எண்ணத்தின் அலைகள் வற்றாயிருப்பு. ஆக்கத்திற்கும் அழிவிற்கும் அதுவே மூலம். அடையாளப்படுத்திக்கொண்ட உயிர்களிடமும் பொருட்களிடமும் முடிவில்லாத தொலைவில், கடல் கடந்திருந்தாலும் மனிதன் தனது எண்ண அலைகளால் அவற்றுடன் தொடர்புகொள்ள முடியும். மறைமலையடிகள் இதனை ‘தொலைவில் உணர்தல் ‘ என்கிறார். தற்போது நவீன அறிவியல் மூலம் காற்றின் அலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
நீலக்கடல் ஆழமான நுட்பங்களைப் பேசுகிறது. இவை வாழ்விற்கு அப்பாற்பட்டவை அல்ல. ஒருவிதத்தில் அதுவும் நமது வாழ்வின் அறிவியல். பந்தங்கள் அறுபடாத இழைகளாக நீள்கிறது, ஒன்றல்ல இரண்டல்ல ஆறு நூற்றாண்டுகள் வரை அதன் நீட்சி தொடர்ந்து வருகிறது.
தாந்திரீக பூஜை என்பது காட்டாற்று வெள்ளம். புரிந்தவனுக்கு உற்சாகம். புரியாதவனுக்கு முழு மூடம். விமர்சனம் என்பது விமர்சிக்கப்படுவதின் தன்மையெனக் கொள்வது பிழை. விமர்சகனின் சொரூபம் படைப்பின் பிரதிபலிப்பாகக் கசிகிறது. அவர்(ன்) தரம் எத்தகையது என்பதின் பொருட்டே ஒருமை பன்மையின் விளிப்பைப் பொருத்திக் கொள்கிறது.
மூன்று பிறவிகளாக ஒரே பெண்ணினை தொடர்வது வரமல்ல. சாபம்… விமோசனம் கிடைத்ததா? என்கிற கேள்வி ஒவ்வொரு அத்தியாயத்தை முடித்ததும் நம்மைத் தொடர்ந்து பதில் தேடி வாசிக்கச் செய்கிறது.
14-ம் நூற்றாண்டில் – பார்த்திபேந்திரன், 18-ம் நூற்றாண்டில் – பெர்னார் குளோதன், 20 -ம் நூற்றாண்டில் – பெர்னார் போந்தேன் இவன(ர்கள)து பூர்வஜென்ம வாசனையை முடிந்து வைத்திருக்கும் பெண் – தெய்வானை/தேவயாணி. இவர்களின் விட்டகுறை தொட்டகுறை முடிவற்றதாகவே நீள்வதற்கு சொக்சேன் பிறவிகள் தோறும் தடையேற்படுத்துகிறான். தடைகளை முறியடிக்கப் பேசும் பெருமாள் – மாறன் – வேலூ என முப்பிறவியிலும் உடன் வரும் தோழர்கள் நாயகனுக்கு உதவுகிறார்கள்.
65 சதவீதக் கதைகள் பதினெட்டாம் நூற்றாண்டில் மையம் கொள்கிறது. இது புதுச்சேரி வரலாற்றின் முக்கியமானக் காலகட்டம். பிரெஞ்சுக்காரர்களின் வசமிருந்த புதுச்சேரியும் அதன் குடிகளும் எதேச்சதிகாரத்தால் சீரழிந்த கதைகளைப் பிரபஞ்சன் பதிவு செய்திருக்கிறார். அவர் கூறுவது போல் “ஆனந்தரெங்க பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு ஆயிரம் நாவல்களைப் படைக்கலாம்… படைக்க வேண்டும்.” என்பார். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது ரெங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகளைப் புரட்டியவர்கள் அறிவார்கள்.
நீலக்கடல் புதுச்சேரியை மட்டும் ஜீவனாகப் பார்க்கவில்லை. கடல் கடந்து வியாபித்திருக்கும் அதன் தொப்புள் கொடியிலிருந்து கிளைவிடும் புலம்பெயர்ந்த (புதுச்சேரி) மக்களின் வரலாற்றின் ஜீவிதத்தைக் கட்டமைக்கிறது. பிறந்த நிலம் விட்டு நகர்ந்தவர்களின் துயரங்களைக் கூறும் படைப்புகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் ஆழமான புரிதலுக்கு வித்திடும் அவர்கள் குறித்த அடிப்படை வரலாற்றுத் தரவுகள் குறைவாகவே உள்ளன. அல்லது ஆராய்ந்தறியப்படாமலேயே முடங்கியிருக்க வேண்டும். நீலக்கடல் சில தெளிவுகளைத் தருவதுடன் சிக்கலைக்காட்டும் பயணத்தின் சிக்கல் இல்லாத நகர்வாகவும் இருக்கிறது.
17-ம் நூற்றாண்டில் புதுச்சேரி தமிழர்கள் எப்பொழுது மொரீஷியஸ் தீவுக்கு வந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் இல்லை என்றாலும், கிபி.1686 ஆம் ஆண்டில் பிரெஞ்சு தீவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அங்கிருந்த 269 நபர்களில் இந்தியக் கறுப்பர்களும் அடங்குவர் என்கிறார் ஆசிரியர். இதன் மூலம் அங்குத் தமிழர்கள் இருந்ததை அறிவதுடன் 1727-ல் பிரெஞ்சு தீவின் கவர்னராக பொறுப்பேற்ற தூய்மா 1828 ல் புதுச்சேரி சென்றிருந்தபோது அங்கிருந்த 95 கொத்தனார்களையும் சிறுவர் சிறுமிகளையும் அழைத்து வந்ததற்கான ஆதாரங்களை நிறுவுகிறார். இந்தியர்களிடம் அவர்கள் எதிர்பார்த்தது குறைந்த ஊதியத்தில் நிறைந்த உழைப்பு. ஊதியமாக மக்காச்சோளம் மரவள்ளிக்கிழங்கு மாவு தரப்பட்டன. பணியாதவர்களுக்கு பிரம்படிகளும் எதிர்ப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் தரப்பட்டன.
தமிழ் – பிரெஞ்சு – ஆப்பிரிக்கா – கிறெயெல் எனப் பல்வகை மொழி பேசும் சமூகத்தின் மத்தியில் நூற்றாண்டுகளைச் சுமந்து கொண்டு பயணிக்கும் கதைநடை குழப்பமின்றி தெளிவாகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் செல்கிறது.
வரலாற்றுத் தரவுகளைச் சூத்திரமாகக் கொண்டு புனையப்படும் நாவல்களில் கதைகள் என்பவை அதில் தொடுக்கப்படும் வண்ண மலர்கள். வண்ண மலர்களுக்கு வர்ணனைகள் மூலம் கூடுதல் நிறமேற்றுவது காவியத்தன்மையை புகுத்திவிடுகிறது. வரலாற்று நாவல்களில் புனையப்படும் காவியத்தன்மை தரவுகளை பின்னுக்கு நகர்த்திவிடும். சில அத்தியாயங்களில் விவரிக்கப்படும் வர்ணனைகள் ஜனரஞ்சக திகட்டலைத் தருகிறது.
பிரெஞ்சு காலனி தீவுகளில் சாதியில்லை. எசமான், பண்ணையாளென்று பாகுபாடு இல்லை. கெளரவத்துடன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார்கள் என்பது நடைமுறை சாத்தியமாக்கப்படாத கனவு. பிரெஞ்சு அதிகாரத்தனம் ஒப்பந்த வழியாகச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் மறைமுக ஆட்கடத்தலிலும், கொத்தடிமை, பாலியல் வல்லுறவு, அங்கங்களைச் சிதைத்தல் போன்றவைகளை சர்வ சாதாரணமாக்கியது. மதத்திணிப்பு தாண்டி அதன் அதிகாரத்தின் உச்சபட்ச எல்லையாக மனித இதயத்தையும் ஈரலையும் வேகவைத்து உண்ணும் இராட்சசம் என்பது அதிர்ச்சியூட்டுகிறது.
14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியாரின் (கந்தபுராணம் இயற்றியவர்) மகளாக வரும் தேவயானி, 18 – நூற்றாண்டில் திருச்சினாபள்ளி அரசுரிமை வாரிசாக விசய ரங்க சொக்கநாத நாயகரின் மகளாக அவதாரம் எடுக்கிறாள். அரசியல் குழப்பங்களால் மறைந்து வாழும் நிலையில் தனது பூர்வஜென்ம காதலனைக் கைப்பிடிக்க முடியாமல் அல்லல் படுகிறாள்.
பெர்னார் தனது முப்பிறவியின் வாசத்தை நுகர்ந்துவிட மூன்று நூற்றாண்டுகளிலும் வலம் வருகிறான். 14 மற்றும் 18 -ம் நூற்றாண்டுகளில் மட்டுமே தெய்வானை/தேவயானி பாத்திரம் வலம் வருகிறது. 20-நூற்றாண்டில் அவள் அருவமாகிறாள்… மர்ம முடிச்சுகளின் கட்டவிழ்ப்பு நோக்கிய பயணமாக இருபதாம் நூற்றாண்டு களம் விரிவடைகிறது.
நூற்றாண்டின் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும் உண்மையான தரவுகள் மற்றும் ஆதாரங்களில் இயைந்தோடுகிறது, நாவலுக்கு உதவிய 24 புத்தகங்களின் பட்டியலும் இணைப்பில் தரப்பட்டுள்ளது. ஆகையால் இந்நாவல் அதற்கேயுரிய உழைப்பை ஆசிரியரிடம் கோரியுள்ளது. எழுத்தாளரின் மொழிவளத்திறன் மூன்று நூற்றாண்டுகளையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. இது பாராட்டவும் கவனிக்கவும் வேண்டிய அம்சம். 2005 -ல் வெளிவந்த நீலக்கடல் தற்போது ( 2021) மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளிவந்துள்ளது.
ஒரு புத்தகம் தொலைவில் உணர்தலை நிகழ்த்தும்.
நூல் : நீலக்கடல் ஆசிரியர் : நாகரத்தினம் கிருஷ்ணா வெளியீடு : பரிசல் (முதல் பதிப்பு : சந்தியா பதிப்பகம்) வெளியான ஆண்டு : 2022 பக்கங்கள் : 478 விலை : ₹ 490 தொடர்புக்கு : 9382853646
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மஞ்சுநாத்[1983] . தற்போது புதுச்சேரி பாகூர் பகுதியில் வசித்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். மாறுபட்ட எழுத்தாக்கமும் ஆழமான விமர்சகத் திறனும் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், பயணங்கள், உணவு மற்றும் நலவாழ்வு தொடர்பான கட்டுரைகள் சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
தற்போது புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது குதிரைக்காரனின் புத்தகம் [சிறுகதைத் தொகுப்பு], டால்ஸ்டாயின் மூன்று கண்கள் [கட்டுரை தொகுப்பு] – அகநாழிகை பதிப்பகம் புத்தகமாக வெளியீட்டுள்ளது.