”இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற நண்பர் விஜய் மகேந்திரன் அவர்கள் எழுதிய நூல் தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக என்னுடனேயே பயணம் செய்தது. எனக்கான வேலைகளுக்கு நடுநடுவே கிடைத்த இடைவெளிகளை அர்த்தமுள்ளதாக நிரப்பியது.
ஆம்!… இந்த நூலில் மொத்தம் 31 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ‘இங்கேயும் மனிதர்கள்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பார். ஆனால் அந்த ஒரு கட்டுரை மட்டுமல்ல, என்னை பொறுத்தவரை திரு.விஜய் மகேந்திரனின் இந்த புத்தகத்திற்குள்ளும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுத்தப்பட்டதாகவும் இருக்கலாம்.
பொதுவாகவே மனிதர்கள் சுயநலமிக்கவர்கள், பொய், போட்டி பொறாமை என பல்வேறு தீய எண்ணங்களை வளர்த்து கொண்டு வாழ்கின்றனர் என்ற மனிதர்களை பற்றிய விமர்சனம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து வருகிறது. ஏன், நானே கூட என்னுடைய whatsup-ல் “பொய்யார் எனை தவிர்க” என்று தான் குறிப்பிட்டிருப்பேன். இப்படியாக மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டிருக்கும் சூழலில், தான் சந்தித்த நபர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் கவனித்து அதில் வியந்து அதனை இங்கு பதிவு செய்யும் அளவுக்கான ஒரு பெரும் மெனக்கெடலை செய்து அவர்களை பெருமை படுத்தியிருக்கிறார் என்பது உண்மையில் ஒரு வாசகராக எனக்கு ஒருவித positive energy-யை தந்தது என சொல்லலாம்.
சமூகத்தில் பெரும் பேறு பெற்ற, புகழ் பெற்ற இலக்கியவாதிகள் கூட புதிதாக எழுதுபவர்களுக்கு ஆயிரம் விதிமுறைகளை திணித்து பயமுறுத்தி எழுத விடாமல் பின்னோக்கி தள்ளுவதை “இலக்கியவாதிகளின் குணநலன்கள்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். எனக்கும் கூட இந்த அனுபவங்கள் உள்ளது. ஆனால் திரு. விஜய் மகேந்திரன் அவர்கள் தன்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயங்களை தனது நாட்குறிப்பில் மட்டும் குறித்து வைத்திருந்தால் இந்நேரம் அவருடைய எண்ணங்கள், புதிய சிந்தனைகள் அத்தனையும் அவருடனே முடிந்து போயிருக்க கூடும். ஆனால் அவர் அப்படி செய்யாமல் தனது மனதில் தோன்றிய அத்தனை விஷயங்களையும் ஆராய்ந்து அறிந்து அதன் உண்மை தன்மையை தெரிந்து கொண்டு இங்கு நமக்காக கொடுத்திருக்கிறார். இதை படிக்கும் ஆரம்ப கட்ட எழுத்தாளர்கள் யாராக இருந்தாலும் 100 சதவீதம் தன்னுடைய புதிய படைப்பை எந்த வித அச்சமும் இல்லாமல் எழுத தொடங்கி விடுவார்கள்.
மனிதர்களுடனான அவரது நட்பையும் சரி, அந்த நட்பை நமக்கு அறிமுகப்படுத்தும் போதும் சரி, அவர்கள் பற்றிய நேர்மறை சிந்தனைகளை நமக்குள் கொண்டு வரும் போதும் சரி மிக மிக கவனமாக நேர்த்தியாக புரிய வைத்திருக்கிறார். அதை முதல் கட்டுரையில் வரும் பிறைமதி அவர்கள் மற்றும் நடிகர் சேதுவுடனான நட்பை பற்றி சொல்வதிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.
43 ஆண்டு காலம் தன்னுடைய சினிமா கனவை நினைவாக்க போராடும் ஹரி அவர்களை பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அதில் அவரின் (ஹரியின்) எளிமையும் ஏழ்மையும் விளக்கி சொல்ல தேவையில்லை.. இரு பக்க கட்டுரையிலேயே தெரிந்து விட்டது. இருப்பினும் கூட, அவரை பார்க்கும்போது எனக்கு மிக பொறாமையாக இருந்தது. ஒரு ஆண் என்பதால் தான் தன்னுடைய கனவுக்காக தான் பிறந்த இடத்தை விட்டு, வளர்ந்த இடத்தை விட்டு தனக்காக புது இடம் தேடி வந்து வேறு எதை பற்றியும் பெரிதாய் சிந்திக்காமல் தன்னுடைய கனவுக்காகவே 43 வருடங்கள் வாழ முடிகிறதே.. அதுவும் திருமணம் செய்ய ஒரே நாளில் முடிவு செய்து மேட்ரிமோனியில் ஒரே நாளில் தனக்கேற்ற பெண்ணை தேர்வு செய்து சம்பாதிக்கும் சொற்ப பணத்தில் குடும்பத்தை நடத்தி கொண்டு போக முடிகிறது. இதே போல தன் கனவிற்காக தனக்காக என போராடவாவது எங்கள் பெண்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என எண்ணி கொண்டேன்.
அதே போல தான் தனக்கு தெரிந்த மருத்துவத்தை, சுற்றுப்புற பாதுகாப்பை, மனித நேயத்தை , சில எளிய மனிதர்களை பல இலக்கிய வாதிகளை என அத்தனையும் பதிவு செய்து நம்மை வியக்க வைத்துள்ளார்.
நுரையீரல் பாதிப்பு பற்றியும் அதன் பாதுகாப்பு குறித்தும் அவர் எழுதிய கட்டுரையில் எனக்கும் மூச்சு திணறல் இருப்பதால் பயந்து கொண்டே படித்தேன்.. ஆனாலும் இத்தனை சிகிச்சை முறைகள் உள்ளது என்ற நம்பிக்கை கிடைத்தது.
இளையராஜாவின் இசைக்கு தலையசைத்து கொண்டே கவுண்டமணியின் நகைச்சுவைக்கு சிரிக்க வைக்கிறார். பசிக்கு உணவை தருவதற்கு பதிலாக உணவு செய்ய கற்றும் கொடுக்கிறார்.
தெரிந்து கொள்ள நினைக்கிற விஷங்களையெல்லாம் தெரிந்து கொண்டு அதை வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட விதம் அழகு.
தமிழ் ஸ்டுடியோ அருணின் முயற்சியெல்லாம் முதல் முயற்சியாளர்கள் அனைவருக்குமான விருந்து என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் புத்தகம் விஜய் மகேந்திரன் அவர்களின் மற்ற மூன்று புத்தகங்களையும் வாசிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது.
(சிறு குறிப்பு: 31 கட்டுரைகளில் கிட்டத்தட்ட 45 மனிதர்களை குறிப்பிட்டிருப்பார். ஆனால் பெண்களுடனான நட்பை மட்டும் எதிலும் பதிவு செய்யவில்லை. ஏன் அவர் வியந்த பெண்கள் யாரும் இல்லையா, ஒரு வேளை குறிப்பிடும்படியாக பெரிதாக விஷயம் இல்லையா. அப்படி இல்லையென்றாலும் அதை பற்றிய கருத்துக்களையாவது அடுத்த புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து)
மற்றபடி நான் நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன். நிறைய மனிதர்களை கண்டு வியந்தேன், நீண்ட நாட்கள் என் உணர்வுகளோடு உறவாடும் புத்தகமாக இங்கேயும் மனிதர்கள் இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
இந்த நூலை எழுதிய நண்பர் விஜய் மகேந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் அன்பும் தெரிவித்து கொள்கிறேன்.
https://vimarsanam.in/product/ingeyum-manithargal-irukkiraargal/
நூல் : இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்
வகை : கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர் : விஜய் மகேந்திரன்
வெளியீடு : கடல் பதிப்பகம்
வெளியான ஆண்டு: 2021
பக்கங்கள் : 124
விலை: ₹ 160
நூலாசிரியர் குறித்து:
விஜய் மகேந்திரன்
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ''இருள் விலகும் கதைகள்'' என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ''நகரத்திற்கு வெளியே'' இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ''நகரத்திற்கு வெளியே'' பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ''படி''அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ''ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ''புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ''சாமானிய மனிதனின் எதிர்குரல்'' இவரது நாவல் ''ஊடுருவல்''ஆகியனவும் வெளிவந்துள்ளது.
இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ''அசோகமித்திரன் படைப்பூக்க விருது ''கொடுத்துள்ளது. கடல் பதிப்பகத்தை நிறுவி நூல்களை பதிப்பித்து வருகிறார்
கவிதா ராஜமுனீஸ், சுவடுகள் ஆர்கனிசேஷன் என்னும் தொண்டு நிறுவனம் மூலம் சமூகத்திற்கான பணிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் மதுரை மாநகர பொறுப்பாளராக உள்ளார்.
“அவளும் அழகி தான்” என்னும் கவிதை தொகுப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து சமூகத்தில் பெண்களுக்கான நிலை குறித்து பேசி வருவதாகவும் தெரிவிக்கிறார்.