ன்றாடம் வாசிப்பை வழக்கமாய் கொண்டிருப்பவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் எழுத வந்துவிடுவதுபோல, மஞ்சுநாத் அவர்களும் எழுதவந்துவிட வெளிவந்திருக்கும் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை நடந்த அவரது வாசிப்போடு அவரது தனிப்பட்ட யோக மற்றும் தியான பயிற்சிகள் அவருக்கு சமூகத்தில் நடக்கும், சுற்றி நடக்கும் விஷயங்களை சலனமின்றி உற்று நோக்க உதவியிருக்கிறது அந்தப்பயிற்சியின் தெறிப்புக்கள் இந்த நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. விமர்ச்சையாக விவரிப்பதே விமர்சனம் என்ற ஜெயகாந்தன் வரிகளை நினைவில் கொண்டு இந்த நூல் விமர்சனம் எழுத துணிந்திருக்கிறேன்.

நூலின் முதல் பக்கத்தில் இருக்கும் பாறைக் கிறுக்கலில் இருக்கும் குதிரையின் படம் தெளிவாக அதே நேரம் குழந்தைக் கிறுக்கலாக இருக்கிறது. இதில் உள்ள 12 சிறுகதைகளும் கடினமான பாறைக்களத்தில் மஞ்சுநாத் தீட்டிய கனமான, ஓவியமாகவே அமைந்திருக்கிறது.

‘புனைவுகள் வழி பூரணம் விதைக்கிறேன்’ என தனது குருநாதரின் பாதம் பணிகிறார். குருநாதரின் பாதங்களில் இருக்கும் செப்புக்காப்பு அவரது குருநாதரின் பெயர் கூறப்படாதபோதும் நமக்கு அவரை உணர்த்திவிடுகிறது.

முன்னுரையில் அகநாழிகை பொன்.வாசுதேவன் 83.33 % மதிப்பெண் தந்து இந்த சிறுகதைத் தொகுப்பின் சிறப்பை கூறிவிடுகிறார். முன்னுரையில் ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ துவங்கிய தன் வாசிப்புப் பயணத்தை கூறுவது நிதர்சனம் வாழ்வு கனவுதான். ஆனால் அந்த கனவு உண்மை என்பதால் அந்த கனவினை பகிர்ந்தவைகளே இந்த சிறுகதைத் தொகுப்பு என மஞ்சுநாத் கூறியிருக்கிறார்.

1. நகுநா

உரிக்க உரிக்க வெங்காயத்தின் தோல்பகுதியே வெங்காயம் என அறிவதுபோல் எழுத்தாளன் என்பவனும் ஒரு இனிய காதல் கணவனே என்று புரிய வைத்துவிடுகிறது கதையின் முதல் பத்தி. பெண்களின் மார்பகங்கள் குறித்த பெரும் கவனஈர்ப்பு கொண்ட சந்தோஷ்குமார், அவனது உடன் பயணிக்கும் நண்பன், இவர்கள் கலந்துகொள்ளும் ஒரு கிராமத்து திருவிழா அதன் மூலம் கிடைக்கும் கரகாட்டக்காரி நகுநா வின் தொடர்பு. காமம் எனும் மகரந்தம் ஈர்க்க நெருங்கிச் செல்லும் வண்டான சந்தோஷ்குமார். நகுநாவும் தனக்கான சமூக பாதுகாப்பு பெற அவனை மணக்க முடிவுசெய்கையில் ஆட்சியும், அரசியல் அதிகாரமும் அவர்கள் வாழ்க்கையில் புயலாய் வீசுகிறது. புயலுக்குப் பின் வரும் அமைதியில் சந்தோஷ்குமாரின் யார் என புரிந்துவிடுகிறது. பல கிராமத்துக் கதைகளில் அந்தந்த காலக்கட்டத்து வரலாறு பதிவாகியிருக்கும் இந்தக் கதையில் அவ்விதமே.

2. மரம் சொன்னது

கட்டைவிரல் மோதிரம் அணிந்த ஒருவர் விபத்துக்குள்ளான இடத்தில் இருக்கும் இரு மரங்கள் பரஸ்பரம் பேசிக்கொள்கிறது. அதன் அடியில் நடக்கும் புணர்ச்சியினாலும், போதையானலும், கொலையானாலும் மரம் வெறும் சாட்சியாகவே பதிவு செய்கிறது. தனித்திருக்கும் மரத்திடமும் / மனிதர்களிடமும் சொல்ல பல கதைகள் உண்டு. கேட்க நமக்கு காதுகளும். அவகாசமும் வேண்டும்.

3. தனிமையின் விபத்து

அவசர சிகிச்சைப் பிரிவில் பதட்டமின்றி உங்களால் அமர முடியுமெனில் உங்களாலும் இத்தகைய அனுபவங்களை பெற முடியும், அதனை எழுத்தாக்கும் வித்தை வாசிப்பால் விளையும். அத்தகைய எழுத்து உங்களையும் கதையின் காட்சிப்பின்புலத்தில் சென்று உங்களையும் அமரவைக்கும். நமது சந்தோஷம், நிறைவு போன்றவைகள் என்பது சக மனிதர்களுக்கு செய்யும் மிகச்சிறிய உதவிமூலமும் வரலாம் என உணர்த்திவிடுகிறது கதையின் முடிவு. தனிமைக்கும், வெறுமைக்கும் வேறுபாட்டை விளக்கும் பழனிராஜனின் கதாபாத்திரம், ஆசிரியருக்குள் நிகழும் தத்துவ மோதல்களின் வெளிப்பாடாக தோன்றினாலும், நம்மை கைப்பிடித்து கூட்டிச் செல்லும் வாத்ஸல்யம் அதில் பளிச்சிடுகிறது.

4. பரம சந்தோஷம்

தீபாவளி நெருங்கி வருகிறது டார்கெட் நிச்சயிக்கப்பட்டு மதுவிற்பனை களைக்கட்டும், சிலர் கல்லாகட்டும் விழா நடைபெற இருக்கிறது. அன்றைய காலத்தில் நடந்த குடி மரணங்கள் குறித்த ஆவணம் இது. பண்டிகைகளின் அடிநாதமாக இருக்கும் கொண்டாட்ட மனநிலையை எது சிதைத்தது. மனிதர்களை தனிமைப்படுத்தி, போதை ஏற்றுவதன் கொடுமை காட்டும் பிரச்சார நெடி இதில் உண்டு. 2004 ல் எழுதப்பட்ட கதை என்பதால் குழந்தையின் ஓவியத்தை கொண்டாடும் தந்தையைப்போல் இக்கதையை ரசிக்கலாம்.

5. நிலவு சாட்சி

நிலவுடைமை சமுதாயம் கொண்டுவந்த பல சமூக ஒழுக்கங்களை அதே நிலத்தின் மீதான பேராசை எப்படி சிதைக்கிறது என்பதை காட்டும் இக்கதையில் மனச்சாட்சி என்பதற்கு உருவம் இருக்கா என்று கேட்பவர்களுக்கு , சூரியனும், நிலவும் மனச்சாட்சியின் ஸ்தூல வடிவங்கள் என்று காட்டிவிடுகிறது. காட்சி விவரணைகள் உங்களை கிராமத்திற்குள் கூட்டிச்செல்லும் சிறப்புக் கொண்டவை.

6. இருட்டுக்குள் வெளிச்சம்

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல, தியானம், சுந்தரர் திருவடி தீட்சை, பிட்யூட்ரி சுரப்பி, ஆக்ஞா சக்கரம் என்ற பரந்துப்பட்ட கதை களத்தை சிறுகதைக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். ஆனால் இலக்கின் குறி பிசகியதாகவே உணர்கிறேன். ஒருவேளை இது வாசகரின் சிந்தனைக்கான இடைவெளியாகவும் இருக்கலாம்.

7. சுவானா

மனிதனின் ஆதியிலிருந்து இருந்து வரும் தோழனான நாய்கள். நமக்குத்தரும் இதம், அவைகளின் பிரிவு தரும் துன்பம். அதன் விஸ்வாசம் என ஒரு கதைக்குள் பல தொடர்புடைய கிளைக்கதைகளை இணைத்திருக்கிறார். கதையின் துவக்கத்தில் வீட்டின் கட்டுமானம் நடக்கிறது. நாயும் அறிமுகமாகி, கதையின் இறுதியின் அவர்கள் இல்லத்தின் ஒரு அங்கமாகிறது அதன் சந்ததி. நாயை மையமாக கொண்ட மனிதர்களின் இளகிய மற்றும் இறுகிய மனப் பகுதிகளையும், அதன் பின்புலத்தையும் பதிவு செய்துவிட்டு கதை முடிகிறது.

8. குதிரைக்காரனின் புத்தகம்

காட்சிகளின் பலம் முழுமையாக வெளிப்பட்டிருக்கும் இந்த சிறுகதை இந்த தொகுப்பிற்கு தலைப்பாக ஆனதில் வியப்பில்லை. குளிர் என்பதை உடல் உள்வாங்கும் தருணத்தை உணராமல் வார்த்தையாக்க முடியாதென்றே தோன்றுகிறது. குதிரைகளோடு மனிதன் கொள்ளும் ஸ்னேகம், பெண் என்ற பிரகிருதியோடு மனிதனுக்கு ஏற்படும் தீராத ஈர்ப்பு. குதிரைக்காரர்களுக்குள் இருக்கும் தொழில் போட்டி. குதிரைக்காரனின் கல்வி குறித்த கனவு என்னவாகும் என்ற ஆவலைத் துண்டுகிறது. It is never too late to learn new skills. என்பதை உணர்த்தும் கதை.

9. ருத்ர விந்து

சித்த மருத்துவமனைக்கு சேவை செய்யவரும் ஒரு பெரியவர் மரணித்துவிட அவரை ரசமணிமாலையினைக் கொண்டு உயிர்ப்பித்து விடுகிறார் சிவகுரு எனும் மருந்தாளுநர். இத்தகைய பயிற்சிக்கு காரணம் என்ன? சிவகுருவின் வாழ்க்கையின் பாதிப்பு என்ன? என்று கதை விவரித்தாலும் நாவலாக நீட்டிக்கும் குணாதிசயம் கொண்ட கதை மாந்தர்களைக் கொண்டிருக்கும் கதை.

10. ஊருக்கெல்லாம் ஒரே வானம்

மதசார்பின்மை, நடுநிலைத்தன்மை, சகோதரத்துவம் இவையெல்லாம் இருகையின் ஒசையாக இருக்கவேண்டும். ஒருகை ஓசையாக இருப்பின் உயிர்பலியே ஏற்படும் அழுத்தமாக கூறும் கதைக்களத்தில் எந்த அடையாளமுமின்றி பயணத்திருக்கும் ஆசிரியருக்கு, வாசிப்போர் ஏதேனும் ஒரு முத்திரையை தர வாய்ப்பிருக்கும் கதை அமைப்பு.

11. புகைச்சல்

2003 ல் எழுதப்பட்ட சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் தர்மசங்கடங்களும், சிகரெட் நிறுத்துவதற்கான உறுதியும், அதன் குலைவும் என மிகச் சாதாரண எழுத்துப்பயிற்சியின் ஆரம்ப நிலைக்கதை என்பதால் இதனை இத்தொகுப்பின் திருஷ்டி கழிய சுற்றிப்போடப்பட்ட பரிகார மிளகாயின் புகைச்சலாக கருதலாம்.

12. மூக்கைப் பொத்தாதே

தூய்மை இந்தியா என்பது கொள்கை முடிவாக இருப்பினும் அதனை நடைமுறை படுத்துதலில் உள்ள சிக்கல், அதில் உள்ள லாபிகள், மக்கள் தொழில்நுட்பத்தை உயர்வதற்கு பயன்படுத்துவதைவிட ஒழுக்க மீறலுக்கு பயன்படுத்துவதே அதிகம் என்பதை பகடி செய்கிறது. கட்டுரைக்கான தரவுகளும், களமும் நிறைந்திருக்கும் இக்கதை. நாம் நமது சுயத்தை பொத்தி ஒழுங்காக பொத்திக்கொண்டாலே மூக்கைப் பொத்தும் இம்சை ஏற்படாது என்றும் உணர்த்திவிடுகிறது.
***
முதல் கதை மடியில் படுத்திருக்கும் மனைவியிடம் கதை சொல்வதாக துவங்கி பன்னிரண்டாவது கதை மனைவியின் சிரிப்பலையோடு முடிவடைகிறது. இத்தொகுப்பு மஞ்சுநாத் அவர்களின் நிறைவாழ்வின் முழுமைக்கு நல்லறமாய் அமைந்த அன்பு மனைவி சகுந்தலாவிற்கு அன்பு கணவன் அணிவித்த எழுத்து மாலையாகவே தோன்றுகிறது. அவரது இல்லறம் நல்லறமாய் அமைந்து பல்வேறு பாதைகளில் பயணித்து நல்லனவற்றை எழுத்துக்களாக்க குரு, இறை, இயற்கையை நோக்கி இறைஞ்சுகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
சரஸ்வதி சுவாமிநாதன்


 

நூல் தகவல்:
நூல்: குதிரைகாரனின் புத்தகம்
பிரிவு : சிறுகதைகள்
ஆசிரியர்: மஞ்சுநாத்
வெளியீடு: அகநாழிகை
வெளியான ஆண்டு  அக்டோபர் 2021
 பக்கங்கள் : 168
விலை : ₹ 200