சுதேசமித்ரன்  ஆசிரியராக உள்ள ஆவநாழி மென்னிதழ் -9 -இல் வெளியான  எம்.கோபாலகிருஷ்ணனின் சிறுகதை குறித்து அன்பாதவன் அவர்களின் விமர்சனம் இது. 


’அனலோடும் வெயில் பாதை’ சமீபத்திய ஆவநாழி இதழில் ( டிசம்பர் 21 – ஜனவரி 22) வெளிவந்த சிறுகதை.

அம்மா, அப்பா, ஒரு சிறுவன் மற்றும் பெரியம்மா என சிற்சிலப் பாத்திரங்களை உள்ளடங்கிய கதையின் பிரதான பாத்திரம் பெரியம்மா.

திருப்பூர் அருகே உள்ள மில் வேலையில் தன்னை இணைத்துக் கொண்டவளுக்கு தன் குடும்பத்தையும் , தங்கை குடும்பத்தையும் காக்கும் வேலை ! பின் ஏது ஓய்வு ? மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே !

கதை பெரும்பான்மையும் சிறுவன் பாலு வழியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதிலயே பெரியம்மாவின் பூரண வடிவம் வாசகனுக்கு பிடிப்பட்டு போகிறது. இது யதார்த்த வகை கதை சொல்லல் பாணி.

ஓயாமல் வேலைக்குச் செல்லும் பெரியம்மா ஒருபுறமெனில், கைக்காசைத் தொலைத்து பொறுப்பின்றி திரியும் அப்பா .. என்பது அந்தப் பகுதி ஆண்களுக்கான குறியீடா ?

பெரியம்மாவின் தீராத்தலை வலி இங்கு ஒரு குறியீடு ஆகிறது. Stress  என்பது வேறு வேறு வகையான நோய்களைத் தரும் என்பது  உளவியல் உண்மை.

பெரியம்மாவின் ஸ்ட்ரெஸ் என்பது இங்கு

  1. ஓய்வின்மை
  2. பொறுப்பற்ற மற்றொரு குடும்பத்தையும் தாங்கும் பொறுப்பு.

உழைக்கும் மக்கள் அறிவியல் பூர்வமாக பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணாமல் மந்திரவாதி பேய்கட்டுதல் என நிலவுடைமைச் சிந்தனையில் சிக்கிச் சுழல்வது காலக் கொடுமை.

இந்த அனல் பாதையிலிருந்து மீள்வது எங்கனம் ? உழைக்கும் மக்களை காப்பது எது? எந்த சக்தி?

பெண்கள் தொழிலகத்திலும் உழைத்து, வீட்டிலும் ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிர்பந்தம் எதனால் ?

வினாக் குட்டிகள் நெளிந்து நெளிந்து வாசகன் முன் படமெடுக்கின்றன.

அவனுக்கோ இந்தப் பக்கம் காலண்டர். அந்தப் பக்கம் கார்ல் மார்க்ஸ் போட்டோ. ஆயுத பூஜையும் வேணும், மகளிர் தினமும் கொண்டானும்.

இப்போது வாசகனுக்கு ஓயாத் தலைவலி மண்டையடி..!

எந்த மருந்து பிணிப்போக்கும் ?


இச்சிறுகதையையும் ஆவநாழி மென்னிதழ் முழுவதையும் வாசிக்க இணைப்புச் சுட்டி –> ஆவநாழி கலை சினிமா இலக்கிய மென்னிதழ்- 9