அறிமுகம்நூல் அலமாரிபுதியவை

மந்திரக் கிலுகிலுப்பை


சரிதாஜோ எழுதிய ‘மந்திரக் கிலுகிலுப்பை’ நாவலுக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன் எழுதிய நூல் அணிந்துரை


பாட்டியிடம் கதை கேட்கும் பாக்கியம் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு இல்லையே என்றெல்லாம் முன்புபோல வருத்தப்பட வேண்டியதில்லை. குழந்தைகளுக்கு கதை சொல்ல சரிதாஜோ போன்றவர்கள் வந்து விட்டார்கள். கண்களை உருட்டி, கைகளை ஆட்டி பாவனை செய்தபடி தனது இனிமையான குரலில் உணர்ச்சிபொங்க கதைகள் சொல்லும் சரிதாவை யூ டியூப் சானலில் தற்செயலாய் பார்த்தபோது கொஞ்சம் அசந்துதான் போனேன். அட..இந்தப்பொண்ணு நல்லா கத சொல்லுதே !
அப்புறம் பேஸ்புக் நேரலையில் அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது.
சுற்றிலும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தன. ஒருமுறை எனது நண்பன் உதயசங்கரின் ” மாயக்கண்ணாடி ” கதைகளை சொல்லக்கேட்டேன். சந்தோசமாய் இருந்தது. இப்படி பிற குழந்தை எழுத்தாளர்களின் கதைகளை சொல்லிக்கொண்டிருந்த இந்தப்பொண்ணு
” மந்திரகிலுகிலுப்பை ” என்றொரு தொடரை ” சுவடு ” மின்னிதழில் எழுத ஆரம்பித்ததை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன்.

பொதுவாய் கதை எழுதுவது கடினம். அதிலும், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவது மிக மிக கடினம். கதைகள், குழந்தைகள் படிக்கும்வண்ணம் சிறு சிறு வாக்கியங்களில் இருக்க வேண்டும். முற்றுப்புள்ளி வைக்காமல் ஏழெட்டு வரிகளில் தொடர்ச்சியாய் ஒரே வாக்கியமாய் கதைகள் எழுதும் குழந்தை எழுத்தாளர்களை நான் பார்த்துள்ளேன். அப்படியான கதைகளை குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட படிக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு நீதிபோதனை கதைகளை மாத்திரமே சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. காலங்கள் மாற மாற அறநெறிக்கருத்துக்களும் மாறுகின்றன. பகுத்தறிவு, ஆண்-பெண் சமத்துவம், சூழலியல் போன்ற புதிய விஷயங்களையும் அவர்களுக்கு இயல்பாய் சொல்லிச்செல்ல வேண்டியுள்ளது.
சரி..இந்த மந்திர கிலுகிலுப்பை நாவலுக்கு வருவோம்.

ரெண்டாப்பு படிக்கும் ரதி தான் இந்த நாவலின் நாயகி. பறவைகள், விலங்குகள் என்றால் அவளுக்கு ரொம்ப பிரியம். வீட்டில் பெரிய தோட்டம் உண்டு. செடி,கொடி,மரங்கள்,பறவைகள், ஆடு,மாடு, நாய்,பூனை எல்லாமே உண்டு. அவற்றோடு பேசும் மொழியைக் கற்றவள் என்பது கூடுதல் செய்தி. பறவைகளின் மொழி அறிந்தவள் பாக்கியசாலி தானே..

ஒருமுறை உள்ளூரில் சர்க்கஸ் பார்க்க செல்கிறாள். யானை, கரடி,சிங்கம்,ஒட்டகம் போன்ற விலங்குகள் செய்யும் சாகசங்களை கண்டுகளித்தாலும், அந்த விலங்குகளை கூண்டில் அடைத்து போட்டிருப்பதை எண்ணி வருந்துகிறாள். இந்த விலங்குகள் எல்லாம் காடுகளில் அல்லவா வசிக்கும் ? அவற்றின் வீடு காடு தானே..அம்மா,அப்பாவை பிரிந்து இங்கே கூண்டுகளில் அடைபட்டு மனிதர்கள் தரும் அற்ப உணவை தின்று ( எழுத்தாளர் கௌரிஷங்கர் எழுதிய கதை ஒன்றில் யானை தெருவில் பிச்சை எடுத்து மிச்சர் போன்றவற்றை வாங்கி சாப்பிடும். தேக்கு மரக்கட்டைகளை இழுக்கும் திறன் கொண்ட யானையை சில்லறைக்காசுகளுக்காக பிச்சை எடுக்க வைக்கும் கொடுமையை விவரித்திருப்பார் ) உயிர் வாழும் பரிதாப நிலை கண்டு வருந்துவாள் ரதி.
வீட்டுக்கு வந்தபிறகும் அதே நினைப்பு. ஊருக்கு விடுமுறை சென்றபோது, கொள்ளுப்பாட்டி கொடுத்த மந்திர கிலுகிலுப்பையை மரப்பெட்டியில் இருந்து எடுப்பாள் அவள். அதை வைத்து சர்க்கஸில் இருக்கும் யானை, ஒட்டகம், கடல் ஆமை, அனகோண்டா பாம்பு, குளத்தில் இருக்கும் சீல் ஆகியவற்றை ” பிப்பிலோபல்பி ஹெய்சா ஹெய்சா ” என்ற மந்திர சொல்லால் ( அண்டாகா கசம் அபூக்கா கசம், திறந்திடு திசே மாதிரி ) சிறியதாய் உருமாற்றி அவற்றை ஒரு சின்ன டிபன் பாக்ஸில் அடைத்து தானும் சின்ன உருவமாய் மாறி, அவரவர் வீடுகளுக்கு கொண்டுபோய் சேர்க்கும் சாகசக்கதை தான் இந்த நாவல்.

சொல்லப்போனால், அந்த மிருகங்களுக்கு தங்களின் வீடுகள் எப்படி இருக்கும் என்பதுகூட தெரியாது. அந்தரத்தில் டிபன் பாக்ஸ் பறக்கும்போது அவர்களோடு நெருக்கியடித்து உட்கார்ந்திருக்கும் ரதி, அவர்கள் வீடு எப்படி இருக்கும் என்று சொல்லுகிறாள்.

குளிர் மிகுந்த ஆர்க்டிக் பிரதேசத்திற்கு போகிறார்கள். கடலுக்கு செல்கிறார்கள். அமேசான் காடுகளுக்கு செல்கிறார்கள். சகாரா பாலைவனம் போகிறார்கள். அடர்ந்த காடுகளுக்கு போகிறார்கள்..
அவரவர் வீடுகளில் இறக்கி விட்டு வரும் ரதிக்கு இடையில் பல சோதனைகள்..ஒருமுறை கிலுகிலுப்பை தொலைந்து போகிறது. நமக்கும் பக்கென்கிறது. கிளுகிளுப்பையில் இருக்கும் கற்களின் எண்ணிக்கை அளவிற்கு தான் மந்திரங்கள் பலிக்கும் என்பதை மறந்து விடுகிறாள் ரதி. கடைசி ஆளை இறக்கி விடும்போது தான் இரண்டு கற்கள் மட்டுமே இருப்பதை உணர்ந்து திகைக்கிறாள். என்னாச்சு கடைசியில் என்பதை படிச்சு பாருங்கள்.

அவள் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் உள்ள சூழலியல் பற்றி சொல்வது தான் நாவலின் சிறப்பு. பனிப்பாறைகள் ஏன் உருகுகின்றன என்பதையும் மனிதர்களின் சுயநலத்தால் வந்த வினை என்பதையும் சொல்லுகிறாள். கடல் ஆமைகள் பற்றிய செய்திகள் வியப்பூட்டுபவை.
கீழை நாடுகளுக்கு படையெடுத்து சென்ற தமிழர்கள் ஆமை வழி தடங்களை பின்பற்றி எளிதில் சென்ற விபரங்களையும் சொல்லுகிறாள் ரதி. அமேசான் காடுகளை பற்றி பல செய்திகள்..அனகோண்டா பாம்பிற்கு கூட தெரியாத பல விஷயங்களை சொல்லி, அந்த காடுகளிலும் பரவும் காட்டுத்தீயை பற்றி சொல்வதும் நிறைவான விஷயங்கள்..

இந்த சிறுவர் நாவலில், சிறுவர்கள் அறிந்து கொள்ள பல்வேறு விளையாட்டுகளையும் துவக்கத்தில் சொல்கிறார் சரிதா. வீடியோகேம்ஸ் விளையாடும் இன்றைய குழந்தைகள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கும் நிலைக்கு மாறாக, விளையாட சொல்கிறார். பச்சைக்குதிரை,பல்லாங்குழி, கொக்கோ, கபடி,கொலகொலையாய் முந்திரிக்கா போன்ற விளையாட்டுகளை இன்றைய சிறுவர்களுக்கு அறிமுகம் செய்து விளையாட தூண்டுவது நன்றாக இருக்கிறது.

பர்கர், பீசா போன்ற கேடுதரும் உணவு ஐட்டங்களை தவிர்த்து, பாரம்பரிய உணவான கேப்பைக்களி, சோளதோசை,தட்டைப்பயறு வடை, நரிப்பயிறு லட்டு ( இதை நானே இன்னமும் சாப்பிட்டதில்லையே ..சரிதாவிடம் தான் கேட்டு வாங்கணும்..) போன்றவற்றை பாட்டி வீட்டில் அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த நாவலை படித்து முடிக்கும்போது, உலகையே ஒரு மந்திரக் கம்பளத்தில் பறந்துபோய் பார்த்துவிட்டு வந்த உணர்வு வருகிறது.

குழந்தைகள் ஆர்வத்துடன் இதை வாசிக்கும் அளவிற்கு எளிய நடையில் இருப்பது கூடுதல் சிறப்பு.
இவ்வளவு நாளும் கதை சொல்ற ஆன்டி இப்ப கதையும் எழுத ஆரம்பிச்சாச்சுன்னா, குழந்தைகளுக்கு மட்டுமா, நமக்கும் கொண்டாட்டம் தான். இப்படி ஒரு தொடரை எழுத வைத்த நல்லு.லிங்கம் அவர்களுக்கும் இதில் ஒரு பங்குண்டு என்றும் சொல்ல வேண்டும்.

நாவலை வாசிக்கும்போது கடுங்குளிர் அடிக்க வாய்ப்புள்ளதால், பெரிய பவானி ஜமுக்காளத்தை உடம்பு முழுக்க சுற்றிக்கொண்டு வாசிக்கவும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,..
நாறும்பூநாதன்,
திருநெல்வேலி
19 பெப்ரவரி 2021


நூல் தகவல்:
நூல் :  மந்திரக் கிலுகிலுப்பை
பிரிவு:   சிறார் நாவல்
ஆசிரியர் : சரிதாஜோ
பதிப்பகம் : சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2021
விலை: ₹ 120

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *