‘கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது’ எனும் பாப்லோ பிகாஸோ-வின் பிரகடனத்துடன் கலை விமர்சகரும் கவிஞருமான இந்திரன், படைத்துள்ள எதிர் கவிதைகளின் தொகுப்பாக ‘மேசை மேல் செத்த பூனை’

முகப்பும் தலைப்பும் சற்றே அதிர்வினை ஏற்படுத்தினாலும் இந்திரனின் ‘எதிர் கவிதையா? அப்படின்னா…?’ என்கிற அறிமுக உரை வாசகனை ஆசுவாசப்படுத்த வைக்கும்.

சரி… எதிர் கவிதை… ஏன்? என்றொரு கேள்வியும் எழுகிற வேளையில் நாம் காலத்தின் பின்னோக்கிப் பயணப்பட வேண்டியிருக்கிறது.

இரண்டு உலக யுத்தங்களை நேரில் கண்டு துயர சாட்சியாக விளங்கும் ஐரோப்பியக் கண்டம், யுத்தங்களின் விளைவுகளை, நேரடி அனுபவங்களை, மனித குல மரணங்களை, ஆயுதங்களின் ஆக்ரோஷத்தை, குடும்பங்களின் சிதறலை…, உறவுகளின் இழப்பை இப்படி எத்தனையோ… கையறுநிலையில் கவலைக் கொண்ட கலை இலக்கியர்கள் தம் துயரடர்த்தியை, தாளவொண்ணா மன அழுத்தத்தை மடைமாற்ற கண்டு சொன்னதே

  •     – அபத்த கலை வடிவம் (ABSURD ARTS)
  •     – டாடாயிசம் (DADISM)-
  •     – மீமெய்யியல் எனும் (SURREALISM)

அதன் நீட்சியாக, மனித வாழ்வின் இருப்பை, இருப்புக்கானப் பிரச்சனைகளை மனித குல விரோதிகளுக்கு எதிரான போர்க்குரலை, வழக்கத்துக்கு மாறான மொழியில், தொனியில் சொல்லுதே எதிர் கவிதை (ANTI POETRY) எனலாம்.

வெறும் பேண்டஸி சொற்குப்பைகளை கவிதைகள் என நம்புவதில்லை இந்திரன்,    தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஒரு புதிய வரவினை அறிமுகம் செய்யும் பொறுப்பான விமர்சகளின் கடமை உணர்வோடு ‘எதிர் கவிதை’ என்பதற்கான விளக்கங்களைப் பட்டியலிருகிறார் கலை விமர்சகராகவும் மிளிரும் கவிஞர்,

”மரபார்ந்த ஐவகை நிலப் பாகுபாடுகளிலிருந்து தமிழை நகர்த்தி கிரகம் தழுவிய ஒரு புதிய பூகோளத்தைத் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் கொண்டு வருவது .

பொன்வண்டுகளையும்

பட்டாம்பூச்ச்சிகலையும்  பாடிய காலம்

முடிந்து விட்டது இப்போது

 

அதனால்தான்

கரப்பான் பூச்சிகளைப் பாடுகிறோம்

நகைச்சுவை, கிண்டல், கேலி, நக்கல், நூலாசிரியர் தன்னைத்தானே மட்டுமல்லாமல் மொத்த மனித குலத்தையும் நக்கலடித்துக் கொள்வது என்று நடைபெறுகிறபோது நூலாசிரியர் பாடுவதற்கு பதிலாக கதை சொல்லத் தொடங்கிறார் என்று அர்த்தம் – இதுதான் எதிர் கவிதை

உன்னத கவிதைகள் எழுதுவதாக தினந்தோறும் தனக்குத்தானே பொய் சொல்லிக் கொள்ளும் கவிஞர்களின் பட்டியலில் உன் பெயர்தான் முதலில் இருக்கிறது போய் பார் என்று சொல்லி நகைத்தது வானம்.

காலம் காலமாகக் கவிதைக்கென ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கல்யாண குணங்களைப் புறக்கணித்து சுதந்திரமான ஒரு வெளியில் இயங்குவதே எதிர் கவிதை”

நான் தனியே இருக்கிறேன் புரியாத மொழி பேசும்

அந்நிய நகரத்தின் நெரிசலான மின்சார ரயிலில்

தனியே பயணம் செய்வதுபோல்

இந்த மொத்த பிரபஞ்சத்தில்.

மொழியின் சர்வாதிகாரத் தன்மையிலிருந்து கவிதையை விடுவிப்பது எதிர்கவிதையின் முக்கிய குணாம்சம்

சிவப்பு சாராயம் நிரம்பிய ஒரு கண்ணாடி மதுக் கோப்பை, நண்பனின் முதுகில் பாய்ச்சி எடுத்த குருதி தோய்ந்த ஒரு குறுவாள், புரட்சி புரட்டி அடிக்கோடிட்டு பலமுறை படித்த ஒரு பழைய புத்தகம் – எல்லா குறியீடுகளுக்குள்ளும் ஒரு கடல் காத்திருக்கிறது

“கவிதைக்கென பிரத்யேகமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் போதை வார்த்தைகளைப் பிரக்ஞைப்பூர்வமாகத் தவிர்ப்பது அல்லது அவை கட்டமைக்கும் சீரியஸ்தனத்தை குலைப்பது

ஆனால் நானோ என்னோடு உணவை பகிர்ந்து கொண்டவர்களில் 42000 ரூபாய்க்காக (இயேசு காலத்திய 30 வெள்ளிக்காசுகளின் இன்றைய மதிப்பு)

யார் என்னை முத்தம் கொடுத்துக் காட்டிக் கொடுக்கப்போகிறார்கள் எனத் தெரியாத சோகத்தில் மூழ்கிக் கிடந்தேன்.

துணிச்சலாக கவிதையை வசனமாக எழுதுவது

உண்மையாகச் சொல்வதெனில் ஒவ்வொரு துக்கத்தின் பின் ஒளியும் நிழலிலும் ஒரு சந்தோஷம் ஒளிந்து விளையாடுகிறது. ஒவ்வொரு மகிழ்ச்சியும் தன் கையில் கண்ணீரில் நனைந்த ஒரு கைக்குட்டையை மறைத்து வைத்தே இருக்கிறது.

சோகமான நிகழ்வுகளை வேடிக்கையாக எழுதி கண்ணீரைச் சிரிக்க விடுவது. எல்லாவற்றிலும்  கிண்டல் கேலி. ஒரே நேரத்தில்  சோகம் விளையாட்டு  ஆகியவற்றை இணைப்பது.

நாளை உனக்கு ஒரு நினைவு இல்லம் அமைக்க ஹவுஸிங் போர்டிலாவது ஒரு வீடு வாங்கச் சொல்லி நச்சரிக்கவும் கவிஞனுக்குக் கட்டாயம் ஒரு மனைவி தேவை

நகரத்து அன்றாட வாழ்க்கையின் சாதாரண  பொருட்களான கைபேசி, பூங்கா  பெஞ்சு என்று கவிதைக்கு உகந்தது இல்லை எனக் கருதுபவற்றைக் கவிதைக்குள் கொண்டு வருவது.

புதைகுழிகளுக்கு மேல்

செழித்து வளர்ந்திருக்கும் செடிகளின் பூக்களில்

தேன் குடித்துச் சிறகடிக்கும் வண்டுகள்

அபத்தத்தைக் கொண்டாடுகின்றன.

 

 

    வாழ்க்கையின் அபத்தத்திலிருந்து

தப்பிப்பதற்காக செய்யும் முயற்சிகள்

மீண்டுமோர் அபத்தத்தையே செதுக்குகின்றன.

 

பேச்சு மொழியில்; குறிப்பாக மெட்ராஸ் பாஷையைக் கவிதையில் பயன்படுத்திப் பார்ப்பது

“மகாகவி மாச்சுப் பொட்டி மாணிக்கம்

பேரச் சொன்னா

மார்ச்சுவரி பொணமெல்லாம்

ஆடத் தொடங்கும்”

 

    “நாஞ்செத்தா என்னை எரிக்காதீங்க

பொதைங்க

அப்ப தான் நான் வேப்ப மரமா வளர்ந்து

சுடுகாட்டுக்கு மூக்க சிந்திக்க வர்ரவனுங்களுக்கு

நெழல் கொடுப்பேன்”

எளிய மனிதனின் சூழலியல் அக்கறை, இயற்கை நேசமென்றால்லாம் பட்டியல் போடாமல் பேச்சு மொழியில் தன் இருப்பை உணர்த்திக் செல்கிறது எதிர் கவிதை.

மேற்கண்ட குறிப்புகளும் கவிதைகளும் எதிர்கவிதை முயற்சிகளுக்கான திறவுகோல்கள் தாம், அதே நேரம் தமிழின் இளையக் கவிகள் எதிர்கவிதை என்ற இலக்கணத்தை அறியாமலே பல கவிதை முயற்சிகளை  மேற்கொண்டதற்கும் தமிழில் பதிவுகள் உள்ளன.

சரி..இப்போது எதிர்கவிதை என்கிற கோட்பாட்டுக்கு அல்லது வடிவத்துக்கு என்ன தேவை வந்தது?

சமகால வாழ்வின் அபத்தங்கள்.. இதுகாறும் நிறுவப்பட்ட அனைத்துக்கும் எதிராக நிற்கிற பிரம்மாண்டங்கள்.. இவைகளை எள்ளி நகையாடுகிறதே எதிர்கவிதை!

உடனடி உதாரணம் முகநூலெனும் குப்பைமேடு…!

விடிந்து எழுந்தவுடன் மொபைல் முகத்தில் விழிப்பவரா நீங்கள்.. இனி கவனியுங்கள் இவற்றையும்..

-ஒரு மரணச் செய்தி

-பின்னூட்டமாக சில சம்பிரதாயமான ‘கண்ணீர் அஞ்சலி’

அதற்கடுத்தே பிறந்தநாள் செய்தி..

– சடங்காக பலூன் பறக்கும் வாழ்த்துக்கள்.. செயற்கை எமோஜிகள்..

இவைகளை.. இந்த சம்பிரதாய சாங்கியங்களை.. எள்ளல் தொனியில்  விமர்சிக்கும் எதிர்கவிதை, பேச்சு மொழிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது.

பேச்சு மொழியில் கவிதை சொல்லும் கவிதை சொல்லும் கலை தமிழில் பரவலாகவில்லை. மேலும் வாசகன் மேல் நவீனக்கவிதை என்ற பெயரில்  உருட்டி விடப்படும் உரைநடை வாக்கியங்களை செதுக்கி செதுக்கி கவிதையாய் உனர்ந்துகொள்ள வேண்டிய  கட்டாயத்தில் தவிக்கும் வாசகனுக்கு சுவையான இளநீராக கிடைக்கிறது எதிர்கவிதை.

”கைபேசி உரையாடல்

ட்ரிங்… ட்ரிங்க்… ட்ரிங்க்…

 

“மனசு சரியில்ல… நான் அப்புறம் பேசுறேன்”

“ஏன்?… மனசு சரில்லைனா பேசக் கூடாதா?”

“அப்படி இல்ல, பேசத் தோணல.”

“மனசு சரில்லாதப்பதான் பேசனும்…”

“யார் கிட்டயாவது பேசனும். அப்பதான் மனசு சரியாவும்…”

அவள் தொண்டையைச் செருமிக் கொண்டது

கைபேசியில் கேட்டது.

 

“இல்ல. கொஞ்ச நேரம் அப்படியே கெடக்கட்டும்.”

“எப்பவுமே சிரிச்ச மொகமா இருப்பியே..

இன்னைக்கு என்னாச்சு?”

“மனசைக் கொஞ்ச நேரம்

சோகத்துல ஊறப்போடுறது தேவைனு தோணுது.”

 

“ஏன்? நம்ம மேலயே நாம பரிதாபப்பட்டுக்கனும்?

சில நேரம் சோகமாயிருக்கறது சொகமாத்தான் தெரியும்…

ஆனா அது நல்லதுக்கில்ல”

 

“மூட்டத்துல வானம்

கொஞ்சநேரம் இருண்டுதான் கெடக்கட்டுமே…

அப்பத்தான் மழை வரும்.”

 

“இன்னா ஆச்சு?

இவ்வளோ டவுனாகிக் கெடக்கிற?”

 

“ஒன்னும் இல்ல… அப்புறம் பேசறேன்”

கைபேசியில்

மின்சாரம் இல்லாததால்

மௌனமாகி விட்டது.

நான் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக் கொண்டு

மோட்டார் சைக்கிளை உதைத்தேன்”

முக்கியமாக  எதிர்கவிதை மாய எதார்த்தம் யதார்த்த மாயம், இருண்மை, பொருண்மை, மன்னாங்கட்டி தெருப்புழுதி என ஜல்லியடிப்பதில்லை. அதனாலேயே சமகால வாசகனுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது  எதிர்கவிதை. மொழியின் சர்வாதிகாரத் தன்மையிலிருந்து கவிதையை விடுவிப்பது எதிர் கவிதையின் முக்கிய குணாம்சம்

அந்த வகையில் கலை விமர்சகர் கவிஞர் இந்திரனின் “மேசை மேல் செத்த பூனை”  எதிர்கவிதைகளுக்கு ஆதவரானக் குரல் எனக் கொள்ளலாம்.


அன்பாதவன் 

நூல் தகவல்:

நூல் : மேசை மேல் செத்த பூனை - எதிர் - கவிதைகள்

வகை :  கவிதைகள்

ஆசிரியர் : இந்திரன்

வெளியீடு :  யாளி பதிவு வெளியீடு

வெளியான ஆண்டு:  2019

விலை:  ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *