரை எழுதி தருகிறாள். அது அவனுள் மரமாகிறது… ஆம் இலை மரமாகிறது. சாத்யமா இக்கற்பனை? காதலில் எல்லாம் சாத்யம்..! உண்மையில், குட்டிபோடும் இலை என்று ஒன்று உண்டு. அந்த செடியின் இலையை மண்ணில் வைத்து மூடினால் வேர் பிடித்து செடியாகும். இல்லாததை எந்த கவிஞனுமெழுதியதில்லை. அது கற்பனையென்றாலும் இல்லை என்பதாகாது.. அது நடக்க கொஞ்சம் கால தாமதம் ஆகும் அவ்வளவே. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம். அப்போது நேரிடையாக ஒளிபரப்பு செய்யும் அந்த கருவி ஏதும் தமிழகத்தில் இல்லை.. கவிஞன். காளிமுத்தும் அந்த பரம்பரை தானே.. அதான் இப்படி கற்பனைசெய்ய முடிகிறது. ‘அது எக்கிளை காணினும் உதிரவே உதிரா இலைகள்’ என்ற வரியில் லயித்து போனேன்… ‘வாழ்வில் எத்தனை பேர் கடந்து போனாலும் கிளை போல் வாழ்வில் பலர் முளைத்தாலும் அந்த இலைகள் உதிராது’ என்கிறார் கவித்துவமாக.

காதலென்ற சொல்லை பயன்படுத்தாமலேயே காதலை பேசி வாசகனுக்கு காதலை கடத்துவது தான் சிறந்த கவிஞனுக்கு அழகு. காளிமுத்து சிறந்த கவிஞன் தான்.

பக்கம்17 ல் தொட்டி மீன்கள் யாருக்கு சொந்தம் என்ற கவிதையில் நான் என்னை பார்த்தேன்.. 2000 நான் ஒரு கவிதையில் தீபாவளியில் பட்டாசு வெடிக்க பயம்.. எதிர் வீட்டில் பட்டாசு வெடிக்கிறார்கள். நானும் பார்க்கிறேன், நெருப்பு வைத்தவனும் ஓடி வந்து என்னை போல் காதை மூடி பார்க்கிறான். வெடியின் பெரும் சத்தம் .அந்த சத்தம் யாருக்கு சொந்தம்? பட்டாசுவில் தீ வைத்ததை தவிர வேறு என்ன ? என்னை போலவே அவனும் தூரத்தில் ஒதுங்கி அந்த காட்சியை/ அந்த சப்தத்தை கேட்கிறான். தொட்டி மீன் வளர்ப்பவனும் ரசிக்கிறான். பார்வையாளனும் ரசிக்கிறான். மீன் இருவரையும் சமமாக பார்க்கிறது.. இந்த மீன் யாருக்கு சொந்தம் என்று காளிமுத்துவின் கேள்வி..சபாஷ் போடவைத்தது.

பக்கம் 34 ல் நட்சத்திரங்களை சேமித்து வந்து போர்வைக்குள் வைத்து இரவில் அதை யாருக்கும் தெரியாமல் ரசித்துக் கொண்டிருக்கிறான். (காலை விடிந்தது என்று வீட்டில் உள்ளோர் டேய் டைம் ஆச்சி என்று — இது என் யூகம்) யாரோ வெடுக்கென்று போர்வையை இழுக்கிறார்கள்.. இப்போது நான் என் நட்சத்திரங்களை இழந்தேன் என்றால் அது கவிதை. காளிமுத்து அப்படி எழுதாமல் நடசத்திரங்களை எல்லாம் இழந்து வெற்று வானமானேன்… என்று முடித்து அதை ஆக சிறந்த கவிதையாக்கிவிட்டார். தானே வானமாவது தான் கவித்துவம். இப்பொழுது பொழுது விடிந்து விட்டது வானில் நட்சத்திரம் இருக்காது என்ற யதார்த்ததை சேர்த்தே இந்த புனைவில் கட்டுகிறார்.

பக்கம் 35ல் விடிந்து விட்டு என்று வரிசையாக பட்டியல் இடுகிறார் காட்சியை கடைசியில் மருதய்யா இன்னும் எழவில்லை என முடிகிறது கவிதை. .அதிலொரு மெளனம். அந்த மெளனம் தான் வாசிப்பவனிடத்தில் அந்த வீட்டில் மரணம் என்று வாசகனை எழுத வைக்கிறது. ஆயினும் மரணம் பற்றிய கவிதை அது இல்லை எனவும் வாதாடமுடியும். மெளனங்களால் வாசகனை எழுத வைப்பது எழுத்து கலையின் வெளிப்பாடு. அதிலும் ஜெயிக்கிறார் காளிமுத்து.

பக்கம் 42ல் அது வேடன் வீடு தான். எனக்கும் தெரியும். பறவைக்கும் தெரியும். பிறகு ஏன் கீச்சிடுகிறது என்று தான் தெரியவில்லை… என்கிறது கவிதை. அது தன்னை இழக்க தயாராகி விட்டதா? தன் வாரிசு அந்த வேடன் வீட்டிலுள்ளதா? தன் இனம் அங்கு சிக்கி உள்ளதா? அல்லது அது வேடனின் வளர்ப்பு பறவையா? எதுவும் தெரியாது காரணம் பறவையின் பாஷை யாருக்கும் தெரியாது இப்படி வாசகனை யோசிக்க வைக்கும். நேரிடையாக அவனுக்கு புட்டி பால் ஊட்டாத கவிதையே சிறந்த கவிதைக்கான அடையாளம்..

பக்கம்57ல் காகங்கள் பற்றிய புனைவு. பக்கம் 62 ,64 பக்கங்களின் கவிதை குறித்து நிறைய பேசலாம். அப்புறமிது கவிதைக்கான கோனார் உரையாகி விடும்.

கவிஞர் ப. காளிமுத்து எழுதிய இந்த முதல் கவிதை தொகுப்பு வளர்ந்த ஒரு கவிஞனின் அத்தனை அமசங்களையும் (மொழிதலாலும் வெளிப்பாட்டுமுறையிலும்) பெற்று இருக்கிறது. இவர் கவிதை மொழி சிக்கற்றது. வாசகனை நீர் சுழல்போல் தனது மொழி சுழலில் மாட்டி வைத்து தன் திறன் காட்டும் பிற கவிஞர் போல் அல்லாமல் விடாமல் கை பிடித்து கதை சொல்வதை போல அழைத்து செல்வது.. நாம் பார்த்த அதே காட்சி பாடுபொருளை தனது கவிதை கலைடாஸ் கோப்பில் போட்டு புது கோணத்தை புது பரவசத்தை காட்டுகிறார்.

இவரது கவிதையில் இருக்கும் மெளனம் தான் இவரது சிறப்பு. அது வாசகனை புத்திசாலியாக மதித்து அவனின் மூலமாக
தன்னையும் உயர்த்திக்கொள்கிறார். சமீபத்தில் நான் படித்த சிறந்த கவிதை தொகுப்பு இது..

வாழ்க நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்.. எழுத்து ஒரு வரம் அதை பெற்ற தாங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி தான். வாழ்த்துக்கள்!


2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது பெறும் ப.காளிமுத்துவின் “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்”  கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்ற கவிஞர்.அமிர்தம் சூர்யாவின் அணிந்துரை.

நூல் தகவல்:

நூல் : தனித்திருக்கும் அரளிகளின் மதியம்

ஆசிரியர் :  ப.காளிமுத்து

வெளியீடு : இருவாட்சி இலக்கிய துறைமுகம்

வெளியான ஆண்டு :   

பக்கங்கள் :  

விலை : ₹ 100

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *