இணைய இதழ்கள்

செந்தில் ஜெகன்நாதனின் “மழைக்கண்” – சிறுகதை ஒரு பார்வை



மிழினி இணையதளத்தில் செந்தில் ஜெகநாதனின் மழைக்கண் சிறுகதை வாசித்தேன். பொதுவாகக் கதைகளை வாசிக்கும் போது அது நம்மையோ, நம்மைச் சார்ந்த மனிதர்களையோ பிரதிபலிக்கும் போது மனதிற்கு இன்னும் நெருக்கமானதாக ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை விமர்சனம் என்பது ஒரு படைப்புக் குறித்த மனம் சார்ந்த கருத்துக்களை முன்வைப்பது தான். அப்படி இந்தக் கதை குறித்த என் கருத்துக்களையே இங்குப் பகிர்கிறேன்.

முதலில் கவனம் ஈர்த்தது இதன் தலைப்பு. எங்கோ இந்த வார்த்தையைப் பார்த்திருக்கிறோமே என்று சிந்தித்ததில் நினைவில் வந்தது சங்க இலக்கிய பாடல்கள்.

‘மழைக்கண்’ என்றால் கண்ணில் எப்போதும் நீர் ததும்பி நிற்பதைக் குறிக்கும். இந்தக் கதைக்குப் பொருத்தமான தலைப்பு.

ஒரு குடும்பத்திற்கு அம்மாவாக, மனைவியாக, நிர்வாகியாக, பெண் எவ்வளவு அவசியம் என்பது, குடும்பத்தலைவியை இழந்தவர்களுக்கே இருப்பவர்களை விட அதன் அருமை தெரியும். கிராமங்களில் இன்றும் ஆண்கள் தோட்டங்களில் வேலை செய்து விட்டு வந்து குளித்துவிட்டு ஓய்வெடுக்க அல்லது குடியைத் தேடிப் போக என்றிருக்க, பெண்கள் தோட்ட வேலையையும் பார்த்து விட்டு வந்து, தூங்க செல்லும்முன் வரை வீட்டு வேலையையும் பார்ப்பதைப் பார்க்கலாம். மூன்று குழந்தைகளுக்குத் தாயாக வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு, விவசாயியான கணவனுக்கு உதவியாக நிலத்திலும் உழைத்து, ஓடாகத் தேய்ந்த ஒரு பெண்ணின் கதை.

“உங்க அம்மாளுக்கு நிலத்தோட ரேகை எல்லாமே அத்துப்புடிடா தம்பி..”என்ற வரியும், ஒற்றை ஆளாக ரெண்டு ஏக்கர் நிலத்திற்குக் களையெடுத்து தண்ணீர் பாய்ச்சி,உரமிட்டு, பருத்தியெடுக்கும் போது வேலையாட்களுடன் நிறைபிடித்து நான்கு ஆண்களின் வேலையைச் செய்யும் இந்த கதையில் வரும் அம்மா பாத்திரம், தனியொருத்தியாக உழைத்து ஒரு காணி நிலத்தை நூறு காணி நிலமாக மாற்றிக் காட்டிய என் அப்பத்தாவை நினைவுபடுத்துகிறது.

“பருத்திச்செடிய பாக்குறப்ப பால்குடி புள்ளளையோல பாக்கற மாதிரி இருக்கு” என்று தான் அதனால் பட்ட உடல் வேதனையையும் மறந்து ரசிக்கும் அம்மாவிற்கு, என்கிட்ட கார் இருக்கு,பங்களா இருக்குனு சொல்றத விட.. ‘என் வீட்டுல வெத நெல்லு இருக்குனு’ சொல்றதுல தான்டா பெருமைனு
சொல்லும் என் அப்பத்தாவின் சாயல்.

தொழுநோய் மருத்துவமனை காட்சிகளை விவரித்திருப்பதும், அம்மா ஒவ்வொரு நாளும் இரவும் படும் ரண வேதனையும், கணவனின் பரிதவிப்பும் குழந்தைகளின் கையறு நிலையும், மனிதாபிமானமற்ற சுற்றமும் உறவும், “மழைக்கண்” கொண்டே வாசிக்க முடியும்.

இந்தக் கதையை வாசிக்கும் இதுவரை அலட்சியமாக இருந்த ஒவ்வொரு ஆணுக்கும் இல்லாளின் இன்றியமையாமையும், தன் வீட்டுப் பெண்ணை பத்திரமாக பாதுக்காக்கனும்னு ஒரு பயம் வரும், பயம் நல்லது.

அம்மாவின் வலிகளை வார்த்தைகளில் கடத்தும் வலிமையான எழுத்து. ஒரு நல்ல சிறுகதையை வாசித்த திருப்தியான உணர்வைக் கொடுத்தது. தமிழ் எழுத்துலகில் ஒரு சிறந்த கதைசொல்லியை அடையாளம் காட்டியிருக்கு இந்த ‘மழைக்கண்’ .
வாழ்த்துகள் செந்தில் ஜெகநாதன்.!


அம்மு ராகவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *