வாழ்வை நேசிக்கும் யாதொரு மனிதனும் தன் உள்ளத்தில் வாழ்வைப் பற்றியும், வாழ்வின் பல்வேறு நிகழ்வுகள் பற்றியும் வாழ்வில் தான் சந்தித்த பல்வேறு மனிதர்கள் பற்றியும் பல்வேறு கருதுக்களை பல்வேறு தளங்களில் தங்கள் எண்ணங்களில் பதிவானவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்வது இயல்பு.

வெகுசிலரே, அந்தப் பதிவுகளை வாழ்வின் மீதான சுவையைக் கூட்டக் கூடிய வகையில் ஏட்டில் பதித்து பிறருக்கும் வழங்குகின்றனர்.

பொதுவாகவே மனிதர்களுக்கு உணவு,உடை,பழக்கவழக்கங்களில் பல்வேறு விதமான சுவைகளை அனுபவிக்க ஆர்வம் இருக்கும்.எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான விஜய் மகேந்திரன் இலக்கியத்திலும் திரைத்துறையிலும் தான் பார்த்தறிந்த ஆளுமைகளின் தனிப்பட்ட சில அனுபவங்களை தன்ரசனைக்கேற்ற வகையில்”இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்” என்ற நூலின் வழியாக வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.

பிறைமதி, சேது, உதவி இயக்குநர் ஹரி, பாடலாசிரியர் பழனி பாரதி போன்றோரின் அறிமுகமும் ,அவர்களுடனான நட்பும் , அவர்களின் இலக்கிய வடிவங்களில் தான் ஈர்க்கப்பட்ட விதமும் ஒரு எழுத்தாளனாக தன்னை பாதித்த விஷயங்களும் என தனது அனுபவப் பகிர்வுகளாக கட்டுரைகளின் கனம் கூடுகிறது.

விஜய் மகேந்திரன் அடிப்படையில் ஒரு இயன்முறை சிகிச்சையாளராக இருப்பதால் நூலின் இடையே மருத்துவம் சார்ந்த குறிப்புகள நிறைய இடம் பெறுகின்றன.

சென்னையில் மூடப்பட்ட திரையரங்குகளைப் பற்றிக் கூறும்போது காலத்தின் மாற்றம் சினிமா உலகையும் எந்த அளவு புரட்டிப்போடுகிறது என்பதையும் அறியமுடிகிறது.

பேசும் சினிமா வந்ததிலிருந்தே சென்னையை சொர்க்கபுரியாக மாற்றிய பல திரையரங்குகள் காலப்போக்கில் மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியதாலும், வேறு பல காரணங்களாலும் மூடப்பட்டு வணிக வளாகங்களாக மாறிய திரை அரங்குகளின் பட்டியல்கள் அன்றைய சென்னையையும். அக்கால மக்களின் சினிமா ரசனையையும் நினைவுபடுத்துகின்றன.

தொண்ணூறுகளில் ஹீரோக்களே கவுண்டமணியிடம் கால்சீட் கேட்டு வாங்கிவரச் சொல்வதும், சிறிய பட்ஜெட் படமென்றாலும் கவுண்டமணி இருந்தால் விற்றுவிடும் என்ற அளவிற்கு கவுண்டமணி—செந்தில் கூட்டணியோடு நகைச்சுவைக்காக ஓடிய படங்கள் குறித்தும் அவரது புகழ் மிக்க வசனங்களுடன் அள்ளித் தெளித்து இருக்கிறார்.

இப்படி இலக்கியத்தோடு சினிமாவின் உச்சக்கட்ட நகைச்சுவைகளை அள்ளிவழங்கும் திரைப்பட யதார்த்தங்கள் நம் நினைவுக்குள் ஒரு சுகராகத்தை எழுப்புகிறது.

எண்பதுகளில் சினிமா ரசனை என்பது அன்றைய இளைஞர்களை சினிமாவோடு கட்டிப்போட்டு வைத்திருக்கும் இளையராஜாவின் இசையில் வெளிவரும் படங்கள் எந்த அளவிற்கு படங்களின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தது என்பதை இசைஞானி இளையராஜா கட்டுரையில் வாசிப்பது இசை ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து.

திரைத்துறையிலும், இலக்கியத்திலும் தான் பெற்ற அனுபவங்களை மட்டுமல்லாமல் தான் சந்தித்த ஆளுமைகளின் நிறம்,சுவை,திடம் என முக்குணத்தோடும் தனது கட்டுரைகளை அமைத்திருப்பதும் பல்சுவைகள் நிரம்பிய பதார்த்தம் போல் தனது மொழியை வாசகர்களுக்கு நெருக்கமாக ஆக்கியிருப்பதும் இவரது எழுத்தின் தனித் தன்மைக்குச் சான்று.

ஒரு சாமானியனையும் வாசகராக மேலுயர்த்தும் என்பதுதான் இந்த கட்டுரைகளின் பலமும் நோக்கமும் ஆகும்.


–  மஞ்சுளா

விமர்சனம் இணையதளத்தில் இந்நூலைப் பெற
நூல் தகவல்:

நூல் :  இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள்

வகை : கட்டுரைத் தொகுப்பு

ஆசிரியர் : விஜய் மகேந்திரன்

வெளியீடு :  கடல் பதிப்பகம்

வெளியான ஆண்டு: 2021

பக்கங்கள் :  124

விலை:  ₹ 160

நூலாசிரியர் குறித்து:

விஜய் மகேந்திரன்

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ''இருள் விலகும் கதைகள்'' என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ''நகரத்திற்கு வெளியே'' இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ''நகரத்திற்கு வெளியே'' பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ''படி''அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ''ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ''புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ''சாமானிய மனிதனின் எதிர்குரல்'' இவரது நாவல் ''ஊடுருவல்''ஆகியனவும் வெளிவந்துள்ளது.

இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ''அசோகமித்திரன் படைப்பூக்க விருது ''கொடுத்துள்ளது.  கடல் பதிப்பகத்தை  நிறுவி  நூல்களை பதிப்பித்து வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *