ம் வாழ்நாளில் பல காரணங்களால் சாமானிய மனிதனின் பேரன்பால் ஏற்படும் தருணங்கள் ஏராளம் அதேபோல் ஏக்கம், ஏமாற்றம் என்ற அனைத்தையும் பல காரணங்களால் அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தில் கடந்துவிடுகின்றோம். அப்படியான தனக்கு நிகழ்ந்த பல விடயங்களை எழுத்தாளர் கட்டுரை வடிவில் தொகுத்து இருக்கின்றார்.

இந்த தொகுப்பின் ஒரு பகுதியாக தன் நண்பர்களைக் கொண்டாடித் தீர்த்து இருக்கின்றார். இயக்குநர் மீரா கதிரவனின் விருந்தோம்பல் பற்றி எழுத ஆரம்பித்து, மு.களஞ்சியம், ராம் பால் என்று படத்துறையினரோடு ஏற்பட்ட தன் அனுபவங்களை பகிர்கின்றார்.

இன்னொரு பகுதியில் எழுத்தாளர் ஷோபாசக்தி, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், நரன் இவர்களின் எழுத்துகளையும் சிலாகித்துப் பேசி இருக்கின்றார்.

தான் தூரத்திலிருந்து தொலைக்காட்சிகளிலும், சினிமா துறைகளிலும் பார்த்த சென்னை, ஒரு காலத்தில் வேலை கொடுத்து தன்னோடு இணைத்துக் கொண்டது என்று பதிவு செய்யும் இடங்கள் கண்டிப்பாகச் சென்னை வாசியான நம் பலருக்குப் பல நினைவுகளை கொடுத்துச் செல்லும்.

பிசியோதெரபி மருத்துவர் என்பதால் பிட்னஸ் பற்றியான பதிவுகளையும் இணைத்து இருக்கின்றார். முக்கியமாக மறந்து போன உப்புக்கண்டம், ஆட்டுக்கால் சூப், முருங்கை மரத்தின் அவசியம் என்று சரியான பாரம்பரிய உணவின் அவசியத்தை எழுதி இருக்கின்றார்.

எனக்கு மிகவும் நெகிழ வைத்த கட்டுரை கவிஞர் குமரகுருபரன் பற்றியது. தன் நண்பன் மறைவுக்குப் பின் அந்த நினைவுகளை , துக்கத்தைத் தின்று தீர்க்க அவர் வாழ்ந்த குடியிருப்புக்கு வெளியே நின்று கொண்டிருந்த இடம் மனதைத் தொட்டது.

இலக்கியம், சினிமா, நண்பர்கள் என்று தன் அனுபவங்களின் சிறு பகுதியே விஜய்யின் இந்த புத்தகம்.

வாழ்த்துகள் !


நசீமா ரசாக்

நூல் தகவல்:
நூல்: சாமானிய மனிதனின் எதிர்க்குரல்
பிரிவு : கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்: விஜய் மகேந்திரன்
வெளியீடு: புலம் வெளியீடு
வெளியான ஆண்டு : 2021 ( முன்றாம் பதிப்பு)
பக்கங்கள் : 120
விலை : ₹ 130
தொடர்புக்கு: 98406 03499
Kindle Edition :

நூலாசிரியர் குறித்து:

விஜய் மகேந்திரன்

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ”இருள் விலகும் கதைகள்” என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ”நகரத்திற்கு வெளியே” இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ”நகரத்திற்கு வெளியே” பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ”படி”அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ”ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ”புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ”சாமானிய மனிதனின் எதிர்குரல்” இவரது நாவல் ”ஊடுருவல்” ஆகியனவும் வெளிவந்துள்ளது.

இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ”அசோகமித்திரன் படைப்பூக்க விருது ”கொடுத்துள்ளது.