நாவல் முடியும் இடத்தில் மெர்க்குரிப் பூக்கள் தொடங்குகிறது.

சித்தன் என்றெல்லாம் யாரும் இல்லை என்று நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார். இல்லை நிஜம் எழுதுபவன் சித்தனாகத்தான் இருக்க முடியும் என்று இப்போது நம்புகிறேன். அதுவும் பாலகுமாரன் எழுத்து சித்தன்தான்.

எழுத்தா அது…? எழுந்து வந்த அது….!

மனைவியின் காதுக்குள் காமம் தலைக்கேறும் நொடியில் அவளைச் செல்லமாக தேவடியா என்றழைக்கும் கணவனைக் கண்கள் விரியக் காண்கிறேன். அந்தரங்கத்தின் நுட்ப வெளிப்பாடு கொப்பளிக்கிறது. புரியாதது போலப் படிப்பவருக்குத் தூரத்துச் செவிகள் தான். கலவியின் உள் செல்ல செல்ல பிரியும் நூல் தான் இவை என்பதைப் புரியாதோர்க்குச் சொல்ல எதுவுமில்லை. காதல் அசட்டுத்தனங்களால் நிரம்புகிறது. அவளும் அவனிடம் அப்படித்தான். என் ஆசை புருஷா என்று அவனுக்குள் புகுந்து கொள்கிறாள். அங்கே வெறும் காமக் களியாட்டம் இல்லை. இரு உடல்கள் மோதிக் கொள்ளும் இயந்திரத்தனம் இல்லவே இல்லை. பெருங்காதல் மடை புரண்டு ஓடுகிறது. அது கடைசி வரை ஓடுகிறது என்பதில் தான் இந்த சாவித்திரி உண்மையாக எமனை ஜெயிக்கிறாள்.

கணவன் கணேசன் கொலை செய்யப் பட்ட பிறகு அவளுள் கம்பீரமாய் ஒரு நதி பெருக்கெடுக்கிறது; எதிர் வினைகள் சிலபோது வினையின் பலத்தை முழுதாக எடுத்துக் கொள்ளும். கணவனின் முழு இடத்தையும் எடுத்துக் கொள்ள இந்த காலம் அவளைத் தள்ளுகிறது. எதிர்க்காற்று எதிரேவும் வீசும் என்பதாகப் பலப்படுகிறது அவளின் நாட்கள்.

அந்த நதி ஓடத்துக்கு அடைக்கலம் தருகிறது. பயணிகள் நியாயம் பக்கம் இருக்கும் இடத்தில் அவளின் நதி அவர்களைப் பாதுகாப்பாகக் கரை சேர்க்கிறது. நிஜத்தை முகத்துக்கு நேராக உண்மையின் பக்கம் நின்று அவள் பேசும் வசனங்களில் பாலகுமாரன் சாவித்திரியாகவே மாறிப் போனார் என்றுதான் நம்புகிறேன். கணவனின் தோழன்… கோபாலன் ஒரு கம்யூனிஸ்ட். அரசாங்கம் தேடும் குற்றவாளி. அவனை தன் 13 வயது பையனுக்கு அப்பாவின் நண்பர் என்ற உண்மையைச் சொல்லி, அறிமுகப்படுத்தி விட்டு, அவனின் ஒப்புதலோடு வாரக்கணக்கில் வீட்டில் மறைத்து வைத்து சோறு போட்டு அரசியலும் பேசும் சாவித்திரியின் கம்பீரக் குரல்..! குரல் வளை நெருக்காத நிஜத்தை அதே வண்ணத்தில் மூளையில் இறக்கும் கத்தி.

“அடுத்த ஒரு மணி நேரத்தில் சாப்பிட இலை போடுகிறேன்” என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டுச் சமைக்கத் தொடங்கும் நேரக்காரி. காரியக்காரி. கணவன் இறந்த பிறகு எல்லாம் முடிந்து விட்டது என்று முடங்கிக் கிடக்கும் பெண்ணல்ல இவள். ரஷ்யப் புரட்சி பற்றித் தெரியும் ஆனால் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சி பற்றித் தெரியாது என்று சொற்கள் கொண்டே நிஜம் விளாசும் இயல்பான ஆனால் இரும்பு மனுஷி.

போராட்டம் என்றாலே… சிவப்பு சிந்தனை உள்ளவர் எல்லாம் ஏதோ வேற்று கிரக மனிதர்கள் போல, ஏதோ ஓர் இயல்பைத் தொலைத்ததை போல ஒரு தோரணை உள்ளதைக் கணேசனைக் கொன்ற அந்த கூர் கத்தியின் காரணம் கொண்டு இச்சமுகத்தைக் குத்தி கிழிக்கிறார் பாலகுமாரன். ஆம்… இடதுசாரி என்பதும் ஒரு சிந்தனை. அது மட்டுமே சிந்தனை அல்ல என்று ஓர் இடதுசாரி சிந்தனையாளனாக என்னால் புரிந்து கொள்ள முடிந்த வரிகளை நான் பாடமாகத்தான் காண்கிறேன்.

தோழர் கணேசனைக் கொன்ற அந்த பால்சாமியை, சுப்பையா தோழர் பழி வாங்கும் காட்சி இரவு நடுங்கும் கோர்வை. அத்தனை தத்ரூபம். அடி பட்டு நொறுங்கி, இழுத்து மூடப்பட்டிருக்கும் அந்த ஆலையின் உரிமையாளரின் கதாபாத்திரம் மனசாட்சிக்கும் மாண்ட சாட்சிக்கும் இடையே சதா போராடிக் கொண்டே இருக்கும்…முதலாளிகளின் உளவியல். சிக்கல் நிறைந்த பொருளாதார கொள்கைகளை மறு பரிசீலனை செய்யும் அவகாசத்தை அந்த உரிமையாளர் கொடுத்திருப்பது சமன்பாட்டுக் கலவரம்.

“கொஞ்சம் சம்பளத்தை ஏத்தி தான் குடேன்.. குடுக்க முடியாமல் இல்ல… உன் ஈகோ இடம் கொடுக்கல…” என்று அவரின் அம்மா பேசும் போது சுளீர் எனக் கடிக்கின்றன……. இந்த தனிமனித தன்முனைப்புகள்.

ஒரு கட்டத்தில் சாவித்திரி மீதி கோபாலனுக்குக் காதல் மலருகிறது. வாழ்வு பற்றிய தர்க்கங்களைக் கொள்கை ரீதியாக விவாதம் செய்து கொண்டிருக்கையில்… பேச்சு போல.. அதுவும் ஒரு சித்தாந்தம் போலச் சொல்ல முற்படுகிறான்…

“அந்த சந்தோசம் என்ன தான் சொல்றது” என்கிறாள் சாவித்திரி.

“அந்த சந்தோசம் I love you சொல்ல ஆசைப்படறது” என்கிறான் அவன்.

“அப்புறம் என்ன சொல்லிட வேண்டியது தானே” என்கிறாள் அவள்.

அவன் ‘I Love you’ என்று சொல்லி விடுகிறான்.

அவளும் பதிலுக்கு ‘I Love you கோபாலன்’ என்று சொல்கிறாள்.

பிரச்சனைகள் சுமுகமாகத் தீர்ந்து ஆலை திறக்கப்படும் போது அரசாங்கமே வந்து அந்த இயக்கத்துத் தலைவனான கோபாலனை அழைத்துச் செல்கையில்… கண்களில்.. காதலைக் கொண்டு……அதைச் சுத்தமாக பரிசுத்தமாக்கிக் கொண்டு பிரிந்து செல்கையில்.. படக்கென்று, படிக்கும் நமக்குள்ளே சாவித்திரி புகுந்து விடுகிறாள்.

அதன்பிறகு சாவித்திரி தன் கணவன் கணேசனின் புகைப்படத்துக்கு முத்தமிட்டபடியே, ” I Love you கணேசன்….. I Love your தோழர்கள்” என்று சொல்லி அழும் போது அந்த கதாபாத்திரம் இன்னும் உயரத்துக்குச் சென்று கொடி நாட்டி விடுகிறது.

I LOVE YOU சாவித்திரி.


சங்கரனுக்கும் சியாமளிக்கும் காதல்.

காதல் என்றாலே சிக்கல் எனும் இச்சமூகத்தில் அவள் ஏற்கனவே திருமணமானவள் எனும்போது சிக்கல்களின் எடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

காதல்… என்றால் காதல். கன்னா பின்னா காதல். பக்கத்துப் பக்கத்து போர்சன். கணவன் வேலைக்குச் சென்று பிறகு… அவள் அவனறைக்கு செல்வது வழக்கம்.
கண்களால் பேசி.. காதலால் கூசி… முத்தத்தால் நனைந்து மொத்தத்தால் காய்ந்து பித்தம் தலைக்கேற.. பிதற்று நிலைக்குள் அவர்களின் புணரல்கள்……… கண்டிப்பாக, சத்தியமாகத் தவறாகவோ முகம் சுழிக்க வைக்கும் ஒன்றாகவோ தெரியவில்லை. கணேசனுக்கும் சாவித்திரிக்கும் படுக்கையில் என்னவெல்லாம் நிகழ்ந்ததோ, என்னவெல்லாம் அவர்கள் உணர்ந்தார்களோ, என்னவெல்லாம் பகிர்ந்தார்களோ அதுதான் இவர்களின் படுக்கையிலும் நிகழ்கிறது. அவளின் வானத்தில் அவன் தான் நட்சத்திரம். அவளின் பெருத்த கனவுக்கெல்லாம் அவன்தான் தூக்கம். அது ஒரு மாய தத்துவம். புரியாதோர் இப்போதும் எனைத் திட்டலாம்.

சியாமளி – இந்த பெயர் அத்தனை நெருக்கமாகி விடுகிறது. தன் சுயத்தைத் தேடி ஓடும் ஒரு தவிப்பான கதாபாத்திரம். காதலில் ஏது, நல்ல காதல் கள்ளக் காதல் எனக் கேட்காமல் கேட்கும் உணர்ச்சிகளின் அலைகளானவள்.

ஒரு கட்டத்தில் காதலன் சங்கரன் உடன் ஓடிப் போகவும் திட்டம் போடுகிறாள். அது தவறு போலத் தெரிந்தாலும்.. அது குனிந்து குனிந்து குட்டக் குட்ட அடிமையாகவே இருந்த ஒரு பெண்ணுக்குக் கிடைத்த ஆயுதமாகவே நான் காண்கிறேன். சரி தவறுக்கு அப்பாற்பட்டு ஒரு பெண்ணின் தான் சார்ந்த உணர்வாகவே காண்கிறேன். அவளின் உலகம் திசைகளற்றது. அது தானே பூக்கும் மலர்களானது. எந்த பதிலுக்கும் கேள்விக்கும் இடம் தராமல் நிகழ்ந்து விடும் சில திருமணங்கள் சியாமளி போன்றோரைக் காவு வாங்கி விடுகிறது. அதிலிருந்து மீட்டெடுக்கும் சங்கரன்களை காலத்துக்கும் நாம் சபித்துக் கொண்டே தான் இருக்கிறோம். கப்பம் கட்டுவது போலக் கால் அகட்டி தினமும் படுப்பதில் அவள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை. குறைந்த பட்சம் இன்று உனக்கு விருப்பம் இருக்கா என்று கூட பெரும்பாலான கணவன்கள் கேட்பதில்லை. எதிலோ எதுவோ நுழைந்த மாதிரி நுழைந்து விட்டு சாபம் கக்கிய பின் திரும்பிப் படுத்துக் கொள்ளும்… சியாமளியின் கணவன் போன்றோர்களால் சியாமளிகள் தங்களுக்கான காதலை தாங்களே தேடிக் கொள்கிறார்கள். மரபுடைவது இருக்கத்தான் செய்கிறது. தினமும் மார் வலிக்கக் கிடப்பவள் மனதை என்ன செய்வது…?

காலத்தின் அடிமை எனக் கிடக்கிறார்கள் பிடிக்காத கணவனோடு வாழும் சியாமளிகள். சங்கரன்கள் சரி என்ற வாதம் இங்கில்லை. சரி, எதுதான் சரி என்ற கேள்விதான் இங்கே..?

அவர்கள் கதைப்படி, நம் பண்பாட்டின்படி சேர்வதில்லை. ஒரு சூழ்நிலையில் சங்கரன் மிக மோசமாக சியாமளியிடம் எதிர் வினையாற்றுகிறான். அவள் அவனைக் கடந்து சென்று விடுகிறாள். அந்த காதல் யாருமற்ற அவர்களின் போர்சன் இடைவெளியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தவற விட்ட அந்த ரயிலாய் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. அந்த காதலுக்கு அழுகவும் தெரியவில்லை. வரும் அழுகையை நிறுத்தவும் தெரியவில்லை.

அவனுக்கு வேறு பெண்ணோடு திருமணம். அவளும் பெண் தானே. அவளின் காதல் வேறு விதமாக இருக்கிறது. கல்யாணம் செய்து கொடுக்க முடியாத அப்பாக்களின் மகள்கள், காதலை மிக நுட்பமாகக் கையாள்பவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒரு ஜாக்கிரதை உணர்வு இருக்கிறது. இந்த பெண்ணும் அப்படித்தான்.

தோற்ற மயக்கங்கள் மாறினாலும் காதல் காதல் காதல் காதல் மாறுவதேயில்லை. அது கொண்ட அத்தனை தசை நார்களிலுமே காமமே ஆதி வருடியாக அடி வருடியாக நகம் கடித்துக் கொண்டிருக்கிறது. காமமும் காதலும் சரிசமமாய் இணையும் புள்ளியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து காலம் முழுக்க வாழ்ந்து விட முடிகிறது. இல்லையென்றால்.. அவர்கள் நிஜமாகவே சேர்ந்துதான் வாழ்ந்தார்களா என்பது வாழ்ந்தவர்களுக்கே வெளிச்சம்.

வரிக்கு வரி.. ஞானத் தத்துவங்கள்…! வாழ்வின் பித்து நிலைகள்..! இயலாமையின் முக்தி நிலைகள் என பாலகுமாரன் அடித்து நொறுக்குவது அரசாங்கத்தை மட்டும் அல்ல.., அவர் சார்ந்திருக்கும் சமயம், சாதி மட்டுமல்ல. ஒட்டு மொத்த மானுட குதர்க்கங்களை., மானுட சுயநலன்களை.., மானுட எதேச்சதிகாரத்தை., மானுட விட்டேத்தித்தனங்களை., மானுட வியத்தல்களை., தனிமனித உறவுச் சிக்கல்களை அக்கு வேறு கொக்கி வேறாகப் பிரித்துப் போட்டு பறவை செய்து பறக்க விடுகிறார். வானம் முழுக்க சுதந்திரம் தான்..!

மன்னி கதாபாத்திரம் அபாயகரமான அதே சமயம் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள மனசாட்சிக்கு நடுங்கி வாழும் பாத்திரம். இந்த மாதிரி பாத்திரங்கள் கடைசி நேரத்தில் கவிழ்த்தி விடுவார்கள். இங்கும் அது நடக்கிறது. பயங்கரமாய் நடக்கிறது.

குறைந்த பட்சம் ஒரு வாழ்தலுக்குத் தான் இந்த மனம் பாடாய் படுகிறது. அதில் பங்கிட்டுக் கொள்ளும் ஆத்மா சகதர்மினியாக இருக்க வேண்டும். சகதர்மனாக இருக்க வேண்டும். தினமும் புணர்தல்கள் மட்டுமே இணைக்கான தகுதி கிடையாது. புணராத இரவிலும் தர்மனாக தர்மினியாக இருத்தலே வாழ்வின் சூட்சுமம். அன்பையும் அழகையும்.. பாசத்தையும் நேசத்தையும் சுட்டுப் போடும் தோசையில் கூட கண்டு கொள்ள முடியும் என்பதால்…..

இந்த சித்தன் வாக்கு என்னைத் தூங்க விடாமல் செய்த யுத்தப் போக்கு…..!


– கவிஜி

 

நூல் தகவல்:
நூல் : மெர்க்குரிப் பூக்கள்
வகை : நாவல்
ஆசிரியர்: பாலகுமாரன்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
வெளியான ஆண்டு : முதல்  பதிப்பு : 1981

22-ஆம் பதிப்பு : 2016

பக்கங்கள் :  336
விலை : 180
Buy on Amazon :

இரும்பு குதிரைகள்/ மெர்க்குரிப் பூக்கள்/ நிழல் யுத்தம்

குறிப்பு :

இந்நாவல் சாவி இதழில் 34 வாரங்கள் தொடராக வெளிவந்தது. பின்னர் இந்நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டது.     

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *