மாரி செல்வராஜ் ஒரு வாழ்வியல், காதல், கண்ணீர், உறவு, நண்பன் என என்னுள் நிறைந்தவனை ‘மறக்கவே நினைக்கிறேன்’ மூலமாக என்னால் மறக்கவே முடியாது. என்னை மாரியாக மாற்றிய மாரியின் வாழ்க்கை சம்பவங்களை படிக்கையில், அதில் எனக்கோர் இடம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அவரின் 13 காதலிகளில் ஒருத்தியாகவோ, செல்லமாக வளர்க்கும் ராஜீ பூனையாகவோ, மாரியும் அவர் நண்பர்களும் கொன்ற பறவையாகவோ, தேவதை ஜோவாகவோ, பள்ளி தோழியாகவோ, மாரி வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட தாமிபரணி ஆற்றுக்கு செல்லாத நான், அந்த நதிக்கரையில் ஏதோ ஒரு வழிப்போக்கனாகவோ அவரை சந்தித்து இருந்திருக்கலாம் என்று தோன்றியது. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் இரண்டிலும் மாரி தன் வாழ்வில் சந்தித்த வாழ்வை பாதித்த மனிதர்களை அவரின் உள்மனத்துடன் மட்டும் உரையாடிக்கொண்டிருந்தவர்களை நம்முடன் உரையாட வைக்கிறார். அவர்களோடு சிரிக்க வைக்கிறார், அழுக வைக்கிறார், அவர்களை காதலிக்க வைக்கிறார்.
தன் வாழ்வில் நடந்த பல விஷயங்களை ஒளிவு மறைவின்றி எத்தனை பேரால் கூறமுடியும் என்று தெரியவில்லை. அதில் மாரி வித்தகராக இருக்கிறார். இந்த கதைகளில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளுடனான உறவை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து செல்ல முடியாது. வாழ்வியல், அரசியல், காதல், மனிதநேயம், நண்பர்கள், பள்ளி பருவம், காதல் கடிதங்கள், வேலை, பல கலாட்டக்கள் என நம் மனதில் புதையும் பல சுவாரஸ்ய கதைகள் மாரியின் வாழ்க்கை.
ஆன்மாவின் தைரியமென்றால்… அது பிரியத்தின் தைரியம், நட்பின் தைரியம், காதலின் தைரியம், காமத்தின் தைரியம், கடவுளின் தைரியம், நிச்சயமாக உண்மையின் தைரியம் என அது விரிக்கும் வானம் இன்னும் அகலமானது. அப்படி ஓர் அகலமான வானத்தின் கீழ் நின்று வாழ ஆசைப்படுபவர்கள்தான் மாரியும், அவரின் கதை மாந்தர்களும்.
பள்ளி பருவத்தில் சாப்பாடை திருடி சாப்பிட்டது, தங்கள் காதலிக்காக காதல் கடிதம் கவிதை எழுதி கொடுக்க ஏங்கும் இளைஞர்களின் தேடல் கவிஞனாக இருந்தது, எப்போதும் ஏதாவது தவறு செய்து அண்ணனிடம் அடிவாங்கும் தம்பியாக, எப்போதும் ஜெபம் செய்யும் அக்காவின் சாத்தானாக, ஜோவின் பரியனாக இருக்கும் மாரியின் வாழ்க்கையில் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள். உணர்வுகளிலும் உயிரிலும் கலந்த ஒவ்வொரு கதையும் ஆன்மாவோடு நம்மிடையே உரையாட வைக்கிறார் மாரி.
முத்தாரம்மனுக்கு மாலைப்போட்டு கிருஷ்ணன் வேஷத்தில் வலம் வந்து காசு திருடியது, சாமி ஆடிய கதை எல்லாம் அத்தனை சிரிப்போடு மனதை கலகலப்பாக்குகிறது. பூனை ராஜீவின் மரணம் மாரியின் அக்காவிற்கு தெரியவந்தால், அவள் படும் துயரங்களை மாரியின் வரிகளில் என்னால் உணர முடிகிறது. இந்த உணர்வுகளை வார்த்தைகளில் சரியாக வெளிப்படுத்தும் விதம்தான் ஒரு எழுத்தாளனின் வெற்றி. மிகவும் லாபகரமாக அதை கையாளும் திறன் மாரிக்கு இயற்கையிலே உள்ளதுபோல. ஒவ்வொரு கதையையும் நம் முன்பே காட்சிப்படுத்துவதில் தேர்ந்த கலைஞன் இவர். மாரியின் எழுத்து நடை, அவர் சொல்ல வர விஷயங்களில் கையாளும் நகைச்சுவை, உணர்வை வெளிப்படுத்துதலில் உள்ள வீரியம் என இளம் வயதிலையே மிகச்சிறந்த எழுத்தாளனாகிறார்.
ஒருவரின் டைரியை படிக்க பெரும்பாலான மக்களுக்கு ஆர்வம் இருக்கும். அப்படி ஒவ்வொரு டைரியையும் தேடிப்படிக்கும் மாரிக்கு…ஒரே டைரியில் அந்த ஆசையே விட்டு போனது. ஒரு மனிதன் பறவையின் மேல் இத்தனை காதல் கொண்டிருப்பானா? என்பதை ஸ்டீபன் வாத்தியார் மூலாமாக தெரிந்துகொள்ள முடிந்தது. ராஜீயின் இறப்பு நம் மனதில் அல்லது தலையின் மீது ஒரு மூட்டை நெல்லை கொட்டியது போன்ற பாரத்தை தருவது என ஒவ்வொரு கதையும் நம் மனதை கசக்கி பிழியும்.
மாரி பிறந்த கதை மிகவும் போராட்டமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. சம்படி ஆட்டம் பற்றி கதை ஒவ்வொருவரின் மனதிலும் பல கேள்விகளை எழுப்பலாம். பெண் வேடமிட்டு ஆடக்கூடிய ஆண்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவரித்து இருக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் வரும் பரியனின் அப்பா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தன்னுடனாவர்களின் வாழ்க்கை அனுபவித்திலிருந்தே எடுத்துள்ளார். ஆனந்த், பரியனின் அப்பாக நடித்தவர் என பரியேறும் பெருமாள் படத்தில் வரும் பல சம்பவங்கள் மறக்கவே நினைக்கிறேனிலிருந்து எடுக்கப்பட்டவையாக உள்ளது. திரையில் மட்டுமல்ல கதையிலும் மிகச்சிறப்பாக மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்தி எழுதி இருக்கிறார். எத்தனை எத்தனை தேவதைகள் மாரியின் வாழ்க்கையில், “உனக்காக இன்னும் பத்தாயிரம் தேவதைகள் வருவார்கள்” என்று பரியேறும் பெருமாளில் இடம் பெற்றிருக்கும் வசனம் உண்மை தான்போல.
கார்த்திகாவாக மாறிய கார்த்தி, உச்சிக்குடும்பன், ரசூல், பெருமாள் அண்ணாச்சி, சொட்டு அக்கா, கிறிஸ்துமஸ் தாத்தா, மஞ்சனத்தி, மூக்கையா தாத்தா, வேங்கையன் அண்ணாச்சி என இன்னும் பல கதாபாத்திரங்களோடு கனத்த மனதோடு கைகுலுக்கி உரையாட வைக்கிறார். ரயில் சினேகிதி மணிமேகலை அப்பாவின் இறுதி சடங்கு, தன் நண்பனின் உடல் மிதந்த தாமிபரணி ஆறு, கணவனை இழந்த பெண்களின் பூ, புடவை, வளையல், தாலி, கன்னி கழிய வெட்டபட்ட வாழை மரம் என எத்தனை எத்தனை ஆயிரம் கதைகளை சுமந்து கொண்டு செல்லும் தாமிபரணி ஆறு எந்த சலனமுமின்றி இப்போதும் மாரியின் வாழ்க்கையோடு ஓடிக்கொண்டிருக்கிறது. என் தனிமையின் இரவுகளை கொஞ்சமும் இரக்கமின்றி தின்று கொண்டிருக்கிறார்கள் மாரியின் கதை மாந்தர்கள்.
சிலுவையில் அறையப்பட்டவன் என்பதற்காக
என்னைக் கர்த்தராக நினைத்து
நீங்கள் காதலித்திருந்தால்
கவிதை எழுதியிருந்தால்
கண்ணீர் வடித்திருந்தால்
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுவானென்று
காத்திருந்தால்..
எதற்கும்
நான் பொறுப்பில்லை!
ஏனெனில், அந்தக்
கர்த்தருக்குப் பக்கத்தில்
எந்த பிராத்தனையுமின்றி
அறையப்பட்ட
இரண்டு திருடர்களில் ஒருவனாகக்கூட
நானிருக்கலாம்!
இன்னும் எத்தனை ஆயிரம் கதைகள் மாரியின் வாழ்வில் உள்ளதென்று தெரியவில்லை. நிச்சியமாக அவை, புத்தமாக வெளிவரா விட்டாலும், படங்களில் கதைகளாக, கதாபாத்திரமாக, வசனமாக வெளிவரும். மீண்டும் செல்கிறேன் மாரி இந்த வாழ்வின் ஆகச்சிறந்த படைப்பாளி.
-தாரிகை (ரஞ்சிதா ரவி)
நூல் : மறக்கவே நினைக்கிறேன் ஆசிரியர் : மாரி செல்வராஜ் வெளியீடு : வம்சி புக்ஸ் ஆண்டு : ஜனவரி 2020 பக்கங்கள் : - விலை : ₹ 300
தாரிகை எனும் பெயரில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் ரஞ்சிதா ரவி. பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவர். இளம் வயதிலேயே மாணவ பத்திரிக்கையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர், 6 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார். பெண்ணியம், தலித் அரசியல் மற்றும் தலித் இலக்கியச் சூழலில் இயங்கி வருபவர். சமூகம், அரசியல், உடல்நலம், உறவுகள், பெண்கள் மற்றும் தலித் அரசியல் குறித்தும் எழுதிக் கொண்டிருப்பவர்.