விழித்திருக்கும்போது உறங்குவதும் உறங்கும்போது விழித்திருப்பதும் மனித உள்ளத்தின் முரண். இந்த முரண்பாட்டு வெளியில் கற்பனைப் பறவைகள் சொற்களை அடைகாத்துப் பொரிக்கும் குஞ்சுகள் கவிதைகள் ….இருக்கட்டும்

பெண் என்பவள் பறவையா? மரமா? மரக்கிளைக் கூடுகளை அடையும் பறவையா?  வானத்தில் சிறகடித்துப் பறந்தாலும் மரம் என்னும் மரபுக்கூடடைய வேண்டுமோ?

பறவைகளுக்குக் கூடுகள் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை ஆண் பெண் குஞ்சு அத்தனையும் தனித்தனியாக சிறகுகள் முளைத்து விட்டால் பெற்றோர் பறவைகளின் கட்டுப்பாடும் கண்டிப்பும் குஞ்சுகளுக்கு விதிப்பது இல்லை.

இப்படியான பெண் பறவைகளின் மரமாகச் சமுதாயமும் வீடும்  இருக்கும் நிலையே அறிவார்ந்தது.

மதுரா கவிதைகள் இத்தகைய கனவைக் காண வைக்கின்றன.  கனவு மெய்ப்படும் என்று நம்பிக்கையை விதைக்கின்றன.

எத்தனை தடுப்பணைகள் கட்டினாலும் அத்தனை தடைகளையும் தகர்த்து பாயும் வெள்ளமெனப் பெண்கள் மரபுகளைத் தகர்த்து வருகின்றனர் குடும்பம் உண்ண உண்டு,உடுத்த உடுத்தி, சிரிக்கச் சிரித்து உள்ளே அழுது வெளியே புன்னகைத்து காலில் சக்கரம் கட்டி இயந்திரமாய் இயங்கி இதுவே பிறவிப்பயன் தாண்ட முடியாத தாண்டக்கூடாத எல்லை என்று வாழும் பெண்கள் இன்னமும் இன்றும் உண்டு

இந்த மந்தையிலிருந்தும் மேய்ப்பனிடமிருந்தும்  தப்பிய ஆடுகள் இருப்பு உணர்ந்து வருவது விடியலின் விடியல் ஆகும்

கடித்த ஆப்பிள் ஆதாம்-ஏவாள் இன்னும் அன்றைய ஆணுடைமைச் சமுதாயத்தின் கற்பனைகளைக் கட்டுடைத்துக் கண் விழித்துள்ளனர். முகமூடிகள் (இன்று கட்டாயம்) உலவும் உலகில் எங்கு தேவையோ அங்கே அணிந்து மரபு எனும் அடிமை நோய் நுண்மியிலிருந்து காத்துக் கொள்கின்றனர் . எதற்கும் எப்போதும் இடமும் வலமுமாக தலைகாட்டாது தம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்

ஆண்டாண்டு காலமாகத் தப்பும் தவறுமாக எழுதப்பட்டு வரும் சாதி ஒற்றுப் பிழைகளும் சமயம் மொழிப் பிழைகள் இலக்கணப் பிழைகள் நிறைந்த விதிகள் அடங்கிய சட்டங்கள் இற்றுப் போய்விட்டனர் அவற்றை பழுதுபார்க்கவோ நீக்கவோ முடியாது அரசியல் சாதி சமயப் பெண் பிழைகள் அற்ற புதிய விதிகள் அடங்கிய புது உலகைப் படைப்பதே உரிய வழி என்பதைக் கவிதைகள் சொல்லியவற்றால் சொல்லாதவற்றை உணர்த்தி வருகின்றன.

போனால் போகட்டும் கல்வியை வேண்டுமானால் கற்றுக்கொள் உன் கனவுகளுக்கு இடம் இல்லை எனக் கூறும் சாதி வல்லாண்மை அரசுகளும் சாணக்கிய நரிகளும் துரோணர்களும் சூழ்ந்த சமுதாயத்தில் நம்   கட்டை விரல்களைக் கொடுத்தாலும் பயனில்லை என்பதை ஏகலைவன்கள் புரிந்து தெளிந்து கொண்டனர்.

துரோணர் களையும் சகுனிகளையும் துரியோதனன் துச்சாதனன்களையும் விரட்டுவது இப்போதைய தேவை. அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைக் கவிதைகள் உறுதி செய்கின்றன.கவிதைச் சொற்களில் பொருளில் இதைக் காண முடிகிறது

மலைகளைப் பிளந்து கோள்களைக் கடந்துப் பெருவெளியில் சிதறும் அணுத்துகள்களை ஒத்தது கவிதையின் ஆற்றல். மண்டிக்கிடக்கும் மடமை களையவும் கெட்டி தட்டிப் போன கயமைகளையும் கவிதையால் தான் உடைத்தெறிய முடியும் என்பதைக் கவிதைகள் அரண் செய்கின்றன.

இரு மொழிக் கவிதைகளின் மூலம் எது மொழிபெயர்ப்பு எனப் பிரித்துக் காண இயலாத வண்ணம் நூலில் மொழியாக்கச் சிறப்பு உள்ளது அச்சுப் பிழைகளும் குறைகளும் இல்லாதது மற்றொரு சிறப்பு

கட்டுகளை உடைத்துக் கட்டின்றிப் பறக்கும் கவிதைப் பறவைகள் தங்கும் ஆலமரம் போல் விழுதுகள் ஊன்றிச் செழித்திடச் செந்தமிழ் இனிய வாழ்த்துக்கள்!!  பெண் சிறந்தால் எல்லாமும் சிறக்கும் .!

முனைவர் நா நளினிதேவி

 (தமிழ்ப் பேராசிரியர் – திறனாய்வாளர்)

நூல் தகவல்:

நூல் : பெண் பறவைகளின் மரம் | Tree of Female Birds

பிரிவு:  நவீனக் கவிதைகள்

ஆசிரியர் : மதுரா

           மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்தில்: N.srivatsa

வெளியீடு : படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   2020

விலை: ₹ 100