படைப்பும் பகுப்பாய்வும்

எஸ்.ரா-வின் “காண் என்றது இயற்கை” – ஓர் ஆய்வுப் பார்வை.


சங்க இலக்கிய ஆய்வு நடுவம். பி.கே.ஆர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை,
தமிழ் ஆப்பரிக்க அமைப்பு, மலேசியா புத்தாக்க அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின்  படைப்புகள் குறித்த பன்னாட்டு பயிலரங்கத்தில் கவிஞர் ரோஸ்லின் சிறப்புரை வழங்கி இருந்தார். யூ-டியூப்-இல் காணொளியாக கிடைத்த இந்த உரையை விமர்சனம் இணையதளத்திற்காக எழுத்து வடிவத்தில் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்யப்படுகிறது. அனுமதி அளித்த கவிஞர் ரோஸ்லின் அவர்களுக்கு நன்றி.!


ஸ். ரா என அழைக்கப்படும் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளி. அவர் படைப்பிலக்கியத்தில் தொடாத வானமே இல்லை என்று கூறலாம். மிகச்சிறந்த ஆளுமையாகவும், படைப்பாளியாகவும் அறியப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ”காண் என்றது இயற்கை” எனும் கட்டுரைத் தொகுப்பின் வழியாக அனைவரையும் சந்திக்கிறேன்.

எஸ். ரா கனடா இலக்கியத்தோட்ட இயல் விருது மற்றும் புனைவு இலக்கியத்திற்கான விருது  மற்றும் எண்ணிலடங்கா விருதுகளைப் பெற்றவர். சஞ்சாரம் (நாவல்(2014)) எனும் அவரது நாதஸ்வர கலைஞர்கள் பற்றிய நாவலுக்காக 2018 ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற பெருமைக்குரியவர்.

நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், உலக சினிமாக்களின் கட்டுரைகள், சிறார் இலக்கியங்கள் என அனைத்திலும் தடம் பதித்த ஆளுமை.. அவரைப்பற்றி அவருடைய வார்த்தைகளே  அவருக்கு சான்று பகரும்.  30 க்கும் மேற்பட்ட கட்டுரைத்தொகுப்புகள் எழுதியுள்ளார். எனவே அவரின் கட்டுரைத்தொகுப்பின் வழியாகவே அவரின் மிகச்சிறந்த ஆளுமை வெளிப்படுவதாக நான் பல்வேறு தருணங்களில் உணர்ந்துள்ளேன்.  அப்படியான ஒரு தொகுப்புதான்  “காண் என்றது இயற்கை ” .

காண் என்றது இயற்கை 2010 ல் வெளிவந்த கட்டுரைத்தொகுப்பு. இதில் இயற்கையை அறிவதாக 13 கட்டுரையும் எஸ்.ரா வின் அனுபவத்தைக் கூறுவதாக  10 கட்டுரையும் அமைந்ததொரு மிகச்சிறந்த தொகுப்பு.

சங்க இலக்கியத்தில் இயற்கைப் பற்றிய சாராம்சங்கள் எண்ணற்றவை காணப்படுகின்றன. ஏனென்றால் நம் தமிழ்ச் சமூகம் இயற்கையை போற்றக்கூடிய சாலச்சிறந்த சமூகமாக தொன்றுதொட்டு காணப்படுகிறது. உலகப் பொருள்கள் யாவும் இயற்கையும் செயற்கையுமான பாகுபாட்டில் காணப்படுகிறது. மனித ஆற்றலின் முயற்சியில் உருவாக்கப்பட்டதுதான் செயற்கை. இயற்கை மனித முயற்சியின்றி உருவாவது. அவற்றை நக்கீரர் குறிப்பிடும்பொழுது

“கைபுனைந்து இயற்றாக்  
      கவின்பெறு வனப்பு” 

எனும் தொடரை  இயற்கைக்குரிய விளக்கமாக குறிப்பிடுகிறார்.  கை புனைந்து இயற்றாத அந்த இயற்கை எவ்விதங்களிலெல்லாம் நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்று இங்கு குறிப்பிடவேண்டியது அவசியம்.அவற்றையே ஆசிரியர் வாழ்க்கைக்கான  உணர்வுகளோடும், வார்த்தைகளோடும், அந்த வார்த்தைகளை உணர்ந்து எழுதியிருக்கிறார் என்றும் கூறவேண்டும். முக்கியமாக நம் தமிழ் சமூகத்தில் நிலத்தை முக்கியமாகக்  கொண்டும் நிலத்தை அடிப்படையாகக் கொண்டும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக வகுத்திருக்கிறார்கள். அதில் முதல் பொருள் உரிபொருள்  கருப்பொருள் போன்ற முப்பெரும் பாகுப்பாட்டை கொண்டிருந்த ஒரு இயற்கை சமூகமாக நம் தமிழ் சமூகம் அறியப்படுகிறது. கருப்பொருளில் பல்வேறு தாவரங்கள் விலங்குகள் என இயற்கையோடு புழங்கக்கூடிய ஒரு வகைமையை நாம் காண முடியும். பல்வேறு புலவர்களின் பதிவுகளை நாம் சங்க இலக்கியங்களில் தொகுப்பாக  அறிகிறோம். இயற்கைப் பொருட்களை அவற்றை வாழ்வின் அங்கமாகக் கருதி அதை உணர்ந்து தெளிந்தவர்கள்  நம் தமிழ் சமூகத்தினர். சங்க இலக்கியங்களில் ஐங்குறுநூறு கூறும்  பல்வேறு மலர்கள், விலங்குகள்  போன்ற விளக்கங்கள் நம் தமிழ் சமூகத்தின்  உணர்வுகளை பிரதிபலிப்பவை. உயிருள்ளவை, உயிறற்றவை என்ற பேதத்தின் வழியே  நாம்  இயற்கையை சூழ்ந்துகொள்கிறோம்.

மேலும் சங்க இலக்கியங்களில் காணப்படக்கூடிய மரங்கள், பூக்கள் புறப்பாடல்களாகவும் அகப்பாடல்களாகவும்  அவற்றில் பயின்று வந்திருப்பதை பார்க்கலாம். இதை ஏன் கூறுகிறேன் என்றால் அதன் வழித்தோன்றலாகவே அதன் ஆகச்சிறந்த எழுத்தாக்கமாக “காண் என்றது இயற்கை ” என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன் . அதாவது நற்றாயும் செவிலித்தாயும் தலைவியும் தங்களது உணர்வுகளைக் கொன்றை மரத்தினடியிலும் புன்னை மரத்தினடியிலும் பேசிச்சென்ற நிகழ்வுகளை நாம் சங்க இலக்கியங்களில் கேட்டு உணர்ந்திருக்கிறோம் . அப்படிப்பட்ட உணர்வுகளின் பிறப்பிடமாக, சங்க இலக்கியங்கள் இயற்கையை  நமக்கு வாரி வாரி வழங்கி வள்ளல் தன்மையுடன் காணப்படுகின்றன . ஒவ்வொரு கருத்துக்களும் அப்படிப்பட்ட சிறந்த தன்மை உடையதாக காணப்படுகிறது.

கட்டுரைகளில் 13 கட்டுரைகள் இயற்கையை அறிவதாக எஸ்.ரா குறிப்பிட்டிருகாகிறார். தனது கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் இப்படித்தான் கூறிச்செல்கிறார். இயற்கையை எழுதுதல் என்பது தனி வகைமையாகவே கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இயற்கையை புரிந்து கொள்ள முயன்ற அறிஞர்கள் கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது படைப்புகளின் வழியே தாங்கள் கண்டறிந்த உண்மைகளை நமக்கு புலப்படுத்துகிறார்கள் என்பதை ஒரு சங்க இலக்கிய ஆசானாகவே இதை முன் வைக்கிறார் .இந்த கட்டுரைத்தொகுப்பு இயற்கை குறித்த உண்மைகளையும் , இயற்கையோடும் மலையோடும், மழையோடும் நமக்கு இருக்கக்கூடிய அந்த உணர்வை எழுத்தின் வடிவில் கடத்துகிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் இயற்கையோடு நம்மை உரையாடச்செய்பவை. இயற்கையை கொண்டாட வேண்டும் என்பதன் அவசியத்தை முன் நிறுத்துபவை. எஸ்.ரா வின்பல்வேறு கட்டுரைகளும் மனித நேயத்தை தெளித்துச்செல்பவை.

மனிதரின் ஆகச்சிறந்த விழுமியமாக கருதப்படும் மனித நேயம் ஆசிரியரின் கதைகளுக்குள்ளும் கட்டுரைகளுக்குள்ளும் பயின்று வந்துள்ளது. இதில்  ”மலை தோன்றுகிறது” எனும் கட்டுரையில் ‘ஒரு மலை’

ஒரு மலைக்கு முன்னால் அமர்ந்திருக்கிறேன். நான் தங்கியுள்ள வீடு அரைவட்டமாக மலை சூழ உள்ளது என்று அந்த கட்டுரையை எழுதும் எஸ்.ரா  உலகினை ஒளியின் கைகள் தினமும் தூய்மைப்படுத்துகின்றன, குழந்தையை விழிக்க வைப்பது போன்று ஒளி மலையை எழுப்புகின்றது , விழித்துக் கொண்டபடியே அம்மா எழுப்புவதற்காக காத்துக்கிடக்கும் குழந்தைப் போன்று தான்  அந்த மலை இருப்பதாக குறிப்பிடுகிறார். காலையின் வெயில் நேரங்களில் விடியற்காலை அந்த வெயில் அந்த மலையை எழுப்பும் அழகை இதற்கு மேல் கூற இயலாது. அது பின்னிரவிலேயே விழித்துக் கொண்டு விடுகிறது என்பதை கண்டேன். ஆனாலும் காலை வெளிச்சத்திற்காக அது காத்துக்கிடக்கவே செய்கிறது. காலை வெளிச்சம் அதன் மென் விரல்களால் மலையைத் தொடும்பொழுது மரங்கள் அடர்ந்த மலை செல்லமாக விழிக்கிறது, என ஒரு குழந்தையாக மலையை அவர் கொண்டாடுகிறார். அந்த எழுத்தானது மலையை அந்த இயற்கையை அந்த வெளிச்சத்தை எவ்வாறெல்லாம் கொண்டாடுகிறார் என்பதை நம்மால் இங்கு காண முடியும். இயற்கையை கொண்டாட கூடிய பல்வேறு கலைஞர்களும் இந்த தொகுப்பினை அவசியம் படிக்க வேண்டும். அனைவரும் இந்த தொகுப்பினை அவசியம் படிக்க வேண்டும். இந்த தொகுப்பு நாம் வாழக்கூடிய இந்த பூமியின் ஒவ்வொரு சூழலையும் மிக அழகாகவும் இரம்மியமாகவும் அதனுடைய முக்கியமான செய்திகளையும் அந்த இயற்கை என்பது எப்படி நமக்கு அளப்பரிய  நன்மையை  விளைவிக்கிறது, அளப்பரிய ஒரு வானத்தை வசப்படுத்துவது போன்ற சுவை தருகிறது ,ஒரு வானத்தின் நீல சுவையை போல நீல நிறத்தில் இருந்து கசியும் சுவையை எப்படி நமக்கு தருமோ அதைப் போலவும்  மழை பெய்த காலங்களில் மண்ணிலிருந்து கசியக்கூடிய வாசனையானது எப்படி நமக்கு காணப்படுமோ அதைப்போலவும்  இயற்கையிலிருந்து கசியக்கூடிய வாசனையை படர்த்துகிறது  இக்கட்டுரைகள் யாவும் .

உலகில் மிக சிறிய செடியின் முன்னால் அமர்ந்திருக்கிறேன் என  ஒரு தும்பைச்செடியின் முன்னால் அமர்ந்து இதை கூறுகிறார்.

“இயற்கை எப்போதுமே கற்றுத்தருகிறது. எல்லா வடிவத்திலும் நம்மை   களிப்புறச்செய்கிறது” என குறிப்பிடுகிறார். ஒரு செடி நம்மை என்ன செய்து விட முடியும் ? நாம் காலமாதோறும் பல்வேறு செடிகளை பல்லாயிரகணக்கான செடிகளை கடந்துக் கொண்டிருக்கிறோம் .ஆனால் ஓரு படைப்பாளி அச்செடியை எவ்வாறு உற்று நோக்குகிறார். இயற்கை எவ்வாறு கற்றலை அப்படைப்பாளிக்கு கடத்துகிறது

படைப்பாளி எழுத்தின் வழியாக வாசகர்களுக்கு கடத்தக்கூடிய அப்படிப்பட்ட இரசனை மிக்க உரையாடலாகவே   “காண் என்றது இயற்கை” தொகுப்பு முழுவதும் இயற்கையும், பச்சையும், பசுமையும், அதன் நிறமும், வளமுமாக காட்சியளிக்கிறது.

    “சிறு செடியின் இலைகள் கட்சிதமானவை, அவற்றை செய்த இயற்கையின் கைகள் நுட்பமானவை. அதை போன்ற இன்னொன்றை அது செய்வதேயில்லை. நகல் என்பது இயற்கையில் இல்லை”

என்ற  வரிகள் எவ்வளவு கவித்துவமானவை.இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை .

பாரதியும் ,

“காக்கை குருவி எங்கள் சாதி 

 நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”  என்று இயற்கையை முன்னிறுத்துகிறார்.

இயற்கை என்பது சங்ககால புலவர்களிலிருந்து அனைவரும் பாடக்கூடிய தளமாக குறிப்பிடப்டுகிறது இயற்கையின் சுவையும் இயற்கை நமக்கு வகுத்தளிக்கக்கூடிய தன்மையும் எவ்வளவு அருமையாக உள்ளன. அதனாலேயே இயற்கைக்கு கட்டுப்பட்டவராக இந்த தொகுப்பினை இயற்கையை சுற்றியே வலம் வருகிறார் ஆசிரியர். சிறு செடியை  கவித்துவமாக எழுதி செல்கிறார்.

“சிறு செடியின் சிற்றிலையே ! நீ தொட்டுத் தடவ முடியாத படி ஒடுங்கி இருக்கிறாய்.  சிறு செடியே உனக்கு சொற்களின் துணை தேவையில்லை. நான் சொற்களால் மட்டுமே உனை அறிந்துக் கொண்டிருக்கிறேன்.நீ அசைகிறாய், பாடுகிறாய், ஆடுகிறாய் முடிவின்மையின் பாடலை உன் உதடுகள் முனு முனுக்கின்றன.பால்ய வயது நினைவு ஒன்றை போல தூய்மையுடன் பிரகாசமாக நீ இருக்கிறாய். சிறு செடியே! நீ ஒரு தியானி !நீ ஒரு புன்னகை, ஒரு கனவு !உன் கண்கள் எதையோ கண்டு தானே மூடிக்கொள்கிறது.நான் அதை கவனிப்பதை கூட விரும்பவில்லை. பெயரில்லாத சிறு செடியே! காலை வெளிச்சம் வந்த பிறகும் மறையாத நட்சதிரம் போல தனித்திருக்கிறாய்! உனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.அதை சொல்ல கூச்சமாகவும் கூட இருக்கிறது.உனை வணங்குகிறேன். எழுத்தில் அடங்க மறுக்கும்.  உன்னை நட்புக்கொள்ள விரும்புகிறேன்!”

என்று  பெயர் தெரியாத சிறு செடியுடன் தனது அன்பையும் நட்பையும் மனித நேயத்தையும் கடத்திச்செல்லும்  குரல்  எவ்வளவு தண்மை, எவ்வளவு இரக்கம், எவ்வளவு கருணை வழிந்தோடுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மழை பற்றி பாடாத கவிஞர்கள் இல்லை எழுத்தாளர்களும் இல்லை. இயற்கைக்கு  நாம் ஏன் தகுந்த இடத்தைத் தரவேண்டும், அதைப்பற்றியெல்லாம் பேச வேண்டும்  என்பதை தற்காலங்களில் கடந்துக்கொண்டிருக்கும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் பல்வேறு சூழல்கள் நிமித்தம் நாம் நோக்கினால் இயற்கையை எங்கனம்  நாம் கொண்டாட வேண்டும் இயற்கைக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பது தெற்றென விளங்கும் . இயற்கை என்பது அள்ள அள்ளக் குறையாத அமுதம். அது எழுத்தாளர்களுக்கும் அமுத சுரபியாகவே கருத்துகளை வாரி வழங்குகிறது. அப்படியே உலகத்திற்குமான  அன்பையும் சகலவித செல்வங்களையும் வாரி வாரி வழங்கக்கூடியதாக   வழியெங்கும் காணக் கூடிய மரங்கள் போல ஒரு கருணையை நமக்கு பகிர்ந்தளித்துக்கொண்டே செல்கிறது. அதில் மலையைப்பற்றி குறிப்பிடத் தகுந்த வார்த்தைகள்.

“எந்த கனிகளாலும் தடுக்கமுடியாத அந்த மலையின் பெரும் நடனத்தை, உற்சவத்தை ஓங்கார வேட்கையை அவதானித்தபடியே அதன் முன் மௌனமாக நின்றிருந்தேன்.மலையின் முன்னே சொற்கள் ஒடுங்கி வழிந்தன, மலை மனிதனை சாந்தம்கொள்ள வைக்கிறது, அவனின் ஆவேசம் மிக்க சொற்களை அவனிடமிருந்து பறித்துக்கொள்கிறது. அவனது நாவில் மழையின் ஈரம் படிந்து விடுவது போலும் மழைக்குள் நனையும் எந்த மனிதனும் ஆவேசம் கொள்வதில்லை தண்ணீரில் விழுந்த காகிதம் போலாகி விடுகிறான். அவன் இருப்பை கரைத்துக்கொண்டுவிடுகிறது”.

மழை என்பது எப்படிபட்டவொரு பெரு நடனத்தை அந்த கட்டுரையாளருக்குள் நிகழ்த்துகிறது. அப்படிப்பட்ட ஒரு பெருநடனத்தை வாசகர்களுக்குள்ளும் அதை கடத்தி செல்கிறது. மழையின் ஈரம் நாவில் படிந்து விடுகிறது. மழையில் நனைந்த காகிதம் போல மழையில் நனைந்தவனும் ஆகி விடுகிறான் என்று மழையின் இருப்பை நம்முன் நிறுத்துகிறார் எஸ். ரா.

இத்தனை மனிதர்களில் இந்த மழையானது ஒரு பசித்தவனிடம் வரும் போது எப்படி இருக்கும்? பசித்தவன் இந்த மழையை இரசிப்பானா? அல்லது பல்வேறு துயரங்களுக்குள் கடந்துச்சென்றவன் மழையை இரசிப்பானா? நாம் இந்த மழையை இரசிப்பதில் எப்படி வேறுபடுகிறோம்?   என்பதை குறிப்பிடுகிறார்.

இத்தனை மனிதர்களை இயங்கச்செய்யும் இந்த விசை பசிக்கு மட்டுமே .அந்த பசி இருக்கும்போது அந்த மழையை இரசிக்க முடியுமா? இந்த பசியானது மனிதனை வீட்டிலிருந்து வெளியே துரத்துகிறது. அவனை காலமெல்லாம் வேலை செய் செய் என்று ஓயாமல் அழுத்துகிறது . அந்த பசி இல்லையென்றால் இதை உணரத் தலைபடமாட்டோம் பசி என்பது எவ்வளவு இரசிக்கக்கூடிய மனதையும் கட்டுபடுத்திவிடுகிறது என்பதை நாம் இத்தனை மனிதர்களை இயங்கச்செய்யும் பசி என்பதையே இங்கு குறிப்பிடுகிறார் . பசி என்பது அடங்குவதே இல்லை  பசி ஒடுங்கிக் கொள்கிறது. பின் சில மணி நேரங்களில் மீண்டும் பசிக்கத் தொடங்குகிறது.  பசியைத்  தோற்றாலே நாம் பல்வேறு நிகழ்வை நிகழ்த்த முடியும்.

பசி என்பது நம்மை செயல்பட விடாமல் செய்வது மற்றும்  பசியை வெல்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ? “ஒன்று சோற்றால் வெல்ல வேண்டும் அல்லது பசி சோற்றை வெல்ல வேண்டும்” என்ற தேவதேவன் கவிதை வரிகளை  இங்கு குறிப்பிடுகிறார்.

எஸ். ரா அவர்கள் இந்த கட்டுரை முழுக்க பல்வேறு ஆளுமைகளின் கதைகளையும் சொல்லாடல்களையும் இங்கு உபயோகப்படுத்தியுள்ளார்.

ஆனால் தற்காலிக சாத்தியங்கள் பசியை அடக்குவதென்பது தற்காலிக சாத்தியம் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார் .ஆதேபோல அந்த நாட்களில் மேன்ஷனில் தங்கியிருக்கக்கூடிய  இளைஞர்களின் சூழல்களை அவர்கள் கடந்து வந்த பாதையை எஸ். ரா  எழுதிச்செல்கிறார்.  மேன்ஷனில் தங்கியிருக்கும்பொழுது  எவ்வாறு தன்னந்தனியாக அந்த சூழலை எதிர்கொண்டேன் என்பதை அனுபவங்களாக “காண் என்றது இயற்கை ” தொகுப்பில் கூறிச்செல்கிறார். பெரும்பாலான மேன்ஷன் வாசிகள் காலை உணவை தவிர்ப்பார்கள். காலை உணவு இல்லாத சூழலிலேயே பல நாட்களை கழித்திருப்பதாக இந்த தொகுப்பில் தனது பல்வேறு  சொந்த அனுபவங்களை இதில் காணலாம்.

“காண் என்றது இயற்கை” என்பது இயற்கை பற்றி மட்டுமல்லாது அவரின் அனுபவத்தையும் நமக்கு கூறுகிறது. வேலை தேடி அறையில் தங்கியிருப்பவர்கள் காலையில் சாப்பிடுவதில்லை. தூங்கி எழுந்தவுடன் சென்னை நாகரிகமான வெறும் பிஸ்கட்டையும்,  தேனீரையும் குடித்துவிட்டு ,பசியை வளர்க்கத் துவங்குவார்கள்  மேன்ஷன் வாசிகள் என்பதாக அவர் மேன்ஷனில் தங்கியிருந்தபொழுது எப்படி உணவின்றி உணவை வெறுத்து அந்த சூழல்களை கடந்து வந்தார் என்பதை தனது அனுபவமாக இங்கே கூறியிருக்கிறார். இந்த அனுபவங்களெல்லாம், இயற்கை பற்றிய சொல்லாடல்களெல்லாம் இவற்றை படிக்கும் போது நாமும் அத்தகைய மனோநிலைக்குள் செல்கிறோம். மேலும் அதை பற்றி  கருத்தாக்கங்களையும் மனதில் வைத்து அவற்றை ஒவ்வொன்றாக மனதில் வைத்து எண்ணும்பொழுது, எப்படிப்பட்ட சூழல்களை எல்லாம் எவ்வாறு தாங்கி கடந்து வந்தார். அதைப்போல நமக்கான சூழல்களை  நாம் எவ்வாறு கடக்க வேண்டும் என்பதும், மற்றும் தனது வாழ்வில் நடந்த பல்வேறு கருத்தாக்கங்களை எல்வாறு ஒரு அனுபவமாக மாற்றி எழுத்திற்குள் கொண்டு வந்தார் என புதிய படைப்பாளர்களை உருவாக்கும் பணியினையும்  தொகுப்பு சிறப்பாக செய்கிறது .

மேலும் அந்த மழையை கூறும் போது பூமியை சுற்றி மழை தன் பசியாற்றிவிட்டு போகிறதோ என்று  தோன்றியது.  மழை என்பது சுற்றி சுற்றி அடிக்கும்பொழுது அதன் பசியை இந்த பூமியில் மழைப்பொழிவின்  வழியாக அவற்றை கடத்துகிறதோ இல்லை கடந்து செல்கிறதோ, என்று தோன்றுவதாய் ஆசிரியர் கருதுகிறார் . கட்டிடங்களும், வீடுகளும், வாகனங்களும், அனைத்தும் நனைந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. எல்லா நாட்களிலும் தான் படுத்துக்கிடந்த குப்பைத்தொட்டியின்  அருகில் அன்று தண்ணீர் தேங்கி இருப்பதால் எங்கே போய் படுப்பதென்பதே தெரியாமல் ஒரு நாய் அங்கு தத்தளித்துக்கொண்டிருப்பதாக , இந்த மழை ஒரு சிறு உயிருக்கு எவ்வளவு இடையூறாய் உள்ளதென்பதையும் ,மழையில் நனையும்போது இதையெல்லாம் நாம் உற்று நோக்குவோமா ,என்பதையும், அந்த மழையை சாதாரணமாக மழை பெய்கிறது என கடந்துவிடுவோம் ஆனால் அந்த மழை பற்றின செய்தியை நுணுக்கமாகவும் ,அந்த மழையால் ஏற்படக்கூடிய இடையூறுகளையும் மிகவும் அழகுற அந்த சிற்றுயிர் நாயானது படக்கூடிய துயரை இந்த எழுத்தின் வழியாக நமக்கு பகிர்ந்தளித்தளிக்கிறார்.

எப்போதும் மழை ஆனந்தமானது..  ஆனாலும், எல்லோருக்கும் விருப்பமானதும் இல்லை. ஆனால் மனித விருப்பங்களுக்காக மழை ஒருபோதும் பெய்வதில்லை. பெய்வது மழையின் இயல்பு. ஏற்றுக்கொள்ளப்படுவதையும் தூற்றப்படுவதையும், ஆராதிக்கப்படுவதையும் பற்றி மழை கவலைக்கொள்வதில்லை. மழை கற்றுத்தருகிறது. உலகை புரியவைக்கிறது. மழையை எதிர்க்கொள்வது ஒரு கலை. அதை முழுமையாக மனிதர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை என தனது ஆதங்கத்தை இங்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.

மழையை இன்னும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மலை குன்றினை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தை போல அந்த வெண்மை நிற ஒளி பட்டவுடன் எழும் அந்த சூழலை குழந்தையாக பாவித்து கூறியுள்ளதையும் இங்கு நாம் சுட்டிகாட்டலாம் .

மிகப் பழமையான மரம் .அந்த மரத்தின் நிழல் எவ்வளவு ஆதர்சமானது.ஒரு மரத்தின் நிழலை என்றாவது கொண்டாடி இருக்கிறோமா?

ஒரு நிழல் நாம் தினம்தோறும் கடந்து போகக்கூடிய ஒரு இடம்தான் ஆனால் அவர் அந்த மரத்தின் விழுதுகளை எப்படியெல்லாம் இங்கு கூறிச்செல்கிறார்.

 எவ்வளவு பெரிய நிழல் அந்த மரத்தின் நிழல் எத்தனை அழகு என்னவொரு சாந்தம்!  எவ்வளவு பேரமைதி ! நிழலின் உள்ளே போய் நின்றவுடன் மரம்  தன் குளிர்ச்சியை நெற்றியில் உடலில் தடவிவிடுகிறது. மரத்தின் நிழலைத்தவிர வேறேதும் இவ்வளவு வசீகரம் தருவதில்லை

என்று மரத்தின் நிழலை எத்தனை ஆதர்சமாக கூறியிருக்கிறார்.

எவ்வளவு ஆயிரம் முறை கண்டிருந்தால் கூட, மரம் தரும் நெருக்கமும், குளிர்ச்சியும் போல வேறு எதையும் நான் உணர்ந்ததே இல்லை என அந்த மரத்தின் நிழலை அது தரும் சுகந்தமான  உணர்வையும் தனது கட்டுரையில் கூறுகிறார்.

“காண் என்றது இயற்கை”  அதுதான் அந்த இயற்கை என்னை “காண் காண் ” என்று நம் அனைவரையுமே துரத்ததான் செய்கிறது. நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஊடாடிக்கொண்டுதான் இருக்கிறது . ஆனால் எஸ். ரா போன்ற எழுத்தாளர்கள் மட்டுமே அந்த இயற்கையின் சுகந்தத்தை, அதன்  வாசனையை , அது கடத்திச்செல்லும் பேருண்மையை தங்களின் உணர்வுகளாலும், எழுத்துக்களாலும் முன்வைத்திருக்கிறார்கள் என்பது மிக சிறப்பானது.

எல்லா நிழலுக்கும் அதன் மறுப்பக்கம் ஒன்றிருக்கிறது. அதுதான் இந்த வசீகரத்திற்கான காரணம் என்று மனது எதையோ கற்பனை செய்துக்கொள்கிறது. யாரும் கற்றுக்கொடுக்காமலேயே நாம் எவ்வாறு இந்த நிழலை இரசிக்கத் தொடங்கியிருக்கிறோம். ஒரு மரத்தின் நிழல் நமக்கு எப்படிப்பட்ட ஒரு சுகத்தை கடத்துகிறது எப்படி வசீகரிக்கிறது என்பது இயற்கை சொல்லும் உண்மை. அதையே தனது பேனா முனையால் எழுதி செல்கிறார் எஸ். ரா. அதேப்போல மனிதர்களுடைய கால்கள் ஒரு சாதாரணமான கால்கள்தான் .அதை நாமும் சாதாரணமான கண்ணோட்டத்தில் தான் அணுகுவோம்.  அந்த கால்கள் மனிதனின் ஆதாரம். மிகத்துல்லியமாக நம் இந்திய சமூகம் அதை புரிந்து கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். அதெப்படி அந்த கால்கள் நம்மை சுமப்பது மட்டுமா!கடவுளின் பாதகங்கள் தான் வணங்கப்படுகிறது .பெரிய மனிதர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதைப் பெருமையாக கருதுகிறார்கள். பாதங்கள் தனித்து வழிப்படப் படுகின்றன .

கால்கள் நடந்த தூரம் பற்றி ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

 உடல் ஒரு அதிசயம் — அது 

கால்கள் மீது கட்டப்பட்டுள்ள 

ஒரு கோட்டை”

என்று எழுத்தாளர்  தோரோ {(ஹென்றி டேவிட் தோரா – American naturalist )} அவர்களின் வரிகளையும்  குறிப்பிடுகிறார். உட்கார்ந்து கொண்டே இருப்பது தான் வயதாவதின் அறிகுறி. மனிதன் உற்சாகம் கொள்ளவேண்டுமானால், உற்சாகம் அவனுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிது எதிலிருந்து கிடைக்கும் என்றால், கால்களே என்று எத்தனையோ இடங்களிலும் நாம் கடந்துச் செல்கிறோம்.ஆனால் இந்த கால்களை பற்றி நாம் சிந்தித்திருப்போமா ? இந்த கால்கள் எப்படி வழிப்படக்கூடியனவாகவும், ஆராதிக்கப்படுபவையாகவும் காணப்படுகின்றன என்று எஸ். ரா வின் சிந்தனை சீராக இப்படி நமக்கு கூறுகிறது. பல்வேறு பாதைகளில் நாம் கடந்து செல்வோம். ஆனால் தான் செல்லக்கூடிய பாதைகளைப் பற்றி கூறும்போது,

“புதிய பாதைகளை விட பழைய பாதைகளே நடப்பதற்கு பிடித்தமானவையாக உள்ளன. புதிய பாதைகள் பரபரப்பான இயக்கத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்றன. பழைய பாதைகள் கைவிடப்பட்டமனிதனைபோல் ஒதுங்கி இருக்கின்றன”

என்று ஒரு பாதையைக்கூட அவர் அதில் எவ்வளவு மனித நேயம் கொண்டு கைவிடப்பட்ட பாதை, செல்லாமல் இருக்கக்கூடிய ஒற்றையடிப்பாதை , பழைய காலங்களில் புழங்கிவந்த மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய பாதைகளெல்லாம் யாரும் இப்போது புழங்குவதில்லை.

அப்படிப்பட்ட பாதைகள் கைவிடப்பட்ட பாதைகள். ஒரு மனிதனைப் போன்றே கண்டுக்கோள்ளப்படாமல் இருக்கின்றன என்று அவற்றை எழுதுகிறார்.  மேலும் அப்பாதையில் யாரோ நடப்பது  மட்டுமே ஆறுதல் தரக்கூடிய ஒரு செயல்பாடு. அந்த பாதை நினைக்கும், நம்மில் யாரோ ஒருவர் கடந்து சென்றால்  இன்று எவ்வளவு மகிழ்ச்சியாக  இருக்கும் என பாதை நினைக்கும் என்று  அந்த பாதைக்குகூட உயிரைத் தந்துவிடுகிறார் எஸ்.ரா.

எஸ். ரா வின் பல்வேறு  கட்டுரைகள் இயற்கை பற்றி  அறிதலாகவும், இயற்கையிலிருந்து நம்மை காலங்காலமாக நாம் கடந்து வந்திருக்கக்கூடிய அந்த இயற்கையை பல்வேறு விதங்களில் எடுத்து சொல்கிறார். எஸ் ராமகிருஷ்ணனின்  கட்டுரைத் தொகுப்புகள் 30 ற்கும் மேற்பட்டவை. இவரின் கட்டுரைத் தொகுப்புகள் தனி ஆய்வாகவே எடுத்து ஆய்வாளர்கள் மேற்கொள்ளலாம். அப்படி சிறந்த மனித நேயத்தை விதைப்பவை. எல்லா கட்டுரைகளும் , கருத்தாக்கங்களும் கருணை வழியும் கருத்தை முன் வைப்பவை. அவற்றிலிருந்து, அந்த வார்த்தையிலிருந்து, வாழ்க்கைக்கான ஒரு தேடலும், பயணிப்பதுமான வார்த்தைகளை எழுதியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில் என்னுடைய பயணம் என்பது முடிவே இல்லாதது.

முடிவற்ற ஒரு பயண வெளிக்குள் சென்றுக்கொண்டிருக்கிறேன் என்பதாக கூறுகிறார். யோசிக்க யோசிக்க வேடிக்கையான எண்ணங்கள் ஒவ்வொன்றையும் ரசிக்கும்படியாக எழுதியிருப்பது மிக முக்கியமானது.நாம் சாதாரணமாக கடந்து விடக்கூடிய ஒரு  பொருளில்  இருந்து வேறுபடும் அவரது பார்வை வித்யாசமானது. அனைத்தையும் அவர் வேறுபட்ட கண்ணோட்டத்துடனேயே காண்கிறார். படைப்பாளிக்குரிய கண்ணோட்டமென்பது, ஒரு கலைஞன் இந்த உலகை காணும் பார்வையே வேறு என்பதை த் தனது படைப்பில், தனது கட்டுரையில், தனது கருத்தாக்கத்தில்,  பதிவு செய்துக்கொண்டே  இருக்கிறார். ஒரு கலைஞன் எவ்வாறு இந்த உலகை காண்கிறான், ஒரு கலைஞன் மரத்தை காண்பதும், மழையைக் காண்பதும்,கைவிடப்பட்ட பாதையை காண்பதும் கூட எவ்வளவு அற்புதமான கணம். அந்த அற்புதமான கணத்தை வாசிக்கும் வாசகர்களும் உணரத்தலைபடுவார்கள். எஸ்.ரா வின் கட்டுரைகளையும், சிறு கதைகள் , மற்றும் பல்வேறு ஆக்கங்களை படிக்கும்பொழுது தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளியாகவும், மனித நேயம் மிக்கவராகவும் திகழ்கிறார் என அறிய முடிகிறது. மீண்டும் மீண்டும் மனித நேயம் மிக்கவர் என ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அப்படிப்பட்ட உணர்வை, தன்மையை, நீர்மையை, செலுத்தக்கூடிய ஒரு படைப்பாளி. ஒரு பூட்டை காணும் போது அவர் என்ன நினைக்கிறார்,

 ஒரு பூட்டு… அந்த பூட்டை காணுபொமுது இந்த பூட்டால் கடற்கரையில்  காணப்படும் பூட்டு, பல்வேறு எண்ணங்களை அவருக்குள் விதைக்கிறது. இந்த பூட்டால் கடற்கரையில் இருக்கக்கூடிய இரண்டு மணல்களை ஒன்றாக வைத்து பூட்ட முடியுமா, இல்லை கடல் அலையை கரைக்கு வராமல் பூட்ட முடியுமா? 

என்று கட்டுரைக்குள் எழுதுகிறார்.

“கடற்கரையில் ஒரு பூட்டு கிடக்கிறது!  கடல் அலையை கரை வரவிடாமல் பூட்ட முடியுமா இந்த பூட்டால்!? ” அவர் இதை இப்படிதான் பார்க்கிறார்.

கடலையும் காலையும் ஒன்று சேர்ந்து பூட்ட பூட்டு இருக்கிறதா!? ஏனென்றால் கடற்கரையிலேயே கால்கள் தங்கிவிடலாமல்லவா! கடலின் மீதான ஆகாசத்தையும் நீரையும் இணைக்கும் பூட்டு உண்டா?  உண்மையில் உலகின் புராதான பூட்டு தண்ணீர்!”

என்று எஸ். ரா அவர்கள் கூறும் போது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்பது நமக்கு தெரியும். உலகின் புராதன பூட்டு தண்ணீர்.  உலகிற்கான பூட்டு தண்ணீர் தான். அந்த தண்ணீர் மட்டுமே முக்கியத்துவம் பெற்றது என்ற ஒற்றை வரி பல்வேறு கருத்துக்களை பல்வேறு சகாப்தத்தை கூட முன்வைத்து விடுகிறது. அதுதான்   கட்டுரையின் சாதனை.

இரண்டு மணல் துகள்களை ஒன்று சேர்ந்து இந்த பூட்டு பூட்டி விடுமா? கண்ணில் விழுந்த காட்சிகளை அனுமதிக்காமல் இது பூட்டி விடுமா, அல்லது இந்த அலையையும் நுரையையும் ஏதாவது ஒரு பூட்டால் இணைக்க முடியுமா ?” 

என்றெல்லாம் அவர் தனது கற்பனையின் வழியாக தனது கருத்தை பதிவு செய்கிறார்.

அதேப்போல, பல்வேறு உயிரினங்களை அவர் கருத்தாக்கங்களில், கட்டுரைகளில்,கூறியிருக்கிறார். ஏற்கனவே குறிப்பிட்டபடி நாய், ஒரு யானை. “யானை பார்த்தல்” என்ற ஒரு கட்டுரை . நாம் யானையிடம் எதைப் பார்ப்போம்?. “யானை ஒரு மஹா மௌனம்!” என குறிப்பிடுகிறார் ஆசிரியர். ஒரு மஹா மௌனத்தைப்போல கடந்து போகிறது. ஊர்ந்து போகிறது.

யானை தன்னை வேடிக்கை பார்க்கும் உலகின் மீது அக்கறை கொள்வதில்லை. அது தன் இயல்பில் அடங்கியுள்ளது. யானையின் வழியாக எதையோ பார்க்கிறார்கள். உலகில் வேறு எந்த மிருகமும் இவ்வாறு வியப்போடு திரும்பி திரும்பி பார்க்கப்படுவதில்லை என்று அந்த யானைக்கு உள்ளிருக்க்கூடிய அந்த உணர்வை கூறுகிறார். ஏனென்றால் இயற்கையும் உயிரினங்களும் கட்டிக் காக்கப்பட வேண்டியவை.நாம் மனிதர்கள். அவர்களுடைய இடத்தை எடுத்துக்கொண்டு, இயற்கையை வாழவிடாமல் பல்வேறு சூழல்களில் வன விலங்குகள் காட்டிலிருந்து ஊருக்குள் வந்து விட்டதாகவும் கூறுகிறோம். ஆனால் உண்மையில் அவர்களுடைய இடத்தை நாம் எடுத்துக் கொண்டோம் என்பதே இங்கு சுடும் உண்மை . அந்த யானையை ஒரு விலங்காக நாம் காடுகளில் திரியும் அதன் சுதந்திரத்தைப் பறித்து, அதை தெருக்களில் நடமாட விடும்போது அதன் மௌனம் ஆசிரியரை ஏழுத்தாளரை கொல்கிறது வதைக்கிறது. அதனாலேயே ஒரு மிகப்பெரிய மஹா மௌனம் நடந்து செல்கிறது என படைப்பாளரால் கூற முடியும். இந்த உலகின் துயரை ஒவ்வொரு சிறு உயிர் படக்கூடிய துயரையும் அதை உற்று நோக்க ஒரு படைப்பாளனால் பதிவு செய்திட இயலும் என்பது இங்கு நிரூபணம் ஆகியுள்ளது.

அதேப்போல ஆறுகளையும், அருவிகளையும் கடலினையும் பாடாத கவிஞர்கள் இல்லை .அதைப்பற்றி பேசாத படைப்பாளிகள் இல்லை.  “குற்றால அருவி” பற்றின அந்த கட்டுரையில்

அருவி என்பது மாபெரும் சிரிப்பு.அதன் விரிந்த புண்ணகை அதைப்போல் ஒரு வசீகரம் — இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை”  

என்பதாக கூறுகிறார். அருவி என்பது மாபெரும் சிரிப்பு. இயற்கையின் சிரிப்பு அருவி. எவ்வளவு அழகான அற்புதமான வார்த்தைகள். ஆசிரியரின் படைப்புகளை ஆராயும்போது ஆய்வு செய்யும் மாணவர்கள் கவித்துவமான வரிகளையும், கவித்துவமான உணர்வுகளையும் இந்த மனிதர்களுக்கான உண்மையான விழுமியத்தையும் உணர்ந்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட சிறப்பான செய்திகளையும், ஒரு புரிதல் உணர்வோடு இருக்கக்கூடிய வார்த்தைகளையும் கடத்திச் செல்கிறார்.

அடிக்கடி பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடுவது பாதைகளைப் பற்றி தான்.  

இந்த மாட்டுவண்டி  பாதைகள் எவ்வாறு மங்கி மறையத் தொடங்கின! அந்த பாதைகள் மறைந்தாலும் கூட அந்த பாதை கூறும் ஒலி என்னவாக இருக்கிறது!,  அந்த பாதை யாரையாவது தேடிக்கொண்டே இருக்குமல்லவா!  யாருமே செல்லாத பாதை எப்படி இருக்கும்! “

என பாதைகள் பற்றி இன்னொரு கட்டுரையிலும் கூறுகிறார். நாம் இந்த பாதைகளில் காணப்படக்கூடிய ஒவ்வொரு சிறு சிறு செடியையும் இங்கு கூறுகிறார். மேலும் தும்பை செடி பற்றி   கூறுகிறார். எத்தனையோ செடிகளை கடந்திருப்போம் ஆனால் தும்பை செடி பற்றி கவலைப்பட்டு இருப்போமா என்றால் இல்லை. நம்முடைய பொறுமையின்மை, காத்திருக்க நேரமில்லை. ஒவ்வொரு செடியாக நோக்க கூட இயலாமல் ஒரு இயந்திரமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். ஒரு சிறு செடியையாவது நாம் பார்த்திருப்போமா? என்று கேள்வி எழுப்புகிறார். அதில் ‘வருத்தமளிக்கக்கூடிய முக்கியமான ஒன்று இயற்கையை நாம் எவ்வளவு  புறம் தள்ளி இருக்கிறோம்’என்று கூறுகிறார். தும்பை செடிகள் எப்படியெல்லாம் சிறுவர், சிறுமியர், எவ்வாறு காதணிகளாக அணிந்து மகிழ்வார்கள், அந்த தும்பை செடிகள் யாருக்காகவும் பூப்பதில்லை. அது அதன் இயல்பிலேயே அதன் மகிழ்வை அதன் பூக்களின் வழியாக வெளிப்படுத்துகிறது என்பதே உண்மை. இயற்கையை ஏன் நாம் ஒருபோதும் நாம் கவனிப்பதே இல்லை! என்று  கேட்கிறார்.

இயற்கையை ஏன் நாம் ஒருபோதும் கவனிப்பதே இல்லை என்னவொரு  வரி இது என்று இங்கே இயற்கையை நாம் அதற்கான மரியாதையும், அதற்கான ஒரு பாங்கினையும் அளிக்க நாம் தலைப்படவேண்டும்  என இவ்வரிகள் கூறுகிறது.

அதைப்போல அவரின் அனுபவங்களாக பத்து கட்டுரைகள்  எழுதி இருக்கிறார்.  இதே தொகுப்பில். அந்த பத்து கட்டுரைகளும் “அனுபவம் ” எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் வாழ்வில் நிகழ்ந்த அவருக்கேயான அனுபவங்களாக அவை  திகழ்கின்றன.  திரையிசை படல்களை பற்றி எஸ்.ரா  தனக்கு பிடித்தமான அந்த பாடல்கள் பற்றி கூறும் போது  ஒவ்வொரு பழைய பாடலும் யாரோ ஒருவரை நினைவுப்படுத்துகிறது, அல்லது ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தமான பழைய பாடல் ஒன்றை கொண்டிருக்கிறோம் என ஒரு ஆழ்ந்த அனுபவத்தை கூறுகிறார்.

பல்வேறு நினைவுகளை எழுத துவங்கினால்  அது புனை கதைகளை விடவும் அந்த அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். நமக்கு பிடித்த ஒவ்வொரு பாடலுக்கும் நாம் ஒரு அனுபவத்தை வைத்திருப்போம். ஒரு கதையை கொண்டிருப்போம், ஒரு செய்தியை பாடலின் பொருட்டு வைத்திருப்போம், என்று அந்த பாடலுக்கு பின்னால் உள்ள அந்த கதைகள் புனை கதைகளை விடவும் சுவாரஸ்யம்

என்று   கூறுகிறார். மேலும் ஒவ்வொரு பாடலில் ஒளிரும் ஒரு மின்மினி போல அந்த பாடல் நினைவுகளில் ஒளிர்வதாக கூறுகிறார்.

ஆம் அப்படிப்பட்ட அனுபவத்திற்குள்ளே இந்த கட்டுரையை படிக்கும்பொழுது நாமும் இதில் இணைந்து விடுவோம். இந்த கட்டுரை என்பது அவ்வளவு அழகான சொற்களால் ஆனது . இந்த கட்டுரை படிக்கக்கூடிய காலங்களில் , கட்டுரை படித்து முடித்துவிட்ட பின்னும் பல்வேறு  நாட்களாக  பூக்களின் மகரந்தம் போல, நம்மில் படர்ந்து விடும் . அப்படிப்பட்ட இயற்கை பற்றி ஒரு இசையின் ஆலாபனை போல கட்டுரைகள் காணப்படுகின்றது.

அனுபவ பகிர்வில்  “எலி கடி” என்பதாக ஒரு கட்டுரை கூறுகிறார். அதாவது தனது மேன்ஷன் காலத்தில் , இளைஞராய் இருந்த போது மேன்ஷன் குடியிருப்புகளில் எவ்வாறு தங்கியிருந்தார் அவரது நண்பர்களோடு எவ்வாறு அறையை பங்கிட்டார் , அப்போது அவரது நண்பருக்கு ஏற்பட்ட (எலி கடி) பற்றியும் ,நண்பரை எலி கடித்து விடும் என்பதும் அதன் பின்பான  சம்பவத்தை நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது. நகைச்சுவையாக நிகழ்ந்த அந்த தருணத்தை அழகாக எழுதியிருக்கிறார். “எலி கடி” எனப்படும் இந்த கட்டுரை மிகவும் சுவாரஸ்யமானது. நண்பருக்கு  எலி கடித்துவிடும் . எலி கடித்துவிட்ட  சூழலில் நண்பரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லகூடிய  சூழலில் எவ்வாறு நகைச்சுவை ததும்ப அந்த காலங்களை   பதிவு செய்துள்ளார், எலி கடி கட்டுரையில் தான் மேன்ஷன் குடியிருப்பில் இருந்த போது எவ்வாறு துயருற்றோம் நெருக்கப்பட கூடிய காலத்தை  கடந்து வந்தோம் என்று தனது வாழ்கையில் நெருக்கடி காலத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை.  இப்போது சென்னையில் குடியிருத்தாலும் கூட தனது  மல்லாங்கிணறு இல் வாழ்ந்து வந்த அந்த கிராம நினைவுகளையும், அப்போது மேன்ஷனில் தங்கியிருந்த நினைவுகளையும், நெருக்கமான அந்த காலகட்டத்தையும் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சோதனைகளையும் கூட    நகைச்சுவை யாகவே பகிர்ந்துள்ளார் . அதில் ஒரு சிறப்பான கதாபாத்திரங்கள் கூட ஒரு புனை கதையாகவே அந்த கட்டுரைகள் அமைந்திருக்கிறது.

அதே போல இரயிலில் சந்தித்த ஒரு நபர். அவரை பற்றி கூட எஸ்.ரா அவர்கள் கூறியுள்ளார். அதாவது அப்பாவுக்கும் மகளுக்குமான அந்த உணர்வை பற்றிய கட்டுரை.

அப்பா, மகள் உறவு என்பது ஒரு பெரிய சகாப்தம், தந்தைக்கும் மகளுக்குமான அந்த உறவு, அந்த அன்பு காலத்தால்  கணிக்க இயலாதது, வரைப்படத்தில் வரைய இயலாதது, அது சொற்களால் கூட சொல்லப்பட இயலாதது,  தந்தைமையின் கரங்கள் கடத்தக்கூடிய அந்த அன்பை அந்த பெண்ணானவள்,  அந்த மகளானவள் அவளுக்கு மட்டுமே காணக்கூடிய அந்த வலியினை  ஆசிரியர் பதிவுகூறுகிறார். இதில் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை குறிப்பிடுகிறார். இந்த நாடகத்தில் கிங் லியர் தந்தை மீதான மகள்களின் அன்பு பற்றி கூறுகிறார். இங்கு மகளை பற்றி அந்த வரிகளை கூறுகிறார்.

தான் நேசிக்குமளவு தன்னை மகள் நேசிக்கிறாளா? என்ற கேள்வி எல்லா அப்பாவின் மனதிலும் இருந்துக்கொண்டே இருக்கிறது ,உண்மையில் இது ஒரு ஆதங்கம் தன்னைப்போல தன் மகளை வேறு ஒருவர் நேசிக்க முடியாது என்ற உண்மை உரிமையுடன் கொண்டாடுவது முழுமையாக அது நிஜமென்று தெரிந்ததும் அந்த மனவலி தாங்கமுடியாதது ஆயிரம் வருடத்திற்கும் மேலாக இருந்து வரும் அப்பா மகளின் பிணைப்பு  சொற்களால் புரிந்து கொள்ள முடியாதது ”

என்று  தனது கருத்தாக்கத்தை முன் வைக்கிறார்.

கவிஞர் கலா ப்ரியா அவர்கள் “காண் என்றது இயற்கை” இந்த தொகுப்பிற்கு அணிந்துரை  வழங்கியிருக்கிறார். அவற்றை இங்கே கூறுவதென்றால் ஒரு திகைப்பை தரக்கூடிய வரிகள். ஒரு மறு உருவகம் போல , ஒரு சந்தோஷமான, நீருக்கு நீரால் அர்ப்பணம் என்ற மாதிரியான ஒரு  அனுபூதியான நிலை என்று  இந்த கட்டுரைக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். இயற்கையை கொண்டாடக்கூடிய கலாப்ரியா  இயற்கையை காலநேரமின்றி பார்த்து பார்த்து அலுக்காதவனே  நல்ல கலைஞனாய் இருக்கிறான் . தாகூரின் வழிப்பாடு, வெளிப்பாடுஎல்லாம் இயற்கை சார்ந்ததுதான் என்று கூறி இப்பிரபஞ்சம், இப்பிரபஞ்சத்துடனான மானசீக உரையாடலை நாம் பல்வேறு ஊடகத்தின் வழியாகவே நாம் கடந்து  வருகிறோம். அப்படிப்பட்ட  ஊடகமாக இயற்கையை நாம் கொண்டாடக்கூடிய கட்டுரையாக  “காண் என்றது இயற்கை ” குறிப்பிடப்பட்டிருக்கிறது . இயற்கையை நாம் இவ்வாறு கடந்து செல்வது என்று வார்த்தையில் இந்த கட்டுரையை படித்தப்பின்பு அவ்வாறு கடந்து செல்லமாட்டீர்கள். இயற்கை நமக்குள் ஒரு மகரந்தம் போல் ஒட்டிக்கொள்ளும். அப்படியான ஒரு மகோன்னதமான மகத்துவமான ஒரு அனுபவத்தை ஒரு ஞானியைபோல பேசியிருக்கிறார், உரையாடி இருக்கிறார் . அந்த இயற்கையின் நிறத்தை நம்மேல் பூசியிருக்கிறார் . இவ்வாறான ஆகச்சிறந்த கட்டுரை இது.

 “ஆரம்ப நாட்களில் மட்டுமே நான் இயற்கையோடு நடந்துக்கொண்டிருந்தேன். அதன் பின் இயற்கையின் திசை என்னை நடக்க வைக்கிறது.அது என்னை ஈர்க்கிறது. என் கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்துக்கொண்டு வருகிறது. இயற்கை என்னை வசீகரமாக அழைத்து போவதாகவே உணர்கிறேன். அதுதான் உண்மையும் கூட ,இயற்கை நம் உள்ளுணர்வின் வழியே வழிநடத்துகிறது. அதன்படியே நாம் நடக்கிறோம் “

என்ற Henry David Thoreau அவர்களின் இயற்கை பற்றிய பார்வை குறிப்பிட தக்கது. அனைவரும் படிக்கவேண்டிய நல்லதொரு கட்டுரை தொகுப்பு.


கவிஞர் அ.ரோஸ்லின்

 

தட்டச்சு உதவி: ராகினி முருகேசன்

 

நூல் தகவல்:
நூல்: காண் என்றது இயற்கை
பிரிவு : கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர்: எஸ்,ராமகிருஷ்ணன்
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்
வெளியான ஆண்டு  2018
பக்கங்கள்:
விலை : ₹ 115

காணொளியை காண :

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *