புதுவையில் கடற்கரையை ஒட்டியுள்ள மிஷன்  தெரு மிகவும் அழகானது. மாலை மயங்கும் நேரத்தில் அது மேலும் அழகாகி விடும். ப்ரகாஷ் வர்ணனை  செய்யும்  மிஷன் தெரு இதற்கு  நேர் எதிரானது.  அத்தெருவில் சிறை வைக்கப்பட்ட  அழகான எஸ்தரின் சபிக்கப்பட்ட வாழ்வின் கதை இது.

பெண் தன்னை உடலாகவே பாவித்துக் கொள்கிறாள். இந்த உளவியலுக்கு பின்னால் ஆண்களின் அடக்கு முறை வரலாற்று தடயங்களே காரணமாய் உள்ளன.

ஆண்களின் விருப்பங்களை அங்கீகரிக்கும் சமூகம் பெண்களின் விருப்பங்களை வரவேற்பதில்லை. அதற்கான குருத்து வளரும் போதே அது நாசப்படுத்தப்படுகிறது.

“பெண் ஒருத்தி  ஆண் ஒருவனை ஆசைப்படலாம், விரும்பலாம். ஆனால் வெளியே சொல்ல முடியாது. கல்யாணத்துக்கு தான் இஷ்டப்பட்டவனைத் தேடி ஒரு பெண் போக முடியாது.”

மதம், சாதி, கெளரவம், அந்தஸ்து, அரசியல், கபடம் போன்ற இத்தியாதிகள் பெண்களின் விருப்பத்திற்கு தடை போடுகின்றன. அவர்களது அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றவும் செய்கின்றன.

“ராஜரத்தினம் வன்னியருக்கு ஐந்து பொண்டாட்டிகள். அவருக்கு வயது 60.  அறுபதில் கூட அவரது  மதத்திற்கு விரோதமாக 18 வயசு குட்டி ஒருத்தியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறார். பாதிரியாரிடம் போய் நூறு வராகன் அபராதம் கட்டி, மந்திரம் சொல்லி, லத்தீனிய மொழி ஜெபம் சொல்லி.. , அதற்குப் பின் மனைவியை கோவிலுக்கு அழைத்து வரக்கூடாது எனும்  நியமத்துடன் அவரது பொண்டாட்டியை  பொண்டாட்டியாய் அவருடன் கூட விட்டார்கள்!”

“பெண்கள் எந்த காலத்திலும் இதுபோல் கவர்ச்சிக்கப்படுவார்களாம். கவர்பவளாயும், கவரப்படுகிறவர்களாயும் இருந்து வருவதை விடவும் பெண்களுக்கு அவமானம் வேறு ஏதேனும் உண்டா..?”

எஸ்தரின் தைரியம், துணிச்சல், யாருக்கும் அஞ்சாத அவளது பெண்மை, யாரும் அறியமுடியாத அவளது ஆங்கிலப் புத்தகங்களின் ஞானம், அவள் கற்ற லத்தீன் கிரேக்க அறிவு, சங்கீத ஞானம், உலகம் முழுவதையும் விரும்பும் அவளது பரந்த நோக்கம், எல்லாம் சமம் சகோதரத்துவம் சமாதானம் என்ற பிரஞ்சு சிந்தனை, அவள் விரும்பிய காதல், சகவாழ்வு எல்லாம் ஒரே நாளில் அவளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டன.

இதற்கு  பல வன்முறைகள் காரணம். அது பலரால்  பல வகையில், ஒவ்வொரு விதமாய் ..!

அவள் விரும்பிய காதலனின் கோழைத்தனம் என்கிற வன்முறை, லாசரஸ் என்கிற மிருகத்தின் அதிகார பலம் கொண்ட வன்புணர்ச்சி என்கிற வன்முறை. மகளின் மனதை அறியாத தந்தையின்  வன்முறை.அத்தைகள்.., அவர்களும் பெண்கள் தான்.., உடலளவில் .ஆனால் ஒரு பெண்ணின் அநீதி மற்றொரு பெண்ணால் விளைந்த வன்முறையின் நீட்சியாகவே இருக்கிறது. அதற்கு முன்னமே அது விதைக்கப்பட்டுள்ளது. அந்த பரப்பப்படுகிறது.

வன்முறையில் அடக்கப்படும் பெண்களின் மனதில் காலம் காலமாய் ஒரு வன்முறை மிருகம் ஒன்று வளர்ந்தே வருகிறது. இது சமயம் வாய்க்கும் போது திருப்பி  அடிக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது தன் இனத்தின் மீதே பாய்கிறது.

மராட்டிய அரச குடும்பங்களின் வாரிசுயுரிமைச் சண்டைகள், கிழக்கிந்திய கம்பெனியின் அதிரடிகள், அடிக்கடி நிகழும் வட இந்திய முஸ்லிம்  படையெடுப்புகள் என திரிசூலத்தால் தஞ்சை சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தது.

பெண்களுக்கு அரசாங்க  சூழல்  மாறி இருந்தாலும்  மாறாவிட்டாலும் நிலையான பாதகம்  மட்டுமே  தான் வரம்.அன்றைய அரசு பெண்களை ஒடுக்கித்தான் மூலையில் வைத்திருந்தது. விலை கொடுத்து வாங்கப்பட்ட பெண்கள் முழு அடிமையாகவோ அரண்மனை தாசிகளாவோ இருந்தார்கள்.

இந்த வணிகத்தில் (18-ம் நூற்றாண்டின் துவக்கம் ) மேல்தட்டு பெண்களும் தப்பவில்லை. ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் என்ற விலையில் அவர்கள் வாங்கப்பட்டார்கள். அதே சமயம் வேற்றுச் சாதிப் பெண்கள் மராட்டிய அரசர்களால் மொத்த விலைக்கு தங்கள்  அரண்மனைக்கு வாங்கப்பட்டார்கள்.

ஆண் மிருகத்தின் கோரைப்பற்களில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் எஸ்தர் மௌனமாகவே தனது வாழ்வை கடத்தினாள்.

சொல்லப்போனால் தஞ்சாவூர் கோட்டைக்குள் இருந்த குஜராத்திய பெண்கள், மராட்டிய பெண்கள் பெண்கள், மல்லுகச்செட்டி பெண்கள் மராட்டிய ராயர் பெண்கள், பான்ஸ்லே வம்சத்து ராஜகுல பெண்கள் என இன்னும் எத்தனை வகை ஜாதி அடிமைப் பெண்கள் உண்டோ அந்த  எல்லா பெண்களின் நிலையையும்  யோசித்து தான் அவள்  சங்கடங்களில் சரணாகதியாகி தூங்கிக்கொண்டிருந்தாள்.

ஒரு நாள் கண் விழித்த போது  அவளது பெண் ரூபி வளர்ந்திருந்தாள்.., அவளுடன் சேர்ந்து அவளது காதலும். எஸ்தர் மனதில் காலம் வளர்ந்த மிருகம் அவள் மகள் மீது பாய்வதற்கு தயராக இருந்தது.

தஞ்சை ப்ரகாஷின்  மிஷன் தெரு ஒரு வரலாற்றை மன அழுத்தமாய் பதிவு செய்துள்ளது. அவரது ஆற்றாமையும் அக்கறையும் பெண்களின் புறச் சிதைவையும் அக அழுகலையும் இதற்கு கர்த்தாவான ஆண்களின் வக்கிரத்தையும்  முழுமையாக பதிவு செய்துள்ளது.

  – மஞ்சுநாத்  

 

நூல் தகவல்:

நூல் : மிஷன் தெரு

பிரிவு :  நாவல்

ஆசிரியர்: தஞ்சை ப்ரகாஷ்

பதிப்பகம் :  வாசகசாலை

பக்கங்கள் : 116

வெளியான ஆண்டு :  2016 (மறுபிரசுரம்)

விலை :  ₹ 120

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *