காலையில் கிளம்பும் பொழுதில் இருந்து மாலையில் வீடு திரும்பும் வரையில் நம்மை அநேக நம்பிக்கைகள் பின்தொடர்ந்து வருகிறது. நண்பர் ஒருவர் பேசியபோது சொல்லிக்கொண்டு இருந்தார். காலையில முதல் வேலையா டி.வியில் போடற ராசிபலனில் எனக்கு எந்த நிறம் உகந்ததுன்னு சொல்றாங்களோ அதை எடுத்து உடுத்திட்டுதான் வெளியே போவேன். அதற்கு தகுந்தாற்போல ஜோதிடத்தில் தேர்ந்த ஒருவர் ஒரு காரியம் நடக்கணுமின்னா நாம எதிரில் இருப்பவரிடம் எந்த இடத்தில் நின்று பேசலாம் என்பதை வரையில் விளக்கினார். அதிலும் செக்கில் கையெழுத்திடும் போது கூட நேரம் பார்த்து கையெழுத்து இடவேண்டும் அப்போதுதான் பாஸாகும் என்றார். நான் அப்போ பணம் போடவேண்டாமா? என்று எடக்காக கேட்டு அவரின் முறைப்பை பெற்றுக்கொண்டது ஒருபுறம். தோழர் விஜய் அவர்களின்நகரத்திற்கு வெளியேசிறுகதைத் தொகுப்பை சில நாட்களுக்கு முன்னதாகவே வாசித்துவிட்டேன் ஆனால், பதிவிடதான் முடியவில்லை, மீண்டும் ஒருமுறை இப்போது வாசித்துவிட்டு பதிவிடுகிறேன். சனிப்பெயர்ச்சி கதையைப் படிக்கும் போது எனக்கு அந்த நினைவுதான் வந்தது,

தங்களுடைய தேவைகளை எப்படியாவது தீர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நினைப்பில் ஒவ்வொருவரும் நண்பர்களையும், உறவுகளையும் எப்படி வளைக்கிறார்கள் என்பதை படைத்திருந்தார். மதுவிருந்திற்கு அழைக்கும் நண்பன். மறுத்தாலும் வேறு வழியின்றி கிளம்ப வேண்டிய சூழ்நிலை, எதிர்பாராத விபத்து அதற்கு காரணம் கற்பிக்கும் நண்பனின் மனைவி, தானே குடித்துவிட்டு அடுத்தவர்களுக்கு நீதி போதிக்கும் காவல்துறை இப்படி அநேக ஏமாற்றங்களையும், வஞ்சகங்களையும் பாலில் கலந்த தண்ணீரைப் பிரிக்கும் அன்னப்பறவையைப் போல பிரித்து காட்டியிருக்கிறார். ஜாதகம் பலித்ததா? சனிப்பெயர்ச்சி பழிவாங்கியதா? என்ற கேள்வியில் முடிந்திருக்கும் கதை, சனியும், கெட்ட நேரமும் வெளியில் இல்லை நம்அருகில் உள்ள மனிதர்களின் மனநிலையைப் பொறுத்துதான் என்பதை கூறுகிறது.

இருத்தலின் விதிகள் இலக்கியத்தின் இன்றைய நிலையை அழகாக வெளிக்காட்டிக்கொள்கிறது. சிறுபத்திரிக்கை நடத்துபவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன் அவர் அடிக்கிற வெயிலில் தனித்து விட்டு சென்றுவிட்டார் என்று எழுதியிருந்தார். ஒரு புத்தக அலமாரியின் விலையை யோசிக்கும் மனிதர்கள் அந்த புத்தகத்தின் விதையை மறக்கிறார்கள். இலக்கியவாதி ஒருவர் இறந்ததும் அவரின் புத்தகங்கள் இனாமாக கொடுக்கப்பட்டது என படிக்கும்போது அந்த அநாதையான புத்தகங்களுக்காக என் மனம் அழுதது என்னையும் அறியாமல் நான் என் அலமாரிப் புத்தகத்தை தடவிப் பார்த்துக்கொண்டேன். எனக்குப்பிறகு அநாதையாகப்போகிறாயோ என்று !

என்னுடைய அறையை பார்ப்பதற்கும் எனது துயரம் கூடுவதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. கலைந்து கிடக்கும் புத்தகங்கங்களும், பரிசுப்பொருட்களும் காதலை நினைவு படுத்துகிறது. மழை புயல் சின்னத்தின் முதல் பாராவில் படித்தது, சிலநேரம் இலேசான மழைத்தூரல், பழைய காதலின் சாயல் கூட மனதைக் காயப்படுத்தியிருக்கிறது. ஈரப்பதமிக்க காற்று ஜன்னலின் அருகிலேயே நிற்கச்சொல்கிறது. உடலின் ஒத்துழைப்பிற்கும் மனதின் கசந்த வெறுப்பிற்கும் தொடர்பே இருப்பதில்லை, இரண்டு பொருத்தமற்ற உடலைப் போல் இயங்கியது.காதலுக்கும் காற்றுக்கும் மழைக்கும் ஏன் விளம்பரங்களுக்கும் கூட தொடர்பு படுத்தி இருக்கிறார் விஜய்.

பொருட்களின் நம்பிக்கையை மட்டும் அல்ல அதன் தரத்தையும் மிகைப்படுத்திக்காட்டுகிறது விளம்பரங்கள். விளம்பரத்தின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பினையும், சம்பிரதாயத்தைப்போல அது தன்மீது திணிக்கப்படுவதையும் கூறியிருக்கிறார். தோழர் விஜய்யின் சிறுகதைகளை வாசிக்கும் போது இயல்போடு கூடிய நேசம் வெளிப்படுகிறது. நவீனத்துவத்தின் தூறல்கள் கதைகள் முழுக்க!

பாசமுடன் தடவித்தரும் அன்னையின் விரல்களைப்போல நட்பு சுமூகமான வருடலை அளிக்கிறது. என் முன்னோர்களின் பழைய மடல்களில் நிற்க! என்று எழுதியிருந்த அந்த சாய்வான கையெழுத்துப்பிரதியை நினைவுபடுத்தியதற்கு தோழருக்கு நன்றி ! ஒவ்வொரு வரியையும் அனுபவித்து படிக்க வைத்தது, மூன்று நான்கு முறை படித்துவிட்டேன் உண்மையில் நகரத்திற்கு வெளியே என்பதைவிடவும் மனிதனுக்குள்ளே என்றுதான் தோன்றுகிறது.

எழுத்தாளனின் பார்வைகள் வித்தியாசப்பட்டு இருக்கும் என்பதற்கு ஒவ்வொரு கதையும் கட்டியம் கூறுகிறது. லா..ராவின் கதை ஒன்றில் இரண்டு வயதான நண்பர்கள் கையெழுத்தைப் பார்த்து தடவிக்கொள்வார்கள் அப்படியெழுதியிருந்தீர்கள் என்று கதையில் ஒரு வரி, அதைப்போலத்தான் விஜய் நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்

நகரத்திற்கு வெளியேதொகுப்பில் ஒவ்வொரு சிறுகதைகளும் சிகரம் தொட்டிருந்தாலும்அடைபடும் காற்றுகதை மகுடம்! நவரத்தின கிரீடம் பதித்த விக்கிரமாதித்தனின் மகுடம்.


லதா சரவணன்

 

நூல் தகவல்:
நூல் : நகரத்திற்கு வெளியே
பிரிவு : சிறுகதைகள்
தொகுப்பாசிரியர்: விஜய் மகேந்திரன்
வெளியீடு: புலம் வெளியீடு
வெளியான ஆண்டு : ஜனவரி 2020( மூன்றாம் பதிப்பு)
பக்கங்கள் : 120
விலை : ₹ 130
தொடர்புக்கு: 98406 03499
Kindle Edition

 

நூலாசிரியர் குறித்து:

விஜய் மகேந்திரன்

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ”இருள் விலகும் கதைகள்” என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ”நகரத்திற்கு வெளியே” இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ”நகரத்திற்கு வெளியே” பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ”படி”அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ”ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ”புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ”சாமானிய மனிதனின் எதிர்குரல்” இவரது நாவல் ”ஊடுருவல்”ஆகியனவும் வெளிவந்துள்ளது

இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ”அசோகமித்திரன் படைப்பூக்க விருது ”கொடுத்துள்ளது.

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *