2021 டிசம்பர் மாதம் வெளியாகிய ‘தமிழினி’ இணைய இதழில் செந்தில் ஜெகன்நாதன் எழுதிய ”நெருநல் உளனொருத்தி” சிறுகதை வெளியாகியது.  சமீபத்தில் வெளியாகிய சிறுகதைகளில் சிறந்த கதையாக கருதப்படும் இச்சிறுகதை பற்றி அன்பு மணிவேல் எழுதிய விமர்சனம் இது. 


பூங்கொடி – ராமஜெயம் தம்பதியர் மற்றும் ராமஜெயத்தின் தங்கை கிருஷ்ணவேணி என்று மூன்றே கதாபாத்திரங்கள்.

பூங்கொடியும் கிருஷ்ணவேணியும் தான் கதையிலோடும் வலியாடுகள்.

உடலோடிக் கிடக்கும் எலும்பெல்லாம் வலிக்க வலிக்க பிள்ளை பெற்று..அதைத் தானமாக்கிவிட்டு தவித்தலையும் ஒரு தாயாய் பூங்கொடியும்.., பத்துப் பணிரெண்டு வருடங்களாகியும் பிள்ளைப் பேறில்லாது மனசொடிங்கிக் காலத்தை நோவுகின்ற பிறப்பெடுத்த வலியோடு அலையாடும் கிருஷ்ணவேணியுமாய்… இரண்டு தாய்களுக்கிடையேயான உளவியல் போராட்டமே கதைக்கான களம்.

ஏற்கனவே இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்க மூன்றாவதாக ஒன்று பூங்கொடிக்குத் தரிக்கையிலேயே ‘அதை எனக்குத் தாயேன், என்று வாய்விட்டுக் கேட்ட தங்கைக்கு “நீதானே என் தலச்சன் புள்ள.. உனக்கில்லாததா” எனும்போது ஒரு தாயுமானவனாக நெகிழ வைக்கிறது ராமஜெயத்தின் பாத்திரப்படைப்பு.

“உந்தங்கைக்குக் காலுகையி இல்லேன்னா, எங் கையப் புடுங்கிக் குடுத்துருவியா” ன்னு வெகுண்டெழுந்து எரிமலையாக் கொதிச்சாலும் புருசனுக்காகச் சம்மதிச்சு பதினஞ்சே நாள் பால் கொடுத்த புள்ளய ஒரு மரக்கா தவிடும் வெத்திலை பாக்கும் ஐநுறு ரூவாக்கிமாப் புள்ளயக் கைமாத்திக்கிட்ட பின்னே.. பூங்கொடிக்குள் தவியாய்த் தவித்தோடும் அந்த தாய்மைப்பாடு இருக்கே…! அப்பப்பா..சொல்லிலடங்காதது.

இங்க இவளுக்குப் பால்கட்டி வலியெடுக்கயில் எல்லாம் இன்னேரம் அங்க புள்ள அழுகுமேன்ற வலியில் கொதியாக் கொதிக்குது பெத்த வயிறு.

ஏதோ கொடுத்துட்டாளே தவிர.., ஒவ்வொரு நிமிசமும் புள்ளயக் கொடுத்த வலி நெறிக்கட்டுது இவ நெஞ்சை.

இந்த நிலையில திடீர்னு ராமஜெயத்தின் இறப்பு அந்தக் குடும்பத்தோட நிலைமையை அடியோட புரட்டிப் போட்டு., வேரோட சாய்ச்சுத் தள்ளிவிட்டுப் போக…
வீடு வாசல் வயல் தோப்பு தொரவுன்னு எல்லாம் இழந்து கூலிக்கு மாரடிச்சு இருக்குற ரெண்டு புள்ளகளுக்கும் வயிறு வளர்க்கப் போராடுற நிலைமைக்குப் பூங்கொடியக் காலம் கொண்டு வந்து நிப்பாட்டும் போது…., “நான் புள்ள உண்டாயிருக்கேன்.., எனக்கு ஓய்வு வேணும். உம்புள்ளயக் கொண்டாந்து உண்ட்ட விட்டுறேன்”னு கிருஷ்ணவேணி போன் செய்ய..

இந்த நேரத்துல.. பூங்கொடியோட தாய்மைப் பாட்டுக்கும் வயித்துப் பாட்டுக்குமான மனப் போராட்டமும் அதுக்கிடையில அவள் எடுக்குற முடிவும் தான்… ஒரு தாயாய் அவளைக் காலத்தோடு அறைந்து வைக்கும் ஆணியாகிறது இந்தப் படைப்பு.

கிருஷ்ணவேணியின் முடிவில் இதய நரம்பெல்லாம் கண்ணீர்க்கட்டிக் கொள்வதில் இருந்து நம்மால் நிச்சயம் தப்பிக்க இயலாது.


இச்சிறுகதையை தமிழினி இணையதளத்தில் வாசிக்க இணைப்புச் சுட்டி –> செந்தில் ஜெகன்நாதனின் ”நெருநல் உளனொருத்தி

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *