கலை இலக்கியத்தில் நாள்தோறும் ஏதோ ஒரு அறிமுகமில்லாத, கிராமத்தின் வீதியிலிருந்து கூட இன்றைக்கு  கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவலென பல் வேறு வகைமை நூல்கள் வெளியாகின்றன..  புத்தகக் கண்காட்சியிலும், புத்தகக் கடைகளிலும் அடுக்கப்பட்டிருக்கிற நூல்களைப் பார்க்கிற போதெல்லாம் இவ்வளவு நூல்களையும் வாசிக்க யார் இருக்கிறார்கள் ? எந்த நம்பிக்கை இத்தனை நூல்களாக வெளிவருகிறதென ஆச்சரியப்படுவோர் பலர் இருக்கிறார்கள்.

இவ்வளவு நூல்களுக்கிடையில் நூல்களைப் பற்றிய நூல்கள் எத்தனை வருகிறது? அவற்றிற்கான ஆதரவு எவ்வாறு உள்ளது? குறிப்பிட்ட அளவேயான நூல்களே வருகின்றன. துவக்க நிலை படைப்பாளிகளுக்கு சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்க பொருத்தமான நூல்கள் தேவையிருக்கின்றது. ஆனால் இளம்படைப்பாளிகளாக அறிமுகமாகிற சிலரே பொருத்தமான வாசிப்பு அனுபவங்களோடு  களத்திற்கு வருகின்றனர். சிறந்த நூல் என்பது விருது பெற்ற நூலாகவோ, பலரால் முன்னிலைக்கு நகர்த்தப்பட்ட நூலாகவே பலருக்கும் அறிமுகமாகிறது. மற்ற நல்ல நூல்கள் பார்வைக்கு வருவது மிகக் குறைவே!

சிறந்த நூலை வாசிப்பதென்பது  ஒரு தலைமுறை அனுபவங்களை ஒரே வேளையில் பெறுவதுதான். நூல்களைக் குறித்தான ஒரு நூலை வாசிக்கிற போது ,நிகழும் படைப்பாற்றலும், அறிந்த உலகமும் எதனோடும் ஒப்பிட இயலாதது.

ந .பெரியசாமியின் மொழியின் நிழல் நூல் தலைப்புக்கேற்ற கட்டுரைகளாக  நூலைச் சிறப்பிக்கின்றன.

சிறந்த அனுபவங்களைத் தருகிற சிறந்த நூலாக, காலத்தின் தேவை கருதிய நூலாக “மொழியின் நிழல் ” வெளிவந்திருக்கிறது.

தான் வாசித்த நூல்களைக் குறித்த இக்கட்டுரையில் சிறப்பானதென கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடலாம்.

  •  எந்தவொரு கட்டுரையிலும் ,தன் மேதமையை வெளிப்படுத்தாமல் ,வாசிப்பின் வழியே தான் கண்ட அனுபவங்களை இயல்பான மொழி நடையில்  எடுத்துக் கூறியுள்ளார்.
  •  தேவையான இடங்களில் தன் வாழ்வில் நடந்த நிகழ்வோடுகளோடு ,படைப்பாளியை இணைத்து கட்டுரை படைக்கப்பட்டிருக்கிறது. இது வாசிப்பைத் தூண்டும் ஊக்கியாகிறது
  •  கவிதைகளுக்கான  தனது கருத்துகளுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தும் மேற்கோள்கள் யாவும், இவரின் ஆழ்ந்த  வாசிப்பு அனுபவத்தை மையப்படுத்துகிறது. மேற்கொண்டு ,அந்த மேற்கோள்களைப் பின் தொடரத் தூண்டுதலாகிறது.
  • சிறந்த நூல்களைப் பற்றி எழுதும் போது, வாசிப்பிற்காக நூல்களைத் தேடுகிறவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகிறது.
  • நாற்பது கட்டுரைகளும் கூறியது கூறல் இல்லாமல் ,சுருக்கமாகவும் ,செறிவாகவும் அமைந்துள்ளது.பல்துறை நூல்களும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளதால் எல்லா நிலை வாசகர்களுக்கும், திருப்தியான அனுபவங்களைத் தருகிறது.
  •  ஒரு நூலைப் பற்றி எழுத நினைக்கும், வாசகருக்கு கட்டுரையை எப்படி கட்டமைக்க வேண்டும் என்ற பயிற்சியாகவும் உள்ளது.

ஒரு கவிதைக்குள் எப்படிப் பயணிப்பதென்கிற வழிகாட்டுதலை கட்டுரைகள் எடுத்துச் சொல்கின்றன.

எடுத்துக்காட்டாக முதல் கட்டுரையில் சாகிப்கிரான் கவிதைகளைப் பற்றிப் பேசும் போது கவிதை வரிகளுக்கிடையே இடைவெளியென்பது எதையெல்லாம் இட்டு நிரப்புகிறது? என்பதை சுவையாக கூறுகிறது கட்டுரை. அதே கட்டுரையில் தீட்சை என்ற சொல்லின் வழியே கவிதையை நமக்கு வழங்கும் விதம், கவிதைக்குள் ஒளிந்திருக்கும் மாய அழகை விவரிக்கிறது.

இரண்டாவது கட்டுரையில் ” சொல்கலை” என்ற கம்பனின் சொல்லோடு துவங்கியுள்ள விதம்  மேற்கொண்டு கட்டுரைக்குள் எளிதாக அழைத்துச் செல்கிறது. சிறுகதை, நாவல்களின் மொழிநடை எளிதாக கடைசி பக்கம் வரை நம்மை அழைத்துச் செல்வது இயல்பு. ஆனால் நூல்களைப் பற்றிய கட்டுரைகளுக்கு அப்படி வாய்ப்பது அரிது. வெறுமனே கவிதை வரிகளை எடுத்து எழுதி ,சிறப்பித்துள்ளார், எடுத்துக் கூறுகிறார் என்றெல்லாம் சமாளிக்காமல் ,ஆழ்ந்த வாசிப்பிற்குப் பின் வருகிற சொற்களால் இக்கட்டுரைத் தொகுப்பு பின்னப்பட்டிருக்கிறது.இது கவிதைகளைப் பற்றிய வேறொரு பார்வையாக பார்க்கவும் துணையாகிறது. கட்டுரையாளரின் முன் முடிவுகளைக் கொண்டிருக்கவில்லை.

பாக்கியம் சங்கரின் நூலிற்கு சுருக்கமாக ,அதே வேளை பொருத்தமாக அமைந்துள்ள கட்டுரையை அவசியம் பாராட்ட வேண்டும்.

தான் பார்த்த நாடகம் குறித்தும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.” உடைந்த  கண்ணாடி வளையல் துண்டுகளை ஒரு பாட்டிலில் போட்டு நீர் நிரப்பி, குலுக்கிக், குலுக்கி, அலைவுறும் பல்வேறுப்பட்ட நிறங்களின் கலவையை  ரசித்து  ,ரசித்து விளையாடும் குழந்தைகளின் மனத்தன்மையைக் கொண்டது நம் நிலம். …” இப்படி விவரிக்கிற இவரின் விவரணை நாடகத்தைப் பார்த்திருக்கலாமே என்கிற எண்ணத்தைத் தூண்டுகிறது.

வெள்ளிவீதியாரின்  பாடலை இவரின் தனித்துவ பார்வையில் நோக்கும் ஆய்வுப்பார்வை சிந்தனைக்குரியது.

நாற்பது கட்டுரைகளும் பரந்த வாசிப்பைத் தரும் நூலகக் கருவூலம்.  நூல்களைத் தேடிப் படிப்போர்க்கு சிறந்த  நூல் அலமாரி. இப்படியான நூல்களே இப்போதைக்குத் தேவையாகவும் இருக்கிறது. சிறந்த கவிஞராக அறியப்பட்ட ந.பெரியசாமி சிறந்த கட்டுரையாளராகவும் இத்தொகுப்பு நமக்கு அறிமுகப்படுத்துகிறது.  நல்ல நூல்களைத் தேடிப் பதிப்பிக்கும் தேநீர் பதிப்கத்திற்கு வாழ்த்துகள் !

  – க.அம்சப்ரியா 

 

நூல் தகவல்:

நூல் :  மொழியின் நிழல்

பிரிவு : கட்டுரைகள்

ஆசிரியர்:  ந.பெரியசாமி

பதிப்பகம் :  தேநீர் பதிப்பகம்

பக்கங்கள் : 188

வெளியான ஆண்டு :  2021

விலை :  ₹ 180

தொடர்புக்கு : 9080909600

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *