சரிதாஜோ-வின் “நீல மரமும் தங்க இறக்கைகளும்” சிறார் கதைகள் குறித்து எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய நூல் அணிந்துரை.
குழந்தை இலக்கியத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். யாராலும் கவனிக்கப்படாமல் ஒரு ஓரமாய் கிடந்த குழந்தை இலக்கியத்துக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் கவனம் கிடைத்திருக்கிறது. நிறைய எழுத்தாளர்கள் குழந்தை இலக்கியம் படைப்பதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். நிறைய குழந்தைகள் தங்களுக்கான படைப்புகளை தாங்களே எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக ஊடகத்தின் நற்பயனாக ஏராளமான கதைசொல்லிகள் உருவாகியிருக்கிறார்கள். நிறையக் குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழ்க்குழந்தைகள் வாசிக்கவும் எழுதவும் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏராளமான ஆசிரியர்கள் குழந்தை இலக்கியத்தின் பக்கம் கடைக்கண் வைத்திருக்கிறார்கள். பழைய, புதிய பதிப்பகங்கள் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடுகிறார்கள். இப்படி ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகியிருக்கிறதென்றால் அதற்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு நூல்களையும், சுய நூல்களையும் லாபநோக்கின்றி வெளியிட்ட பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ட்ரென் பதிப்பகத்துக்கு மிக மிக காத்திரமான பங்கு உண்டு.
குழந்தை இலக்கியத்தின் மறுமலர்ச்சிகாலத்தின் முதல் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த அலையின் புதிய வீச்சாக பெண்கள் குழந்தைகளுக்கான கதைகளை எழுத முன்வந்திருக்கிறார்கள். எப்போதும் குழந்தைகளுடனே இருந்த வரும் பெண்களுக்குத் தான் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவின் அர்த்தபாவங்களும் தெரியும். ஆனாலும் பொது இலக்கியவெளியில் இருப்பதைப்போலவே குழந்தை இலக்கியத்தில் எழுதுகிற பெண்கள் மிக மிகக்குறைவு. அப்படிப்பட்ட சூழலில் சர்க்கரை இல்லாத ஊரில் தேன்மழை பொழிந்தது போல, குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதில் மிகச்சிறந்தவரான சரிதாஜோ இப்போது தன்னுடைய கதைகளுடன் குழந்தை இலக்கியவெளியில் நுழைந்திருக்கிறார். குழந்தை இலக்கியத்தில் ஒர் எடுத்துக்காட்டாக பிரவேசித்திருக்கிற அவருக்கு முதலில் ஆயிரம் வாழ்த்துகள்!
குழந்தைகளின் உலகம் கனவு மயமானது. அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது. அதீதங்களின் ( ஃபேண்டசி ) ருசிக்காகவே குழந்தைகள் கதைகளை வாசிக்கிறார்கள். பேசுகிற விலங்குகளையும், பறவைகளையும் நம்புகிறார்கள். பறக்கிற யானைகளையும் இரண்டு கால்களால் ஓடுகிற முதலைகளையும், உருமாறும் பூதங்களையும், கூடுவிட்டு கூடு பாயும் தேவதைகளையும் ராட்சசர்களையும் இளவரசர்களையும், இளவரசிகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளின் உலகம் விந்தைகளின் உலகம். எனவே தான் குழந்தைகள் அதீதங்களை ஆனந்தத்துடன் அனுபவிக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியூட்டல் தான் குழந்தை இலக்கியத்தின் அடிப்படை. அதன்பிறகே மற்ர சங்கதிகளான கருத்து, செய்தி, நீதி, நன்னெறி எல்லாம் வாலைப் போன்று நீண்டு கொண்டு வரும். அந்தவகையில் சரிதாஜோவின் எட்டுக்கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு அந்த ஆனந்தத்தைக் குழந்தைகளுக்கு நிச்சயமாகக் கொடுக்கும்.
சரிதாஜோவின் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் எல்லாம் கதைகள் குழந்தை இலக்கியத்தின் அனைத்து வகைமையிலும் எழுதப்பட்டுள்ள கதைகள். ஒரே நேரத்தில் அறிவியலையும், இயற்கையையும், அதீதங்களையும் குழைத்து அழகான சிற்பங்களாக வடித்திருக்கிறார். அனைத்துமே குழந்தைகளின் மனதில் மிகச்சிறந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
பூமிக்கு வந்த நிலாவில் நட்சத்திரங்கள் நிலாவில் வடைசுடும் பாட்டியிடம் வடை கேட்டு கிடைக்காமல் கோபித்துக் கொண்டு பூமிக்கு வந்து பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வானத்தில் நட்சத்திரங்களைக் காணாமல் அல்லோலகல்லோலப்படுகிற சூரியன் பிரச்னையைக் கேள்விப்பட்டு நிலாவுக்குத் தேடிக்கண்டுபிடிக்க உத்திரவு போடுகிறது. நிலாவும் பூமிக்கு வந்து நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்கிறது என்பதோடு கதை முடியவில்லை. கதையின் முடிவில் வடைசுடும் பாட்டி என்னவானாள்? என்பதில் தான் சரிதாஜோவின் கலைத்திறன் மிளிர்கிறது.
இயற்கையின் காலநிலை மாற்றத்தினால் மனிதர்களை விட விலங்குகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதைச் சொல்லும் கதை டோலி லாலி. தாங்கள் செய்த முற்பகல்வினைக்கு பிற்பகல் அனுபவிக்கிற மனிதர்களுக்குச் சரிதான். ஆனால் எதுவுமே செய்யாமல் பாதிக்கப்படுகிற விலங்குகளைப் பற்றி பாடல்களுடன் உள்ள கதை. நாடகப்பிரதியாக மாற்றமுடிகிற நல்லகதை டோலி லாலி.
கிளியே கிளியே வெட்டுக்கிளியே சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட் பாலைவனவெட்டுக்கிளிகளைப் பற்றிய கதை. கதை வழக்கமான பாணியிலிருந்து மாற்றி எழுதப்பட்டிருப்பது சிறப்பு. வெட்டுக்கிளிகளே திட்டமிட்டு மனிதர்களுக்குப் பாடம்புகட்ட படையெடுப்பதாக எழுதியிருப்பது நல்ல கற்பனை.
மரங்களின் ஆட்டம் கதையில் மரங்கள் நடமாடுகின்றன. ஓடுகின்றன. ஆடுகின்றன. ஏன் அப்படிச் செய்கின்றன? அப்படி நடந்தால் என்ன ஆகும்? ஒரு குழந்தையின் மனநிலை இருந்தால் மட்டுமே இப்படியான கதைகளை எழுதமுடியும். சரிதாஜோ குழந்தையாகவே மாறி கதை சொல்கிறார்.
காட்டுக்குள்ளே என்ற கதையில் மனிதர்களின் காடழிப்பைப் பற்றியும் விலங்குகள் காட்டைக் காப்பாற்றப் போடுகிற திட்டங்களைப் பற்றியும் அதற்குள் நடக்கிற திடீர்திருப்பங்களைப் பற்றியும் சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிற கதை. வாசிக்கும்போது நமக்கு காடழிப்புக்கெதிரான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் கதை.
சின்னா லட்டு தின்ன ஆசையா கதையில் எலிகளுக்கிடையில் நடக்கிற போட்டியில் கபடமாக எதிரியை வீழ்த்தி எப்போதும் வெற்றி பெறுகிற கபியின் தந்திரம் எப்படி முறியடிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற சின்னா என்ன செய்கிறது? என்பதை உங்கள் வாசிப்பில் அனுபவிக்கலாம்.
நீலமரமும் தங்க இறக்கைகளும் கதையில் பறவைகளின் ராஜாவாக ஆவதற்காக நீண்ட பயணம் போகிற காகங்களான அபி சிபி ஆகியவற்றைப் பற்றிய கதை. ஏழு கடல் ஏழு மலை இவற்றை எப்படித் தாண்டிச் செல்கின்றன. அங்கே யாரைச் சந்திக்கிறார்கள்? யார் ராஜாவானார்கள்? உங்கள் எதிர்பார்ப்புக்கு நல்ல தீனி போடும் கதை. இடையில் குழந்தைகளுக்குப் புதிய விஷயங்களையும் அறிமுகப்படுத்துகிறார் சரிதாஜோ.
வான்வில்லும் வாண்டுகளும் கதை, முழுக்கமுழுக்க அறிவியல் கதை. அதுவும் மிகசமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிற கதை. ஒரு அறிவியல் விஷயத்தை எப்படி அழகாக, யதார்த்தமாகச் சொல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக்கதையை சொல்லலாம்.
இந்தக்கதைகளின் வழியாக சரிதாஜோ குழந்தைகளுக்கு நிறைய அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுகிறார். அவர்களுக்குச் சிறகுகள் கொடுத்து மாயஜால உலகத்துக்குள் அவர்களைப் பறக்கச்செய்கிறார். வண்ணமயமான பூக்களை அவர்களுக்குக் காட்டி வண்ணத்துப்பூச்சிகளாக்கி மகிழ்ச்சியடைகிறார். அவரே ஒரு குழந்தையாகி குழந்தைகளோடு கதையுலகில் ஆனந்தமாக நீந்துகிறார். குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதற்கான அனைத்துத்திறமைகளும் கைவரப்பெற்றிருக்கிறார் சரிதாஜோ.
இந்தக்கதைகளின் வழியாக தமிழ்க்குழந்தை இலக்கியத்துக்கு காத்திரமான ஒரு படைப்பாளி கிடைத்திருக்கிறார். அவருடைய வரவு நல்வரவு. தொடர்ந்து எழுதுவதின் மூலம் பல சிகரங்களை அடைய என்னுடைய இதயப்பூர்வ வாழ்த்துகள்.
எழுதுக! சரிதாஜோ எழுதுக!
வாழ்த்துகளுடன்
– உதயசங்கர்