முபீன் சாதிகாவின் ”நூறு புராணங்களின் வாசல்” நூலுக்கு எழுத்தாளர் வாஸந்தி எழுதிய முன்னுரை.


முபீன் சாதிகா ஓர் அபூர்வமான எழுத்தாளர். அபூர்வம் என்பதற்குக் காரணம்-வழமையான எழுத்துகளிலிருந்து மாறுபட்டு பளிச்சிடும் எழுத்து. ஒரே சமயத்தில் பிரமிப்பூட்டும், திகைப்பூட்டும், புரிதலுக்கு அடங்காத வெளியிலிருந்து ஒலிக்கும் எழுத்து. சில ஆண்டுகளுக்கு முன் அவருடைய கவிதைத் தொகுப்பை வாசித்த அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. மனத்தை வேறு தளத்திற்கு அழைத்துச் சென்றத் தொகுப்பு. அதை நவீனத்துவம்  பின் நவீனத்துவம் என்று வகைப்படுத்த முடியாத நடை. ஏதோ ஓர் அமானுஷ்யமான உணர்வோடு, பல தரிசனங்களக் கண்ட பரவசத்தில் எழுதியவைப் போல-எந்தக் காலத்திலும் ஒட்டாத வகையில் சங்க கால இலக்கியச் சுதந்திரத்துடன் எழுதப்பட்டவைப் போலத் தொனித்தன. கற்பனையின் அழகும் ஆன்மீகப் பார்வையும் பிரமிப்பூட்டுவதாக இருந்தன.

இப்போது 100 குறுங்கதைகள் எழுதித் தொகுத்திருக்கிறார். இக்கதைகளும் எந்தக் காலகட்டத்திலும் வகைப்படுத்த முடியாதவை. மீகற்பனை (fantasy) கதைகள். அறிவியல் புனைவுக் கதைகள். முபீன் சாதிகா ஓர் ஓவியரும் கூட. இந்தக் கதைகள் கூட அவரது மனதில் ஓவியங்களாகத் தோன்றி எண்ணச் சிதறல்களாக வெளிப்படுபவை என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படித்தான் மாயாஜால எதார்த்தம் (magical realism) தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. Alice in Wonderland, Jack and the Beanstalk ஆகிய ஆங்கில சிறுவர் இலக்கிய கற்பிதங்கள் போல இந்தக் கதைகளிலும் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் சஞ்சரிக்கலாம். வேற்று கிரகங்களுக்குச் சுலபமாகப் பயணிக்கலாம். வேற்றுக்கிரகவாசிகள், நம்மிலிருந்து வித்தியாசமானவர்கள் இல்லை. கோபதாபம், பொறாமை, வன்மம், எல்லாம் அவர்களுக்கும் உண்டு. பாம்புகள், மயில்கள், மைனாக்கள் எல்லாம் நம்முடன் உரையாடும். கனவு காண்போம். கனவில் முருகன் வருவார். நாம் வேண்டுவதைக் கொடுப்பார். மனிதர்கள் மிருகங்களாக, பறவைகளாக மாறுவார்கள். காஃப்காவின் மெட்டாமார்ஃபஸிஸ் (உருமாற்றம்) போல. உலகம் அமானுஷ்யமானதாக நம் திட்டங்கள் எல்லாம் நம் வசத்தில் இல்லாமல் நம் மனம் நினைப்பதை செய்யமுடியாமல் நாம் எப்பொழுதும் நம்மை மீறின ஒரு சக்தியை எதிர்க்கும் போக்கும், எதிர்க்க முடியாமல் வலுவிழந்து நிற்பதுமான ஒரு தோற்றத்தைப் பல கதைகள் எழுப்புகின்றன.

ப்ராகில் பிறந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஜெர்மன் மொழியில் எழுதிய உருமாற்றம் என்ற கதையின் கதாநாயகன் கிரிகோர் ஒரு குறுங்கதையில் வருகிறான். அமானுஷ்யம் கலந்த உலகம் அவர் சிருஷ்டிப்பது. சாதிகாவுடைய உலகம் அத்தகையது. காஃப்கா அன்றைய அதிகார வர்க்கத்தை நையாண்டி செய்தார். முபீன் சாதிகாவின் கதைகளின் அடி ஆழத்தில் நையாண்டி உண்டு. ஆனால் அரசியல் இல்லை. அவருக்குச் சமகால பூமியிலிருந்து விலகி வேற்றுக்கிரக சஞ்சாரத்தில் இருக்கும் நாட்டம் ஒரு Existential crisis-ன் அடையாளமா? எனக்குத் தெரியாது. அதை விளக்குவது தேவையற்றது.

இந்தக் கதைகள் அழகியச் சித்திரங்கள். நம்மை ஓர் அதிசய உலகுக்கு, நிஜமும் அதிசயமும் உள்ள உலகுக்கு அழைத்துச் செல்பவை. அறிவியல் தத்துவத்தையும் ஒரு குழந்தையின் ஆர்வப் பார்வையையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து நம்மைக் கிரகிக்கவைப்பவை. பின்நவீனத்துவ சர்ரியலிச ஓவியங்களை விளக்கப் போவது எத்தகைய அபத்தமோ அப்படி இந்தக் குறுங்கதைகளை விளக்குவதும் தேவையற்றது.

ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி அவருடைய புகழ் பெற்ற நாவலான ’‘Kafka on the Shore” என்ற நாவலில் எப்படி மனித வர்க்கம் ஏதாவது ஒரு சுழலில் சிக்குகிறது என்று சொல்கிறார். அந்தச் சுழல் மனிதனாலேயே உருவாக்கவும்படுகிறது என்பதையும் விளக்குகிறார். அப்படித்தான் இந்தக் கதைகள் நம்மைப் பலச் சுழல்களில் சிக்கவைக்கின்றன.

ஒவ்வொன்றையும் படிக்கும் போது நமக்கு ஏற்படும் தாக்கம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. முபீன் சாதிகாவின் திறமையும், சொல்வீச்சும், பார்வையும் அதன் நேர்மையும் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் கொடை. இந்தக் கதைகளை வாசிக்கும் அனுபவத்தை எனக்கு அளித்த முபீன் சாதிகாவுக்கு எனது நன்றிகள். அவரது பணி தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துகள்.!


வாஸந்தி

 

நூல் தகவல்:

நூல் : நூறு புராணங்களின் வாசல்

வகை :  குறுங்கதைகள்

ஆசிரியர் : முபீன் சாதிகா

வெளியீடு :   நன்னூல் பதிப்பகம்

வெளியான ஆண்டு:  டிசம்பர் – 2021

பக்கங்கள் :  128

விலை:  ₹  130

நூலைப் பெற :  Vimarsanam Web – Online Book Store

 

நூறு புராணங்களின் வாசல்

 

 

எழுதியவர்:

2 thoughts on “நூறு புராணங்களின் வாசல்

  1. முபீன் சாதிகாவின் ”நூறு புராணங்களின் வாசல்” நூலுக்கு எழுத்தாளர் வாஸந்தி எழுதிய முன்னுரை. – அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் Mubeen Sadhika

  2. புதிரான குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு இது. இரவில் என் மகளுக்கு சொல்வதற்கு புதுமையான கதைகளைத் தந்த தோழருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். வாஸந்தி அம்மாவின் முன்னுரை தொகுப்பிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. விமர்சனம் ஊடகத்திற்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *