ம்பது வருடங்களுக்கு முன்பு காவேரி நதியின் வழித் தடத்தின் ஓரம் பயணித்தவர்களின் அனுபவங்களோடு அவர்களது இலக்கிய அறிவும் கலந்து எழுதப்பட்ட செவ்வியல் பயணநூல்.

தற்போது நிறைய முகநூல் எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் என்று பட்டயம் தூக்குபவர்களைவிடச் சிறப்பான எளிய நடையில் எழுதி வருவது போல் இந்நூல் நேரிடையான மொழியில் நம்மிடம் பேசுகிறது. அதேசமயம் இப்பொழுது போல் பொய்மையின் நீட்சியில் கிளைத்த இணையத்தகவல்களைத் திரட்டி எழுதும் சோடனையின் பகட்டில்லாது வடித்த சோற்றுக் கஞ்சியின் உறுதியையும் ஆரோக்கியத்தையும் கொண்டதாக மிளிர்கிறது.

ஒரு நதியின் வழியே பயணிப்பது நமது பூர்வீக பாரம்பரிய வரலாற்றுத் தடங்களை அகழ்ந்தெடுப்பது போன்ற ஆர்வத்தைத் தூண்டும். இயற்கையில் மனிதனின் ஆதி நினைவுகள் முழுவதும் பதிந்து தலை தலைமுறையாகப் பாதுகாத்திடும் அரிய மூலம் மண் மட்டுமே. இதனால் தான் மலையும் மலையில் பிறக்கும் நதியும் நம் நினைவுகளைச் சுமந்து வருவதோடு நமது பாவங்களையும் கூடுதல் சுமையாக ஏற்றுக்கொண்டு கடலில் கலந்து கண்ணீர் விடுகிறது அல்லது வரும் வழியில் காற்றில் ஆவியாகிக் கலந்து மௌனித்து விடுகிறது.

காவேரி நதி தற்போது இரு மாநிலத்திற்குமிடையே உள்ள தீராத பிரச்சனையின் கூற்றாக மட்டுமே அரசியல் தலைவர்களால் இளைய தலைமுறையினருக்கு உருவகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நதி நீர் பூமியின் உதிரம் போன்றது. மனிதனின் வேர்கள் பூமியின் உதிரத்தைப் பாலற்ற தாயின் மார்பகத்தைப் பற்றியிழுக்கும் குழந்தை போல் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. இது வெற்று மயக்கம். போதையை மட்டும் தரக்கூடியது. பசியாற்றப் போவது கிடையாது. குருதி பாயும் நாளங்கள் பல இடங்களில் அறுத்தெறியப்பட்டுள்ளன. மிஞ்சியிருக்கும் சில வழித்தடங்களும் தூர்ந்து போயுள்ளன.

50 ஆண்டுகளுக்கு முன்பு சிட்டி & தி.ஜா குழுவினரின் நடந்தாய் வாழி காவேரி பயணம் சென்னை-பெங்களூர் சாலையில் துவங்குகிறது. பின்பு கொள்ளேகால் -சிவசமுத்திரம் – ஸ்ரீரங்கப்பட்டணம்- திருமுக்கூடல்-மைசூர் – சித்தாபூர்-மடிக்கேரி- பாகமண்டலா என பயணம் செய்து காவேரி சிறு கீற்றெனப் பிறப்பெடுக்கும் தலைக்காவேரி (கடல் மட்டத்திலிருந்து 4187 அடி உயரம்) பிரம்ம கிரி குண்டத்திற்கு போய் சேர்கிறது. பின்பு காவேரி பெரும் பாய்ச்சலாகக் கர்நாடகத்தின் காடு, மலைகள், கழனிகள் வழிப்புகுந்து தமிழகத்திற்கு வரும் காவேரியின் பயணப்பாதையில் இக்குழுவின் பயணமும் நீள்கிறது. கர்நாடகத்தை விடத் தமிழகத்தில் காவிரியாற்றின் பயணம் தூரம் அதிகம் கொண்டதாக உள்ளது.

ஆடு தாண்டும் (மேகதாட்டு) காவேரி, அகண்ட காவேரி, அருவியாக உருமாறும் காவேரி, அணைகளில் ததும்பும் காவேரி, கிளை ஆறாகப் பிரியும் காவேரி, கிளை ஆற்றுடன் சங்கமிக்கும் காவேரி, ஓடையாக இளைத்த காவேரி, வாய்க்கால் உருவில் ஒதுங்கும் காவேரி என இவர்கள் சுற்றிய இடங்களில் எல்லாம் நதி நீர் இருந்திருக்கிறது. எங்கும் கட்டாந்தரை காவேரியைக் காட்சிப்படுத்தவில்லை.

“பூவர் சோலை மயிலால,
புரிந்து குயில்கள் இசைபாட,
காமர் மாலை அருகசைய நடந்தாய்;
வாழி, காவேரி!”

என இளங்கோவின் பூரிப்பை நாங்களும் அடைந்து கொண்டே சென்றோம் என்று எழுத்தாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். அப்படியெனில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் நீர் நிரம்பிய நதிப்பரப்பில் தான் நீச்சல் பழகியுள்ளார்கள். நம்மைப் போல் மணல் நிரம்பிய கட்டாந்தரையில் அல்ல.மன்னிக்கவும். மணல் அற்ற வெறுந்தரையில்…

அப்போதே இந்நாள் அழிவிற்கு அரசு நிர்வாகம் வகுத்த வளர்ச்சி திட்டப்பணிகள் பற்றிய குறிப்புகளும் காணமுடிகிறது. கி.பி. 1924-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே மைசூர் அரசாங்கத்திற்கும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் காவேரி தொடர்பான தகராறு இருந்திருக்கிறது. பின்பு அது ஒப்பந்தம் மூலம் தீர்ந்தது. 1931 -ல் கிருஷ்ணராஜசாகர் அணையும் 1934-ல் மேட்டூர் அணைத்திட்டமும் நிறைவு பெற்றன. அதன் பின்பு இரு பகுதிகளிலும் நிறைய அணைகள் பெருகியுள்ள போது ம் கராறு தீர்ந்தபாடில்லை. கர்நாடக பகுதியில் இருக்கும் காவேரி மழைப்பிடிப்பின் அளவைவிடத் தமிழகத்தின் பெரும் பரப்பைக்கொண்ட காவேரி ஆற்றின் பகுதிகளையொட்டிய மழைப்பிடிப்பு அளவு ஏன் குறைந்து போனது? ஆற்றையோட்டியிருந்த பசுமையின் பரப்பு எதனால் குறைந்தது? ஆற்றில் தொழிற்சாலை ரசாயணக்கழிவுகள் நிரம்பி வழிவதை யார் அனுமதித்தது?
கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆற்று மணல் எடுக்கும் தடை அமுலிலிருந்த போது ஆறுகளில் மணல் எடுத்து கப்பலில் ஏற்றுமதி செய்ததும் பின்பு வரைமுறை என்ற பெயரில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கத் தடை வகுத்ததும் பெருநகரங்களுக்கு லாரிகளில் எண்ணிக்கையற்றுப் போனதின் பின்னணியும் என்ன? இன்று கருங்கல் பொடியில் பலர் வீடு கட்டும் போதும் பெருமக்களுக்கு மட்டும் இரவுகளில் ரகசியமாக மணல் போவதின் பொருள் என்ன?

காவேரி நீருக்குப் போராடும் அதே சமயத்தில் பெருமழையின் போது திறந்து விடப்படும் காவேரி நீர் ஆற்றில் நடந்து செல்லாமல் பெரு ஓட்டக்காரனாய் கடல் நோக்கி ஓடிக் காணாமல் போய் விடுகிறது. கட்டாந்தரையில் நீர் பிடித்து களம் களமாய் நெல் விளைவிக்க முடியாது.சென்னையின் கூவம் நதியின் புராண மற்றும் வரலாற்று குறிப்புகளைச் சாக்கடையில் தொலைத்துவிட்டு மூக்கை பொத்திக்கொள்ளும் மனிதனின் நவீன வளர்ச்சி வியப்பானது.

நமக்கு நிறையக் கேள்விகளுக்கு விடைத் தெரியும். இருப்பினும் விடைத் தெரியும் கேள்விகள் செயலற்றவை என்பதே எதார்த்தம். ஆட்சிகள் மாறும். வாக்குறுதிகள் மாறும் ஆனால் காவேரியின் வாழ்வு முன்பு போல் மறாதா…?! என்கிற ஏக்கம் விதிர்ப்பாகத் தான் இருக்கிறது. இப்புத்தகம் இக்கால சூழ்நிலைக்குப் பொருந்தாமல் மாறிவிட்ட புள்ளி விபரங்கள் மூலம் நிறையக் கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல் குளறுபடியான பயணத்திட்டங்கள் கொண்டதாகவும் உள்ளது. இதனைப் பின்பற்றினால் ஏமாற்றம் மிஞ்சும். என் அனுபவத்தில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பே இந்நூல் குறிப்பிடும் இடங்களின் சுயதரிசனத்தை பொருத்திப் பார்த்துக் குழம்பி நிற்கிறேன்.

நதியின் தடத்தை நாம் வழி மறித்துக்கொண்ட போதும் அதன் கரையோரம் விளைவித்த ஆன்மீக கலை கலாச்சார மையங்களாக விளங்கிய கோவில்களையும் குறிப்பாக காவிரிக்கரை பாரம்பரிய இசைக்களித்த இனிமையின் பங்களிப்பு பற்றியும் இந்நூல் நாவில் விழுந்த தேன்துளி போல் அதன் நினைவு பொக்கிஷத்தைச் சுவைக்க வைக்கிறது. பல்வேறு மனிதர்களின் மனங்கள், ஊர்களின் பெருமைகள், தங்குமிடங்கள், உணவு வகைகள், வரலாற்று ஒப்பீடுகள்-தொடர்புகள், கரையோர மக்களின் கலாச்சார விழுமியங்கள், காவேரியின் பாரம்பரியக்கதைகள், கவிதைகள் எனக் கட்டுரைகள் விரிவடைகின்றன.

பூம்புகாரிலிருந்து கோவலன் கண்ணகி பயணித்த மதுரை நோக்கிய பெருவழி பாதையின் காவேரி நதிக் கரையோரமாக அவர்கள் நடந்திட்ட இலக்கிய புவிசார் குறியீடுகளையும் தங்கள் பயணத்திட்டத்தில் செயல்படுத்தியுள்ளது இனிமை. இது நூலுக்குப் பெருமையைச் சேர்க்கிறது.

நடந்தாய் வாழி காவேரி பயணக்கட்டுரைக்காக நடந்து சென்று அதை எழுத்தாக்குவது அசாத்தியம் தான் என்றாலும் அப்படிச் செயல்படுத்தியிருந்தால் இந்நூல் நதியின் பயணக்கட்டுரை வரிசையில் மணிமகுடமாக இருந்திருக்கும்.

நேரிடை காட்சி உள்வாங்கலில் சூட்டோடு சூடாகப் பயணத்தின் போது வரைந்த நிறையக் கோட்டோவியங்கள் புத்தகத்திற்கு அழகு சேர்க்கிறது. அது வாசிப்பின் கற்பனைக்கு விருந்தாகிறது. நதியோடு பயணப்படுவது கதவுகளைத் திறக்கும்.


மஞ்சுநாத்

 

நூல் தகவல்:
நூல்: நடந்தாய் வாழி காவேரி 
பிரிவு : பயணக்கட்டுரை
ஆசிரியர்கள்: சிட்டி-தி. ஜானகிராமன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு  2007
விலை: ₹ 350
 பக்கங்கள் 288
Buy on Amazon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *