எழுத்தாளர் விஜய் மகேந்திரன் இப்போது பதிப்பாளராகவும் தமிழ் இலக்கியத்தில் செயல்படத் துவங்கி இருக்கிறார்.  கடந்த டிசம்பர் 5ம் தேதி மதுரையில் தனது கடல் பதிப்பகத்தை நிறுவி தான் எழுதிய நூல்கள் மட்டுமல்லாது.. அதீதன், ராஜேஷ் வைரபாண்டியன்,  ச.வின்சென்ட், மஞ்சுளா,  லார்க் பாஸ்கரன், இளங்கவி அருள், கயூரி புவிராசா, தாட்சாயிணி, எம் ரிஷான் ஷெரீப்,  இளங்கவி அருள், மு.தமிழ்ச்செல்வன், ஜெகநாத் நடராஜன், எச்.முஜீப் ரஹ்மான்  உள்ளிட்ட இளம் படைப்பாளிகள் முதல் மூத்த படைப்பாளிகளின் படைப்புகள் வரை நூலாக்கம் செய்து வெளியிட்டு பலரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளார்.

விமர்சனம் இணைய இதழில் நேர்காணல் எனும் புதிய பகுதிக்காக பதிப்பக உரிமையாளர்களின் நேர்காணல்களை வெளியிட வேண்டுமென முடிவுச் செய்து முதலில் விஜய் மகேந்திரனைத் தான் அணுகினோம்.  விமர்சனம் இணையதளத்திற்கு எப்போதும் உற்சாகமும் ஆதரவும் தரும் தரும் நண்பர் இவர். எங்களின் இந்த நேர்காணல் முயற்சிக்கும் உற்சாகமாக சம்மதம் தெரிவித்தார். சென்னை புத்தக கண்காட்சிக்கான நூல் அச்சிடும் ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம்  காலத்தின் அருமை கருதி வாட்ஸ் அப் வாய்ஸ் மெசெஜ் மூலமாக எடுத்த நேர்காணல் இது.

 

இனி நேர்காணல்.!

 

வணக்கம் !

விமர்சனம் இணைய இதழுக்காக உங்களை நேர்காணல் செய்வதில் மகிழ்கிறோம் !

தமிழிலக்கியத்தில் பதிப்பகங்களின் பங்கு இன்றியமையாதது என்பதை அனைவரும் அறிவோம். வாசகர்களின் அறிவுத் தேடலுக்கு புதிய புதிய படைப்புகளையும் படைப்பாளிகளையும் அறிமுகம் செய்வதில் பதிப்பகங்களின் சேவை போற்றத்தக்கது. தொன்மை வாய்ந்த பிரபலமான பதிப்பகங்களோடு புதிய புதிய பதிப்பகங்களும் தொடங்கப்படும் இக்காலகட்டத்தில் பதிப்பகங்களின் நோக்கம் , அதன் செயல்பாடுகள், எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி வாசகர்கள் அறியும் நோக்கிலே இச்சிறு நேர்காணல் உங்களிடம் எடுக்கப்படுகிறது.

பதிப்பக உலகில் புதியதாக உருவாகிய “கடல்” பதிப்பகத்திற்கும் எழுத்தாளராக நீங்கள் எழுதி வெளியான நூல்களுக்கும் விமர்சனம் இணையதளத்தின் வாழ்த்துக்கள் !

 

1- பதிப்பகத்தின் பெயர் “கடல்”. ஏதும் சிறப்பு காரணம் உள்ளதா?

  • கடல் என்பதே ஒரு விரிந்த பரப்பு. தமிழிலக்கியம் என்பதே ஒரு கடல் தான். கடல் எனும் பெயர் எனக்குப் பிடித்திருந்து. அதே போல நண்பர் நரனும் நானும் நிறைய விவாதங்கள் செய்த போது, நரன் என்னிடம் “நீங்கள் ஏன் ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கக் கூடாது ?” என நான்கு வருடங்கள் (அதாவது 2018 அல்லது 17- ஆக இருக்கலாம்) முன்பு கேட்டார். அப்போது பதிப்பகத்திற்கு நான்கைந்து பெயர்கள் பரிந்துரைத்தார். அதில் ‘கடல்’ எனும் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. இந்த பெயரிலேயே பதிப்பகம் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தபோது நங்கூரம் சின்னம் எனக்கு செலக்ட் செய்து கொடுத்தார். அதன் பிறகு வடிவமைப்பாளர் ஜீவமணி நங்கூரம் சின்னத்தையும் கடல் பதிப்பகம் பெயரையும் ஒன்றிணைத்து லோகோவாக வடிவமைத்துக் கொடுத்தார். கடல் போல இலக்கியங்களைக் கொண்டு வரவேண்டும் எனும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘கடல் பதிப்பகம்’

 

2 – இலக்கியச் சேவை என்பதையும் கடந்து பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கங்கள் என்னென்ன எனக் கூறமுடியுமா ?

  • கடல் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்னவெனில் ..  பெரும்பாலான பதிப்பகங்கள் மோனோபாலிஸ்டிக் (monopolistic)  அதாவது ‘தான் மட்டுமே, தன்னுடையது மட்டுமே’ என ஆதிக்கங்கள்  செலுத்துவதை மோனோபோலிஸ்டிக் எனச் சொல்வோம்.  அதுமாதிரி சில பிரபலமான பதிப்பகங்கள் அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் மட்டுமே நல்ல புத்தகங்கள் ஆகவும், அவர்களுடைய படைப்பாளர்கள் மட்டுமே பெரிய படைப்பாளர்களாகவும்  கருத வைக்கக்கூடிய ஒருவிதமான ஆதிக்க மனப்பான்மை இங்கே இருக்கிறது. அவர்கள் யாரென்று பெயர் சொல்ல விரும்பவில்லை. இத்தகைய போக்கு பெரிய பதிப்பகங்கள் முதல்  வெறும் 30 பிரதிகள் அச்சிடும் சிறிய பதிப்பகங்கள் வரையிலும் இருக்கிறது. இது போல இல்லாமல்  பிரபலம்.. பிரபலம் இல்லாமை என்பதெல்லாம் கடந்து படைப்பு நன்றாக இருந்தால் கடல் பதிப்பகத்தில் வெளியிடப்படும். முதலில் நானே ஒரு படைப்பாளியாக இருப்பதால் என்னுடைய புத்தகங்கள் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் அதேபோல பிறபடைப்பாளிகளின் நல்ல படைப்புகள் கண்டறிந்து, குறிப்பாக இலங்கை போன்ற வெளிநாட்டில் இருக்கும் நல்ல படைப்பாளிகள், இங்கே இருக்கக்கூடிய  அறிமுக நிலை படைப்பாளிகளின் படைப்புகள் உட்பட எதுவும் சரியான நோக்கத்தில், நல்ல தரத்திலும், நல்ல அச்சிலும், நல்ல அட்டைப்பட வடிவமைப்பிலும் கொண்டு வரவேண்டும் எனும் கனவோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘கடல் பதிப்பகம்’

3 -விற்பனை, வருமானம்  போன்றவற்றிலும் கவனம் செலுத்தியாக வேண்டும் இல்லையா. இதன் அடிப்படையில் எழுத்தாளர்கள்/கவிஞர்களின் படைப்புகளை நூலாக்கத்திற்குத்  தேர்வு செய்வதில் என்னென்ன வழிமுறைகளை/விதிகளைக் கடைப்பிடிக்கிறீர்கள் ? 

  • விற்பனை வருமானம்  ஒரு பதிப்பகத்திற்குத் தேவைதான்.  ஆனால் இந்த சிற்றிலக்கியப்  படைப்புகளை , தீவிர இலக்கியப் படைப்புகளை போடக்கூடிய நம்மைப் போன்ற அறிமுக பதிப்பகங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டுமெனில் நல்ல செலக்ட்டிவ்வான திறமையான நூல்களை நூலாசிரியர்களைக் கொண்டுவரவேண்டியது மிகவும் முக்கியம். எச்.முஜீப் ரஹ்மான் மொழிபெயர்த்த  ”ஆப்கான் இலக்கியம்”. ஜெகநாத் நடராஜன் எழுதிய ரோமன் போலன்ஸ்கி குறித்த அறிமுக நூல். இவற்றைப் போல பல்வகையான நூல்கள் கவிதை கட்டுரை என இல்லாமல், ஒரு பையோகிராபி, திரைத்துறை பற்றிய நூல் எனக்  கலையின் எல்லா பக்கங்களையும் எல்லா தேடல்களையும் கொண்டுவந்தால் தான் ஒரு பதிப்பகம் இங்கு நிலைத்து நிற்க முடியும். இது போன்ற நோக்கத்தில் தான் செயல்படுகிறோம். நீங்கள் சொன்னது போல நூல் தேர்வுக்கு வழிமுறை விதிமுறை , பெரிய பதிப்பகங்கள்  ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட தேர்வுக்குழு வைத்து இருப்பது போல கடல் பதிப்பகத்தில் எதுவும் இல்லை. கடல் பதிப்பகத்தில் நூலாக்கத்திற்கு படைப்புகள் தேர்வு முதல் அனைத்தும் விஜய் மகேந்திரன் எனும் நான் மட்டுமே முடிவு எடுக்கிறேன். எந்த ஒரு குழுவையோ எந்த ஒரு panel யோ நம்பி நான் முடிவு எடுப்பதில்லை.
  • சில பேர் அடிப்படை படிப்பறிவு கூட இல்லாமல் இங்கே பதிப்பகங்களாக உலாவிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களிடம் நிறையப் பணம் இருக்கிறது. அதுபோல அவர்கள் சம்பளம் கொடுத்து, ஆட்கள் வைத்து , நூல் தேர்வுசெய்யப் படிக்க வைத்து நூல்களை வெளியிடுகிறார்கள். அதுபோல எனக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. விஜய் மகேந்திரன் எனும் பதிப்பாளர், ஒரு எழுத்தாளர் எந்த நூலைப் படிக்க விரும்புகிறேனோ, எதைப் பதிப்பிக்க விரும்புகிறேனோ அதையே வெளியிடுகிறேன். அது அதீதன் மாதிரியான புதிய படைப்பாளிகளாகவும் இருக்கலாம். ஜெகநாத் நடராஜன், முஜீப் ரஹ்மான் போன்ற திறமையான நன்கு அறிமுகமான படைப்பாளிகளாகவும் இருக்கலாம். எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.  படைப்புத் திறன், படைப்பின் உள்ளடக்கங்கள் மட்டுமே எனக்கு ரொம்ப முக்கியம்.

 

4 -அறிமுக நிலையிலிருக்கும் ஒரு கவிஞர் அல்லது எழுத்தாளர் உங்கள் பதிப்பகத்தை அணுகும் போது அவர்களின் படைப்புகளை ஏற்கும் மற்றும் நிராகரிக்கும் சூழல் ஏற்படுமாயின் அது எதனால் இருக்க கூடும். ?

  • ஒரு அறிமுக எழுத்தாளரோ, கவிஞரோ என்னை அணுகும் போது அவர்களின் படைப்பு எந்த அளவுக்குத் திறனாக இருக்கிறது. பதிப்பிக்கக் கூடியதா என்பதை பார்க்கிறேன். அவர்களின் பின்னணியோ, அவர்களின் படைப்புகள் விற்பனையாகக்கூடியதோ என்பதை எல்லாம் பார்ப்பதில்லை. இன்று நூறு பிரதிகள் முதல் ஐந்நூறு- ஆயிரம் பிரதிகள் வரை எவ்வளவு வேண்டுமானாலும் பதிப்பிக்கக்கூடிய பதிப்பக சுதந்திரம் இருப்பதினால், ஒரு நல்ல படைப்பாளியின் படைப்பு கடல் பதிப்பகத்தில் அறிமுகப்படுத்தாவிட்டாலும் வேறொரு பதிப்பகத்தின் மூலம் நூல்களை வெளியிட்டுக்கொள்வார். அதன் அடிப்படையில் தான் இலங்கையிலிருந்து எழுதும் பெண் கவிஞர் கயூரி புவிராசாவின் கவிதைகளை முதன் முதலில் உங்களின் ‘கலகம்’ இணைய இதழில் தான் வாசித்தேன். வாசித்து இவரின் புத்தகம் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்குமெனக் கருதி அவரை முகநூலில் கண்டறிந்து நானே கேட்டு விரும்பி “ஒரு பகல் ஒரு கடல் ஒரு வனம்” தொகுப்பு இப்போது வெளியாகிறது. இதற்கு நீங்களும் ஒரு காரணம் தான். இது போல அறிமுக எழுத்தாளர் திறமையாக எழுதும் பட்சத்தில் கடல் பதிப்பகத்தில் அவரின் படைப்புகளை வெளியிடவே விரும்புகிறேன். அதற்காக அறிமுக படைப்பாளி எனும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி மேம்போக்காக எந்த ஒரு படைப்பும் வெளியிடவும் செய்யமாட்டேன்.

 

5 -அமெசான் கிண்டில் போன்ற மின்னூல்கள் ஒரு கையடக்க கருவியிலேயே எளிதாகவும் விலை மலிவாகவும் பெற்று வாசிக்கக் கூடிய காலகட்டத்தில் , அதற்கு இணையாக தொன்மையான அச்சுப் பிரதி நூலை வாசகர்களுக்குச் சென்றடையச் செய்யும் சந்தைப்படுத்தல் முறை சவாலாக இனி இருக்குமெனக் கருதுகிறீர்களா ?

  • அமேசான் கிண்டில் போல மின்னூல் பிரதியில் பெரிதாக எனக்கு ஆர்வமில்லை. எப்படி திரைப்படமென்பது திரையரங்கில் ஓடவேண்டுமோ அது போலப் புத்தகங்கள் என்பது புத்தகக் கடைகளில் கிடைக்க வேண்டும். புத்தகக் கடைகளில் புத்தகங்களைத் தேடி வாங்குவதே ஒரு அலாதியானது, இந்த திருப்தி கிண்டிலிலோ வேறு எந்த மின் பிரதியிலோ கிடைக்காது. இல்லை எனில் சென்னை புத்தகக் கண்காட்சி போன்ற புத்தக கண்காட்சிகளில் இத்தனை கடைகளுடன் அதிகமான புத்தகங்கள் எப்படி விற்பனையாகும். ? எல்லாருமே மின்னூலில் படித்துவிட்டுப்போனால் எதற்காக இத்தனை கண்காட்சிகளும்.. இத்தனை கடைகள் போடுகிறார்கள்? ஒவ்வொரு வருடமும் ஏன் இவ்வளவு புது பதிப்பகங்கள் உருவாகிறது.? நான் கடல் பதிப்பகம் ஆரம்பித்தது போல நீரை மகேந்திரன்  ‘துருவம்’ பதிப்பகம் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் நிறைய நண்பர்கள் புது பதிப்பகங்கள் ஆரம்பித்துள்ளனர். புத்தகம் என்பதே அந்த புத்தக அச்சு, புத்தக அட்டைப்படம், தாள்கள், வடிவமைப்பு உள்ளடக்கிய ஒரு கலை . இந்த கலையை ரசித்துப் படிப்பதே ஒரு அலாதியான அனுபவம். இந்த அனுபவத்திற்கு எந்த ஒரு மின்னூல் பிரதியும் ஈடு ஆகாது.

6 – அதே போலச் சட்டத்திற்குப் புறம்பாக அச்சில் வெளியான நூலை பிடிஎப்- ஆக இலவசமாக வாசிக்கக் கிடைக்கிறது. இதை ஒழிக்க பதிப்பகங்கள் செய்ய வேண்டிய முதன்மையான செயல் எதுவாக இருக்க வேண்டும். ? என்ன செய்யலாமென கருதுகிறீர்கள்?

  • திருடனா பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இது. ஓசியில் பிடிஎப் கொடுப்பது. டெலிகிராம் போன்ற செயலியில் வெளியிடுவது எல்லாம் இப்படியான திருட்டுதான். அமேசான் கிண்டிலில் இருந்து எடுத்து பிடிஎப் – ஆக மாற்றி டெலிகிராமில் வெளியிடுகிறார்கள். இதைப் பலரிடம் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது அப்பட்டமான திருட்டுதான். பல கோடி ரூபாயில் எடுக்கப்படும் திரைப்படத்தை எப்படி இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடுகிறார்களோ அது போன்ற மோசடியே இது. ஒரு நூறு புத்தகங்கள் இன்று அச்சிட பத்து , பதினைந்தாயிரம் ரூபாய் ஆகிறது. இதில் விற்பனையாகி, பதிப்பாளருக்கும் லாபம் கிடைத்து. எழுத்தாளருக்கும் உரிமத்தொகை கொடுக்க வேண்டும் . உரிமத்தொகை நம்பியே பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பா.ராகவன் போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை நம்பியே இருக்கிறார்கள். படைப்புகள் எழுதியும், தொலைக்காட்சி தொடர் கதைகள் எழுதியும் எழுத்தை நம்பியே இருக்கிறார். அவரின் நூல்கள் திருட்டுத்தனமாக டெலிகிராமில் கிடைக்கிறது. ‘எதை வேண்டுமானாலும் திருடுங்க ஆனால் எழுத்தாளரின் உழைப்பையும் படைப்பையும் திருடாதீங்க’ என்பதே நாம் அவர்களுக்கு வைக்கும் கோரிக்கையாக இருக்கும்.

 

7 -மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்புகளை பதிப்பதிலும் கவனம் செலுத்துகிறீர்கள். மகிழ்ச்சி! எந்தெந்த மொழி மற்றும் தேசங்களிலிருந்து படைப்புகள் தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் நினைக்கிறீர்கள். ? மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுவதன் பிரச்சினை அல்லது சவால் உள்ளதாகக் கருதுவீர்களா ? ஆம் எனில் சற்று விரிவாகச் சொல்லுங்களேன்.

ச.வின்சென்ட் மொழிபெயர்த்த  ’க்ரோ மவுன்டன் – உலக சிறுகதைகள்’ கொண்டு வந்திருக்கிறோம். அச்சில் இருக்கும் ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கு காபிரைட்ஸ் பிரச்சினை வந்தது. காபிரைட் வாங்கக்கூடிய தொகை தமிழில் அச்சிடக்கூடிய எண்ணிக்கைக்கு ஒத்துவராது. தமிழில் தீவிர இலக்கிய வாசகர்கள் தவிர பொதுவான வாசகர்கள் மொழிபெயர்ப்பு படைப்புகள் வாங்குவார்களா என சொல்ல முடியாது. காபிரைட்ஸினால் அச்சிட நினைத்த ஒரு புத்தகம் அப்படியே கைவிட்டுவிட்டேன். காபிரைட்ஸ் வாங்கி புத்தகம் வெளியிடும் எதிர் வெளியீடு அனுஷ் போன்றவர்கள் முறையாக அனுமதி வாங்கி செய்கிறார்கள். ஆனால் எங்களைப் போன்ற புதிய பதிப்பகங்கள் பணம் கொடுத்து ரைட்ஸ் வாங்கி செய்ய நிறையச் சிக்கல்கள் இருக்கிறது. ஆனால் நமக்கு கிடைக்கக்கூடிய மொழிபெயர்ப்பு படைப்புகள்.. உலக அளவிலிருந்தும் இந்திய அளவிலிருந்தும் சிறந்த படைப்புகளை வெளியிடுவதில் விருப்பம் இருக்கவே செய்கிறது.

 

8 – புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு குறிப்பாகச் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு மட்டுமே பல நூல்கள் வெளியிட ஆர்வம் காட்டும் பதிப்பகங்கள் மற்ற நேரங்களில் பெரிய ஆர்வமின்றி செயல்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. கண்காட்சியில் வாசகர்கள் அதிகளவில் கூடுகிறார்கள், நூல்கள் வாங்குகிறார்கள் என்பதெல்லாம் சரி. ஆனால் வாசிப்புத் தேவை பெருகப் பெருக பதிப்பிக்கும் தேவையும் எப்போதும் இருக்கிறது அல்லவா?

புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வாங்கக்கூடிய மனநிலையில் வாசகர்கள் வருவார்கள். எனது  ‘சாமானிய மனிதர்களின் எதிர்க்குரல்’ இரண்டு நாட்களில் இருநூறு புத்தகங்கள் விற்று இருக்கிறது. அதேபோல ஏ.ஆர். ரஹ்மான் நூலும் குறைந்த காலத்தில் முந்நூறு பிரதிகள் விற்று இருக்கிறது. இந்த மாதிரி விற்பனைகள்… அனைவரும் ஒன்றாகக் கூடும் நேரத்தில் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது எல்லா நேரத்திலும் எல்லா சூழலிலும் நடக்கும் என நாம் சொல்ல முடியாது. அதே போல பெரும்பாலான பதிப்பகங்கள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் புத்தகங்களை வெளியிடுகிறார்கள் எனில் கண்காட்சியை முன்னிட்டு விற்பனை ஆகும் புத்தகங்களின் தொகை உடனடியாக கிடைக்கும். முதலீட்டுக்கு மேல் லாபம் கிடைக்கும், மற்ற நேரங்களில் கடைகளுக்குக் கொடுத்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் காலதாமதம் ஆகும் . மற்றபடி Commonfolks போன்ற ஆன் லைன் விற்பனை தளங்கள் பணம் கொடுத்தே புத்தகங்களைப் பெறுகிறார்கள். இது போன்ற ஆன் லைன் விற்பனை கடைகள் பெருகினாலே எல்லா நேரமும் புத்தகம் வெளியிடும் சூழல் உருவாகலாம். ஆக பெரும்பாலான வாசகர்களைச் சேர்கிறது என்பதினாலே புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு புத்தகங்கள் வெளியிடப்படுகிறது. இதில் வரும் லாபத்தை முதலீடு செய்து மற்ற புத்தகங்களை அச்சிடலாம் என்பதாலே கண்காட்சி முன்னிட்டு இத்தனை புத்தகங்கள் வெளியாகிறது.

 

9 – தமிழிலக்கிய முன்னோடிகளின் பலநூல்கள் தற்போது வாசிக்கக் கிடைப்பதில்லை. அத்தகைய நூல்களைக் கண்டறிந்து உரிமம் பெற்று மறுவெளியீடு செய்யலாமே..? உங்கள் கருத்து..?

  • ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, ப.சிங்காரம் போன்ற தமிழ் முன்னோடிகளின் படைப்புகள் கிடைக்கிறது. காலச்சுவடு, கிழக்கு பதிப்பகம், நற்றினை பதிப்பகம் மூலம் ச.கந்தசாமி, நகுலன் போன்றவர்களின் நூல்களும் கிடைக்கிறது. நாட்டுமையாக்கப்பட்ட ப.சிங்காரம். சு.சமுத்திரம் ஆகியோரின் அரிய படைப்புகளைத் தேடிக் கண்டறிந்து அடுத்த வருடம் மறுவெளியீடு செய்ய விருப்பம் இருக்கிறது.

10 – படைப்பாளர்களே சொந்தமாக பதிப்பகங்கள் ஆரம்பிப்பது வழக்கமாகிவிட்டதே ! ஏன். ?

  •  பதிப்பகங்கள் எழுத்தாளர்களின் படைப்புகளை சரியான நேரத்தில் புத்தகங்கள் வெளியிடாதே காரணம். இந்த புத்தகக் கண்காட்சிக்கு என வாங்குகிறார்கள் ஆனால் அடுத்த புத்தகக் கண்காட்சிக்குத் தான் வெளியிடுகிறார்கள். இதனால் பழைய புத்தகமாகிவிட்டதாகக் கருதும் சூழல் உருவாகிவிடுகிறது. இது போன்ற காலதாமதங்கள் போன்ற சவால்கள் எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. இன்னொரு விஷயம் என்னுடைய படைப்புகளை நான் நினைத்த மாதிரி. நினைத்த அட்டைப்படத்துடன் கொண்டுவரும் சுதந்திரம், நான் பதிப்பிக்கும் போது இருக்கிறது. இதுவே மற்ற பதிப்பகங்களிடம் வடிவமைப்பு, லேஅவுட், கேட் போல்டு என நினைத்தது போலக் கேட்டால் செய்யமாட்டார்கள். சாதாரண அட்டையிலேயே புத்தகம் தயாரிப்பார்கள். இப்படியாக நமது படைப்புகளைச் சிறந்த வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்திச் செய்யலாம். இன்னொன்று POD முறையில் எந்த எண்ணிக்கையிலும் அச்சிட்டுக் கொள்ளலாம் என்பதாலும் எல்லா படைப்பாளர்களும் பதிப்பகங்கள் தொடங்கும் தன்மை இருக்கிறது. ஆனால் கடல் பதிப்பகத்தில் என்னுடைய படைப்புகள் மட்டுமின்றி மற்ற படைப்பாளர்களின் படைப்புகளிலும் கவனம் செலுத்திச் சிறந்த படைப்புகளை வெளியிடுவேன்.

11 சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படும் நூல் குறித்த பதிவுகள், விமர்சனங்கள், வாசிப்புக்கு என்றே 50,000 க்கும் மேற்பட்ட வாசகர்களை உறுப்பினர்களாக கொண்ட முகநூல் குழுக்களில் தினமும் வாசிப்பு போட்டிகளில் கலந்து வாசகர்கள் பகிரும் எண்ணற்ற நூல் திறனாய்வுகள்.. வாசிப்பு அனுபவங்கள் பகிர்வதைக் காணும் போது வாசிப்பு பழக்கம் இன்றைய காலகட்டத்தில் முன் எப்போதும் விட அதிகளவில் இருக்கிறது எனக் கருத நேரிடுகிறது. இப்படி இருக்கும் போது பொதுமக்களை நோக்கி பதிப்பகங்கள் ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பதுண்டு ? புத்தக விற்பனை சரிவுக்கு வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்பதே அது. உங்கள் கருத்து ?

  • வாசிப்பு பழக்கமெல்லாம் குறையவே இல்லை. முன்பைவிட இன்று தீவிர வாசிப்பு பழக்கம் அதிகரித்தே இருக்கிறது. எனக்குத் தெரியும். 2006- ஆம் ஆண்டு நடந்த காயிதே மில்லத்-தில் நடந்த  சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து கடைசியாகக் கடந்த வருடம் ஓய்.எம்.சி.ஏ வில் நடந்த கண்காட்சி வரை சென்றிருக்கிறேன். முன்னெல்லாம் தமிழினி  போன்ற ஸ்டால்களில் மிகவும் குறைவான ஆட்கள் தான் புத்தகம் வாங்குவார்கள். வெகுஜன பதிப்பகங்களில் இருக்கும் கூட்டத்தை விட இங்குக் குறைவாக இருக்கும். இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. வெகுஜன பதிப்பகங்களை விடத் தீவிர இலக்கிய பதிப்பகங்களில் கூட்டம் அதிகரிப்பது புத்தகக் கண்காட்சியில் பார்க்க முடிகிறது.
  • பேஸ்புக் வந்த பிறகு எத்தனையோ புத்தக அறிமுகங்கள் செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் தெரிந்த படைப்பாளிகளுக்கு நண்பர்களுக்கு மட்டுந்தான் சில இதழ்களில் புத்தக விமர்சனம் எழுதுவார்கள். ஆனால் இன்று ’வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம்’ போன்ற முகநூல் குழுக்கள். சென்னை புத்தக கண்காட்சி முகநூல் குரூப்,  புக் டே போன்ற இணையதளங்கள், நீங்கள் நடத்தும் ’விமர்சனம்’ இணையதளம் மூலமாக என  நிறையப் புத்தக அறிமுகங்கள், விமர்சனங்கள் வெளியாகிறது. இதனால் பல புதிய வாசகர்கள் எழுத்தாளர்களை நோக்கி வருகிறார்கள். இப்படியாக முன்பை விட புத்தக வாசிப்பு அதிகரித்து இருக்கிறது என்பது சரி. குறைந்து இருக்கிறது எனச் சொல்வதில் நியாயமே இல்லை. இல்லன்னா என்னுடைய புத்தகமெல்லாம் இரண்டு நாட்களில்  இருநூறு பிரதி எப்படி விற்று இருக்கும் ?

 

12- புத்தகக் கண்காட்சி நாட்களைத் தவிர்த்து புத்தக விற்பனை மந்தநிலைக்கு என்ன காரணங்கள் இருக்கக் கூடுமெனக் கருதுகிறீர்கள்?

  • அதெல்லாம் இல்லை. சரியான முறையில் ஒரு புத்தகம் பற்றிய அறிமுகம் செய்தால் வாங்கவே செய்கிறார்கள். தமிழ் இந்து, தினத்தந்தியில் விமர்சனம் வந்தால் உடனடியாக 200 பிரதிகள் விற்கவே செய்கிறது. அதே போல முகநூலில் விமர்சனம் வெளியானாலும் முப்பது நாற்பது பிரதிகள் விற்கிறது. வாசகர்களின் கவனத்திற்கு மாவட்டந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். புத்தகம் சார்ந்து யூடியூப் -ல் பேசுவது  போல எதாவது செய்துகொண்டிருந்தால் போதும். இந்த மந்தநிலை என்பதே எல்லாரும் புத்தகம் வாங்கும் சூழல் இருக்காது. ஒரு மிடில் கிளாஸ் சார்ந்தவர் எத்தனை புத்தகங்களை வாங்கிட முடியும். ? ஒரு வருஷத்திற்குத் தேவையான புத்தகங்கள் மட்டுமே அவரால் வாங்க முடியும். அதை சென்னை புத்தகக் கண்காட்சியிலோ மதுரை புத்தகக் கண்காட்சியிலோ வாங்கிவிடுகிறார். இது போக அவ்வப்போது  common folks  இணையதளம் மூலமாகவோ பதிப்பகங்களை தொடர்புகொண்டு சலுகை விலையிலோ வாங்கிவிடுகிறார். ஆக இது பற்றி எல்லாம் நாம் கவலைப்பட அவசியமில்லை என்றே கருதுகிறேன்.
  • மற்றபடி இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி கொரோனா என்பதானாலோ பண்டிகை நாட்கள் என்பதாலோ கூட்டம் குறைவாக வரும் என எண்ணவில்லை. புத்தக விற்பனையில் ஒரு சாதனை படைக்கக்கூடிய கண்காட்சியாக 2022 சென்னை புத்தகக் கண்காட்சி இருக்கும் என நம்புகிறேன்.

 

13 – வாசிப்பு பழக்கம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என இளம் தலைமுறையினருக்கு பதிப்பக உரிமையாளராக நீங்கள் தெரிவிக்க நினைப்பது ?

  • சிறுவயதில் தினத்தந்தி, தினமலர் -வாரமலர், சிறுவர் மலர், பூந்தளிர் இதெல்லாம் வாசித்து, வாசித்துத்தான் வந்தேன். அதற்குப் பிறகு ஒரு காலகட்டத்தில் சுஜாதா, அனுராதா ரமணன், இந்துமதி, வாஸந்தி, பாலகுமாரன் இவர்கள் எல்லாம் என் வாசிப்புக்கு அறிமுகம் ஆகிறார்கள். அதற்குப் பிறகு ஒரு காலக்கடத்தில் அசோகமித்திரன், சா.கந்தசாமி, சுந்தர ராமசாமி, ஜெயமோகன் இவர்கள் எல்லாம் அறிமுகம் ஆகிறார்கள். இந்த வாசிப்பு ஒருத்தன் தேடிட்டே இருந்தால் அடுத்தடுத்த நிலையை அடைவதை அவர்களாகவே அடைந்துவிடுவார்கள். வாசிப்பு ஒன்று இருப்பதினால்தான் இவ்வளவு நல்ல ஆளுமைகள் , நல்ல மனிதர்கள் உருவாகி இருக்கிறார்கள். சிறந்த முக்கியமான ஆளுமைகள் எல்லாருமே சிறந்த வாசிப்பாளர்களாகவே இருப்பார்கள். வாசிப்பு என்பது நமக்கு இருக்கக்கூடிய பல மனக்குழப்பங்கள், சுணக்கங்களைப் போக்கக் கூடியது. வாசிப்பு நமக்கு மிக அவசியம். இப்போது இருப்பதைவிட எதிர்காலத்தில் வாசிப்பாளர்கள் அதிகரிப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

 

14 – சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வாசகர்களுக்கு  எழுத்தாளராக நீங்கள் பரிந்துரைக்கும்  நூல்கள் என்ன என்ன ?

  • பரிந்துரைக்கும் நூல்கள் என்பதே ஒரு அதிகாரம் செய்யக்கூடிய வேலையாகத் தான் நான் பார்க்கிறேன்.  ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு பட்டியல் இருக்கும். யார் சொன்னாலும் சொல்லாட்டியும்  ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், சோ.தர்மன் இந்த மாதிரி பிரபல எழுத்தாளர்கள் நூல்கள் விற்பனையாகவே செய்யும். யாரும் பின் வாங்கவே போவதில்லை.  சுஜாதாவின் நூல்கள் யாரும் சொல்லாட்டியும் வாங்கிட்டுதான் இருப்பார்கள். பாலகுமாரன் நூல்கள் யாரும் சொல்லாட்டியும் வாங்கிட்டுதான் இருப்பார்கள். பரிந்துரைக்கும் நூல்களாக இல்லாமல் எல்லாருமே அவரவர்களுக்குத் தேவையான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டுதான் செல்கிறார்கள். இதைதான் வாங்கவேண்டும் என ஒரு பத்து நூல்கள் மட்டும் பரிந்துரைப்பது தவறான விஷயமாகிவிடும்.

 

  • என்னுடைய வேண்டுகோள் என்னவெனில், புதியதாக கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல் எழுதுவோருக்கு முன்னுரிமை கொடுத்து வாங்குவீர்கள் என்றால் அவர்கள் எதிர்காலத்தில் நல்ல படைப்புகள் எழுதுவார்கள்.   பிரபல எழுத்தாளர்கள் ’கை புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு’ என்பதைப் போல எப்படி இருந்தாலும் வாசகர்களிடம் சென்று சேர்ந்துவிடுவார்கள்.  நாங்களே கடல் பதிப்பகத்தில் கயூரி புவி ராசா, தாட்சாயிணி போன்ற அறிமுக படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு இருக்கிறோம். அவர்கள் இப்போதுதான் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகிறார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு பதிப்பகத்திலும் இருக்க கூடிய  புதிய படைப்பாளிகளின்  படைப்புகளுக்குப் பெருவாரியான வாசகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி ! உங்கள் கடல் பதிப்பகம் மூலம்  வெளியிடப்படும் நூல்களின் ஆசிரியர்கள்  அனைவருக்கும்  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்,  இலக்கிய உலகில் நங்கூரமிட்டு புதிய சாதனையும்  பெருமிதம் கொள்ளும் இலக்கிய சேவையும் கடல் பதிப்பகம் செய்திட மீண்டும் விமர்சனம் இணையதளத்தின் வாழ்த்துகள். !


 

One thought on “கடல் பதிப்பகம் – விஜய் மகேந்திரன் உடனான நேர்காணல்

  • நம்பிக்கை தரும் நேர்காணல். அன்னம், க்ரியா போல் காலத்தில் கடல் நிலை கொள்ள வாழ்த்துக்கள்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *