னதுக்கு நெருக்கமான ஒரு நகுலனைப் போலத் தெரிகிறார். இன்னும் கொஞ்சம் நெருங்கினால் தஸ்தாவெஸ்கியை உணர்வது போல இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நெருங்கினால் தாடி வைத்து சொட்டையான நானே போலத் தான் இருக்கிறது.

இலக்கிய உலகில் தஞ்சை ப்ரகாஷின் இடம் இப்போது அவர் இருக்கும் இடமல்ல என்பது மட்டும் மனதுக்குள் தலை விரித்துக் கத்துகிறது. ஆதி நாதம் எங்குச் சுழல்கிறது என்று காட்டிய எழுத்துக்கு சொந்தக்காரரை இன்னமும் நாம் தஞ்சையிலேயே வைத்திருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. நிஜம் சுடும்தான். சுட்டவரெல்லாம் ஓடி ஒளியப் பட்டவரெல்லாம் தேடி அலைய விடும் சூட்சுமம் இவரின் பக்கங்களில். இருத்தலின் இடத்தைக் காட்டியவர். சிறகுகளால் வானம் நெய்தவர். இவரின் நேசிப்புகளில் எப்போதுமே ஒருவித மூர்க்கம் இருக்கிறது. காதலின் பெரும் வெளியில் முத்தமிட்டே சொட்டும் குருதியில் முகம் காணும் தீவிர போக்கு அது.

இவருடைய மூன்று நாவல்கள்  “கரமுண்டார் வூடு, கள்ளம், மீனின் சிறகுகள்

மூன்றையும் அடுத்தடுத்து வாசித்து விட்டு ஒற்றை காகமென கத்தி திரியும்., தீராத ஓவியத்தை நானே மீண்டும் மீண்டும் வரைகிறேன். வரைந்த எல்லாமும் கரையும் அற்புதத்தனத்தில் யாவுமே நிறைகிறது.

அவரின் கதை நாயகிகள் அல்லது நாயகிகள் போல இருக்கும் பாத்திரங்கள் முரண்பட்டவையாகத் தோன்றலாம். ஆம்.. தோன்றுகிறது அவ்வளவு தான். தங்களின் உள்ளே, வெகு உள்ளே அழுத்திக் கொண்டு திரையிட்டு மறைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை பெண்களையும் கொஞ்சம் நெருங்கிப் பழகிப் பார்த்தால் இயல்பாகவே அவர்களின் இயல்பைக் காண முடியும். சிறியவர்கள், பெரியவர்கள், நடுத்தரம், இளையது என்று வாழ்நாளெல்லாம் கண்ட பெண்களில் உணர்வுப் பூர்வமாய் அலைந்து திரிந்தவர்கள் ஏராளம். ஒருபோதும் தங்களை முன் நிறுத்தாத காதலிகளை நான் அறிவேன். அவர்களின் ஆழம் மிகத் தீவிரமாகப் பறி தவித்ததை நான் உணர்ந்திருக்கிறேன். பெண்களின் ஆதி மனதுக்குள் ஒரு பெண் இருக்கிறாள். அவளை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை. இந்த வாழ்வு உடலையே முன் வைக்கிறது என்ற உண்மையை நாம் புறக்கணித்தே வந்திருக்கிறோம். அதைப் போட்டு உடைகின்றன இவரின் நாவல்கள்.

இங்கு மூடியே மூடியே இட்லி வேக வைத்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் உறவுகளில் பெண் மனதின் தோற்றங்களை., தூரங்களை.., சற்று கிட்டச் சென்று காண்பிக்கும் தஞ்சை பிரகாஷ்-ஐ சற்று தள்ளி நின்று தான் பார்க்கும் வேடிக்கை மனம்.

ஓஷோவையே திட்டிய உலகம் ப்ரகாஷ்- ஐ திட்டுவதில் வியப்பேதும் இல்லை. இவரின் கதாபாத்திரங்கள் பக்கத்துக்குப் பக்கம் மாறக் கூடியவை. அதுதான் நிஜம். மனதின் அசைவுகளை, நகர்வுகளைத் தொடர்ந்து கவனித்தால் அதன் கிறுக்குத்தனங்கள் புலப்படும். கிறுக்குத்தனங்கள் இல்லாத போது மனிதன் செயல்படாமல் போகிறான். பைத்தியமாகிப் போகிறான். பிணமாகிப் போகிறான். மனம் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. அதே சமயம் இயற்கைக்கு உட்பட்டது. நாம் இயற்கையை மீறிய கட்டுப்பாடுகளைத்தான் நாகரீகம் என்று பூட்டிக் கொண்டு திரிகிறோம்.

இவரின் கதைகள் கிளைக்கதைகளால் நகரக்கூடியவை. தொடர்ந்து கதாபாத்திரங்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். பெண் பாத்திரங்கள் தங்களின் யோனியின் வழியே இவ்வுலகை ஆள்கிறார்கள். அதன் வழியே மீண்டும் மீண்டும் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நிஜங்களைப் போட்டு உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். வெட்கம் இல்லாத வெளி அது. அதில் தங்களின் சிறகுகளை தாங்களாகவே அசைத்துக் கொள்ளும் சாகசக்காரிகளாகவும் இருக்கிறார்கள். தங்களின் தேவையை உணர்ந்தவர்களாகவும் உரிமையைப் பேசுபவர்களாகவும் உண்மைக்குப் பக்கத்தில் தகதகப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

புணர்தலின் முடிச்சைப் பெண்ணே முதலில் அவிழ்க்கிறாள். அவளுக்குத் தேவை இருக்கிறது. அப்படித்தான் அவளின் உடல் படைக்கப் பட்டிருக்கிறது. அதன் போதாமையால் கிடந்து தவிக்கிறாள். ஆண் சமூகம் இன்னமும் அவளைக் கீழே போட்டுத் தான் புணர்கிறது. புணர்ச்சியில் கூட மேலே இருக்க அனுமதிப்பதில்லை. இன்னமும் இங்குக் கலவி சரியாகப் பரந்த விவாதத்துக்குள் வரவில்லை. குறைந்த பட்சம் கணவன் மனைவியின் பகிர்தலுக்குக் கூட வரவில்லை. இன்னமும்.. மனைவியை முழுதாக நிர்வாணமாகக் காணாத எத்தனையோ கணவர்கள் இருக்கிறார்கள். அதே தான் பெண்களுக்கும். ஆனால் அவர்களுக்குப் பேரன் பேத்திகள் கூட வந்து விட்டிருக்கிறார்கள். அந்த லட்சணத்தில் தான் இவ்வாழ்வின் அடித்தளம்- செக்ஸ்- கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது உடல் தேவை என்பதும், வயிற்றுப் பசி போலத் தான் அதுவும் என்ற புரிதலும், மிகவும் குறைவாகவே அறியப்பட்டிருக்கிறது. காலையில் திருமணம் முடிந்து மாலையில் அம்மணமாய் படுக்க வைக்கும் இச்சமூகத்திற்குப் புணர்தலின் கலை பற்றி என்ன தெரியும்….?!

தேகத்தின் விளிம்பு நிலையைத் தேகத்தின் தகிப்பை உணர்ந்தோர்க்குப் புரியும். ஆனால் புரியாத மாதிரியே இருந்து பழகிக் கொண்ட சோ கால்ட் சமூகத்தால் அது அப்படியே புரிய முற்படாமலும் புரிந்தாலும் மறைத்துக் கொள்கிற மனவியாதியுடனும் தான் இருக்கிறது.

நாம் எதையெல்லாம் பேச மறுத்தோமோ அதையெல்லாம் ப்ரகாஷின் கதைகள் பேசுகின்றன.

கதை மாந்தர்கள் அப்பட்டமாகப் பேசுகிறார்கள். உடல் தேவை குறித்து கோபமாகவும் காதலாகவும் சட்டெனத் தோன்றும் முரண்பாடுகளாகவும் சந்தர்ப்ப சூழல்களாகவும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். முகத்தில் அறையும் இருட்டின் வாசம் முகமூடியைக் கிழிக்கிறது. இந்த மூன்று கதைகளிலேயும் பிரதானம் உடல். உடலே மூலம். அதன் மூலமே இங்குக் காதலும் கவர்ச்சியும் முத்தமும் யுத்தமும்.., இன்ன பிற எல்லாமும். கலவி சரி இல்லை என்றால் அந்த குடும்பம் ஆட்டம் கண்டு விடும் என்ற உண்மை புரியாமல் தான்… இன்னமும் தனித்திருக்க அவகாசம் இல்லாமல் கணவனும் மனைவியும் சண்டையிட்டு, முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினை ஒன்றுமேயில்லை. வாரம் மூன்று முறை புணர விடுங்கள். அவ்வளவு தான்.

பெண்கள் வீக்கர் செக்ஸ் என்பதெல்லாம் கண்டிப்பாக கிடையாது. அவர்கள் நிஜத்தில் ஸ்ட்ராங்கர் செக்ஸ். அதை ஒப்புக் கொள்ள இடம் தராத ஆண்களின் ஈகோ தான் அவர்களை வீக்கர் செக்ஸ் என்று சொல்லி மட்டம் தட்டுகிறது. அவர்கள் எல்லாவற்றிலுமே ஸ்ட்ராங் என்பது தான் இங்குச் சிக்கலே. அதை எதிர் கொள்ள முடியாத தத்து பித்துக்கள் தான் பொதுவெளியில் கலவி பற்றிக் கூட பேசவே தயங்குகிறார்கள்.

இந்த மூன்று கதைகளிலேயும் பெண் பாத்திரங்கள்தான் ஆணி வேராக இருக்கிறார்கள். நிஜத்திலும் இவ்வுலகில் பெண்களே ஆணி வேர்கள். அவர்களே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறார்கள். அவர்களே ஜனனமாகவும் மரணமாகவும் இருக்கிறார்கள். அவர்களின் தொடைகளுக்கு நடுவே தான் இந்த பூமி சுழல்கிறது. அவர்கள் கால்களைத் திறக்காத போது பூமி கிடைப்பதில்லை. புணர்தல் என்பது வாழ்வின் ஒரு பகுதி. புணர்தல் நான்கு சுவருக்குள் தான் இருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது பற்றிய கல்வி நாலா பக்கமும் தெரிந்திருக்க வேண்டும். அது குறித்த இயல்பான ஒரு போக்கு அவசியமாகப் படுகிறது. கலவி கல்வி இல்லாததால் இங்கு நடக்கும் குளறுபடிகள் எத்தனை எத்தனை என்று நான் சொல்லத் தேவையில்லை. இச்சூழலில் தான் இவரின் கதைகள் ஒரு புள்ளியில் நின்று வேடிக்கை பார்க்கிறது. அப்புள்ளியின் நீட்சியின் சுழற்சி எங்கெல்லாம் வேதியியல் மாற்றத்தை இந்த உயிரியல் வாழ்வில் நிகழ்த்துகிறது என்று வேடிக்கை பார்க்கிறது. வேடிக்கை பார்ப்பதைக் கூட அப்பட்டமாகச் செய்கிறது.

இந்த வாழ்வு… ஆணும் பெண்ணும் சேர்ந்தது. மாறி மாறி தங்கள் உடலாலே தான் தங்களை உணர்ந்து கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மனம் என்று ஒன்று இல்லவே இல்லை. எல்லாமே மூளை தான்.

கலவியில் நெருக்கம் கொண்ட கணவன் மனைவியே நெடுங்காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ப்ரகாஷின் கதைகளை வெளிப்பூச்சுக்கு முகம் சுழித்து விட்டுப் போகலாம். தனித்திருக்கையில் தாவிப் பிடித்துக் கட்டிக் கொண்டு தானிருப்பான் வாசகன்.

பசி அற்ற வாழ்வு எப்படி இயங்கும். அதுதான் ப்ரகாஷின் எல்லா தேடலும். அவரின் தொலைதலும் கூட இந்த பசிக்குள்தான். பெரும் பசியின் தீரா கனலை அவர் தன் எழுத்தின் வழியே சுமந்து கொண்டே திரிகிறார். சம்பிரதாயங்களைக் கேள்வி கேட்கிறார். முரண்களைக் களைகிறார். உடலின் தேடலுக்கு மரியாதை கொடுக்கிறார். உண்மை என்று நம்பியதைத் தொடர்கிறார். அழுக்கை அழுக்கென்றே சொல்லி அது மேலும் கூடாமல் பார்த்துக் கொள்கிறார். கலவியே அடிப்படை என்று பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார். புரியாதோர் புரிய முற்படுகிறார்கள். புரிந்தோர் புரியாதது போலத் தட்டிக் கழிக்கிறார்கள். வீட்டில் வயது வந்த பையனையோ பெண்ணையோ வைத்துக் கொண்டு புணர்தலுக்கு வழி இல்லாத கணவனும் மனைவியும் அல்லது, வயதாகி விட்டது, ‘இனி எதற்கு’ என்று வாய்ப் பேச்சுக்குப் பூச்சு பூசி விட்டு, அப்படி இருத்தல் தான் நாகரிகமும் என்று முகமூடி போட்டிக் கொண்டிருப்பது, எல்லாம் தானே தன்னை வாரிக் கொட்டிக் கொள்வதற்குச் சமம். பிறகு அதுதான்.. மன அழுத்தத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது. பிறகு அதுதான் தீரா சோகத்தைச் சுமக்க வைக்கிறது. பிறகு அதுதான் அலுவலகத்தில் சிறு வயது பையனிடமோ பெண்ணிடமோ எச்சில் ஒழுக பேச வைக்கிறது. திருட்டுத்தனமாக முகநூலில் சாட் செய்ய வைக்கிறது. மறைந்து மறைந்து போர்ன் படங்களைக் காண வைக்கிறது.

உடல் பசியை ஒப்புக்கொள்ளுங்கள். பிறகு எல்லாமே சரி ஆகி விடும் என்பது தான் கூற்று. ஏற்றுக் கொள்ளத் தயங்கும் போலிகள்.. வேஷமிட்டு மீசை முறுக்கியும், பெண்ணியம் பேசியும், வெளியே சுற்றித் திரிவதில் ஆரம்பிக்கிறது. அடுப்படி புகைச்சலும் ஆறாத நமைச்சலும். எச்சிலிருந்து தான் எச்சத்திலிருந்து தான் உயிர்கள் பிறக்கின்றன. இந்த உண்மையைப் புரிந்தவன்… தனக்குள் இருக்கும் மீனுக்குச் சிறகு முளைக்க அனுமதிக்கிறான். தனக்குள் இருக்கும் கள்ளத்தைக் கடந்து போக விடுகிறான். கரமுண்டார் வீட்டிலுள்ள பொய்மையை அகற்றுகிறான். அதனுள் தனித்தனி சுதந்திரத்தைக் கட்டமைத்துக் கொள்கிறான். பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். உரியோரைத் தீவிரமாகக் காதலியுங்கள். இங்குக் காதல் என்பது காமம் சேர்கையில் தான் உச்சம் அடைகிறது. தொடாத காதலில் புணராத காதலில் காதல் எப்படி இருக்கும். அது வெற்று நினைவு.

உடலே பிரதானம். உடலை வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேன் என்பதுதான் மூலாதாரம். ப்ரகாஷ் கசப்பு மருந்து தான். உடலெல்லாம் மார் தேடும் உடலெல்லாம் யோனி தேடும் குருட்டு உலகில் மார்க்குள்ளும் யோனிக்குள்ளும் அழகான பெண்ணை தேடுவதுதான் கசப்பின் சுவை.

அறிந்தோர் சொல்க. புரிந்தோர் அறிக.

  • கவிஜி
தஞ்சை ப்ரகாஷின் நாவல்கள் : மின்னூல் பதிப்பு

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *