ஒரு கதை பனுவல் வாசிக்கப்படுகின்ற போது அதன் உரிமையாளரின் படைப்பு யுக்தி முறையும் செய்த களம் பற்றியும் கலை நுணுக்க யுத்திகளோடும் நேர்த்தியோடும் சொல்லப்பட்டு இருக்கின்றனவா? அல்லது மடித்த நிலையில் கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றனவா? (அதாவது கதையை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி கூறுவது சில படைப்பாளிகள் இதை ஒரு உத்தி முறையாக கையாண்டு எழுதுகின்றனர்) என்பதோடு அழகியல் பாணியிலான அமைப்புக்குள் செதுக்கப்பட்டுள்ளதா, இல்லை வெகு சாதாரண போக்காக கட்டமைக்கப்பட்டிருக்கிறதா? என்பனப் பற்றிய அறிதலோடு வாசிக்கப்படும் வேளையில் ஒரு படைப்பின் ஆள்மன உணர்வு பூரணத்துவம் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. ஒரு கதைக்கும் கதையாசிரியருக்குமான மிக நெருக்கம் அக்கதைகளில் ஊடாட்டத்தோடு கலந்து கிடப்பதை வாசிக்கும் அல்லது விமர்சகன் நன்கு அறிவான். அவ்வாறான மனநிலையோடு தான்  பாண்டியக் கண்ணனின்  நான்காவது புதினமான மேடை என்ற புதினத்துக்குள் புகுந்தேன். தொடர் ஓட்ட நடையில் விரிகின்ற இப்புதினம் பின்னோக்கி யுக்தி மூலமும் கதையின் பின்புலத்தையும் முன்புலத்தையும் நேர்த்தி மாறாத தன்மையுடன் படைத்துக் காட்டி இருக்கிறார்.   

படைப்பு 

     படைப்பாசிரியர் கதைக்களத்திற்கு புதியவராக வந்தவர் அல்ல ஏற்கனவே மூன்று  புதினங்களை வெளியிட்டுள்ளார். முதல் புதினமான ‘சலவான்’ 2008 ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயத்தால் வெளிவந்துள்ளது. இரண்டாவது புதினமான ‘மழைப்பாறை’ 2014 ஆம் ஆண்டு விடியல் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. மூன்றாம் புதினமான ‘நுகத்தடி’   பாரதி புத்தகாலயத்தால் 2018 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இம்மூன்றும் விளிம்பு நிலை சமுதாயத்தின் வாழ்வியலை தோலை உரித்து காட்டுகின்ற  படைப்பாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சமூக தளத்தில் பல்வேறு இனங்கள் வாழ்கின்றன, அவர்களை ஆதிக்க மனப்பான்மை உள்ள பல்வேறு உயர் சாதி என்ற அடையாளத்தோடு மற்றும் இடைச்சாதி அமைப்புகளும் இருக்கின்றன, இதை தெளிவு படுத்தும் விதமாக இவரது படைப்புக்கள் நீள்கிறது. இவைகளைத் தாண்டி பாண்டியக் கண்ணன் தொடும் களம் குறவர் என்ற இனத்தின் இனவரவியலாக  கொள்ளலாம். ஒரு சமூக  அதிகாரத்தின் ஒடுக்குதலுக்கும் ஆதிக்கத்தின் நெடியின் உலுக்கும் அல்லது ஆதிக்க மேன்மையில் வாழும் வர்க்கத்திற்கு இடையே நடக்கும் போராட்டக் கொடுமைகளையும், மழைப்பாதை, நுகத்தடி, சலவான் ஆகியன  விவரிக்கிறது. குறவர் இனம் 28 வகைகளாக இருக்கின்றன என்ற பண்பாட்டு வெளி குறிப்பு இடம் பெறுகிறது அவ்வினத்தின் பண்பாடு சடங்குகள் வாழ்க்கை வட்ட கட்டகத்துக்குள் ஆதிக்க மனப்பான்மை மனநோயாக நடப்பதையும் எடுத்துரைக்க தவறவில்லை என்று கூறத்தான் வேண்டும். நான்காம் புதினமான விளிம்பு நிலையில் வாழும் ஒரு கலைஞனின் இவரின் படைப்பாக்கம் விளிம்பு நிலை மனிதர்கள் எல்லா புதினங்களும் இடைப்பட்டாலும் விளிம்பு நிலையில் வாழும் ஒரு கலைஞனின் படைப்பாக்கமாகவே இந்தப் புதினம் நீள்கிறது. மேடைப்புதினம்  சமூகநல அக்கறையை விட கலை அக்கறையை கொண்ட விளிம்பு மக்களின் வாழும் ஒரு கலைஞனைப் பற்றிய கரிசனை என்றே கூற வேண்டும். கலை என்பது வெறும் வார்த்தை அல்ல அது வாழ்வியலின் உணர்வு வெளிப்பாடு, கலை என்பது பொதுச்சொத்து அதை கொடுப்பவனும் பொதுவாகவே கருத வேண்டும். ஆனால் கலையை நடத்துவதற்கான இடம் பொருள் ஏவல் என்ற நிலையில் ஒதுக்கப்படும் மனநிலையும் காட்டப்பட்டு இருக்கிறது. சமூகத்தில் அதிகார அமைப்புகள் விளிம்பு நிலை மக்களை எப்படி வைத்திருக்கிறது என்ற நிலையையும் கூறப்பட்டுள்ளது. கலையால் அதிர்வை ஏற்படுத்தலாம், உணர்வை ஏற்படுத்தலாம், உயிர்பை ஏற்படுத்தலாம் என்ற தாரக மந்திரத்தை உணர்ந்த  படைப்பாளிகளுக்கு நன்கு தெரியும். கலை கலைக்கானதா மக்களுக்கானதா, கலையின் கலையைத் தாண்டி ஏதோ ஒரு வாழ்வியலின் குற்ற உணர்வின் பின்புலங்களை அச்சடிக்க தவறாமல் செய்யும் வித்தை என்று கூட நம் கருத முடிகிறது. இவர் புதின வழியே அவ்வாறான ஒரு நாடகக் கலைஞனின் கதை படைப்புதான் இந்த மேடை என்னும் புத்தகம் அமைகிறது. மேடையில் நம் சரியாக கையாளாத போது மேடை நமக்குத் தரும் பாடம் அதிகமாகும் மேடையை மேடை தலைமை தனித்துவத்தை அறிகின்ற வரையில் எந்த விதமான மேடையின் பாதிப்பு தெரியப்போகுது இல்லை

மேடைக்கான வெளி 

    மேடை என்பது வெறும் கதை ஓட்ட நடைக்குப் பயன்படுத்தி இருக்கும் வார்த்தையாக நம்ப முடியாது. மேடை எப்போதும் மேடையாக எல்லா இடத்திலும்  இருக்கிறது. ஆனால் மேடைக்கான அதிகாரம் போராட்டமும், அதிகார துஷ்பிரயோகமும், மேடை மேடையை கண்டையும் வழிக்கான முறையும் கண்டடையும்.  மேடையை வென்ற நிலையில் ஏற்படும் ஆளுமை நிலையும், பன்முகம் படிவெடுத்து உயிர் கொடுத்து காட்டப்பட்டு உள்ளது. மேடைக்கு தேவையான ஒப்பனை வேண்டும் ஒப்பனையற்ற மேடை என்பது யாரும் எவரும் விரும்புவதில்லை,  யாரும் எவரும் ஏற்றுக் கொள்வது இல்லை. இடம்தான் நம்மை காட்சிப்படுத்துகிறது. அந்த இடம் மேடையா அல்லது தரைத்தளமா அல்லது நம் பயணிக்கும் நடை மேடையா பல்வேறு குறிப்பு குறியீடுகள் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. அப்படித்தான் இந்த கதைக்குள் மேடை தலைப்பு அமைந்திருக்கிறது. மேடை வெறும்  ஒற்றை சொல் அல்ல அது கலைஞனின் உயிர் தளத்தை முட்டி மோதி நீந்து எழும் வார்த்தை, கலையில் தோல்வி அடைந்தும் மீண்டும் மீண்டும் எழ வைக்கும் கிறுக்கு மந்திரமாகவே உள்ளது. அப்படித்தான் பாகண் என்ற கலைஞரின் வாழ்வும் சித்தரிக்கப்படுகிறது. மேடை தனக்கானதா அல்லது பிறருக்காக வடிவமைக்கிறோமா, மேடை வெறும் வார்த்தை அல்ல அது ஒரு குறியீடு அதிகாரக் குறியீடு அடிமைப்பட்ட வாழ்க்கை குறியீடாக இருக்கலாம். தோல்வி கண்டவரின் வாழ்க்கை குறியீடாக இருக்கலாம், கலையை கேலிச்சித்திரமாக்கும் அதிகாரப் பாலியல் தூஷ்பிரயோகம் குறுகியதாக இருக்கலாம், எதுவானாலும் சமுதாயத்தின் வாழ்வை நிதர்சனத்தோடு கூறி இருக்கும் புதினம் தான். (மேடை  ஒரு நிகழ் கலைஞனை நிதர்சனங்கள்) 

நிதர்சனமும் யதார்த்தமும்  

      நிதர்சனமும் யதார்த்தமும் என்பது வாழ்வியலில் நடக்கும் நிகழ்வை சொல்ல விளைவதாகும். அதாவது வாழ்வை மிகப் புனைவு அல்லது புனைவு இல்லாமல் இருப்பதே இருப்பது போல கூறுவதாகும். இந்த நிலையை கொண்டு நாம் இந்த புதினத்தை அணுகும் போது ஒரு கலை படைப்பின் வாழ்க்கை எதார்த்தத்தை நிதர்சனத்தோடு சொல்லி இருப்பதாகவே கொள்ள வேண்டும். மேடை புதினத்தில் குறையாக நினைப்பது பெண் பாத்திரங்கள் மிக குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. கதை ஆசிரியருக்கு தேவை இல்லாத அமைப்பாக இருப்பதனால் இதை நாம் குறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் கலை நுணுக்க உத்திகாக  நாடக கலைஞராக படைக்கப்பட்ட பெண் பாத்திரங்கள் வர்ணனை என்ற பின்புலத்தோடு அல்லது அவர்களின் வாழ்க்கை சூழல் அமைப்போடு இருப்பதனால் வர்ணனை என்ற உடல் அலங்கார நிலையை கதை ஆசிரியர் சொல்லி செல்கிறார்.இதை கதைக்கு மெருகு ஊட்டுவதாக நினைத்தாலும் கலை வடிவ பெண்களின் உடல் வாழ்வியல்  வலிப்பட்டு கொண்டதை எதார்த்தமாக இதை ஏற்றுக் கொள்ளலாம்.  

       வாழ்க்கை உந்தப்பட்ட கலைகள் ஊடாக வாழும் பாகண் என்ற கதாபாத்திரம் சமூகஇருப்பில் தனது தேவைகளை நாடக எனும் வடிவத்தின் வழியாகவே ஆற்றாமை செய்து கொள்கிறான். அவன் செய்து கொள்ளும் ஆற்றாமைக்கும்  உதவி செய்யும் குமரன், கணேசன் என்ற நண்பர்களின் கூட்டு முயற்சியால் நாடகக் குழு உருவாக்கப்படுகிறது. இந்த மூவரும் சென்னை என்ற திரை உலக வாழ்வில் போராடி தோற்ற கலைஞர்கள். கலை தாகம் தீராத வேட்கையும் கலையை மேன்மையாக்க போராடும் உத்தியாக மூவரும் ‘மூவர் நாடகக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி கலை தாகத்தை மேன்மை அடைய செய்கின்றனர். அவர்களுக்குள் கணேசன் மட்டும் ராணுவத்திற்கு சென்று விடுகிறான். மற்ற இருவரும் கலை வடிவ மேடையை நாடக வடிவத்தை அரங்கேற்றம் செய்கின்றனர்.

கதையும் கதை வெளியும்

      கதை தொடக்கம் பாகண் என்பவனோடு தொடங்குகிறது. கதைக்கு ஆண் பாத்திரங்களை உயிரோட்டமாக உயிர் கொடுக்கும் அமைப்பாக அமைகின்றன பெண் பாத்திரங்கள் மிக சொற்பம் என்ற போதும் பெண் தேவை இல்லை என்ற ஊர்ஜிதத்தோடு இந்த புதினத்துக்குள் பயணிக்க முடிகிறது. தேவை என்னும் கருதும் வாழ்க்கை முறையை அமைகின்ற போது நாம் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற நிலையில் நாம் இதைக் காண முடிகிறது 

பாகண் என்ற கலைஞனின் வழியை கதை நகர்வு தொடங்குகிறது. அரசு துறையில் பணி செய்யும் நிலையில் இடம் மாற்றல் என்ற தண்டனைக்கு ஆட்பட்டு விருதுநகரில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிப்பதாக கதை தொடங்குகிறது. ஏன் எதற்கு என்ற எந்த பின்புலத்தையும் கதை  தொடக்கத்தில் கூறாது பயணிக்க வைக்கிறார் அதன் ஆசிரியர்.  நாகர்கோயிலுக்குச் சென்று அங்கே வேலையில் சேர்ந்தாலும் கலை தாகம் தணியாத கலைஞனுக்கு காலாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருந்த காலச்சுவடியில் அலுவலகத்திற்குச் சென்று சுந்தர் ராமசாமியை சந்திப்பதும் உரையாடுவதும் கலை நுணுக்கங்களை வாழ்வியல் எதார்த்தத்தை அறிந்து கொள்ளும் முறைமைகளை கற்பதாகவும் கூறுகிறார். இதனை குறிப்பிடும்போது பக்கம் 39 எழுத்தாளரிடம் பேசியதிலிருந்து இதுவரை அவன் நம்பிக் கொண்டிருந்த எழுத்து வெறும் வார்த்தை கூட்டம் இனிமேல் தான் நாம் எழுதப் போகிறோம் என்பதை புரிந்து கொண்டான் இப்படியாக உரையாடலுக்கு பின் அலுவலக வேலையில் இருக்கும் போது ஒருவர் நாடகம் போட சொல்கிறார் அதற்கு அட்வான்ஸாக 300 ரூபாய் தந்தும் விடுகிறார். தனக்கு வேலை போனதே நாடகம் போட்டதனால் தானே என்ற நினைவூட்டம் அவரை உலுத்துகிறது. விருதுநகருக்கு வந்து குடும்பத்தை கூட்டி வரும் போது பின்னோக்கு யுக்தியின் மூலம் நாடகம் போட்ட நிகழ்வை, பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டதை, போலீசில் அனுமதி கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டதை, நாடகம் நடத்தி முடித்து வெற்றி பெற்றதால் ஏற்பட்ட சந்தோசம், அடுத்தடுத்த நகருக்கு அது உந்துதல் செய்தது, இரண்டாவது நாடக அமைப்பு புரட்டாசி மாதம் நடக்கும் காளியம்மன் பொங்கல் திருவிழா இது வாடியான் தெரு நடக்கும் திருவிழா அதனால் அங்கே ஒரு மேடை கிடைத்தால் சந்தோஷம் என்ற நிலையில் கேட்கச் செல்கின்றனர். நாடகமும் கிடைத்து விடுகிறது நாடக நடிகைகளை வரவழைத்து நாடகமும் நடத்தப்படுகிறது. நடிகைகள் பாலியல் சீந்தலுக்கு உள்ளாக்கப்படுவதை காட்சிப்படுத்துவதை படைப்பாசிரியர் எதார்த்தமாக பதிவு செய்கிறார். ஒரு நாடகம் நடித்து அதை வெற்றியாக்கும் வரை ஒரு நடிகனின் போராட்டம் பெரும்பங்கு அடங்கி இருக்கிறது. மழை வந்து  நாடகத்தை நிறுத்துவதையும் இரவு தாமதமாகி நாடகத்தைத் தொடங்கி தாமதமாக முடிக்கும் போது கலைந்து சென்ற கூட்டத்தோடு அதிகாரிகளும் கோயில் தளகர்த்தாக்களும் கலந்து விடுகின்றனர். கூட்டி வந்த கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போராட்ட நிலையாக அமைவதை தெள்ளத்தெளிவுப்பட காட்டி இருக்கிறார். இப்படியான நாடகத்தன்மை நீண்டு கொண்டே போகிறது சில நாடகங்கள் உயிர் உள்ளவை என்ற நிலையில் அவர் போட்ட நாடகத்திற்காக தண்டிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக குற்றவாளியாக்கப்பட்டு, செய்யாத தப்பை செய்ததாக சொல்லி கையெழுத்து வாங்கி, பணி மாற்றம் செய்த நிலையும் புதினத்தில் விரிந்து கிடக்கிறது. இரண்டாவது பின்னோக்கி நடையுடன் நாடகக் கலைஞன், அரசியல் ரீதியாக அவர் அப்பா பாண்டியன் கட்சிக்காக நாடகம்  வாழ்க்கையை இதை பயன்படுத்தி தன் மகனுக்கு ஒரு கட்சி பதவியை வாங்கச் செல்லும் போது, கட்சி பதவிக்கு பதில் வேலை தருவதான ஒரு காட்சிப்படுத்ததலையும் கூறுகிறார். அந்த அரசு வேலை வாங்குவது ஏற்பட்ட பல்வேறு நொடிகள், கஷ்டங்கள், இரணங்கள் என்ற ஒவ்வொன்றையும் அடுக்கிக் கூறுகின்ற தன்மையோடு கதை கூறப்பட்டு உள்ளது. கதையாசிரியர் பாகண் நாகர்கோயில் குடியேற    குடும்பத்தைக் கூட்டி வரும் நிலையில் குடும்ப கஷ்டத்தோடு பொருளாதார நிலை பின் தங்கிய வாழ்வு என்ற நிலையோடு நாகர்கோவிலுக்கு மனைவியை கூட்டி வருகின்றார். அந்த இரவு ரயில் பயணம் நிறைமாத சுழியாக வீட்டு பொருட்களோடு ரயில் அதிகாரி ஏதாவது கேள்விகள் கேட்பதும் வறுமை சுழன்றடிப்பதும்.  ஆக நிரம்பிக் கிடக்கின்ற நிலையினை காட்டி இருக்கிறார். கடைசி வரைக்கும் கலைஞன் கலைஞன் ஆகவே இருக்கிறான் ஆரம்பத்தில் நாடகத்திற்கு அட்வான்ஸ் வாங்கி இருக்கிற முன்பணம் வாங்கி இருக்கிற நிலையோடு கடைசி அத்தியாயத்தில் மீண்டும் தனது நாடக வாழ்க்கையைத் தொடங்குவதாகவும், அவமானங்கள் கஷ்டங்கள் பொருளாதார இழப்பு எந்த பல்வேறு நிலைகளை கடந்த போதும் கடைசியில் நாடக கலைஞனாகவே நாடகமிடும் கலைஞனாகவே  புதினம் நீள்கிறது


நூலாசிரியர் குறித்து

பாண்டியக் கண்ணன் :   இயற்பெயர் ஆர்.பி கண்ணன், மதுரை மாவட்டம்  இ.கட்ராம்பட்டியைச் சார்ந்தவர், தற்போது விருதுநகரில் வசித்து வருகிறார். தமிழ்நாடு சுகதாரப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுகிறார்.  இவரின் முந்தைய நாவல்கள் சலவான் (2008),  மழைப்பாறை (2014),  நுகத்தடி( 2018). 

நூல் தகவல்:

நூல் :   மேடை  - ஒரு நிகழ் கலைஞனின் நிதர்சனங்கள்

ஆசிரியர் : பாண்டியக் கண்ணன்

வகை :    நாவல் 

வெளியீடு :  தடாகம் வெளியீடு

வெளியான ஆண்டு :  2022

பக்கங்கள் :  277

விலை : ₹  300

நூலைப் பெற

தொடர்புக்கு :  +91 98 403 77 171 

Kindle Edition : 

One thought on “பாண்டிய கண்ணனின் மேடையில் இடம் கிடைக்காத கலைஞனின் கதை

  • பாண்டிய கண்ணன் தனி ஆளுமை உடையவர் அவரின் மேடை நாவல் குறித்தான ஒரு விமர்சன பார்வையை இதில் நான் செய்திருக்கிறேன் இதை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *