பகிர்வுகள்படைப்பும் பகுப்பாய்வும்

இமைக்க மறந்த தேவதச்சன்


கவிஞர் தேவதச்சனின் ஒரு கவிதை : 

சட்டை

ஒரு சட்டையை சமையல் செய்வது எப்படி
அதற்கு கைகள் தரவேண்டும் முக்கியமாக
தலை நிற்பதற்கு ஒரு வெட்டவெளி வேண்டும்
முதலில் மேஜையைப் பொடிப்பொடியாக நறுக்கி
பிறகு மெல்ல குவியும் சாலை குப்பைகள் மேல்
கொஞ்சம் செய்தித்தாளைக் கிழித்துப்போடு
ஒரு சினிமாவுக்கு சென்றுவா
அடித்துக் கொண்டிருக்கும் தொலைபேசியை எடுக்காதே
அதில் கொஞ்சம் எழுத்து ஊற்று
சில முகமூடிகளைக் கொஞ்சநேரம் ஊறவை
தொலைக்காட்சியில் கேட்கும் அரசியல் வசனங்களை
லேசாக வதக்கி வைத்துக்கொள்
1947 ம் வருடத்தையோ அது
கிடைக்கவில்லை என்றால்
சற்று முன்பின் வருடங்களையோ
தண்ணீர்விட்டு இறுக்கமாய் உருண்டைபோடு
அதில் கைகள் இருந்த இடத்தில்
தலையை வை
தலை இருந்த இடத்தில் கைகளை மாற்றி அடுக்கு
ஒரு பென்சிலைக் கொதிக்க வைத்து
தொலைபேசி ஒலிகள் மேல் தூவு
பிறகு வாசலுக்குச் சென்று
யாரிடம் எல்லா சாவிகளும் இருக்கின்றன
என்று கத்து
வீட்டுக்குள் நுழைந்து
நீ சமையல் செய்த
சட்டையைக் குளிர்சாதனப்
பெட்டியில் வை
உன் கடிகாரத்தைப் பார்த்தபடி
பட்டினி கிட

தேவதச்சன்

தேவதச்சனின் இந்த கவிதைக்குள் ஓர் அரூப உலகம் நாலாபுறமும் சுழல்வதை தலையில் தைக்கும் மந்திர வடிவம் கொண்டு காண்கிறேன். தேவதச்சனின் வரிகளுக்குள் சிக்குண்டு கிடப்பதை யாக மிச்சம் எனலாம். யாகத்தில் தேகம் கூடாது. யாகத்தில் தாகம் விடாது.

“ஒரு சட்டையை சமையல் செய்வது எப்படி
அதற்கு கைகள் தரவேண்டும் முக்கியமாக
தலை நிற்பதற்கு ஒரு வெட்டவெளி வேண்டும்”

கைகள் தான் ஒரு சட்டையின் முழுமைத்துவம். கைகளின்றி சட்டையில் வெற்று பொத்தான்கள் தான் உணர முடியும். ஸ்லீவ்லெஸ்ஸில் சித்திரக்குறைபாடு இருக்கும். உணர கொண்டோருக்கு உள்ளம் விளங்கும். சட்டையின் தலைக்கு கண்டிப்பாக வெட்ட வெளி வேண்டும் தானே. வெளி அற்ற இடத்தில் சட்டைக்கு தலை ஏது. சட்டையை ஏசு கிறிஸ்து போல கைகள் விரித்து காற்றில் நிறுத்திப் பார். தலை சரியாய் பொருந்தும் வெளியில் தான் சட்டைக்கு முண்டம் இல்லாத பொழுது சாத்தியமாகிறது. சுருங்க சொல்கிறேன். கிறக்கம் விடுத்து கேள். சட்டையின் கழுத்தை உற்று நோக்கு. காற்றில் தலை முளைத்திருக்கும்.

“முதலில் மேஜையைப் பொடிப்பொடியாக நறுக்கி
பிறகு மெல்ல குவியும் சாலை குப்பைகள் மேல்
கொஞ்சம் செய்தித்தாளைக் கிழித்துப்போடு”

மேஜையில் எதை ஒன்றை நறுக்கும் போது நறுவிசையாய் மேஜையும் தான் நறுபடும். இன்னொரு சிறு தகவல்.. நறுக்குபவனும் கொஞ்சம் சிதறுகிறான். எதிர் வினைக்குள் ஓர் வினை இருக்கும் தானே. அதன் துருவல் உணர். மானுட பிரளயத்தில் மாயாஜாலங்கள் தான் பெரும்பகுதி. சிறுபகுதி தான் நாம் சிந்திப்பது. சாலையில் குவியும் குப்பையில் குப்பைகள் குவிந்த செய்தி தாள்களை குவித்து போடென்கிறார். குப்பைகளின் வழியே குதூகலமடையும் உலகத்தில் குப்பையிலும் பூக்கும் தனித்த நட்சத்திரங்கள். மேலிருந்து கீழாகும் ஒன்றில் ஒரு கீழிருந்து மேலாகுதலும் உண்டென்பது தான் தாள்களற்றும் குவியும் செய்தி.

“ஒரு சினிமாவுக்கு சென்றுவா
அடித்துக் கொண்டிருக்கும் தொலைபேசியை எடுக்காதே
அதில் கொஞ்சம் எழுத்து ஊற்று
சில முகமூடிகளைக் கொஞ்சநேரம் ஊறவை
தொலைக்காட்சியில் கேட்கும் அரசியல் வசனங்களை
லேசாக வதக்கி வைத்துக்கொள்”

சினிமாவிற்கு சென்று வருவதில் இன்னொரு நாம் கிடைக்கிறோம். ஒன்றின் வெகு நேர செயலுக்கு சினிமா இடைவேளை தரும். இன்னொன்று இது எல்லாமே சினிமாவாகவே நகருதல் என்பதும் தான்.

நொய் நொய்யென உள்ளே அடிக்கும் தொலைபேசியை சுலபத்தில் எடுத்து விடாதே. எடுக்காமல் கூட இருந்து விடுவது நலம். தொலைபேசி தொல்லை மொழியில் உருவான தூரத்து ஆப்பு. நாமே நம்மிடம் பேச தான் தொடர் அழைப்பு நாமாக இங்கே இருக்கிறது. மிக கவனமாக நம்மிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள அழைப்பற்று இரு. எழுத்து ஊற்றில் கொஞ்சம் நீ பிடி. நிறைவது குறைவது என்றாலும், குறைவது நிறைய எழுத்தே ஊற்று. ஊற்றில் கொண்ட எழுத்துக்களில் முகமூடிகளை ஊற வைத்து ஈரம் பட செய். நேரம் கூடும் விடு. வாழ்வெனும் அரசியல் சிறகுகளை அழகாய் பொன்னிறத்தில் வதக்கு. போகட்டும் மூளைக்குள் ஒரு பக்கமாய் ஒதுக்கு.

“1947 ம் வருடத்தையோ அது
கிடைக்கவில்லை என்றால்
சற்று முன்பின் வருடங்களையோ
தண்ணீர்விட்டு இறுக்கமாய் உருண்டைபோடு
அதில் கைகள் இருந்த இடத்தில்
தலையை வை
தலை இருந்த இடத்தில் கைகளை மாற்றி அடுக்கு”

தண்ணீரில் உருவம் செய்தல் தொடர் தாகத்தில் உழலுபவனுக்கே சாத்தியம். சத்தியம் வருடங்களுள் சிக்காது. இறுக்கத்தில் உருண்டையாய் திரளும் உருவத்தில்…..தலை கைகளை மாற்றி வை. வழக்கம் போல் வாழ்வதற்கு நாம் எதற்கு. வழி தவறும் ஆட்டுக்கு தானே வரலாறு இருக்கிறது.

“ஒரு பென்சிலைக் கொதிக்க வைத்து
தொலைபேசி ஒலிகள் மேல் தூவு
பிறகு வாசலுக்குச் சென்று
யாரிடம் எல்லாச் சாவிகளும் இருக்கின்றன
என்று கத்து”

கொதித்தெழுத சுலபம் பென்சில். பேனாக்களில் பின் வாங்குதல் காட்டி கொடுக்கும். பென்சில்களில் பேரியக்கங்கள் புரிபட்டிருக்கின்றன. எழுதுவதும் உழுவதும் சுலபம் எனில்,  வாசல் செல்வதும் சாவி கேட்டு கத்துவதும் கூட சுலபம். அவரவர் சாவிகள் அவரவரிடம் இருக்கிறது என்பது தான் கத்தும் மொழியின் யுத்த பாவனை. கத்துவதில் சுலபங்கள் பல உண்டு. அதில் மௌன சுமை தகர்தலும் ஒன்று. ஆக கத்தலாம். நேர்பட நிரவும் சப்தங்கள் வழியே இருத்தல் இயங்குகிறது.

“வீட்டுக்குள் நுழைந்து
நீ சமையல் செய்த
சட்டையைக் குளிர்சாதனப்
பெட்டியில் வை
உன் கடிகாரத்தைப் பார்த்தபடி
பட்டினி கிட”

பிறகு வீட்டுக்குள் செல்லலாம். வேறு வழியில்லாத போது வீட்டுக்குள் தான் செல்ல முடியும். இத்தனை நேரம் சமையல் செய்த சட்டையை குளிர்சாதன பெட்டிக்குள் வைக்க வேண்டும். எத்தனை நேரம் வெளியில் தலை ஒட்டி நிற்கும் சட்டை. காற்றில் அசைந்து காற்றின் கனத்தை உரிந்து வெளிச்சம் பாய்ந்து வயிறு வீங்கி வாழ்வை சுமக்கும் கொஞ்சம் நேரம் ஈர காற்றில்… தேர்ந்த தனிமை கொள்ளட்டும். சரியான இடம் குளிர்சான பெட்டி. மானுட இருப்பின் மிச்சங்கள் இந்த குளிர்ச்சியான பெட்டிகளின் வழியே தினம் தினம் காக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கவனமாய் கவனி. திறந்து மூடும் நம்முடல் தான் அது. சட்டை என்பதும் நம்முடலின் வடிவம் தான். நல்ல தலை தேடும் படலம் ஒவ்வொரு சட்டைக்கும் உண்டு.

தொடர்பற்ற தொடர்பை ஒரு சட்டை தைத்தலில் நிகழ்த்தி விடும் மேஜை சம்பவத்தில் ஓர் உடலின் சாவிகள் தேடப்படுவதும்., ஓர் உடலே சட்டையாக ஆக்க படுவதும்., சில செய்திகள் குப்பையாவதும் காலங்களின் முடிச்சு தேவைக்கு கத்தலில் விடுபடுவதும்., முன்னும் பின்னுமாக நிகழ்கிறது. மந்திரமென மனம் நேர்கோட்டில் வளைந்து புகுந்து சட்டையாகிட., கோடு இழுத்து முன் செல்லும் பென்சில் எனும் பாதையின் மகத்துவம் அறிந்து கொள் மானுடமே.

எப்போது விடியும் அடுத்த நாள் என்று கடிகாரத்தை பார்த்துக் கொண்டே பட்டினியில் கிடப்பது நல்ல சட்டை தைத்த பின் கிடைக்கும் ஆன்ம திருப்தி.

எல்லாவற்றுக்கும் பதிலியாக தைத்த சட்டைக்கு காவல் இருக்கிறார் இமைக்க மறந்த சமையல்காரர் தேவதச்சன்.


– கவிஜி

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *