நூல் விமர்சனம்புனைவுமொழிபெயர்ப்பு

காஃப்கா கடற்கரையில் -விமர்சனம்


 ஒருபுறம் :காஃப்கா டமூரா

பதினைந்து வயது சிறுவன். சுய விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். டோக்கியாவுக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஷிகோகு போவதாகத் தீர்மானம்.

டகமாட்சு போகும்  பேருந்தில் சகுரா என்ற யுவதி அறிமுகமாகிறாள்.

டகமாட்சுவில் ஒரு மலிவான விடுதியில் தங்குகிறான்.

தினசரி நவீன உடற்பயிற்சி கூடத்தில் தீவிர உடற்பயிற்சி , கொமூரா நினைவு நூலகம் மூடும் வரை நிறையப் படிப்பது, நிறைய உண்பது, சுத்தமாகத் தன்னை வைத்துக் கொள்வது என்றிருந்த ஏகாந்த   இயந்திரயோட்டத்தில் திடீர் தடை.

அப்போதைக்கு அதிலிருந்து சிறு அளவில் மீள சகுரா உதவுகிறாள்.

பின் அவன் செல்லும் நூலகத்தின் இளநூலகர் ஒஷிமாவிடம் உதவிக் கேட்கிறான். தற்காலிகமாக சில நாட்கள்  வனப் பிரதேசத்தில் இருக்கும்  அவனது பூர்வீக குடிலில் தனிமையை அனுபவித்து தங்குகிறான். தீவிரமாக நிறையப் புத்தகங்களை வாசிக்கிறான்.

பின் ஒஷிமா அதே  நூலகத்தில் வேலையும்  அங்கேயே தங்க ஒரு அறையையும் ஒதுக்கித் தருகிறான். நூலக தலைமை நிர்வாகி மிஸ் செய்கியின் கடந்த கால வாழ்வின்  வசீகரக் கதையைச் சொல்கிறான்.

ஆனால் அந்தக் கதைகளில் தானும் பிணைக்க முடியாத ஒரு அங்கம் என்பதை அவன் அறியும் தறுவாயில் மிகப் பெரிய அகக் குமிழியில் சிக்கிக் கொள்கிறான்.

அதிலிருந்து வெளிவருவதை அகன்ற மாயவெளியாக முன்னிறுத்தி இந்தக் கதை நம்மை ஒரு சூறாவளி  உருவாக்கத்தில் அதன் மையம் நோக்கி வெகு வேகமாக இழுத்துச் செல்கிறது..


இன்னொரு பக்கம் :

நகாடா

போர் என்பதின் தளம் நிலமாக இருப்பினும்  அது மக்கள் வயிற்றின் மீதான முரட்டுத் தாக்குதலாகவே இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் பள்ளி சுற்றுலா என்பது வனப்பகுதியில் சிறார்கள் தங்களுக்கான உணவு தேடுதலுக்கான முயற்சியாகவே இருந்தது. பதினாறு சிறுவர்கள் தங்களுக்கான உண்ணக்கூடிய காளான்களை சேகரித்துக் கொண்டிருந்த போது அவர்கள் ஒட்டு மொத்தமாக மயங்கி விழுகிறார்கள்.

அது போர்  மேகம் சூழ்ந்த காலம் என்பதால்  விசாரணையை இராணுவம்  மேற்கொள்கிறது.

விஷக்காளன், ஆழ்நிலை மயக்கம், காற்றில் விஷம், போர்த்தளவாட ஆய்வு, கூட்டு அறிதுயில் நிலை …,என்ற  பல கோண விசாரணையில்  காரணத்  தடயம் எதுவும் சிக்கவில்லை.

ஒரே அதிர்ஷ்டம் சிறுவர்கள் சில மணி நேரங்களுக்குப் பிறகு  தாங்களாகவே நினைவுத் திரும்புகிறார்கள். அந்தவொரு சிறுவனைத் தவிர …!

அவன் மேல் சிகிச்சைக்காக உயர் நிலை மருத்துவமனை கொண்டு செல்லப்படுகிறான். முடிவில்லாத விசாரணையும்  தொடர்கிறது.

சிறிது காலம் கழித்து நிகழ்நினைவிற்கு சிறுவன் திரும்புபோது  மனிதரோடு தொடர்பு கொள்ளும் மொழி மறந்து  போகிறான். அவனின் பதிவுகளில் பழைய சங்கதிகள் எல்லாமே அழிபட்டு விட்டன.

பொதுவான அவன்  பெயர், ஊர் உட்பட எல்லாம்..,ஒட்டு மொத்தமும் நினைவிழந்த  வெறுமை நிலையில் தான் அவன் வாழ்வு துவங்குகிறது.

.., அவன் தான் நகாடா

பூனைகளின் மொழி தெரித்து அவைகளுடன் பேசுபவன்.

குடும்பத்தில் செல்லமாக வளர்ந்து  தொலைக்கப்பட்ட பூனைக்குட்டியைக் கண்டுபிடிப்பது அவர் வேலை. பூனைகளின் உதவியுடன் தடம் தேடி அலைகிறார்.

ஒரு திருப்தியான வாழ்க்கையை துண்டைப்   போல் அணிந்துக் கொண்டிருந்தார்.

“ஓர் எல்லைக் கோட்டை வழக்கத்தை மீறிய சூழ்நிலைகளைத் தவிர அதைத் தாண்டி ஒரு போதும் அவர் சென்றதில்லை. அங்கேயே இருக்கும் வரை தான் பாதுகாப்பாகவும் திருப்தியாகவும் இருப்பதாக உணர்ந்தார். மனக் குறைகள் கிடையாது. எதன் மீதும் கோபம் கிடையாது. தனிமை சார்ந்த உணர்வுகளும், பாலியல் சுமைகளும், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளும் அல்லது தனது வாழ்க்கையை கஷ்டமானதாக அல்லது அசௌகரியம் ஆனதாக இருப்பதைக் குறித்தோ எதுவும் கிடையாது.வாழ்க்கை பாதையில் எது வந்தாலும் அதை நிதானமாக அனுபவித்தவாறு சென்று கொண்டிருந்தார்  நகாடா.”

எதிர்பாராத  விதமாக ஜானி வாக்கர் என்கிற பூனை கொலைகாரனை சந்திக்கும் வரையில்..,

 நகாடா பிராணிகளைக் காப்பற்ற  தன்னியல்பு கடந்து,  ஜானிவாக்கரை கொல்லும்படியான ஒரு சூழல் ஏற்படுத்தப்படுகிறது.

அவன் கொலை செய்ததாக முன்வந்து  சொல்வதை இளம் காவலன் அலட்சியம் செய்கிறான். அவரை பைத்தியக்கார கிழட்டு முண்டமாக  அசட்டை செய்யும் போது அவர்  முன்னறிவித்தபடி நகரத்தில் மீன் மழை பொழிகிறது.

காவலன் அரண்டு போகிறான்.

அந்நகரம் அதிர்ந்து கிடக்கும் போது உள்ளுணர்வின் வழிகாட்டுதலை  பின்பற்றி  கிழவர் அந்நகரத்தை விட்டு  மெல்ல நகர்கிறார்.

பலரின் உதவியால் அவர் பயணம் தொடர்கிறது. வானிலிருந்து அட்டைகள் மழையாகப் பொழிகின்றன. மின்னல்கள் ஒரு பற்றியெரியும்  கயிறுகள் போல் பூமியைத் தொடுகின்றன.

ஹோஷினோ என்கிற இளவயது சரக்குந்து ஓட்டுநர் மாயக் கிழவரால் கவரப்பட்டு அவருடனான மாய நினைவுத்தடங்களில் சேர்ந்து பயணிக்கிறான்.

நகாடாவின் தூக்கம் ஒரு மரத்தான் தூக்கம் .அசைவின்றி அவரால் மூன்று நாட்களுக்கு மேல் தூங்க முடியும். இது போன்ற முரண் குவியலைச் சுமந்து செல்லும் அந்த கிழவரை  சவ்வு மிட்டாய் விற்பவன் பின்னால் மயங்கிச் செல்லும் சிறுவன் போல் இவனும் பின் தொடர்கிறான்.

இறுதியில் ஒரு நாள் அவரது முடிவற்ற தூக்கம் தன்னை சிக்க வைக்கப் போகிறது என்பதைத் தெரியாமலும் அதுவே விடுவிக்கவும் போகிறது என்பதைத் தெரியாமலும்  இருக்கிறான்.

தத்துவம் பேசும் மாய விலைமாது உடனான களிப்பிற்குப் பின் அவன் மாய வெளியில் ஒரு நிழல் அங்கமாகிப் போகிறான்.

முரகாமியின் கதைகளில் நீங்கள் முடிவைத் தேடுவீர்களானால் நீங்கள் தொலைந்து போக நேரிடும் இல்லையெனில், நீங்களே உங்களுக்குள் விவாதமாக்கிக் கொள்ளக்கூடும்.

எப்படியென்றாலும் ஒரு புனைவு வெளி தொடக்கத்துக்கும் இறுதிக்கும் இடையே மிதந்துக் கொண்டியிருக்கிறது. நாம் வெறுமனே மட்டுமல்லாது வெறுமையாகவும் இருக்கும் பட்சத்தில்  மிதக்கத் தொடங்கி விடுவோம்.

இரண்டாம் உலகப் போருக்கான வனப்பயிற்சியில் தொலைந்து போகும் இரண்டு வீரர்கள் இப்போது வரை அதே இளமையோடு காட்டில் வாழ்வது போன்றது அது.

நீங்கள்  தொலைந்து போக வேண்டும். அவ்வளவே. முதல் அடியை எடுத்து வையுங்கள்.

காஃப்கா கடற்கரையில்.., வாழ்த்துகள்.

880 பக்கங்கள் கொண்ட”காஃகா கடற்கரையில் ” வந்தே பாரத் அதிவிரைவுத் தொடர் வண்டி (180 Kmph) வேகத்தில்  வாசகன் வாசித்துச் செல்ல வைக்கிறது.

இதற்கு எளிமையான மொழிபெயர்ப்பு ஒரு முக்கியக் காரணம். சில இடங்களில்  தனித்தமிழ் சொற்கள் மிகையாகக் கையாளப்பட்டு இருந்தாலும் அவை பெரிதாக உறுத்தவில்லை.இன்னும் கொஞ்சம் ஆர்வத்தை அதிகப்படுத்தவே செய்கிறது.

மொழிபெயர்ப்பாளர் மற்றும்  தீவிர வாசகர் திரு. கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்..!


– மஞ்சுநாத்.

 

நூல் தகவல்:

 நூல் : காஃப்கா கடற்கரையில்

பிரிவு:  நாவல் | மொழிபெயர்ப்பு

ஆசிரியர் : ஹருகி முரகாமி (Haruki Muragami)

மொழிபெயர்ப்பாளர்: கார்த்திகைப் பாண்டியன்

வெளியீடு : எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு :  பிப்ரவரி 2021

பக்கங்கள் : 880

விலை: ₹  900

Buy on Amazon

Kafka on the Shore

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *