வாழ்க்கை என்பது கொண்டாட்டம். எனினும் பலருக்கு பெருந்துன்பமாகவே கழிகிறது. இடர்கள் பொறிகளாகின்றன. மிகவும் புகழ்பெற்ற இலக்கியங்கள் பெரும்பாலும் துன்பங்களையே பிரதிபலிக்கின்றன. துன்ப நிழல் கவிழாத நாவல்கள் பத்து சதவீதத்துக்கும் குறைவு. குமரித்துறைவி ஆனந்தத்தின் வற்றாயிருப்பு.

பிறப்பின் போதும் இறப்பின் போதும் நம்மிடம் இருப்பது இல்லாதது மட்டுமே. பணமில்லாது சந்தைக்குள் நுழைபவனும் வெறுமையோடு திரும்புவதில்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு மட்டத்திலும் எந்நிலையில் இருந்தாலும் அவர்களுக்கே உரிய விதவிதமான துன்பங்களை திகழ்சக்கரமாக சுமந்தவாறு திரிவதில் மனிதர்களுக்கு நிகர் எவ்யுயிரும்மன்று. அழுது வடிவதற்கு மட்டுமா இந்த ஜென்மம்… சந்தையின் கொண்டாட்டத்தை அள்ளிப்பருகி வெறுமையின் மலர்ச்சியுடன் வெளிவருவதற்கு துணை புரியும் இத்தகைய நாவல்கள் நிறைய எழுதப்பட வேண்டும். குமரித்துறைவியை வரவேற்கிறேன்.

நமது கலாச்சாரத்தில் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம். அதன் பொருட்டே திருவிழாக்கள். லெளகீக காரணங்கள் பொருட்டு மட்டும் அவை கட்டமைக்கப்படவில்லை. நமது தொன்மவியல் தெய்வீகத்துடன் பிணைக்கப்பட்டது. அதுவே அடிக்கல்லாகவும் அமைக்கப்பட்டது, ஆனந்தம் வளந்தோங்கிய கோபுரத்தின் மீது பொற்கலசமாக திகழ்ந்தது.

சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைக்கருவியாக இருந்த ஹரிஹரர், புக்கர் தங்கள் தாய் மதம் திரும்புவதற்காக மட்டுமல்லாது அவர்களால் ஒரு மகா சாம்ராஜ்ஜியம் நிறுவுவதற்காக ஒரு ஆன்மீக பீடமும் (சிருங்கேரி மடம்) பீடத்தின் ஜகத்குருவான வித்யாரண்ய சங்கராச்சாரியரின் பேரருளும் வழிகாட்டியுள்ளது. அவ்வகையில் கிளைத்த விஜய நகர சாம்ராஜ்ய அதிபதி மாமன்னர் குமாரகம்பனரின் பத்தினியான கங்கம்மா தேவியின் கனவில் எழுந்தருளும் அன்னை மீனாக்ஷி கனவு வரலாறாகிறது.

“யதிஸ்வரர்களும் பைராகிகளும் சன்னியாசிகளும் பண்டாரங்களும் இந்த ராஜ்ஜியம் முழுக்க கடலில் மீன் மாதிரி நீந்திக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்லை. அவங்க நினைச்சது எப்படி ஆனாலும் நடக்கும்.” சுல்தான்கள் ஆண்டபோது மட்டுமல்ல. இப்பொழுதும்கூட நிகழ்வில்…

ஒரு நாட்டின் மீதான படையெடுப்பு பொன் -மண்-பெண் அபகரித்தலோடு நிறைவடைவதில்லை. கலாச்சாரத்தின் விழுமியங்களை அழிப்பதே போரின் நிதர்சனம். 59 ஆண்டுகள் வேணாட்டு ஆரல்வாய்மொழியில் மதுரை மீனாக்ஷியின் தெய்வ பிரதிமை கமுக்கத்துடன் காக்கப்படுகிறது. நாயக்கர்கள் மீனாக்ஷியின் இருப்பை மீட்டெடுக்க வாளுருவி இருக்கலாம். ஆனால் வேணாடு நெஞ்சுயர்த்தி மறுக்கவில்லை. கடவுளாக இருந்தாலும் தனது கணவன் அணுக்கத்தில் மட்டுமே பெண் நிறைவுறுகிறாள். பெண்கள் அறிவு ரீதியாக கட்டமைக்கப்படுவதில்லை. உணர்வு ரீதியாக அவர்கள் அணுகும் விதங்கள் பொய்ப்பதில்லை. ஆண் அறிவின் பின்புறத்தில் முட்டால் தனங்களை மறைத்து வைப்பதில் தேர்ந்தவன்.

புரிதல் இழப்புகளை தருவதில்லை. அது போர்மூலம் நிகழும் இனத்தின் அழிப்பிற்கு மாற்றாக மங்கலம் பூணும் வைபத்தை நிகழ்த்துகிறது. கடவுளர் திருமணத்தை மனிதன் நடத்துகிறான். பக்திக்கு காரண அறிவு பகை. பொருந்தாத இருமுனைகள். பக்தியின் பங்கேற்பில் காரண அறிவு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

பரகோடி கண்டன் சாஸ்தா, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள், முத்தலாம்மை, மோதகத்தால் திருப்தியடையும் பிள்ளையார் இவர்கள் முன்னிலையில் சுந்தரேஸ்வரருக்கும் குமரித்துறைவிக்கும் நிகழும் திருகல்யாண வைபாவத்தின் ஏற்பாடுகள், செயலாக்கங்கள், சீர் பொருட்கள், வைரங்கள், பொன் நகைகள்…ஜெயமோகனின் மேதமை வியக்க வைக்கிறது. வேணாட்டின் மொழியோடு உணர்வையும் பிசைந்து அம்மண்ணின் வரைபடத்தை நிறுவுகிறார்.

“புலியின் வாடையை அருந்திவிட்ட யானை போல் வேணாட்டு மண் விழிப்புற்று காத்திருந்தது.”

தேசத்தின் ஒட்டுமொத்த மக்களை பார்ப்பதற்கு அரசன் ஆணையிட்டாலும் நடந்தேறி விடாது. ஆனால் தெய்வகாரியம் பொருட்டோ (அ) கோயில் திருவிழா பொருட்டோ மக்கள் நிச்சயம் தன்னிச்சையாக அவ்விடத்தில் குவிவார்கள். அதுவே தேசத்தின் விஸ்வரூப தரிசனம்.

ஒருவனது நம்பிக்கையோடு உறுதியும் சேர்ந்தால் மாத்திரமே கமுக்கத்தை மூச்சு விடாமல் காப்பாற்ற முடியும்.

“சுல்தான் பட்டாளம் எப்ப வேணும்னாலும் உள்ள வர்ற நிலைமையில் தானே வேணாடு இருந்தது. அதோடு வந்த வெளிநாட்டு அரசர்களை நாம் அறிஞ்சோம். வரப்போறவங்களை யார் யாரறிஞ்சோம். எங்களுக்கு பொறுப்பு மீனாட்சி அம்மை மேலே மட்டும்தான்.”

தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் தனது விவரிப்பனூடாக வாசகனை தனது நிழலாக மாற்றி விடுகிறான். இறுதி அத்தியாயங்கள்; பெண் பிள்ளை பெறாதவர்களையும் மணம் முடித்து புகுந்த வீடும் செல்லும் போது தந்தைக்குள் முகிழும் உணர்வலைக்குள் இழுத்தழுத்தி கசிய விடுகிறது.

நுணுக்கமான தகவல்கள், காவிய வர்ணனைகள், திருப்பங்கள், திகைப்புகள்… இரண்டு நாளில் இந்நாவலை எழுதியதாக குறிப்பிடும் ஜெயமோகன் இதனை அத்யாத்மிக காரியமாகவே எண்ணியிருக்க வேண்டும். அவ்விதத்தில் இது சாத்தியமாகி இருக்கலாம். ஒரே அமர்வில் இந்நாவலை வாசித்து விடலாம். கொண்டாட்த்தின் மங்கலம் நிகழட்டும்.


நூல் தகவல்:

நூல் : குமரித்துறைவி

ஆசிரியர் : ஜெயமோகன்

வெளியீடு : விஷ்ணுபுரம் பதிப்பகம்

ஆண்டு :   2021

பக்கங்கள் :  176

விலை : ₹ 195