“ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ரயில்
பயணி நான்
பெயர் பலகையை படிக்கும் முன்
வேகமாக கடந்து போகும் ரயில்
கண் பார்க்கும் பறவைக்கு பெயர்
வைக்கும் முன்பே
கடந்து செல்லும் பறவை . “
1980 லிருந்து தமிழ் இலக்கியத்தில் இயங்கி வரும் ஒரு முன்னோடிக் கவிஞரின் கவிதைகளை இதுவரை நான் வாசித்ததில்லை. எனக்கு ஒரு கவிதை தொகுப்பு கையில் கிடைக்கும் வரை அவர் பற்றி நான் அறிந்திருக்கலாம். அல்லது அறியாமல் இருக்கலாம். கையில் சிக்கி விட்டாலோ கவிதைகள் வழியே அவரின் மனமொழி எப்படி வினையாற்றுகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் வாசிப்பு தொடங்கிவிடும்.
ஒரு பறவையை எப்படி அறிந்து கொள்வது? அதிலும் கவிதைப் பறவையை கண்டுபிடிக்க அவரின் கலைப் படைப்புகள்தான் உதவி செய்யும். நண்பகல் முதலைகள் வழியாக அந்த படைப்பின் ஆன்மாவுக்குள் நுழைந்ததும் கவிதை குறித்த என் உணர்வுகளில் இன்னும் ஒரு படி மேலேறிசென்று புதிய வாசிப்பை எனக்கு இந்த தொகுப்பு வழங்கியது.
“அழகியை பேரழகியாய் காட்டுவது மழை என
அறியாமலே மழை மீதான பயத்தில்தான் சூர்ய அழகி
காணாமல் போயிருக்க வேண்டும்.
நான் பூமியை தோண்டி நீரெடுத்துக் குடித்தது
மழையன்றி வேறென்ன?”
மழை குறித்தான இவரது பிம்பங்கள் பல. அவை இயற்கையின் இயல்பான தோற்றப் பொழிவாகட்டும் அல்லது நாய்கள், மரங்கள், மயில்கள் என அவற்றின்மீது மழை கொள்ளும் ஆதிக்கம் ஆகட்டும் அதை மழையின் ஒழுங்கு என புரிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும். பிறகு என்ன நடக்கிறது?
மழை ஒழுங்கை அவிழ்த்துவிட்டு கவிதையோடு நம்மை நனைத்து விட்டு போகிறது. இதேபோல்,
“திருநெல்வேலியை அங்கே விட்டு விட்டு வந்தபின்
முற்றமுள்ள வீடு வாய்க்கவில்லை
முற்றத்தில் பெய்யும் மழைக்கு மண்ணில் பெய்யும்
மழையை விட சத்தம் அதிகம்.”
மழை மீதான பிரியங்கள் தான் மனிதனையும் ஈரமாக வைத்திருக்கிறது . கவிஞரின் முற்றத்தில் எப்போதும் கவிதை மழை பெய்து கொண்டேயிருக்கிறது.
அதற்கு இந்தக் கவிதையே சாட்சி.
“மேஜை மீது ஆரஞ்சு இருக்கிறது என்னவோ உண்மைதான்
சுற்றி சுற்றி வந்தாலும் ஆரஞ்சை நான் முழுதாகப் பார்க்கவில்லை.”
இந்த கவிதையில் பார்வையில் விடுபட்டு போன பொருள்களை ஒவ்வொன்றாக சொல்லும்போது பொதுவாக மனிதர்கள் எதையும் முழுமையாக பார்த்துவிட்டேன்என்று சொல்வது அவர்களின்மீது உள்ள ஐயத்தை தெளிவாகவே காட்டிவிடுகிறது. கவிஞரின் பார்வையில் முழுமையின்மையும் வாழ்வின் கொஞ்சமாக அனுமதிக்கப்பட்ட பகுதிகளும் அவரின் உள்ளார்ந்த தேடலை அதனதன் நிறைவுத் தன்மையில் நிறுத்தியபடி பயணிக்கிறது. வாழ்வின் கொஞ்சத்தை விட்டு வைப்பதும் மனிததன்மைதானே என்று சொல்லிவிட வேண்டும் போல் உள்ளது.
“நிழல் எப்படி இருக்கவேண்டும்
அவரவர்
பாலைவனத்தைப் போர்த்தும்
அளவிற்காவது இருக்கவேண்டும்.”
கவிதையில் குறியீடாக வரும் பாலைவனத்தை அளந்து பார்க்க மனிதனால் முடியுமானால் இந்த கவிதைக்கான அவரவர் கொள்ளும் பாத்திரம்தான் அளவுகோல்.
வாழவின்மீது நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள் யாவும் காலம் தோறும் மாறி வருவது போல் நமது நிழல்களும் மாறிக்கொண்டே இருக்கும். நாம் அறியாத பொது கூட நமது நிழல் நம்மை அறிந்து வைத்திருக்கும். வாழ்வின் நிஜத்தை நான்கு வரி குறியீடாக மாற்றியிருப்பது படைப்பின் உன்னதம்.
பூமா ஈஸ்வரமூர்த்தி இந்த தொகுப்பில் நெடுங்கவிதைகள் வழியாக நம்மோடும் கவிதையோடும் மற்றும் பலவகையான தன்மைகளில் அவருடனும் தனக்குத் தானே தனிமையில் பேசிக்கொண்டு இருப்பது போல் அநேக கவிதைகள் நீண்டுகொண்டே இருக்கின்றன . கவிதை வழியாகவே தன்னை நிறைத்துக்கொண்டு பயணப்படும் ஒரு பயணியை போல் தோற்றம் கொள்கிறார் கவிஞர். இரவில் ஒளிரும் நட்சத்திரம் போலவும் தனிமையில் எழும் இனிமையான உணர்வுகளை போலவும் பறவைகள் எங்கோ ஒலி எழுப்புவதை போலவும் அவநம்பிக்கைகளுக்கிடையே நம்பிக்கையான ஒரு குரலைப் போலவும் வெயிலுக்கிடையே திடீரென்று பெய்யும் மழையை போலவும் இவரது கவிதைகள் பல்வேறு நிறங்களில் ஒளிர்கின்றன. அந்த ஒளியை அருந்திவிட்டு வானில் பறக்கும் பறவையை போல் ஒரு வாசகியாய் இந்த கவிதை தொகுப்பில் அங்குமிங்கும் பறந்தலைந்த போதும் என்னால் ஒரு சிறு குவளை அளவுதான் இங்கே பகிர்ந்துகொள்ள முடிகிறது.
முடிவில் ஒரு துளியை பகிர்கிறேன்.
”முதலை ஒருவரை உண்ணும்முன் குற்ற உணர்ச்சியால்
சிறிது அழுதுவிட்டே உண்ணுகிறது என்று
கதைக்கிறார்கள்
என்னை உண்ணும் முன் அழுததாக நினைவில் இல்லை
நண்பகலை உண்ண விரும்பினேன் நண்பகலை காட்டி
அது என்னை உண்ண விரும்பியது.”
கவிஞனின் உள்ளம்தான் என்றில்லை .உடல்பொருள்ஆன்மா அனைத்தும் ஆக கவிஞர் விரும்பியிருப்பது எதுவோ அதுவேதான் அவரையும் உண்ண விரும்புகிறது.நண்பகல் முதலைகள் அவரை கரையில் இழுத்துப்போட்டாலும் தண்ணீருக்குள் இழுத்துச் சென்றாலும் அவருக்கு கவலை இல்லை . கவிதை அவருக்குள் வயதின்றி தனது வாழ்க்கையை எழுதிக் கொண்டே இருக்கிறது.
பூமா ஈஸ்வரமூர்த்தி ஜனவரி 9, 1952இல் திருநெல்வேலியில் பிறந்தவர். பிறப்பு, வளர்ப்பு, பள்ளி & கல்லூரி, திருமணம், வேலை எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு தாமிரபரணிக் கரையோர திருநெல்வேலியே. ஒரு நடுத்தர வணிகக் குடும்பத்தில் பிறந்த பூமா ஈஸ்வரமூர்த்தியின் இயற்பெயர் ஈஸ்வரமூர்த்தி. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்று தற்போது கர்நாடக மாநில பெங்களூரில் வசித்து வருகிறார். 1980லிருந்து தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். இதுவரை 12 கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஒரு நாவலும் வெளியாயிருக்கின்றன. சென்னையில் இருந்தபோது நண்பர்களுடன் இணைந்து 'கவிதைக் கணம்' என்ற தொடர் இலக்கியக் கூட்டங்களையும் ‘சிற்றிலை' என்ற சுற்றுப்புறச் சூழல் தொடர்பான கூட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறார். கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், ஆய்வு கட்டுரையாளர். மென் உணர்வுகள் தவிரவும் இயற்கையும் இவரது விருப்பம்.
நூல் : நண்பகல் முதலைகள் ஆசிரியர் : பூமா ஈஸ்வரமூர்த்தி வகை : கவிதைகள் வெளியீடு : கடல் பதிப்பகம் வெளியான ஆண்டு : நவம்பர் -2022 பக்கங்கள் : 80 விலை : ₹ 140
கவிஞர் மஞ்சுளா மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.
இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.
மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.
“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி)
வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.