நகுலனின் படைப்புலகத்தில் கவிதைக்கும் உரைநடைக்குமான இடைவெளி மிகவும் சன்னமானது என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
நகுலனின் கவிதைகள் எந்த இடத்தில் கவிதையாக மாறும் என்பது மிக தத்ரூபமான அரூப செயல் என்றே நம்புகிறேன். அப்படி ஒரு தோற்றத்தில் தான் தன்னை அவர் தனக்குள்ளாகவே சுருக்கி சுருக்கி ஒரு மாணிக்கத்தின் துகளென கவிதைக்குள் ஆனார் என்பது பெரிதினும் பெரிது போல கவிதையிலும் கவிதை போல நகுலனினும் நகுலன் எனலாம்.
நான் வானம் வெறித்து நின்ற ஒரு நொடியில் இதை எழுத தூண்டியது, நான் வானம் வெறிக்கத் துவங்கும் முன் படித்த நகுலனின் கவிதைகளாகத்தான் இருக்க வேண்டும். நகுலனின் கவிதைகளைப் படிப்பது போதி இல்லாமல் தியானிப்பது. அது காலம் நிறுத்தி வேடிக்கை காட்டும் மாய வித்தைகளின் மொத்தம்.
பித்த நிலையே புத்த நிலை. புத்த நிலையே யுத்த நிலை. கண்ணுக்கு தெரியாத யுத்த நிலையாய் முன் வரிகள் திறக்கும் பறவையின் அலகாய் வந்து போகும் இடைவெளிக்குள் இல்லவே இல்லை என் வெளி. அங்கே முழுக்க நகுலனின் உளி.
மெல்லிசான சதுர கல்லை நீரோடு வீச.. அது நீரில் பட்டும் படாமல் பட்டும் படாமல்… போய் கடைசியாக பட்டும் படாமலே……போய் விடுவது ஒரு விதமான சிதறல். அப்படி சிதற சிதற தான் நகுலனின் கவிதைகள் உதிர உதிர பூக்களாகும் புது தத்துவம் பிறக்கிறது. இன்று வரை வெளி….வளைந்து கொண்டே இருப்பதாகவும்… பெருவெடிப்பின் சத்தம் நகர்ந்து கொண்டே இருப்பதாகவும் அறிவியல் கூறுகிறது. நகுலனின் அறிவில் யாருமற்ற ஒரு வெளிதான் அவரது கவிதைகள்.
சிலரின் கவிதைகளை படிக்க படிக்க எழுதத் தோன்றும்… நகுலனின் கவிதைகளை படிக்க படிக்க எழுதி விட்டதாகவே தோன்றும்.
“யாருமற்ற இடத்தில்
என்ன நடக்கிறது
எல்லாம்….”
யாருமே இல்லாமல் போனாலும் அந்த இடத்தில் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது… என்கிறார். அதை உணர நகுலன் தேவையே இல்லை என்பது போல.
அவரின் படைப்புகளில் உள் சென்று வெளியே வருவது கொஞ்சம் சிரமம்தான். முத்தெடுக்க வேண்டுமானால் மூச்சடக்கித்தான் ஆக வேண்டும். உள் சார்ந்த மரபுகளின் நீட்சியென நவீனம் தலை விரித்தலில் நகம் போல மெல்ல மனம் கீறும் பொருளோடு இருக்கிறது என்பதாக நான் உணரப் படுகிறேன். உணராத பொருள் ஒன்றும் இருப்பதை உணராமல் இல்லை.. உணர உணரத்தான் உணர முடியும்.. உணருதலைப் போல உணர்ந்துக் கொண்டே இருப்பதைப் போல உணருதல் ஒன்றும் அத்தனை சுலபமான உணர்தல் அல்ல. உணர்ந்து படியுங்கள். உணர்ந்து கொள்ள முடியும். உணர்கொம்புகளுக்கு உள்ளும் ஒரு புறம் உண்டு என்பது தான் நகுலன் அடுத்த பக்கமும்.
நகுலனின் வட்டம்.. மிகச் சிறியது.
ஆனால் அதில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. பார்க்க பார்க்க… அது இன்னும் இன்னும் சிறியதாகி ஒரு புள்ளியாகிக் கொண்டே போவதில்தான் கிறுகிறுத்துப் போகும் சுற்றத்தைக் காண்கிறேன். கனா காண்பது போல கனாவை தூக்கத்தில் இல்லாமல் காண்பது அத்தனை சுலபமல்ல. அது தீவிரமான கலையின் குருதி கசிதல் போல. நகுலனின் இருண்மை பேராவல் கொண்டவை. படிப்பவர் சிறிது கவனம் சிதறினாலும் அது கம்பியில் இருந்து தவறி விட்ட சிறு பிஞ்சின் பாதமாகி விடும்.
“இருப்பதற்கு என்று தான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்…”
ஜனனத்தின் மரணத்தின் இடைவெளியை எத்தனை ஆழமாய் மூன்று வரிகளில் சொல்கிறார்.
நிஜம் சுடத்தான் செய்யும். விட்டு சென்ற காதலியின் கண்களைப் போல…நான் சிறுவயதில் கொய்யா மரம் ஏறுவேன்… இறங்குவேன்… அவ்ளோ உயரத்தில் ஏறி இறங்குதல் எனக்கு ஒரு விஷயமாகவே தெரியாது. விழுந்தால் கண்டிப்பாக கை கால் உடையும் உயரம் தான். ஒரு நாள் ஏறி உச்சியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது கீழே நின்று என்னைப் பார்த்த என் மாமா “குட்டி பாத்துடா விழுந்துடாத” என்றார். அதன் பிறகு என்னால் இறங்க முடியவில்லை. ஏணி வைத்து இறக்கினார்கள். அப்படி தான்… நகுலனின் கவிதைகளை அப்படியே படித்து விட்டு வந்து விட்டால் உங்களுக்குள் போக வேண்டியது எல்லாம் போய் விடும். நகுலன் என்று நினைத்து படித்தால் ஒரு வெளிக்குள் மாட்டிக் கொள்வீர்கள். அவர் அப்படித்தான் மாட்டிக் கொண்டார். ஆனால் அவர் மாட்டிக் கொண்ட வெளியில் கொய்யா மரங்களின் வேர்களை அவரே சமைத்தார் என்பது தான் ஏணிகளற்ற படிப்பு.
நகுலனின் கவிதைகளை விட நகுலனைப் படிப்பது இன்னும் சுவாரஷ்யம் ஆகி விட்டதுதான் நவீன முரண்.
அவர் படைப்புகளில் தொடர்ந்து “சுசீலா” என்றொரு கதாபாத்திரம் வந்து கொண்டே இருக்கிறது. அது அப்படித்தான்….. பாரதிக்கு கண்ணம்மா கற்பனையாகத்தான் இருக்க வேண்டுமா என்ன…? “ராமச்சந்திரன்” கவிதையில் கூட நமக்கு தெரியாத நிறைய ராமச்சந்திரன்கள் இருக்கிறார்கள் என்ற சிறு புனைவை உண்மையாக்கி இருப்பார்.
“அலைகளை சொல்லி
பிரயோஜனமில்லை
கடல் இருக்கும் வரை” என்றொரு கவிதை.
இதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் நகுலன் எழுதும் போது கடலுக்குள் நிற்கும் உணர்வு. அலைக்குள் தவிக்கும் பதட்டம். கவிதைக்குள் திமிரும் சொற்கள்.
“நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை”
என்பதாக நினைவின் புதுவெளி விரிவதைக் காண முடிகிறது. நாமும்கூட இல்லாமல் போக பயப்படும் நினைவு இருப்பவர்கள் தான்.
எனது தேடல்களில் நான் நகுலனை ஒரு ஆழ்கடலெனவே நினைக்கிறேன். எனது மயக்கங்கள் எல்லாம் முயங்கித் தவிக்கும் பாலைவனத்தில் நகுலனின் வரிகளாகி சிதறுவதில் புது வெள்ளை மணல்துளிகள்.
நகுலனின் கவிதை சொல்வது மீண்டும் மீண்டும் மீனாகி கிடப்பது தான் ஆழ்கடலின் தத்துவம். பசி போக்கும் தத்துவங்களும் உண்டு.
ஞானத்தின் திறவை வார்த்தைக்குள் விட்டு தாகத்தின் வெளியை வாக்கியத்தில் தேடும் நகுலனின் கவிதைகளை படிக்காமல் விட்டவர்கள் பாக்கியவான்கள். ஒரு மேம்போக்கான வாழ்வு பாக்கியவான்களுக்குத்தான் கிடைக்கும். பரிதவிப்போருக்கு தான்… வாழ்வின் ஆழ்நிலை வாய்க்கும். அதை நகுலனைப் படிக்கையில் கண்டடைந்தேன்.
நகுலனின் திறந்த நிலை கவிதைகளில் வாசகர்களே மர்மம் நிரப்பிக் கொள்ளும் மாயம் நகுலனின் கவிதைக்கு நிகழ்வது கவிதைகளின் மர்மம் என்று தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
பெரிதாக கவித்துவம் இல்லாத… ரொமாண்டிஸம் இல்லாத குற்றசாட்டு இல்லாத குவி வளையம் இல்லாத நகுலனின் கவிதைகள் ஒன்றுமில்லாதவைகளால் நிரம்பி இருக்கின்றன என்பது தான் இங்கே பேசு பொருள். ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு தான் கூடுதல் தகுதி தேவை என்ற மெய்ப்பொருள் காண்பதில் நகுலன் தொட்ட இடம் யாருக்கும் வாய்க்காது.
ஒரு புகைப்படத்தில் நாற்காலியில் பெருத்த யோசனையோடு அமர்ந்திருக்கிறார் அல்லது அப்படி நமக்கு தோன்றுகிறது. தோற்றப் பிழைக்கு காட்சி என்ன செய்யும். சாட்சி தான் என்ன செய்யும். எனக்கு தோன்றியது இப்படி.
“இந்த வழுக்கை தலையில் தான்
எத்தனை மினுமினுப்பு
இந்த சோடாபுட்டி கண்ணாடியில் தான்
எத்தனை பளிச்சிடல்
தேரில் அமர்ந்திருக்கும்
சாமியைப் போல திகட்டவேயில்லை
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
சாகப் போகும் காதலியைப் பார்ப்பதாக
இருக்கிறது
பரவசம் எதுவெனில்
எழுத தோன்றும் கவிதையைக் கூட
மறக்க தோன்றுகிறது
ஒருவேளை அசைந்து நிமிர்ந்து பார்க்க
நேரிட்டால்
எதிர் நின்று சிரித்துக் கொண்டிருப்பேனோ
சிறுவன் நகுலனாக….!”
- கவிஜி
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.